வயிற்றுப்புண் எதனால் ஏற்படுகிறது?
மனஅழுத்தத்தினாலோ அல்லது காரசாரமான உணவினாலோ வயிற்றுப் புண் ஏற்படுவதில்லை.
பல ஆண்டு காலமாக அளித்து வரப்பட்ட மருத்துவ ஆலோசனைப்படி மன அழுத்தத்தினாலோ அல்லது வாழ்க்கை முறையினாலோ வயிற்றுப் புண்ணோ, குடல் புண்ணோ ஏற்படுவதில்லை; பாக்டீரியா என்னும் நுண்ணுயிரிகளால் ஏற்படுகிறது.
இது போன்ற வயிற்று, குடல் புண் என்பது பத்து பேர்களில் ஒருவருக்கு இருக்கக்கூடிய சாதாரணமான பொதுவான நோய்தான். அவை அதிக வலியையும், இறப்பில் முடியும் மிகுந்த துன்பத்தையும் தரவல்லவை. வயிற்றுப் புண்ணின் தொடர்பாக ஏற்பட்ட சிக்கல்களின் காரணமாக நெப்போலியனும், ஜேம்ஸ் ஜாய்சும் இறந்தே போயினர்.
வயிற்றுப் புண், குடல் புண் ஆகியவற்றால் துன்பப்படும் ஆட்களின் அடி வயிற்றில் முன்பு எப்போதும் அடையாளம் கண்டிராத நுண்ணுயிரிகள் குடிகொண்டு, இனப்பெருக்கு செய்திருப்பதை 1980 களின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய நாட்டின் உடற்கூறியலாளர்கள் பேரி மார்ஷலும், ராபின் வாரனும் கவனித்தனர். அவர்கள் அவற்றைத் தனியே பிரித்து, இனப்பெருக்கம் செய்ய வைத்து, ஹெலிகோபாக்டர் பைலேரி என்று அதற்குப் பெயரிட்டனர். அது பற்றி தொடர்ந்த சோதனைகளை மேற்கொண்டனர். இந்த நுண்ணுயிரிகள் வயிற்றில் இருந்து நீக்கப்பட்டதும், வயிற்றப் புண் குணமாகிவிடுவதை அவர்கள் கண்டனர். மன அழுத்தத்தினால் வயிற்றுப் புண் ஏற்படுகிறது என்றே பெரும்பாலான மக்கள் இன்றும் கூட கருதுகின்றனர். இதற்கு அளிக்கப்படும் விளக்கம் என்ன வென்றால், மனஅழுத்தம் வயிற்றில் இருந்து ரத்தத்தை வேறு இடத்திற்கு மாற்றி அனுப்புவதால், வயிற்றின் பாதுகாப்புக்காக உருவாகும் உள்கவச உற்பத்தி குறைந்து விடுகிறது என்பதுதான். வயிற்றின் அடியில் இருக்கும் சதைப் பகுதி அமிலங்களினால் படிப்படியாக பாதிப்பதால், புண் ஏற்படுகிறது என்று கூறப்பட்டது. ஒரு கொப்புளமோ அல்லது ஒரு காயமோ கூட ஒரு தொத்து நோயாக இருக்கலாம் என்று மார்ஷெல்லும், வாரனும் கூறிய பொதுவான உடல் நிலை பற்றிய கருத்து, நவீன மருத்துவத்தில் இதற்கு முன் கேள்விப்படாததாக இருந்தது.
தன்னையே சோதனைக்குள்ளாக்கிக் கொள்ள மார்ஷெல் முடிவு செய்தார். நுண்ணுயிரிகள் நிறைந்திருந்த ஒரு பானத்தை அவர் குடித்தார். உடனே அவருக்கு வயிற்று வலி வந்துவிட்டது. தன் உடலில் நுண்ணுயிர்கள் இருக்கின்றனவா என்று சோதனை செய்து பார்த்ததில், அவை பெருமளவில் குடிகொண்டிருப்பதைக் கண்டார். எதிர்ப்பு மருந்துகளை உட்கொண்டு அவர் தன்னைத்தானே குணப்படுத்திக் கொண்டார். மருத்துவ உலகம் அதுவரை கொண்டிருந்த கருத்து தவறானது என்பது மெய்ப்பிக்கப் பட்டது.
அவர்களது தொலைநோக்குப் பார்வைக்காகவும், துணிவிற்காகவும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2005 ஆம் ஆண்டில் மார்ஷெல், வாரன் இருவருக்கும் வழங்கப் பட்டது.
ஹெலிகோபாக்டர் பைலேரி என்னும் இந்த நுண்ணுயிரி உலக மக்கள் தொகையில் பாதி பேர்களின் உடலிலும், வளரும் நாடுகளின் மக்களில் பெரும்பாலோரின் உடலிலும் உள்ளது. குழந்தைப் பருவத்தில் வயிற்றில் குடி புகும் அவை மனிதரின் வாழ்நாள் முழுவதும் கூட குடி கொண்டிருக்கும். ஆனால், அவை குடிகொண்டுள்ள மக்களில் 10 முதல் 15 விழுக்காடு பேர்களுக்கு மட்டுமே வயிற்றுப் புண், குடல் புண் என்ற நிலையை உண்டாக்குகின்றன.
இது ஏன் ஏற்படவேண்டும் என்பது பற்றி இன்னமும் நாம் அறிந்துகொள்ள வில்லை; ஆனாலும் அதனை எவ்வாறு குணப்படுத்துவது என்பதை நாம் இப்போது அறிந்துள்ளோம்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் ‘The Book of General Ignorance’ பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)
No comments:
Post a Comment