Tuesday, July 11, 2017

ரூ.20 கோடி அபராதம் 2 ஆண்டுகள் சிறையாம்!

 பழவேற்காடு தொடங்கி குமரி மாவட்டத்தின் நீரோடி வரை 1,078 கிலோமீட்டர் நீளம் கொண்ட தமிழகக் கடற்கரையில், சுமார் 13 லட்சம் மீனவ மக்கள் கடலை நம்பியே வாழ்கிறார்கள். இவர்களில் மீன் பிடிக்கச் செல்பவர்களை, 'தமிழக மீனவர்கள், எங்கள் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தார்கள் எனச் சொல்லி, கைதுசெய்கிறது இலங்கை இராணுவம்.

1983-ஆம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம் 13-ஆம் தேதி இலங்கை அரசு, தமிழக மீனவர்கள் மீதான தனது முதல் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது. 2012-ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 500 மீனவர்கள் இலங்கை அரசால் கொல்லப்பட்டுள்ளனர்.

கடலில் மீன் பிடிக்கும்போது கரைக்கடல், அண்மைக்கடல், ஆழ்கடல் என்று வகுத்துக் கொண்டு மீன் பிடிப்பார்கள். பெரும்பாலும் நாட்டுப்படகுகள் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிப்பது இல்லை. விசைப் படகுகளால் மட்டுமே ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிக்க முடியும். இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே 18  கடல் மைல் கடல் தொலைவு உள்ளது. 12 மைல் தூரம் வரை உள்ளூர் எல்லையாகவும், அதன் பிறகு சர்வதேச எல்லையாகவும் கணக்கிடப்படுகிறது.

சராசரியாக ஒரு விசைப்படகு, மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வலை விரித்தால் 20 கடல் (நாட்டிக்கல்) மைல் வரை அந்தப் படகு மிகச் சாதாரணமாகப் பயணப்படும். இந்தப் பயணம் மீனவர் விரும்பியோ, திட்டமிட்டோ நடப்பது இல்லை. கடல் நீரோட்டம் படகை இழுத்து வந்துவிடும். இந்த நீரோட்டம்தான் மீனவர்களின் தொழிலைத் தீர்மானிக்கும்.

எல்லை என்பது கடலுக்கும், மீனவர்களுக்கும் இல்லை,  பொதுவாக உலகம் முழுவதும் இரண்டு நாட்டுக் கடல் சந்திப்பில் வரும் மீனவர்களைக் கைது செய்வதோ அல்லது சுடுவதோ கிடையாது, ஈரான் மற்றும் இதர அரபு நாடுகளின் கடலில் மீனவர்கள் கைது என்பது எல்லையைத் தாண்டி நீண்ட தூரம் அந்த நாட்டுக் கடல் பகுதியில் நுழைந்தால்தான் சிறை பிடிக்கப்படுவார்கள். குஜராத் மீனவர்கள் பாகிஸ்தான் கடல் எல்லையைத் தாண்டி நீண்ட தூரம் சென்ற பிறகே தான் கைது செய்யப்படுகிறார்கள், அதே போல் பாகிஸ்தான் மீனவர்கள் இந்திய கடற்படையால் நீண்ட தூரம் இந்திய எல்லைக்குள் வந்த பிறகே கைதுசெய்யப்படுகிறார்கள். 


நினைவு எட்டாக் காலம் தொட்டே கச்சத்தீவு இரு நாட்டு மீனவர்களுக்கும் பயன்பட்டு வந்திருக்கிறது. முன்பு முத்துக்குளித்தலின் தங்கு துறையாகவும், வலை களைக் காயப்போடவும், மேய்ச்சல் நிலமாகவும் பயன்பட்ட கச்சத்தீவை, போர்ச்சுக்கீசியர்களும், டச்சுக் காரர்களும், சேதுபதி மன்னர்களுமாக ஆட்சி செய்தனர்.

