Thursday, April 25, 2019

பகுதிநேரமாக எம்.பில் படித்த ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வை திருப்பித்தர உத்தரவு 800க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிப்பு

சேலம்,ஏப்.25, தமிழக பள்ளிக் கல்வித்துறையின்கீழ் 6 ஆயிரம் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் செயல் பட்டு வருகின்றன.
இப்பள்ளிகளில் 30 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள், முதுகலைப் பட்டம் படித்தால் ஒரு ஊக்க ஊதியமும், எம்பில் அல்லது எம்எட் படித்தால் மற்றொரு ஊக்க ஊதியமும் வழங்கப்படுகிறது.
இதனிடையே கோவை மண் டலத்திற்குட்பட்ட ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட் டங்களில் உள்ள அரசு பள்ளி களில், கடந்த இரு மாதங்களாக ஆண்டு தணிக்கை நடந்தது.
அப்போது, 2008ஆம் ஆண்டுக்கு பிறகு பகுதி நேரமாக எம்பில் ஆய்வு படிப்பில் சேர்ந்து, அதற்கான ஊக்க ஊதியம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், அதனை திரும்ப செலுத்தும்படி உத்தர விட்டு சென்றனர்.
இந்த விவகாரம் ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பட்ட தாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் கூறியதாவது:
கடந்த 2008ஆம் ஆண்டுக்கு பிறகு, தொலைதூர கல்வி மூலமாக எம்பில் முடித்தவர் களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டாம் என கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம், பகுதிநேரமாக படித்தவர்களை, ரெகுலர் போலவே கணக்கில் கொள்ள லாம் என யூஜிசி வழிகாட்டுதலில் உள்ளது. மேலும், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு தெரிவித்த பதிலில், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில், துறை முன்அனுமதியோடு படித்திருந் தால் ஏற்றுக்கொள்ளப் படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், கோவை மண்டலத் தில் உள்ள அரசுப்பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட வருடாந்திர தணிக்கையின்போது, பகுதி நேர மாக எம்பில் முடித்த பலருக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதியத்தை திரும்ப பெற உத்தரவிடப் பட்டுள்ளது. இதனால், சுமார் 800க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள், 50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை திரும்ப செலுத்த அறிவுறுத்தப்பட்டுள் ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, எந்தவொரு தெளிவான முடிவு கிடைக்கவில்லை.
குறிப்பாக, ஆர்டிஅய் தகவ லுக்கும், முதல்வரின் தனிப்பிரிவு அளித்த பதிலுக்கும் முரண் பாடுகள் உள்ளன.
அதேபோல், யூஜிசி வழி காட்டுதல்களையும் கண்டுகொள் ளாதது வெளிப்படையாக தெரி கிறது. எனவே, இந்த விவ காரத்தில், யூஜிசி வழிகாட்டுதல் களை தெளிவுபடுத்தி, பட்டதாரி ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட தணிக்கை தடையை நீக்க வேண்டும்.


இவ்வாறு ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இலங்கை பயங்கரவாதத் தாக்குதல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 359ஆக அதிகரிப்பு


