பேராசிரியர் முனைவர் நம். சீனிவாசன்
வீரமணியை முழுமையாய் சித்தரிக்கும் சித்திரம் உண்மையை உரத்துச் சொல்லும் செந்தமிழ் கீதம் அக்கவிதை பெரியார் பிறந்த நாள் மலரில் இடம் பெற்று படிப்போரை மகிழ்விக்கின்றது.
கவிதை 34 வரிகளைக் கொண்டிருக்கின்றது. வீரமணியின் உடையை, உள்ளத்தை, துணிவை, நேர்மையை, தமிழ்ப்பற்றை, சொற்பொழிவாற்றலை, சிந்தனை வளத்தை, சமூக நீதிப் பணிகளை, எழுத் தாற்றலை, இதழியல் பணிகளை, பகுத்தறிவுப் பிரச்சாரத்தை, போர்க் குணத்தை, கல்விப் பணியை, பெண்ணுரிமைப் பணியை, மனிதநேயத்தை இனிமை யாய் எடுத்தியம்புகின்றது இக்கவிதை. படித்துச் சுவைக்கலாம்; சுவைத்துச் சொல்லலாம்; சொல்லி மகிழலாம்.
கலைஞர் கட்டுரை
தி.மு. கழகத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர் களின் கட்டுரை பெரியார் பிறந்த நாள் மலரை அலங் கரிக்கின்றது. கலைஞர் இரண்டு நூற்றாண்டுகளிலும் இரண்டு கால்களை அழுத்தமாய் ஊன்றி நிற்கும் தமிழ்ப் பெருந் தலைவர்.
அறுபது ஆண்டு காலப் பத்திரிகைகளுக்குத் தொடர்ந்து செய்தியானவர்; செய்தி தருகிறவர்.
தன் பொது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளுக்கும் பதிவுகள் வைத்திருப்பவர். முதல் தலைமுறையில் எழுதிப் பழகிய தமிழ்நடையை மூன்றாம் தலைமுறைக்கும் செல்லுபடி செய்தவர்; படைப்பாளிகளை உருவாக்கிய படைப்பாளி.
தன்னோடு ஓடி வந்தவர்கள் களத்திலும் காலத் திலும் காணாமல் போன பிறகும் தன் ஒட்டப் பந்தயத்தை நிறுத்தாதவர். தன் அரசியல் நெடும் பயணத்தில் சக பயணிகளுக்காக ஓரளவு வளைந்து கொடுத்தவர். ஒரு போதும் ஒடிந்து போகாதவர்.
தமிழர்களின் அக மாற்றத்திற்கு ஒரளவும் தமிழகத் தின் புறமாற்றத்திற்கும் பேரளவும் காரணமானவர்.
இழந்து போன தமிழ் அடையாளங்களைத் தன் எழுத்திலும் பேச்சிலும் செயலிலும் மீட்டெடுத்தவர்.
வாழ்வின் நிறைவு வரை சற்றும் சலனமுறாப் பகுத்தறிவாளர்; தமிழுக்குச் செம்மொழிப் பெருமை தந்த செம்மல்.
எதிர்ப்புகளின் உரசலில் தேய்ந்து போகாமல் பற்றிச் சுடர் கொளுத்தும் பாஸ்பரஸ் மனிதர்.
பெரியார் அடைய நினைக்காத ஆட்சிப் பொறுப்பு, காலம் அண்ணாவுக்கு மறுத்த ஆயுள் மதிப்பு இரண்டையும் ஒருங்கே பெற்றவர்.
கலைஞரின் தனிப் பெருமைகளாகக் கவிப் பேரரசு தூரிகை வரைந்த எழுத்தோவியம் வாய்மையில் வார்க்கப்பட்டது. ஒரு சொல்லும் பழுதில்லை; ஒரு கருத்தும் பொய்யில்லை. ஈரோட்டுக் குருகுலத்தில் தங்கி தந்தை பெரியாரிடம் பாடம் கேட்ட பெருமை பெற்றவர் டாக்டர் கலைஞர். அரசியல் களத்தில் தலைவர் கலைஞர் வெற்றிகளைக் குவித்தபோது அய்யாவின் சமதர்ம கொள்கைகளை அரங்கேற்றத் தவறியதில்லை.