ஆவண ரீதியாக இராமநாதபுரம் சமஸ்தானத்துக்கு சொந்தமானதாக கச்சத்தீவு இருந்து வந்தது. இந்தத் தீவை, 1974-இல் பிரதமர் இந்திரா காந்தி  இலங்கைக்குத் தாரை வார்த்தார்.
கடுமையான தேவையான நிபந்தனைகள் அந்த ஒப்பந்தத்தில் இல்லை. நாடாளுமன்றத்தில் திமுக எதிர்த்துக் குரல் கொடுத்தும் வெளிநடப்புச் செய்தும்கூட மத்திய அரசு அதனைப் பொருட்படுத்தவில்லை.

கச்சத்தீவு ஒப்பந்தம், மீனவர் நலன் அடிப்படையில் திருத்தப்பட வேண்டும், இலங்கை கப்பற்படையின் சுதந்திரமான நடமாட்டத்தை இந்திய கடல்  கடல் எல்லைக்குள் கட்டுப்படுத்த வேண்டும். ஒரு கடலின் இரு கரை மீனவர்களும் கடல் வளத்தைப் பங்கிடுவதை எந்த அரசும் தடுக்கக் கூடாது; கைதுசெய்யக் கூடாது. இராமேஸ்வரம்-இலங்கை இடையே குறைவான எல்லையைக் கொண்ட கடலைக் கருத்தில் கொண்டு, புதிய கடல் கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். இந்த கோரிக்கையைத்தான் போர் முடிந்த காலம் தொட்டு தமிழக மீனவர்கள், மத்தியில் ஆளும் அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கைகளை மாநில அரசுகள் நிறைவேற்ற முடியாது.

இந்த நிலையில் இலங்கையுடன் மிகவும் நட்புப் பாராட்டும் பாஜக அரசு, மீனவர் சிக்கலுக்கு தீர்வு காணும் என்று தமிழக பாஜக தலைவர்கள் தொடர்ந்து கூறிவந்த நிலையில் எல்லை தாண்டி வரும் மீனவர்களுக்கு ரூ20 கோடி வரை அபராதம், 2 ஆண்டுகள் சிறை விதிக்கும் சட்டத்தை இலங்கை கொண்டு வந்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே மற்றும் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டில்லிக்கு வந்து மோடியையும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜையும் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு முடிந்த பிறகு இரு நாட்டு மீனவர் சிக்கல் தொடர்பாக ஒரு நல்ல முடிவை நாங்கள் எடுக்க உள்ளோம், இதற்கு இந்திய அரசு முழு ஒத்துழைப்பைத் நல்கும் என்று கூறியிருந்தார் என ஊடகங்களுக்குப் பேட்டியளித்திருந்தனர். இந்த நிலையில் இலங்கை அரசின் இந்தப் புதிய சட்டம் தமிழக மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.

ஒட்டக் கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது இதுதானோ.
குட்டி நாடான இலங்கைத் தீவு வல்லரசாக ஆகத் துடிக்கின்ற சிங்கத்தின் தலையில் பேன் பார்க்கிறது - வெட்கக் கேடு!

மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்பு


ஜவுளி வியாபாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

அகமதாபாத், ஜூலை 11 இந்தியாவில் குஜராத் மாநிலம் ஜவுளி உற்பத்தியில் முன்னணி இடத்தில் இருக் கிறது. இங்கிருந்து இந்தியா முழுவதும் ஜவுளிகளையும், ஆயத்த ஆடைகளையும் அனுப்பி வருகிறார்கள்.

இதற்காக அகமதாபாத்திலும், சூரத் நகரிலும் ஏராள மான வர்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக மொத்த வர்த்தக நிறுவனங்கள் அங்கு அதிக அளவில் உள்ளன. ஜவுளி தொழிலுக்கு தற்போது 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வரியால் ஜவுளி வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளார்கள். எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத்தில் போராட்டம் நடத்தி வந்தனர்.

இன்று முதல் அவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கி இருக்கிறார்கள். சூரத் நகரில் ஏற்கனவே வேலை நிறுத்தத்தை தொடங்கிவிட்டார்கள். அவர்களும் இதில் பங்கேற்றுள்ளனர்.