கொழும்பு, ஏப். 25- இலங்கையில் தேவா லயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் குண்டு வெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 359-ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக, இலங்கையில் மூன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்பட மொத்தம் 8 இடங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் 7 இடங் களில் தற்கொலைத் தாக்குதல்கள் நிகழ்த் தப்பட்டன. இந்த தாக்குதலில் 10 இந்தி யர்கள் உள்பட 359 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர்ருவான் விஜவர்தன புதன் கிழமை கூறியதாவது:
பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரி ழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதி கரித்து வருகிறது. பாதுகாப்பு நடவடிக்கை களை முறையாக மேற்கொள்ள அரசு தவறிவிட்டது என்பதை ஒப்புக் கொள்கி றோம். வேறு சில பாதுகாப்பு நடவடிக் கைகளை மேற்கொள்ளுமாறு அதிபர் மைத்ரிபால சிறீசேனா அறிவுறுத்தியுள்ளார். இந்த தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர் களில் 32 பேர் குற்றப்பிரிவு விசாரணை துறையின் காவலில் உள்ளனர். நியூஸிலாந் தின் கிறைஸ்ட்சர்ச் மசூதி தாக்குதலுக்கு பழிவாங்குவதற்காக தேவாலயங்களில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலுக்கு அய்.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. எனினும், அவர்கள்தான் இதை செய்தார்கள் என்ப தற்கு எந்த ஆதாரமும் இல்லை. இலங்கை பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்கீத் ஜமாத் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதல் களை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக் கப்படுகிறது.
வெளிநாட்டவர்கள்
34 பேர் உயிரிழப்பு
இந்த தாக்குதலில், 10 இந்தியர்கள், பிரிட்டனைச் சேர்ந்த 6 பேர், சீனா, அமெரிக்காவைச் சேர்ந்த 2 பேர் உள்பட வெளிநாட்டவர்கள் 34 பேர் உயிரிழந்தனர் என்று கூறினார்.
இலங்கையில் 7 இடங்களில் நிகழ்த்தப் பட்ட தற்கொலைத் தாக்குதல்களில், ஒரு பெண் உள்பட 9 பேர் தங்களது உடம்பில் வெடிகுண்டுகளை கட்டிக் கொண்டு தாக்குதல் நடத்தியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த பெண் தற்கொ லைத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கர வாதிகளில் ஒருவரின் மனைவி என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கள் அனைவருமே பட்டப்படிப்பு படித்த வர்கள் என்றும், சமூகத்தில் நல்ல அந்தஸ் தில் வாழ்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சின்னமோன் கிராண்ட் மற்றும் ஷாங்க்ரி லா நட்சத்திர விடுதிகளில்  தாக்கு தல் நடத்திய இருவரும் சகோதரர்கள் என்று தெரிய வந்ததையடுத்து, அவர்களது வீட்டை சோதனையிட்டதில் பயங்கரவா தம் குறித்த புத்தகங்கள், செல்லிடப்பேசி சிம்கார்டுகள் உள்ளிட்டவை கைப்பற்றப் பட்டன. அவர்களது இளைய சகோதரர், விடுதியில் விட்ட ஆட்டோ ஓட்டுநர் ஆகியோரையும் விசாரணைக்காக காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதனிடையே, இலங்கையில் தேசிய தவ்கீத் ஜமாத் பயங்கரவாத அமைப்பை தோற்றுவித்தவர் என்று கூறப்படும் ஜக்ரான் காசிம் என்பவருக்கு இந்த தாக்கு தல்களில்  தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த தாக்குதல்களுக்கு பொறுப்பேற்ப தாக அய்.எஸ். பயங்கரவாத அமைப்பு செவ்வாய்க்கிழமை ஒரு காணொலியை வெளியிட்டது.
இந்நிலையில், இலங்கையில் பயங்கர வாதச் செயல்களில் ஈடுபட்டவரான ஜக்ரான் காசிம் முகம் அந்த காணொலியில் தெரிந்ததாக காவல் துறையினர் கூறினர். எனினும், காணொலியில் இருந்த பயங்கர வாதிகள் தங்களது முகத்தை பாதி மறைத் திருந்ததால், காசிமின் அடையாளம் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
தற்கொலைத் தாக்குதல் சம்பவங்களுக்கு பிறகு இலங்கையில் அவசர நிலை அமல் படுத்தப்பட்ட நிலையில், நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொழும்புவின் தெற்கு பகுதியில் உள்ள நகரில் தனியாக நின்றிருந்த இரு சக்கர வாகனத்தை கண்ட காவல் துறை யினர் அதில் வெடிகுண்டு இருக்கிறதா என்று சோதனையிட்டனர். நல்வாய்ப்பாக அதில் எந்த வெடிபொருள்களும் இல்லை. அதையடுத்து, பொது இடங்களில் வாக னங்களை நிறுத்திச் செல்வோர், வாகனத் தின் பின்புறம் தனது பெயரையும், செல்லி டப்பேசி எண்ணையும் எழுதி வைக்க வேண்டும் என்று மக்களுக்கு காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.
முன்கூட்டியே எச்சரிக்கை
இலங்கையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவிருப்பதாக, இந்தியாவும் அமெரிக்காவும் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தன என்று அந்நாட்டு அமைச்சர் கூறியதற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலைனா டெப்லிட்ஸ் கூறுகையில், "இலங்கை அரசுக்கு வேறு என்னென்ன தகவல்கள் கிடைத்தது என்று எங்களுக்கு தெரியவில்லை. உளவுத் துறை தகவல்களை சேகரிப்பதிலும், தகவல் பரிமாற்றத்திலும் பின்னடைவு ஏற்பட்ட தாக இலங்கை அரசே ஒப்புக் கொண்டுள் ளது. இலங்கையில் நடைபெற்ற தற் கொலைத் தாக்குதல்கள் குறித்து எங்களுக்கு முன்கூட்டியே தெரியாது. அதனால் நாங் கள் எந்த தகவலையும் அவர்களுக்கு அளிக்கவில்லை ' என்றார்.
இந்த நிலையில், இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து, இலங்கையில் அதிபர் சிறிசேனா தலை மையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடை பெறுகிறது. குண்டு வெடிப்பு குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகள், மற்றும் தலைவர்களுடன் சிறிசேன ஆலோசனை நடத்த உள்ளார்.  அதனை தொடர்ந்து  இலங் கையில் அதிபர் சிறிசேன தலைமையில் அனைத்து மத கூட்டம் நடைபெறவுள்ளது.
இலங்கையில் இன்றிரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குண்டுவெடிப்பு சம்பவங்களால் நிலவும் பதற்றத்தை குறைக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மண்ணெலாம் பண்பாடும் மகத்தான சாதனை!

