ஆபத்தான ரத யாத்திரை!
பா.ஜ.க.வில் உள்ள முன்னணித் தலைவர்களுள் முக்கியமானவரான லால்கிஷன் அத்வானி பிகார் மாநிலம் - ஜெயப்பிரகாஷ் நாராயணனின் ஊராகிய சீதாதியாரா என்னும் கிராமத்திலிருந்து ரத யாத்திரை ஒன்றைத் தொடங்கியுள்ளார். ஜன் சேத்னா என்று அந்த ரதத்துக்குப் பெயராம். 38 நாள்களில் 18 மாநிலங்களில் இந்த ரதம் பவனி வருமாம்.
தான் பிரதமருக்கான வேட்பாளர் அல்ல என்று கொஞ்ச காலத்திற்கு முன் அறிவித்த அத்வானி இப்பொழுது ஏன் திடீர் பிரவேசம் செய்கிறார் என்பது ஒரு பிரச்சினையாக எழுந்துள்ளது.
வரும் தேர்தலில் பி.ஜே.பி.யின் பிரதமர் பதவிக்கான வேட்பாளர் நரேந்திர மோடி என்று பேசப்படும் ஒரு நிலை யில், அத்வானியின் இந்தத் திடீர் ரதப் பயணம் அக் கட்சிக்குள் நிலவும் கோஷ்டிச் சண்டைக்கான ஒத்திகையாகும்.
நரேந்திர மோடி பிரதமருக்கான வேட்பாளர் என்பதை விரும்பாத பி.ஜே.பி.யின் இன்னொரு கோஷ்டியினர் தங்கள் முகத்தை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள விரும்பாமல், அத்வானியை முன்னிறுத்தி அவர் முதுகுப் பக்கம் ஒளிந்து கொண்டுள்ளனர் என்பதுதான் உண்மை.
குஜராத் மாநிலத்திலிருந்துதான் இந்தப் பயணம் தொடங்கப்படும் என்று தொடக்கத்தில் கூறப்பட்டது. அந்த முடிவு திடீரென்று மாற்றப்பட்டதும், ரத யாத்திரையை பிகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் துவக்கி வைத்ததும் கோஷ்டிச் சண்டையில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளாகும்.
நரேந்திர மோடியை எந்த வகையிலும் ஏற்றுக் கொள் ளாதவர் பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமார். நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில்கூட மோடி எந்தக் காரணத்தை முன்னிட்டும் பிகார் மாநிலத்திற்குப் பிரச்சாரத்திற்கு வரவே கூடாது; இன்னும் சொல்லப் போனால், மோடியின் முகம் பிகார் மாநிலத்தில் காட்டப்படவே கூடாது என்பதில் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தார்.
இந்த நிலையில், பிகார் மாநிலத்தில் ரத யாத்திரை தொடங்கப்படுவதும், அந்தப் பயணத்தை நிதிஷ்குமார் தொடங்கி வைப்பதும் வெளிப்படையான மோதலின் வெளிப்பாடுதான். கட்சிக்குள் போட்டி எப்படி இருந்தாலும், அத்வானியின் ரத யாத்திரை என்பது மோசமானது - மக்கள் மத்தியில் மத நெருப்பை விசிறி விடக் கூடியதாகும்.
ஊழலுக்கு எதிரான பயணம் - கறுப்புப் பணத்தை மீட்பதற்கான யாத்திரை என்று சொல்லுவதெல்லாம் அசல் ஏமாற்று வேலை.
இவர்கள் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இத்திசையில் சாதித்தது என்ன?
இவர்கள் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இத்திசையில் சாதித்தது என்ன?
பி.ஜே.பி. மத்தியில் ஆட்சியில் இருந்தபோதும் சவப் பெட்டி வரை ஊழல் நடைபெறவில்லையா? முதலாளி களிடம் பணம் வாங்கிக் கொண்டு, அவர்களுக்காக நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டவர்களில் பி.ஜே.பி. யினர்தானே அதிகம்?
பி.ஜே.பி. ஆண்ட - ஆளும் மாநிலங்களில் லஞ்சம், ஊழல் மூக்கைத் துளைக்கவில்லையா? கருநாடக மாநிலத்தில் எடியூரப்பா ஏன் மாற்றப்பட்டார்? இந்த லட்சணத்தில் ஊழல் எதிர்ப்பு என்பதையெல்லாம் மக்கள் நம்பத் தயாராக இல்லை. இது அத்வானி உள்பட பி.ஜே.பி.யினருக்கும் நன்றாகவே தெரியும்.
பி.ஜே.பி. ரத யாத்திரை என்றாலே, அதன் பொருள் இந்துத்துவா வெறியை விசிறி விடுவதுதான்.
கடந்த 1991 ஆம் ஆண்டில் (செப்டம்பர் 25) சோமநாத் திலிருந்து இதே அத்வானி 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் ரத யாத்திரை செய்தாரே - அப்பொழுது நடந்தது என்ன?
வழிநெடுக அவருக்கு எத்தகைய பரிசுகளை அளித்தனர்? அம்புகள், வில்கள், திரிசூலங்கள், கத்திகள், வாள்கள் என்பவைதானே. இவையெல்லாம் அகிம்சையின் அன்பான சின்னங்களா? ஜோத்பூரில் 101 பஜ்ரங் தள் தொண்டர்கள் தங்கள் ரத்தத்தை ஒரு குடத்தில் பிடித்து அத்வானியிடம் தந்தனரே!
அகமதாபாத்தில் ஒரு வெறியன் திரிசூலத்தால் தன் உடலைக் குத்தி, அதிலிருந்து பீறிட்ட குருதியை எடுத்து ரத யாத்திரை கதாநாயகன் அத்வானியின் நெற்றியில் திலகமாக இடவில்லையா?
வழிநெடுக எத்தனை எத்தனைக் கலவரங்கள்! ஆந்திராவில் 4 கலவரங்கள், பலி 27; அஸ்ஸாமில் ஒரு கலவரம், பலி 7; பிகாரில் 8 இடங்களில் கலவரம், மனித பலி 19; புதுடில்லியில் மனித பலி 8; குஜராத்தில் கலவரங்கள் 26, பலி 99; கருநாடகாவில் கலவரம் 22, பலி 88; கேரளாவில் கலவரங்கள் 2, பலி 3; மத்திய பிரதேசத்தில் கலவரங்கள் 5, பலி 21; மகாராட்டிரத்தில் கலவரங்கள் 3, பலி 4; ராஜஸ்தானில் கலவரங்கள் 13, பலி 52; திரிபுராவில் கலவரம் ஒன்று; உத்தரப்பிரதேசத்தில் 28 இடங்களில் கலவரம் 224 உயிர்ப்பலிகள்; மேற்கு வங் காளத்தில் 2 இடங்களில் கலவரம் - பலி 6; தமிழ்நாட்டில் கலவரம் 1, மரணம் 6. (கே.என். பணிக்கர் எழுதிய வகுப்பு வாத அச்சுறுத்தலும், மதச் சார்பின்மை சவால்களும்).
இவ்வளவும் 1991 இல் நடந்திருக்கும்பொழுது, இந்தக் கசப்பான அனுபவத்தைக் கணக்கில் கொண்டு அத்வானியின் ரத யாத்திரைபற்றி சரியான முடிவு எடுத்திருக்கப்பட வேண்டாமா?
இந்த முறையும் இந்தக் கொடுமைகள் நடக்காமல் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும்.
No comments:
Post a Comment