குஜராத் வேலை நிறுத்தம் காரணமாக அங்கிருந்து வெளிமாநிலங்களுக்கு ஜவுளிகள் செல்வது முற்றிலும் நின்றுவிடும். இதனால் இந்தியா முழுவதுமே பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த போராட்டம் தொடர்பாக மத்திய அமைச்சர் புருஷோத்தம் ரூபலா கூறும்போது, ஜவுளி வியாபாரிகளின் இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும். அடுத்த கூட்டத்தில் இதுபற்றி முடிவு செய்யப்படும். எனவே வேலை நிறுத்ததை கைவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

பட்டம் தொழில்

குஜராத்தில் பட்டம் தயாரிக்கும் தொழிலும் பெரிய அளவில் நடந்து வருகிறது. தற்போது பட்டத்திற்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது. குடிசை தொழிலாக நடைபெறும் இதற்கும் வரி விதித்திருப்பதால் பட்டம் தயாரிக்கும் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளனர்.
குஜராத், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமாகும். அவர் கொண்டுவந்துள்ள ஜி.எஸ்.டி. வரி திட்டத்துக்கு அவரது மாநிலத்திலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

'நீட்' தேர்வு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்! மேலும் பல கட்சிகள் பங்கேற்பு - ஆதரவு!!



சென்னை, ஜூலை, 11 மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான 'நீட்' நுழைவுத் தேர்வை எதிர்த்தும் -
 தமிழ்நாடு சட்டப் பேரவையில் இது தொடர்பாக நிறைவேற் றப்பட்ட மசோதாக்களுக்கு மத்திய அரசும், குடியரசு தலைவரும் ஒப்புதல் வழங்கிட வற்புறுத்தியும் நாளை (12.7.2017) தமிழ்நாட் டில் மாவட்டத் தலைநகரங்களில் ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார் பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு பங்கேற்றும் ஆதரவு தெரிவித்தும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), எஸ்.டி. பி.அய்., திராவிட இயக்க பேரவை, தலித் கிறித்துவ மக்கள் கூட்டமைப்பு சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கைகள் வருமாறு:


இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்சிஸ்ட்) அறிக்கை

தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாக்களுக்கு மத்திய பாஜக அரசு ஒப்புதல் அளிக்க மறுத்து வருகிறது. தமிழக மாணவர்கள் நலன் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் எந்த முடிவும் எடுக்காமல் இப்பிரச்சினையை மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது. தமிழக மாணவர்களின் நலன் காக்க இயக்கம் நடத்துவது குறித்து 4-.07.-2017 அன்று திராவிடர் கழகம் முன்முயற்சியில் ஆலோசனை கூட் டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கலந்து கொண்டன.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டுமென வலியுறுத்தி 12-.7.-2017 அன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப் பாட்டம் நடத்துவது என்றும், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் மசோதாக்களுக்கு ஒப்புதல் தர வேண்டு மென்ற கோரிக்கையை வலியுறுத்தி ஒரு கோடி அஞ்சலட்டைகள், மின்னஞ்சல்களை மாணவர்கள் அனுப்புவது என்றும் மேற் கண்ட கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டது.

இதன் அடிப்படையில் மாநிலம் முழு வதும் 2017, ஜூலை 12 அன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற் கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண் டுமென அனைத் துப்பகுதி மக் களையும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

எஸ்.டி.பி.அய். அறிக்கை



இதுகுறித்து எஸ்.டி.பி.அய். கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