மறக்க முடியாத ஏப்ரல் 21 (2019) என்று சொல்லும் பொழுது - அது ஏதோ பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்திற்கானது மட்டுமல்ல!
தமிழ்நாடே, ஏன் இந்தியத் துணைக் கண்டமே, ஏன் ஆசியாக் கண்டமே மறக்க முடியாத மகத்தான நாள் அந்நாள்.
ஆம். அந்த நாளில்தான் பெரியார், மணியம்மை ஆகிய தலைவர்களின் பெயரைத் தாங்கிய - வல்லம் - அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம், விண்ணில் செயற்கைக்கோளை ஏவி - எதிர்பார்த்ததைவிட பெரிய வெற்றி என்னும்  சிகரத்தைத் தொட்டது.
இனிவரும் உலகைப் பற்றி இன்றைக்கு 81 ஆண்டுகளுக்கு முன்பாகவே பேசிய பேரறிவாளர் தந்தை பெரியார்! சோதனைக் குழாய்க் குழந்தையைப் பற்றி அவர் உலகுக்கு அறிவித்தது 1938ஆம் ஆண்டில்!
அதனைத் தொடர்ந்து இனிவரும் உலகத்தைப் பற்றி அந்த சமுதாய விஞ்ஞானி பல்வேறு தகவல்களைத் தெரிவித்த ஆண்டு (1943).
போக்குவரத்து எங்கும் ஆகாய விமானமும், அதிவேக சாதனமாகவே இருக்கும். கம்பியில்லா தந்தி ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும். ரேடியோ ஒவ்வொரு தொப்பியிலும் அடைக்கப்பட்டிருக்கும். உருவத்தைத் தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக் கொள்ளத்தக்க சவுரியம் ஏற்படும். மேற்கண்ட சாதனங்களால் ஒரு இடத்தில் இருந்து கொண்டே  - பல இடங்களில் உள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்க சாத்தியப்படும் என்பது போன்ற தகவல்களை தொலைநோக்கோடு சொன்னவர் - அய்.நா.வின் யுனெஸ்கோ சார்பில் அளிக்கப்பட்ட விருதில் குறிப்பிடப்பட்ட "தொலைநோக்காளர்" பெரியார்!
உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் தந்தை பெரியார் அவர்கள் எடுத்துக் கூறும் கருத்துக்கள் தொடக்கத்தில் கடும் எதிர்ப்பையும், கசப்பையும், ஏளனத்தையும்தான் சந்தித்தன.
ஆனால் காலவோட்டத்தில் அவை செயலுக்கு வரும் பொழுது மூக்கின்மேல் விரலை வைத்து வியப்பின் விளிம்புக்கே செல்லுவர்.
அதுதான் இப்பொழுதும் நடத்திருக்கிறது. அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி அவர்களின் பெயரில் அந்த செயற்கைக்கோள் (பலூன்) சிறீப் பாய்ந்த அந்தத் தருணத்தை இப்பொழுது எண்ணிப் பார்த்தாலும் உடல் அணுக்கள் எல்லாம் சிலிர்க்கின்றன. 70 ஆயிரம் அடிவரை மேலே செல்லும் என்ற எதிர்ப்பார்ப்பையும் விஞ்சி 103851 (32 கி.மீ.) அடிவரை உயரே பறந்து பாதுகாப்பாக தரையிறங்கியது. பலே! பலே!!
'தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆளும் கை!' என்றார் புரட்சிக் கவிஞர்; பெண்கள் என்றால் குழந்தையைப் பெறுவது - அந்தக் குழந்தையைத் தாலாட்டுச் சொல்லி ஆட்டித் தூங்கி வைப்பது மட்டும்தான் என்று நினைக்காதீர்கள் - அந்தக் கை தொல்லுலகையே ஆளும் என்று தந்தை பெரியார் அவர்களின் சிந்தனையைச் சுவாசித்த புரட்சிக் கவிஞர் பாடினாரே!
பெரியார் கல்வி நிறுவனத்தில் இந்தசாதனை நிகழ்த்தப் பட்டதில் இரு பெரும் சிறப்புகள் பூத்துக் குலுங்குகின்றன!
ஒன்று பெரியார் மணியம்மை தொழில்நுட்ப நிறுவனம் - இரண்டாவது பெண்கள் அதனைச் சாதித்தனர் என்பதாகும். பெண்ணுரிமைக்காக தந்தை பெரியார் குரல் கொடுத்ததுபோல, பெண்ணியம் பற்றி தந்தை பெரியார் விரித்துக் கூறிய செழுமை மேலிடும் சீரிய கருத்துக்கள் போல, உலகில் எந்த அறிஞரும் எண்ணிப் பார்த்ததில்லை - அதுவும் அந்தக் கால கட்டத்திலேயே!
அந்தத் தலைவரின் எண்ணங்களை ஈடேற்றும் வகையில்  பெண்கள் நிகழ்த்திக் காட்டினர் என்பது சாதாரணமா! தந்தை பெரியாரும் - அன்னை மணியம்மையாரும் உயிரோடு இருந்து அந்தக் காட்சியைக் கண்டிருந்தால் அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கும், பூரிப்புக்கும் எல்லைதான் ஏது? இந்தச்சாதனையில் இன்னொரு முக்கிய கூறும் குறிப்பிடத் தகுந்தது. முதல் தலைமுறையாகக் கல்லூரியில் காலடி எடுத்து வைத்த - அதுவும் கிராமப்புறங்களைச் சார்ந்த பெண்கள் இந்தச் சாதனையைச் சாதித்துக் காட்டியுள்ளனர் என்பது தான் அந்தக் கூறாகும். மதிப்பெண்கள்தான் தகுதி - திறமையை அளக்கும் அளவுகோல் என்ற பத்தாம் பசலித்தனத்தின் மூக்கை உடைத்து, மூடி சூட்டியுள்ளனர் நமது மாணவியாராம் மாண்புமிகு 'கண்மணி'கள்!
பாராட்டுகிறோம் - பாராட்டுகிறோம் - பலபடப் பாராட்டு கிறோம். இந்த மாணவிகளுக்கு ஊக்கமும், ஆக்கமும் தந்து சிறப்பான முறையில் வழிகாட்டிய பேரசிரியர் பெரு மக்களும், துணைவேந்தர், பதிவாளர் உட்பட நிருவாகத்தினர் அத்தனைப் பேரும் பெரும் பாராட்டுக்குத் தகுதி உடையோர் ஆவர்.
மேடும் பள்ளமுமாக வெறிச்சோடிக் கிடந்த அந்தப் பகுதியில் இப்படியொரு கல்வி உலகத்தை உருவாக்கிய பல்கலைக் கழகத்தின் வேந்தர் - நமது மதிப்பிற்குரிய ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் இந்தச் சாதனைகளின் அடித்தளமாக, ஆதார சுருதியாக இருப்பவர் என்பதை யார்தான் மறுக்க முடியும்? உலகிலேயே முதல் பெண்கள் பொறியியல் கல்லூரி என்ற பெருமையுடன் தொடங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம்  (1988) இன்றைக்கு உலகின் கவனத்தை ஈர்த்து விட்டது. சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று ஆக்கப்பட்ட ஒரு சமுதாயத்திற்குக்  (அதுவும் பெண்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்!)கல்வி உரிமையைப் பெற்றுத் தந்ததோடு அல்லாமல், பெரியார் அறக்கட்டளைகள் மூலம் கல்வி நிறுவனங்களையும் உருவாக்கி, தமிழ்நாட்டில் ஒளி விடும் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களாக ஜொலிக்கும் பேரும் புகழும் பெற்றுத் திகழ்கின்றன.
தந்தை பெரியார் காலத்தில் ஒரு தொடக்கப்பள்ளி, மாணவர் - மாணவிகளுக்குத் தனித்தனி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் என்கிற அளவோடு இருந்த கல்வி நிறுவனங்கள் தந்தை பெரியார் மறைவிற்குப்பிறகு,  அன்னை மணியம்மையார் அவர்களுக்கு பிறகு, நமது தலைவர் ஆசிரியர் காலத்தில் உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகள், மருந்தியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, குழந்தைகள் இல்லம், முதியோர் இல்லம் என்று கிளை பரப்பி நிற்கிறது. இந்தக் கல்வி நிறுவனங்களில் பயின்றோர் உலகெங்கும் பரவி மிகப் பெரிய பொறுப்புகளில் செம்மாந்து நிற்பதையும் எண்ணி எண்ணி மகிழத்தக்கவையே! வாழ்க பெரியார்! மேலும் வளர்க அவர்களின் காண விரும்பிய சாதனைகள்!

