மறக்க முடியாத ஏப்ரல் 21 (2019) என்று சொல்லும் பொழுது - அது ஏதோ பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்திற்கானது மட்டுமல்ல!
தமிழ்நாடே, ஏன் இந்தியத் துணைக் கண்டமே, ஏன் ஆசியாக் கண்டமே மறக்க முடியாத மகத்தான நாள் அந்நாள்.
ஆம். அந்த நாளில்தான் பெரியார், மணியம்மை ஆகிய தலைவர்களின் பெயரைத் தாங்கிய - வல்லம் - அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம், விண்ணில் செயற்கைக்கோளை ஏவி - எதிர்பார்த்ததைவிட பெரிய வெற்றி என்னும் சிகரத்தைத் தொட்டது.
இனிவரும் உலகைப் பற்றி இன்றைக்கு 81 ஆண்டுகளுக்கு முன்பாகவே பேசிய பேரறிவாளர் தந்தை பெரியார்! சோதனைக் குழாய்க் குழந்தையைப் பற்றி அவர் உலகுக்கு அறிவித்தது 1938ஆம் ஆண்டில்!
அதனைத் தொடர்ந்து இனிவரும் உலகத்தைப் பற்றி அந்த சமுதாய விஞ்ஞானி பல்வேறு தகவல்களைத் தெரிவித்த ஆண்டு (1943).
போக்குவரத்து எங்கும் ஆகாய விமானமும், அதிவேக சாதனமாகவே இருக்கும். கம்பியில்லா தந்தி ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும். ரேடியோ ஒவ்வொரு தொப்பியிலும் அடைக்கப்பட்டிருக்கும். உருவத்தைத் தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக் கொள்ளத்தக்க சவுரியம் ஏற்படும். மேற்கண்ட சாதனங்களால் ஒரு இடத்தில் இருந்து கொண்டே - பல இடங்களில் உள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக் கொடுக்க சாத்தியப்படும் என்பது போன்ற தகவல்களை தொலைநோக்கோடு சொன்னவர் - அய்.நா.வின் யுனெஸ்கோ சார்பில் அளிக்கப்பட்ட விருதில் குறிப்பிடப்பட்ட "தொலைநோக்காளர்" பெரியார்!
உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் தந்தை பெரியார் அவர்கள் எடுத்துக் கூறும் கருத்துக்கள் தொடக்கத்தில் கடும் எதிர்ப்பையும், கசப்பையும், ஏளனத்தையும்தான் சந்தித்தன.
ஆனால் காலவோட்டத்தில் அவை செயலுக்கு வரும் பொழுது மூக்கின்மேல் விரலை வைத்து வியப்பின் விளிம்புக்கே செல்லுவர்.
அதுதான் இப்பொழுதும் நடத்திருக்கிறது. அன்னை மணியம்மையார் நூற்றாண்டையொட்டி அவர்களின் பெயரில் அந்த செயற்கைக்கோள் (பலூன்) சிறீப் பாய்ந்த அந்தத் தருணத்தை இப்பொழுது எண்ணிப் பார்த்தாலும் உடல் அணுக்கள் எல்லாம் சிலிர்க்கின்றன. 70 ஆயிரம் அடிவரை மேலே செல்லும் என்ற எதிர்ப்பார்ப்பையும் விஞ்சி 103851 (32 கி.மீ.) அடிவரை உயரே பறந்து பாதுகாப்பாக தரையிறங்கியது. பலே! பலே!!
'தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆளும் கை!' என்றார் புரட்சிக் கவிஞர்; பெண்கள் என்றால் குழந்தையைப் பெறுவது - அந்தக் குழந்தையைத் தாலாட்டுச் சொல்லி ஆட்டித் தூங்கி வைப்பது மட்டும்தான் என்று நினைக்காதீர்கள் - அந்தக் கை தொல்லுலகையே ஆளும் என்று தந்தை பெரியார் அவர்களின் சிந்தனையைச் சுவாசித்த புரட்சிக் கவிஞர் பாடினாரே!
பெரியார் கல்வி நிறுவனத்தில் இந்தசாதனை நிகழ்த்தப் பட்டதில் இரு பெரும் சிறப்புகள் பூத்துக் குலுங்குகின்றன!