சமூக நீதியை குழிதோண்டிப் புதைக்கும் மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும்; தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்குக்கோரும் தமிழக அரசு இயற்றியுள்ள சட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண் டும் என்பதை வலியுறுத்தி, தமிழ் நாட்டி லுள்ள அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் ஜூலை 12ஆம் நாள் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவதென ஜனநாயக உரி மைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் தலை மையில் கடந்த ஜூலை 4 அன்று நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில், திமுக, காங்கிரஸ், எஸ்.டி.பி.அய்., விசிக, இடது சாரிகள், மமக, இ.யூ.மு.லீக் உள்ளிட்ட ஏராளமான கட்சிகள், அமைப்புகள் பங்கேற் றன. அக்கூட்டத்தில், நீட் நுழைவுத் தேர்வி லிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கக்கோரி தமிழக அரசு இயற்றி யுள்ள சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் இதுவரை ஒப்புதல் அளிக்காதது குறித்து கண்டனம் தெரிவிக்கப் பட்டது. மேலும், தமிழக அரசு இயற்றியுள்ள சட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகமெங்கும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஜூலை 12ஆம் தேதி தமிழக மெங்கும் நடைபெறும் மக்கள் திரள் ஆர்ப் பாட்டத்தில் எஸ்.டி.பி.அய். கட்சியினர் பெரும் அளவில் கலந்துகொண்டு, தமிழகத் தின் உணர்வை வெளிப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மேலும், தமிழக மாணவர்களின் நலனை காக்க இந்த ஆர்ப் பாட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும் திரளாக கலந்து கொள்ள வேண் டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

திராவிட இயக்கத் தமிழர் பேரவை  

சமூக நீதிக்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரான நீட் தேர்வை, மத்திய அரசு நடத்தி முடித்துள்ளது. மருத்துவக் கல்லூரிகளுக்கு இவ்வாண்டு நடைபெற்றுள்ள இத்தேர்வு,  வரும் ஆண்டில் பொறியியல் படிப்புக்கும் விரிவடைய உள்ளது. இச்சமூக அநீதியை எதிர்க்க வேண்டிய கடமை நம் அனை வருக்கும் இருக்கிறது.  எனவே, 12.07.2017 அன்று காலை 10 மணிக்கு, சென்னை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்ட மைப்பு நடத்தவுள்ள நீட் எதிர்ப்பு ஆர்ப் பாட்டத்தில் கட்சி எல்லை களைக் கடந்து அனைவரும் கலந்து கொள்ள வேண் டுமென்று கேட்டுக் கொள் கின்றோம்.

இவ்வாறு திராவிட இயக் கத் தமிழர் பேர வைப் பொதுச்செயலாளர் பேரா. சுப. வீர பாண்டியன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தலித் கிறித்துவ மக்கள் கூட்டமைப்பு

நீட்  தேர்வு முடிவுகள்  அறிவிக்கப்பட்டு தமிழ்நாட்டில்  தேர்வு எழுதிய 83859 மாணவர்களில் 32570 மாணவர்கள்  மட்டுமே தேர்ச்சி  பெற்றுள்ளார்கள்.  அதில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவர்களின்  முதல் 25 பேர் பட்டியலில் தமிழ்நாட்டில்  யாரும் இல்லை மாநில அளவில் ப்ளஸ் 2  தேர்வில்  அதிக மதிப்பெண் பெற்றவர்கள் கூட தேர்ச்சி  பெறவில்லை நீட்  தேர்வு முடிவுகள்  மாண வர்களின் மதிப்பெண் / தரவரிசை பட்டியல் குறித்தோ  தேர்வு நடத்திய   சி.பி.எஸ்.இ.   இதுவரை வெளிப்படையாக தெரிவிக்க வில்லை .

கிராமங்கள்  மற்றும் நகரங்களுக்கிடையே கல்வி தரம்  வேறுபடும்போது அனைவரும் சி.பி.எஸ்.இ.   தேர்வை  எப்படி  எழுத முடியும்? நாடு முழுவதும்  ஒரே  தேர்வு  என்று சொல்லிவிட்டு பல மாநிலங்களில் வினாக்களை மாற்றியது ஏன்? நாடு முழு வதும்  வெவ்வேறு  பாடத்திட்டமும், வெவ்வேறு கல்வி தரமும் மாநிலத்திற்கு மாநிலம்  வேறுபடும்போது  சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில்  அதிக கேள்விகள் கேட்கப் பட்டது ஏன்? அதை  எப்படி மாணவர்கள் எதிர் கொள்ளமுடியும்?