Friday, April 19, 2019

பிலிப்பைன்ஸ் அகழ்வாராய்ச்சியில் 50,000 ஆண்டுகளுக்கு முந்தைய புதிய மனித குலப் படிமங்கள் கண்டெடுப்பு

பிலிப்பைன்ஸ் குகையொன்றில் பண்டைய மனித குடும்பத்தின் புதிய கிளையொன்று கண்டுபிடிக்கப் பட்டதாக தகவல் தெரிய வந்துள்ளது. அவை கிடைத்த இடமான லஸோன் தீவை அடிப்படையாகக் கொண்டு இந்தப் புதிய கண்டு பிடிப்புக்கு ஹோமோ லஸோனென்சிஸ் என்று பெயரிடப்பட்டிருக் கிறது. இவர்கள் இன்றைய இன்றைய மனித குலத்தின் நேரடி மூதாதையர்களாக இருக்க வாய்ப்பில்லை எனினும் தூரத்துச் சொந்தங்களாக இருக்க 99 சதவிகித வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இவர்கள் வாழ்ந்திருந்த காலம் இன்றைக்கு 50,000 ஆண்டு களுக்கு முற்பட்டதாக இருக்கலாம். அன்று இந்த மனிதர்களின் உயரம் வெறும் 3 அடிகளே என புதன் அன்று வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கண்டுபிடிப்பானது மனித பரிணாம வளர்ச்சி குறித்த அறிவியல் கண்டுபிடிப்புக் கதைக்கு மேலும் சர்ச்சையைக் கூட்டியுள்ளது. குரங்கில் இருந்து மனிதன் பிறந்தான் எனும் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை சிதைப்பதாக இருக்கிறது இந்தப் புதிய கண்டுபிடிப்பு. ஏனெனில் மனித குலம் தோன்றிய காலங்களில் இருந்து பல விசித்திரமான வடிவங்களில் எல்லாம் எண்ணற்ற மனித குலங்கள் வாழ்ந்து மடிந்திருக்கக் கூடும் எனும் அய்யப்பாட்டுக்கு இந்தக் கண்டுபிடிப்பு வழிவகுத்திருக்கிறது.
நமது மூதாதையர்களாகக் கருதப்படும் ஹோமோசேபியன்கள் இப்போது ஒப்பீட்டளவில் தனியாக இந்த உலகில் வாழ்கின்றனர்.
தற்போது கிடைத்து வரும் புதிய மனித இனங்களைக் காண்கையில் மனிதனின் பரிணாம வளர்ச்சியில் நாம் எதிர்பார்த்த மாற்றங்களைக் காட்டிலும் மேலும் அதிகமான மாறுதல்களைத் தருவனவாக உள்ளன என்கிறார் கனடா, லேக்ஹெட் பல்கலைக் கழகத்தின் மானுடவியல் துறை வல்லுனரான மேத்யூ டோச்செரி. இவர் மேற்கண்ட அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டவர் இல்லையென்ற போதும் ஒரு மானுடவியலாளர் எனும் அடிப்படையில் மேற்கண்ட கருத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