பிறந்த நாள் மலருக்கு கலைஞர் எழுதிய கட்டுரையின் தலைப்பு இன்றைய கால கட்டத்தில் இளைஞர்களின் கடமை. பெரியார் பிறந்த காலத்தில் நிலவிய சமுதாய நிலையினை எடுத்துரைக்கும் கலைஞர், பெரியாரின் கொள்கையினை - வேட்கையினை சுட்டிக்காட்டி, அந்த இலட்சியத்தினை அடைவதற்கு பெரியார் நடத்திய போராட்டங்களைப் பட்டியலிட்டிருக்கின்றார். தி.மு.க. ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது தந்தை பெரியார் வலியுறுத்திய கொள்கைகள் சட்ட வடிவம் பெற்றமையை இக்கட்டுரையில் கலைஞர் விவரித்திருக்கின்றார்.
பெரியாரின் அரிய உழைப்பை நுட்பமாய் விளக்குகிறார் கலைஞர். பெரியார் அவர்கள் 1879 செப்டம்பர் 17 அன்று பிறந்து, 94 ஆண்டுகள் 3 மாதம் 7 நாட்கள் வாழ்ந்து, அதில் ஏறத்தாழ 8600 நாட்களில் 13 லட்சத்து 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு, அப்பயணத்தால் 10 ஆயிரத்து 700 நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு, அந்நிகழ்ச்சிகளின் மூலம் மொத்தம் 21 ஆயிரத்து 400 மணி நேரம் சொற்பொழிவுகள் ஆற்றி, தாமே தம் அனுபவங் களால் உணர்ந்து உருவாக்கிய பகுத்தறிவுக் கொள்கை களைக் கடுமையான எதிர்ப்புகளுக்கிடையே பரப்பி வெற்றி கண்டார் என்று முத்தமிழ் வித்தகர் முரசறைகின்றபோது விழிகள் வியப்பால் விரிகின்றன.
கொள்கையில் ஊறித் திளைத்தவர் கலைஞர். பொது வாழ்வில் அவர் பெற்ற அனுபவம் கடலைவிடப் பெரிது. அவர்தம் உரையில் தெளிவும் உறுதியும் மிளிரும். பிறந்தநாள் மலர் கட்டுரையில், இன்றைய தமிழ்ச் சமுதாயம் அடைந்துள்ள பல முன்னேற்றங்களுக்குத் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கொள்கைகளே காரணம் என்பதை இளைஞர் சமுதாயம் உணர்ந்து, அந்தக் கொள்கைகளைப் பின்பற்றி நடந்தால்தான் எதிர்காலத் தமிழகம் வலுவோடும், பொலிவோடும் திகழ முடியும்; தொடர்ந்து முன்னேறி வளம் பெறமுடியும் என்பதை வலியுறுத்திட விரும்புகிறேன் என்ற கலைஞரின் கூற்றை இளைஞர்கள் இதயத்திலே பதித்துக்கொள்ள வேண்டும்.
பெரியார் பிறந்த நாள் மலருக்கு கலைஞர் தீட்டும் கட்டுரையில் ஜீவன் துள்ளும், பெரியாருடன் பழகிய வசந்த காலங்கள் எழுத்தில் மிதக்கும்.
பேராசிரியர் க.அன்பழகன்
தந்தை பொரியாரின் கொள்கைகளை எந்நாளும் முழங்கும் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களுடைய புரட்சிப் புயல் பெரியார் என்னும் கட்டுரை மலரை அலங்கரிக்கின்றது. அக்கினிக் குழம்புகள் அள்ளி எடுத்துப் பக்குவ லேகியம் படைத்த கிழவன். புழுத்துக் கிடந்த புழுக்களுக்குள்ளே, புலியின் ரத்தம் புகுத்திய தலைவர் பெரியார்.
