Tuesday, October 11, 2011

ஊடகங்கள்பற்றி நீதியரசர்


ஊடகங்கள்பற்றி நீதியரசர்


உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும், இந்திய பிரஸ் கவுன்சிலின் இந்நாள் புதிய தலைவருமான நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜு அவர்கள் எடுத்த எடுப்பிலேயே இன்றைய ஊடகங்களின் போக்குக் குறித்து வரைந்துள்ள ஓவியம் முற்போக்காளர்கள் மத்தியிலே, சமூக நீதியாளர்கள் மத்தியிலே இன்ப அதிர்ச்சி அலைகளை ஓங்கச் செய்திருக்கிறது.

நான் அலுவலகக் கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அபராதங்கள், உரிமத்தை ரத்து செய்தல் போன்ற தண்டனைகள் விதிக்க விதிகளில் இடம் இருக்க வேண்டும் என்று சிலர் ஆலோ சனைகளைக் கூறியிருக்கின்றனர்.

ஆனால் இவ்வாறு அச்சுறுத்தி பணிய வைப்பதைவிட, பேசி மன நிறைவு அடையச் செய்வதே தனது அணுகுமுறையாக இருக்கும் என்று தம்மைப்பற்றி அறிமுகப்படுத்திக் கொள்ளும் அதே வேளையில், இன்றைய ஊடகங் களின் போக்கினை அவர் எடுத்து வைத்த விதம்தான் மிக முக்கியமானது.

வறுமையும், வேலையின்மையும் தான் நாடு எதிர் கொண்டிருக்கிற மாபெரும் பிரச்சினைகளாகும். நாட்டுக்கு முக்கியமானதும், தேவையானதும் சினிமா நடிகரின் மனைவி கருவுற்றிருக்கும் செய்தியல்ல.

ஒரு சினிமா நடிகரின் மனைவி ஒரு குழந்தை பெற்றாரா, அல்லது இரட்டைக் குழந்தைகளைப் பெற்றாரா என்ற செய்தியை வெளியிடுவதன் மூலம் நாட்டின் எந்தப் பிரச்சினை தீரப் போகிறது? ஆனால் இதுபோன்ற செய்திகள்தான் பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் முக்கியமான இடத்தில் வெளியிடப் படுகின்றன.

பொது மக்களுக்கு சேவை செய்பவர்கள் என்று உங்களை நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க முன்வர வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

இந்திய பிரஸ் கவுன்சிலின் தலைவராக இருக்க மிகவும் பொருத்தமும், தகுதியும் உடைய ஒருவர் இப்பொழுதுதான் முதன் முதலில் வந்திருக்கிறார் என்பதை இதன் மூலம் நன்கு அறிய முடிகிறது.

நம் நாட்டு ஊடகங்களான வார, மாத இதழ்களாக இருந்தாலும் சரி, (நாளேடுகளாக இருந்தாலும்)  பெரும்பாலும் அட்டைப்படங்கள் சினிமா நடிகைகள் தான்!  வெளியிடப்படும் செய்திகளும், தகவல்களும் கூட நீதிபதி அவர்கள் சொல்லியுள்ளது போன்றவை தான்.
அரை குறை உடையோடு நடிகைகளின் படங் களைப் போட்டு மக்களின் இரசனையைக் கீழ் மட்டத்தில் மலிவாகத் தள்ளி, அவர்களின் காசுகளைப் பறிப்பதோடு அவர்களின் உள்ளங்களையும் நாசப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.

மண்டல் குழு பரிந்துரை அமல்படுத்தப்படும் என்று பிரதமர் வி.பி. சிங் அறிவித்ததை கடைசிப் பக்கத்தில் வெளியிட்டு, ஒரு நடிகைக்கு இரட்டைக் குழந்தை பிறந்ததை முதல் பக்கத்தில் வெளியிட்ட தமிழ்நாளேடும் இங்கு உண்டு.

ஏதோ நீதிபதி கற்பனையாகச் சொல்லி விட்டார் என்று யாரும் கருதத் தேவையில்லை. நாட்டு நடப்பைத்தான் அவர் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

இந்திய அளவில் எடுத்துக் கொண்டாலும் ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்துபவர்களில் பெரும்பாலும் பார்ப்பனர்கள்தாம்.

இந்தியாவில் உள்ள மிகப் பெரிய ஆங்கிலம் மற்றும் இந்தி நாளிதழ்கள் தொலைக்காட்சிகள் 37இல் முக்கிய பொறுப்புகளில் உள்ள 315 பத்திரிகையாளர் களில் ஒருவர்கூட தாழ்த்தப்பட்டவரோ மலைவாழ் சமூகத்தைச் சேர்ந்தவரோ கிடையாது.

49 சதவிகிதம் பேர் பார்ப்பனர்கள்... மக்கள் தொகையில் பெரும் பகுதியினரான பிற்படுத்தப் பட்டவர்கள் வெறும் ஒரு சதவிகித அளவிலேயே உள்ளனர்.

ஊடகத்துறை உயர் பதவிகளில் பெண்கள் குறிப்பிடத் தக்க அளவில் இருக்கின்றனர். ஆங்கில அச்சு ஊடகங்களில் 14 சதவிகிதப் பதவிகளையும் இந்தி அச்சு ஊடகங்கள் மற்றும் காட்சி ஊடகங்களில் 11 சதவிகிதப் பதவிகளையும் பெண்கள் வகிக் கின்றனர்.

அவர்களிலும் பெரும்பான்மையினர் பார்ப்பனர்களே என்று சமூக மேம்பாட்டுக்கான ஆய்வு மய்யம் நடத்திய கணக்கெடுப்பு கூறுகிறது. ஊடகங்களில் பெரும்பாலோர் பார்ப்பனர்களாக இருப்பதால் சமூகநீதிக்கான நியாயங்களுக்கு மாறாக  தகவல்களையும் கருத்துகளையும் பரப்பிக் கொண்டிருக்கின்றனர் என்பதை மறந்து விடக் கூடாது.

ஈழத்தில் நடைபெறும் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளை திசை மாற்றி எழுதுபவை பெரும் பாலும் பார்ப்பன ஊடகங்களே! இந்து ஏடும் இதற்கு விதி விலக்குக் கிடையாது.

ஏடுகள் என்றால் உண்மைத் தகவல்களை வெளிப்படுத்தத்தானே தவிர பொய்களைப் புனைந் துரைப்பதற்காக அல்ல; ஆபாசங்களை அள்ளி விட்டு இளைஞர்களை கலாச்சார சீரழிவுப் பாதைக்கு இழுத்துச் செல்வதல்ல. பிரஸ் கவுன்சிலின் புதிய தலைவர் விடுத்த வேண்டுகோள்பற்றி ஊடகங்கள் சிந்திக்குமாக!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...