2000 ல் பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அர்மண்ட் சால்வடர் மிஜரிஸ் எனும் மாணவர் லஸோன் தீவிலிருக்கும் கல்லாவோ குகைப்பகுதிகளை பிலிப்பைன்ஸில் முதலில் விவசாயம் செய்த மனித இனம் எது எனும் ஆராய்ச்சிக்காக தோண்ட முற்படுகையில் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் அவர் மேலும் ஆழமாக அந்தப் பகுதி நிலத்தைத் தோண்டுவது என முடிவெடுத்தார்.
இந்தோனேசியத் தீவுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் ஆய்வுகளின் வாயிலாக கண்டறியப்பட்ட 60,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிரம்மாண்டமான மனித உயிரினங்களுக்கு அன்றைய விஞ்ஞானிகள் ஹோமோ ஃப்ளோரெசியன்சிஸ் என்று பெயர் சூட்டியிருந்தனர். அவை சில அம்சங்களில் இன்றைய மனிதர்களின் இயல்புகளுடன் ஒத்துப் போவதாயிருந்தன. அத்துடன் அவர்கள் தாங்கள் வாழ்ந்த காலத்தில் கற்கருவிகளை கையாளத் தெரிந்தவர் களாகவும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் இவ்வகை மனித உயிரினங்களில் வயது வந்தவை அனைத்தும் சுமார் 3 அடி மட்டுமே வளர்ச்சி கொண்டவையாகவும் மிகச்சிறிய மூளை கொண்டவையாகவும் இருந்தவை சந்தேகத்திற் கிடமானவையாக இருந்தன. அதன் காரணமாகவே இவர்களின் நிஜமான மூதாதையர்கள் யார் எனும் ஆராய்ச்சி இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒருவேளை இவர்களின் மூதாதையர்கள் ஆப்ரிக்காவைச் சேர்ந்த ஹோமினைன்களாக இருக்கலாம். அவர்கள் தான் உயரம் குறைந்த வர்களாகவும் சிறிய மூளை கொண்டவர்களாகவும் இருந்தனர்.


ஆனால் தற்போது பிலிப்பைன்ஸ் அகழ்வாராய்ச்சியில் கிடைத்திருக்கும் படிமங்களில் பற்களும், கால் சிற்றெலும்புகளும் கிட்டத்தட்ட இன்றைய மனித குலத்தை ஒத்தவையாகவே இருக் கின்றன. அளவு தான் இடிக்கிறது. உலகில் இதுவரை கண்டுபிடிக்கப் பட்ட எந்த ஒரு மனித குலத்தையும் விட இவை மிகச்சிறியவையாக இருக்கின்றன.

கருந்துளை: கண்டுபிடிப்பும், படிப்பினைகளும்...!