ஒன்று பெரியார் மணியம்மை தொழில்நுட்ப நிறுவனம் - இரண்டாவது பெண்கள் அதனைச் சாதித்தனர் என்பதாகும். பெண்ணுரிமைக்காக தந்தை பெரியார் குரல் கொடுத்ததுபோல, பெண்ணியம் பற்றி தந்தை பெரியார் விரித்துக் கூறிய செழுமை மேலிடும் சீரிய கருத்துக்கள் போல, உலகில் எந்த அறிஞரும் எண்ணிப் பார்த்ததில்லை - அதுவும் அந்தக் கால கட்டத்திலேயே!
அந்தத் தலைவரின் எண்ணங்களை ஈடேற்றும் வகையில் பெண்கள் நிகழ்த்திக் காட்டினர் என்பது சாதாரணமா! தந்தை பெரியாரும் - அன்னை மணியம்மையாரும் உயிரோடு இருந்து அந்தக் காட்சியைக் கண்டிருந்தால் அவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கும், பூரிப்புக்கும் எல்லைதான் ஏது? இந்தச்சாதனையில் இன்னொரு முக்கிய கூறும் குறிப்பிடத் தகுந்தது. முதல் தலைமுறையாகக் கல்லூரியில் காலடி எடுத்து வைத்த - அதுவும் கிராமப்புறங்களைச் சார்ந்த பெண்கள் இந்தச் சாதனையைச் சாதித்துக் காட்டியுள்ளனர் என்பது தான் அந்தக் கூறாகும். மதிப்பெண்கள்தான் தகுதி - திறமையை அளக்கும் அளவுகோல் என்ற பத்தாம் பசலித்தனத்தின் மூக்கை உடைத்து, மூடி சூட்டியுள்ளனர் நமது மாணவியாராம் மாண்புமிகு 'கண்மணி'கள்!
பாராட்டுகிறோம் - பாராட்டுகிறோம் - பலபடப் பாராட்டு கிறோம். இந்த மாணவிகளுக்கு ஊக்கமும், ஆக்கமும் தந்து சிறப்பான முறையில் வழிகாட்டிய பேரசிரியர் பெரு மக்களும், துணைவேந்தர், பதிவாளர் உட்பட நிருவாகத்தினர் அத்தனைப் பேரும் பெரும் பாராட்டுக்குத் தகுதி உடையோர் ஆவர்.
மேடும் பள்ளமுமாக வெறிச்சோடிக் கிடந்த அந்தப் பகுதியில் இப்படியொரு கல்வி உலகத்தை உருவாக்கிய பல்கலைக் கழகத்தின் வேந்தர் - நமது மதிப்பிற்குரிய ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் இந்தச் சாதனைகளின் அடித்தளமாக, ஆதார சுருதியாக இருப்பவர் என்பதை யார்தான் மறுக்க முடியும்? உலகிலேயே முதல் பெண்கள் பொறியியல் கல்லூரி என்ற பெருமையுடன் தொடங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம் (1988) இன்றைக்கு உலகின் கவனத்தை ஈர்த்து விட்டது. சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று ஆக்கப்பட்ட ஒரு சமுதாயத்திற்குக் (அதுவும் பெண்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்!)கல்வி உரிமையைப் பெற்றுத் தந்ததோடு அல்லாமல், பெரியார் அறக்கட்டளைகள் மூலம் கல்வி நிறுவனங்களையும் உருவாக்கி, தமிழ்நாட்டில் ஒளி விடும் மிகச் சிறந்த கல்வி நிறுவனங்களாக ஜொலிக்கும் பேரும் புகழும் பெற்றுத் திகழ்கின்றன.
தந்தை பெரியார் காலத்தில் ஒரு தொடக்கப்பள்ளி, மாணவர் - மாணவிகளுக்குத் தனித்தனி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் என்கிற அளவோடு இருந்த கல்வி நிறுவனங்கள் தந்தை பெரியார் மறைவிற்குப்பிறகு, அன்னை மணியம்மையார் அவர்களுக்கு பிறகு, நமது தலைவர் ஆசிரியர் காலத்தில் உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகள், மருந்தியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, குழந்தைகள் இல்லம், முதியோர் இல்லம் என்று கிளை பரப்பி நிற்கிறது. இந்தக் கல்வி நிறுவனங்களில் பயின்றோர் உலகெங்கும் பரவி மிகப் பெரிய பொறுப்புகளில் செம்மாந்து நிற்பதையும் எண்ணி எண்ணி மகிழத்தக்கவையே! வாழ்க பெரியார்! மேலும் வளர்க அவர்களின் காண விரும்பிய சாதனைகள்!
No comments:
Post a Comment