பெரியாரின் இயல்பு, பழக்கம், வரலாறு, சிந்தனை வளம், புத்திக்கூர்மை, காங்கிரசில் சேர்ந்த நோக்கம், காங்கிரசில் நடத்திய போராட்டம், வைக்கம் போராட்டத்தில் காந்தியாரின் நிலை, சுயமரியாதை இயக்கத்தின் தோற்றம் - கொள்கை, இந்தி எதிர்ப்புப் போராட்டம், ஜாதி ஒழிப்பு, பார்ப்பனீய ஆதிக்க ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, சமத்துவ சமுதாயம் காணும் வேட்கை, மனிதநேயம் முதலியவற்றை வளமான தமிழில் ஆற்றொழுக்கான நடையில் முத்துக்களால் ஆரம் படைப்பது போல் கருத் துக்களால் சிந்தை கவர் கட்டுரையைத் தீட்டியிருக் கிறார் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள்.
பெரியாரை, அவர்தம் கொள்கையை எண்ணாத நாளெல்லாம் வீணே! ஏற்காத மனமெல்லாம் பாழே! என்று பேராசிரியர் அன்பழகன் கவித்துவமாய் - மீண்டும் மீண்டும் காதில் ஒலிக்கச் செய்யும் முத்தாய்ப்பு வாசகமாய் கட்டுரையினைப் படைத்திருப்பது சிலிர்க்கச் செய்கிறது.
டாக்டர் முத்துலெட்சுமி மசோதாவும் தந்தை பெரியாரின் கருத்தும்
பெண்ணுரிமைக்காகப் போராடியவர் தந்தை பெரியார். இந்துக் கோவில்களில் நடைபெற்று வந்த பொட்டு கட்டுதல் எனும் கொடிய வழக்கத்தினை வேரோடு வெட்டிச் சாய்க்க முத்துலெட்சுமி ரெட்டி அவர்கள் சட்ட சபைக்கு மசோதா அனுப்புகிறார். மசோதாவின் மீது கருத்து தெரிவிக்குமாறு சென்னை சர்க்கார் தந்தை பெரியாரை வேண்டுகின்றது. சாஸ்திரங்களுக்குப் பயந்து பருவமடைந்த பெண்கள் பொட்டுக் கட்டுவதைத் தடுக்க சட்டமியற்ற சர்க்கார் பயப்படத் தேவையில்லை. இம்மசோதாவை நான் பூரணமாக ஆதரிக்கிறேன் என்று சென்னை சட்டசபை செயலாளருக்கு பெரியார் அனுப்பிய கடிதம் பெண் ணுரிமைப் பணியில் தலையாயது. தமிழக வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத் தக்கது. வரலாற் றுச் சிறப்பு மிக்க பெரியார் எழுதிய அக்கடிதம் மலரில் இடம் பெற்றிருப்பது நூலின் கனத்தைக் கூட்டுகிறது.
பேராசிரியர் முனைவர் இலக்குவன் தமிழ் அவர்கள் அமெரிக்காவில் வசிக்கும் அறிஞர் பெருமகன் ஆவார். டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். மின்னணு பொறியாளராகிய இவர் ஆய்வுத் துறையில் சாதனை நிகழ்த்தியிருக்கிறார். இவர் சமர்ப்பித்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் இவர் அறிவின் ஆழத்தை அறிவிக்கும். அரசு அனுமதி பெற்று இவர் நிகழ்த்திய ஆய்வுகளின் எண்ணிக்கை 18ஆகும்.(2 பேர் முனைவர் பட்டம் பெற்றிட வழிகாட்டி யாக பணியாற்றிய கல்வியாளர்). ஊநுடீ மற்றும் ஊகூடீ லுடிவவய நெட்வொர்க்கின் நிறுவனர். வாழ்க்கை தொழில் நுட்பத்தில் தரம் பற்றி ஆய்வு செய்து தீர்வுகளை வழங்கியிருக்கும் போற்றுதலுக்கும், பாராட்டுதலுக்கும் உரிய மேதை. இலக்குவன் தமிழ் எழுதிய இந்தியாவின் இமாலய ஊழல் எனும் கட்டுரை சிந்தனையைத் தூண்டும் அறிவுப் பொறியாகும். ஊழலுக்கு விளக்கம் தருவதைப் பாருங்கள்.
No comments:
Post a Comment