பூமி, செவ்வாய், புதன், வியாழன் உள்பட கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருவது நாம் தெரிந்ததே.
சூரியனின் ஈர்ப்பு விசை. தற்போது ஒரு நிமிடம் கண்களை மூடி மேலே உயரே சென்று சூரிய மண்ட லத்தையும், அதன் கிரகங்களையும் மனதில் நினை யுங்கள். பூமி, செவ்வாய், புதன் சுற்றும்போது சூரியனை உங்களால் பார்க்க முடியவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் சூரியனின் விசை இல்லாமல் அவை சுற்ற முடியாது. அதாவது நாம் சூரியனைப் பார்க்க முடியாவிட்டாலும் பூமி, செவ்வாய் எல்லாம் சுற்றும். இதற்கு சுற்று வட்டத்தின் மய்யம் கொடுக்கும் ஈர்ப்பு விசை இருக்கும் இடத்தில் இருப்பது ஆகும்.
சூரியன்தான் மற்ற கிரகங்கள் பயணத்தின் காரணி. ஆயினும் நம்மால் சூரியனை பார்க்க முடிவதன் காரணம் அதன் ஒளி நம் பூமிக்கு வருவதால்தான்.
ஆனால் அண்டத்தில் பல இடங்களில் பூமி, செவ்வாய் போன்றவை சுற்றி வரும்போது அவற்றின் மய்யத்தில் சூரியன் போன்ற ஒரு நட்சத்திரத்தை மனிதனால் காண முடியாத நிலை இருந்தது. அதற்கு காரணம் மிக அதிகமான விசை உள்ள ஒரு பெரிய நட்சத்திரம் அதன் ஒளியைக் கூட வெளிவிடாதது காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்து அவற்றின் இருப்பை உணர்ந்து, அதை பார்க்க முடியாததால் அதற்கு கருந்துளை என்று பெயரிட்டனர். அதை இன்று வரை யாரும் காணவில்லை. தனது ஈர்ப்பு எல்லைக்குள் வரும் ஒளியைக் கூட வெளியேற விடாமல் தன்னகத்தே வைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்ட இந்த கருந்துளைகள் அதன் அருகில் இருக்கும் நட்சத்திரங்களை கூட ஈர்த்து விழுங்கக்கூடியவை.
பெரிய நட்சத்திரங்களில் அதிகமான ஈர்ப்பு சக்தி இருக்கும்போது அதன் எடை அப்படியே இருக்கும். ஆனால் அதன் அளவு சுருங்கி கொண்டே போகும். அதனால் அதன் அடர்த்தி மிக, மிக அதிகமாகி கொண்டே போகும்.
பூமியில் நாம் ஒரு பொருளை சூரிய ஒளியின் பிரதிபலிப்பை வைத்துதான் பார்க்கிறோம். இரவில் நிலவு, மின்சார ஒளியின் உதவியால் அந்த பொருள் என்னவென்று பார்க்கிறோம். அதைப் போல தூரத்தில் இருக்கும் நட்சத்திரங்களை சூரிய ஒளி இல்லாத இரவுகளில் அவை அனுப்பும் ஒளிக்கற்றைகளை வைத்து பார்க்க முடிகிறது.
அண்ட வெளியில் நட்சத்திர மண்டலத்தில் சூரிய ஒளிபோல் நட்சத்திர ஒளி இருந்தாலும் அவற்றையும் கருந்துளைகள் ஈர்த்துக்கொள்கின்றன. கருந்துளையில் அது உற்பத்தி செய்யக்கூடிய ஒளியைப் பார்க்க முடியாது. அதன் ஒளியை அதே ஈர்த்துக்கொள்கிறது.
வெளியில் இருந்து எந்த ஒளி வந்தாலும் அதை ஈர்த்துக்கொள்கிறது. நட்சத்திரங்கள் போல் எந்த பொருள் வந்தாலும் ஈர்த்துக்கொள்கிறது மற்றும் அதை நாம் பார்க்க முடியாது. எல்லாவற்றையும் ஈர்த்துக் கொள் வதால் அதை கருந்துளை என்கிறோம்.
அண்டத்தில் இருக்கும் பூமி, நிலவு உள்பட எல்லா நட்சத்திரங்களுக்கும் அதற்கான சுழற்சி இருந்து கொண்டு இருக்கிறது. சுழற்சி மற்றும் ஈர்ப்பு விசையில் இருக்கும் அண்டவெளியில் அதிகமான கதிர் வீச்சுகளும் உள்ளன. அது கருந்துளைக்கு அருகில் செல்லும்போது அவை ஈர்க்கப்படுகிறது.
இரவு நேரத்தில் விண்கற்கள் கீழே எரிந்து விழுவதை பார்த்து இருக்கிறோம். அவை பூமியால் ஈர்க்கப்பட்டு வரும்போது பூமியில் ஏற்படும் உராய்வினால் ஏற்படும் வெப்பமே இதற்கு காரணம்.
இதேபோன்று கருந்துளையை சுற்றியுள்ள இடங் களில் இருந்து கருந்துளையை நோக்கி ஈர்க்கப்படும் பல கதிர் இயக்க ஒளிக்கற்றைகள் மிகவும் லேசாக இருந் தாலும் கூட அதிகபட்சமான ஈர்ப்பு விசை இருப்பதால் கருந்துளைக்கு அருகில் செல்லும் போது வளிமண்டலத் தில் உராய்வு ஏற்படுகிற மாதிரி ஈர்ப்பு விசைக்குள் அவை உராய்ந்து உள்ளே சென்று விடுகிறது.
