செவ்வாய் கோளின் நிறம் என்ன?
பட்டர்ஸ்காச் அல்லது ப்ரவுன் (காவி நிறம்) அல்லது ஆரஞ்சு. ஒரு வேளை மெல்லிய இளம் சிவப்பு திட்டுகள் கொண்ட காக்கி நிறமாகக் கூட இருக்கலாம்.
இரவு நேர வானத்தில் சிவப்பாகத் தோன்றுவதுதான் செவ்வாய்க் கோளின் மிகவும் நன்கு அறியப்பட்ட பண்புகளில் ஒன்றாகும். இந்த சிவப்பு நிறம் கோளின் சுற்றுச்சூழலில் இருக்கும் தூசுகளின் காரணமாகத் தோன்றுவதாகும். செவ்வாய்கோளின் மேற்பரப்பு முற்றிலும் மாறுபட்ட ஒரு கதையைக் கூறுகிறது. புகழ் பெற்ற நிகழ்வான நெயில் ஆம்ஸ்டிராங் நிலவில் கால் பதித்த நாளுக்குப்பின் ஏழு ஆண்டு கழித்து வைகிங்-1 கலம் செவ்வாய் கோளின் படங்களை முதன் முதலாக அனுப்பியது. நாம் எவ்வாறு எதிர்பார்த்தோமோ, அதே போல கருமையான கற்கள் நிறைந்திருந்த சிவப்பு நிற நிலப் பகுதியை அப்படங்கள் காட்டுகின்றன.
இது ஏற்கெனவே சந்தேகம் கொண்டிருந்தவர்களை மேலும; சந்தேகம் கொள்ளச் செய்தது. நன்கு அறிமுகமானபடி தோன்றுவதற்கு ஏற்றவாறு அந்தப் படங்களை நாசா வேண்டுமென்றே தயாரித்துள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.
1976 இல் செவ்வாய்க் கோளைச் சென்றடைந்த இரண்டு வைகிங் வாகனங்கள் வண்ண ஒளிப்படங்களை எடுக்கவில்லை. கருப்பு வெள்ளையில்தான் படங்கள் எடுக்கப்பட்டன. பின்னர் அந்த படம் மூன்று வண்ண பில்டர் மூலம் அனுப்பப்பட்டன.
இந்த பில்டர்களை சரிசெய்து, ஒரு உண்மையான வண்ணத்தைப் படங்களுக்கு அளிப்பது என்பது மிகவும் சிக்கலான, தந்திரமான செயல். அறிவியல் செயல் என்பதைப் போலவே அது ஓர் கலைச் செயல்பாடுமாகும். இதுவரை எவர் ஒருவரும் செவ்வாய்க் கோளுக்குச் சென்றது இல்லை என்பதால், அதன் உண்மையான நிறம் என்ன என்பது நமக்குத் தெரியாது.
செவ்வாய் கோளிலிருந்து முதன் முதலாக வந்த ஒளிப்படங்கள் மெல்லிய இளம் சிவப்பு நிறத்தில் 2004 இல் வெளியிடப்பட்டன என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. ஆனால் பின்னர் சரி செய்யப்பட்ட ஒளிப் படங்கள் கோளின் மேற்பக்கம் அதிக அளவில் பட்டர்ஸ்காச் நிறத்தில் இருந்ததாகக் காட்டுகின்றன.
நாசாவின் ஆள் இல்லாத வின்வெளிக் கலம் ஸ்பிரிட் செவ்வாய்க்கோளின் மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அண்மையில் வெளியிடப் பட்ட ஒளிப்படங்கள் சற்று பச்சை கலந்த காவி வண்ணம், சாம்பல் கலந்த நீலக் கற்களும், சால்மண் வண்ண மணலும் கொண்ட, மண் வண்ணத்திலான நிலப்பரப்பையும் காட்டுகின்றன. யாராவது ஒருவர் செவ்வாய்கோளுக்கு நேரில் சென்று பார்க்கும் வரை அதன் உண்மையான நிறம் என்ன என்பது ஒருவேளை நமக்குத் தெரியாமலே போகலாம். செவ்வாய்க் கோளின் மீது நீண்ட நேர்க் கோடுகளைத் தான் 1887 இல் கண்டதாக இத்தாலிய வானவியலாளர் கியோவான்னி ஷியாபேரல்லி தெரிவித்தார். அவற்றை அவர் கனாலி அல்லது சேனல்கள் என்று அழைத்தார். இதனை கேனால்ஸ் அதாவது கால்வாய்கள் என்று தவறாக மொழி மாற்றம் செய்யப்பட்டது, செவ்வாய்க் கோளின் மீது அழிந்து போன பழைய நாகரிகம் இருந்தது என்ற ஊகங்களை எழுப்பின.
துருவ பனிக்கட்டிகளில் இருப்பது போல, செவ்வாய்க் கோளில் தண்ணீர் ஆவி வடிவில் இருப்பதாகக் கருதப்பட்டது. ஆனாலும், மேலும் ஆற்றல் மிகுந்த தொலை நோக்கிகள் தற்போது உருவாக்கப்பட்ட நிலையிலும், ஷியாபேரல்லியின் கால்வாய்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.
கெய்ரோ, அல்லது அல்-குவாஹிரா என்றால் அரபி மொழியில் செவ்வாய்க் கோள் ஆகும்.
(நன்றி: ஜான் லாயிட் மற்றும் ஜான் மிச்சின்சன் பொதுவான அறியாமைகள் தமிழில் : த.க. பாலகிருட்டிணன்.)
No comments:
Post a Comment