இத்தகைய கருந்துளைகளின் இருப்பு பற்றிய தகவல் களை பல ஆண்டுகளுக்கு முன்னே விஞ்ஞானிகள் கணித்து வந்தாலும் அதை படம் பிடிக்க முடியவில்லை. இப்போதுதான் முதல் முறையாக கருந்துளையை பார்க்க முடியாவிட்டாலும் அதை சுற்றி நிகழும் மேற்கண்ட நிகழ்வுகளை பார்க்க முடிகிறது. இந்த நிகழ்வுகளை பற்றிய அடுத்தகட்ட புரிதல்களும், கருந்துளையில் நடக் கக்கூடிய நிகழ்வுகளையும் நாம் புரிந்து கொள்ளும் போது இந்த பேரண்டத்தின் ஆதியை புரிந்துகொள் வதற்கான வழிமுறை ஏற்படும்.
நாம் வாழும் பால் வெளியில் இன்னொரு கருந்துளை இருந்தாலும் அதை இதுவரை நம்மால் பார்க்க முடிய வில்லை. அது நாம் தற்போது பார்க்கக்கூடிய கருந் துளையை விட அளவில் சிறியதாக இருப்பதால் அதை சுற்றியுள்ள இயற்கை நிகழ்வுகளின் வீரியம் குறைவாக இருக்கும்.
கருந்துளையை படம் எடுப்பது எளிதான காரியம் அல்ல. பல சவால்களை சந்திக்க வேண்டும். கருந் துளையை படம் பிடிக்க வேண்டும் என்றால் அந்த பொருளில் இருந்து காட்சி படும் அளவு கணிசமான ஒளி இருக்க வேண்டும். அடுத்ததாக அந்த பொருள் வெளிப்படுத்தும் மங்கலான ஒளியை கண்டு காட்சி பிம்பத்தை ஏற்படுத்தும் அளவுக்கு நவீன திறன் கொண்ட தொலைநோக்கி வேண்டும். கருந்துளை ஒளியை உமிழாது அதுமட்டுமின்றி அதன் மீது ஒளியை பாய்ச்சினாலும் பிரதிபலிக்காது. உறிஞ்சி கொண்டு விடும்.
தற்போது விஞ்ஞானிகள் படம் எடுத்துள்ள எம்:87 என்ற கருந்துளையை படம் பிடிக்க சற்றேறக்குறைய பூமியின் விட்டத்தில் ஒரு பெரிய தொலைநோக்கி இருந்தால் மட்டுமே முடியும். ஆனால் அப்படி ஒன்று தற்போது சாத்தியமில்லை.
இந்த குறையை நிவர்த்தி செய்ய கடந்த பத்து ஆண்டுகளாக விஞ்ஞானிகள் பேசி வந்த இரு வழி முறைகளை ஒருங்கே சேர்த்து பன்னாட்டு விஞ்ஞானிகள் கண்ட ஒரு தொலைநோக்கி தான் ஈவன்ட் தொலைநோக்கி என்ற அமைப்பு. இதில் பூமியில் அமெரிக்கா, அய்ரோப்பா, அண்டார்டிகா, ஆசியா ஆகிய கண்டங்களில் உள்ள எட்டு தொலைநோக்கிகள், ஒவ்வொன்றும் 10 மீட்டருக்கும் மேல் விட்டமுள்ளவை. அவை அனைத்தையும் ஒன்றாக இணைந்து ஒரே நேரத்தில் படம் எடுத்து பின் சேர்ப்பது என்பது ஒருமுறை. மற்றொன்று இதே முறையில் கிட்டத்தட்ட 10 நாட்கள் எடுக்கும்போது அண்டத்தில் இருந்து பார்க் கும்போது பூமியின் சுழற்சியில் ஒவ்வொரு தொலை நோக்கியும் வேறு, வேறு இடம் நோக்கி நகர்கிறது.
இந்த நகர்வுகள் எல்லாமே சேர்ந்து பூமியின் விட் டத்தை ஒத்த ஒரு தொலைநோக்கி போன்ற ஒரு செயல் முறை நிகழ்கிறது. அதனால் சிறிய எட்டு தொலை நோக்கிகளை வைத்து ஒரு பெரிய தொலைநோக்கி ஒத்த செயல்திறனை விஞ்ஞானிகள் உருவாக்கினர். ஆனால் இதற்கு பெரிய கணினிகளின் துறையும் 200 பன்னாட்டு விஞ்ஞானிகளின் உழைப்பும், கிட்டத்தட்ட ரூ.300 கோடியும் செலவாகி உள்ளது. இதன் மூலம் கிடைத்த படம்தான் நாம் இங்கே பார்ப்பது.
இருந்தாலும் இன்னும் செயல்திறன் அதிகமாக இருக்கக்கூடிய தொலைநோக்கிகளையும், செயற்கை கோள்களையும் வைத்து பிற்காலத்தில் இதை விரிவாக ஆராயக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.
நமக்கு அருகில் உள்ள கருந்துளையை பார்க்க இன்னும் அதிகம் செலவாகும். அதற்கு செலவு செய்ய லாமா? வேண்டாமா? என்பதற்கும் நமது பால்வழியில் இருக்கக்கூடிய கருந்துளை பற்றி ஆராய்வதற்கும் அதனால் நமக்கும், நமது சூரிய மண்டலத்துக்கும் பாதிப்பு எதுவும் இருக்கிறதா? என்பதை பார்ப்பதற்கும் இந்த ஆராய்ச்சி முடிவு முன்னோடியாக இருக்கும்.
நமது செயற்கை கோள்களை விண்ணில் ஏவும்போது பூமியின் ஈர்ப்பு விசை மற்றும் கிரகங்களில் ஈர்ப்பு விசையை சரியாக புரிந்து, கணித்து, வடிவமைத்து அனுப்புகிறோம். சந்திரயான், மங்கல்யான் போன்ற செயற்கை கோள்கள் வெற்றிக்கு இதுதான் காரணம்.
இப்படிப்பட்ட கருந்துளைகளால் அதற்கு அருகில் உள்ள நட்சத்திர கூட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்பு களையும் ஆராய்வதற்கு இந்த கண்டுபிடிப்புகளும், ஆராய்ச்சிகளும் முன்னோடியாக அமையும். இந்த கண்டுபிடிப்பால் தற்போதைக்கு பூமிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
நன்றி: தினத்தந்தி, 15.4.2019



சீனாவை விட 2 மடங்கு இந்தியாவின் மக்கள் தொகை

சீனாவை விட 2 மடங்கு வேகத்தில் இந்தியா வின் மக்கள்தொகை பெருகி வருவதாக யுஎன்எப்பிஏ அறிக்கை தெரிவித்துள்ளது.
உலக மக்கள்தொகை குறித்த ஆய்வுகளை யுஎன்எப்பிஏ அமைப்பு செய்து வருகிறது. அந்த அமைப்பு கடந்த 10 ஆண்டுகளாக எடுத்த கணக் கெடுப்பில் இத்தகவல் தெரிய வந்துள்ளது.
2018இ-ல் உலக மக்கள் தொகையானது 760 கோடியாக இருந்தது. இது 2019இ-ல் 770 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் மக்கள் தொகை 2010 முதல் 2019 வரை யிலான காலக்கட்டத்தில் 1.2 சதவீதம் அதிகரித்துள்ளது. இது உலக அளவிலான சராசரி மக் கள் தொகை அதிகரிப்பு விகித மான 1.1 சதவீதத்தை விட அதிகமாகும். ஆனால் சீனாவில் மக்கள் தொகை அதிகரிப்பு 0.5 சதவீதமாகும். எனவே சீனாவை விட 2 மடங்கு வேகத்தில் இந்தியாவின் மக்கள்தொகை பெருகி வருகிறது.
இதுகுறித்து யுஎன்எப்பிஏ இந்தியாவுக்கான அதிகாரி கிளாஸ் பெக் கூறும்போது, இந்தியாவில் அதிக குழந் தைகள் பிறக்கும் அதேநேரத்தில் வயதானவர்களின் எண்ணிக் கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உள்ள இளைஞர் கள் படிப்பாளிகளாகவும் உடல் நலமிக்கவர்களாகவும் நாட்டின் பொருளாதாரம் வளர சமுகத் துக்கு நல்ல பங்களிப்பு தருப வர்களாகவும் முதியவர்களின் நலனில் ஈடுபாடு கொண்டவர் களாகவும் இருப்பதை அரசு உறுதிசெய்யவேண்டும். அதற் காக முன்கூட்டியே திட்டமிடல் வேண்டும். இதுபோன்ற பிரச்சி னைகளை மற்ற நாடுகள் எப் படி சமாளித்தன என்பதை இந் தியா கற்றுக்கொள்ளவேண்டும் என்றார்.

மசூதியில் முசுலிம் பெண்களை அனுமதிக்ககோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

மசூதியில் தொழுகை நடத்த முசுலிம் பெண்களை அனுமதிக்க உத் தரவிடக் கோரி தொடரப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு  உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் சபரிமலை யில் உள்ள அய்யப்பன் கோயி லில் அனைத்து வயது ஆண்க ளும், குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் மட்டுமே அனுமதிக் கப்படுவது பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கடந்தாண்டு செப் டம்பரில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப் பில், சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களை யும் வழிபாட்டுக்கு அனுமதிக் கலாம் என்று கூறியது. இந்நிலையில், மகாராட்டிரா மாநிலம், புனேவை சேர்ந்த முசுலிம் தம்பதியர் மசூதிகளில் தொழுகை நடத்துவதற்கு முசு லிம் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவில், மசூதிக்குள் முசுலிம் பெண் களை தொழுகைக்கு அனுமதிக்க மறுப்பது சட்ட விரோதமானது, அரசியலமைப்புக்கு எதிரானது. எனவே, பெண்களை மசூதிக் குள் அனுமதிப்பதற்கு உத்தர விட வேண்டும் என்று குறிப் பிடப்பட்டுள்ளது.  இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலை மையிலான அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந் தது. அப்போது நீதிபதிகள் அமர்வு, வெளிநாடுகளில் உள்ள மசூதிகளில் பெண்கள் தொழு கைக்கு அனுமதிக்கப்படுகிறார்களா? என கேள்வி எழுப்பி னார்கள். இதற்கு பதில் அளித்த மனுதாரரின் வழக்குரைஞர், "இசுலாமியர்களின் புனிதத்தல மான மெக்கா, மற்றும் கனடாவில் பெண்கள் மசூதிக்குள் அனுமதிக் கப்படுகின்றனர்" என்றார்.
இதைத் தொடர்ந்து நீதிபதி கள் அமர்வு, இந்த வழக்கை நாங்கள் விசாரணைக்கு ஏற்ப தற்கான காரணம், சபரிமலை கோயில் விவகாரத்தில் நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு தான். மசூதிக்குள் முசுலிம் பெண் களை அனுமதிப்பது குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட் டனர்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...