சமூக  நீதி மறுக்கப்படும்  அவலம்  வெறும்  நீட்   வெறும் மருத்துவம்  மட்டு மல்ல பொறியியல்  படிப்பு  முதல்  அனைத் துத் துறைகளிலும் இந்த அவலம் நீடிக்க விடலாமா ?
தமிழகத்தை  பொறுத்தவரை  மாநில அரசு ப்ளஸ் 2 தேர்வு அடிப்படையில் மருத் துவ மாணவர் சேர்க்கை  நடைபெறவேண்டும்   இதற்கான  அழுத்தத்தை அனைத்துக் கட்சி களின் பிரதிநிதிகள்  அடங்கிய குழு  குடியரசு தலைவரை  சந்திக்க மாநில அரசு  ஏற்பாடு செய்ய வேண்டும் அதற்கு முன்னதாக  அனைத்துக்கட்சி  கூட்டத்தை கூட்ட வேண்டும் தமிழ்நாடு சட் டப் பேரவையில் நிறைவேற்றப் பட்ட  இரு சட் டங்களை உட னடியாக  குடி யரசு தலைவர் ஒப்புதலை பெற் றுத்தர  மத்திய /மாநில அரசு களை  வலியு றுத்தி   நமது  கட்சியை இயக்கம் சார்ந்த மாணவர்கள்  லட்சக்கணக்கான அஞ்சல் அட்டை  மற்றும் மின்னஞ்சல் அனுப்பு மாறும், திராவிடர் கழக மாவட்ட பொறுப் பாளர்களை தொடர்பு கொண்டு தம்மை இணைத்துக்கொண்டு பணியாற்றிடு மாறும்.

ஜனநாயக உரிமைப் பாதுகாப்பு கூட்ட மைப்பின்  சார்பில் நடைபெற உள்ள அனைத்து கட்சி ஆர்ப்பாட்டத்திற்கு  நமது கூட்ட்டமைப்பின் சார்பில் தோழர்கள் அந்தந்த  மாவட்டங்களில்  பதாகைகளுடன்  கலந்துகொள்ளுமாறு  கேட்டுக் கொள்கின் றோம் என்று தலித் கிறித்துவ மக்கள் கூட்டமைப்பினர் சார்பாக பே. பெலிக்ஸ், ஞா. மேத்யூ ஆகியோர் அறிக்கையில் குறிப் பிட்டுள்ளனர்.

Monday, July 10, 2017

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தைக்காக்க அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்: திருமாவளவன்


சென்னை, ஜூலை 10- செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தைக் காக்க அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

சென்னையில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறு வனத்தை திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழகத்துடன் இணைக்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இத்தகைய தமிழ் விரோத நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாகக் கைவிடவேண்டும்.

தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்பதற் காக, சென்னை சைவசித்தாந்த மகாசமாஜம், கரந்தைத் தமிழ்ச் சங்கம், தலைநகர்த் தமிழ்ச் சங்கம் முதலான அமைப்புகளும், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் முதலான தமிழறிஞர்களும் தொடர்ந்து போராடி வந்தனர். திமுக, இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்தின.

அப்படி போராடிப் பெற்ற உரிமையைப் பறிக்கும் வகை யில், மத்திய அரசின் நடவடிக்கை உள்ளது. இதை தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தைக் காக்க அனைத்துக் கட்சி களும் குரல் கொடுக்க வேண்டும் என எழுச்சித் தமிழர் திருமா வளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திராவிடர் கழக மகளிரணி , மகளிரணி பாசறை நடத்திய கலைநிகழ்ச்சி, படத்திறப்பு, விளையாட்டுப் போட்டிகள்




காமலாபுரம், ஜூலை 10 திராவிடர் கழக மகளிரணி, மகளிரணி பாசறை நடத்திய கலை நிகழ்ச்சி, படத் திறப்பு, விளையாட்டுப் போட்டிகள் 9.7.2017 அன்று காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை காமலாபுரம் அரு ணாசலம் இல்லத்தில் நடைபெற் றது.

காமலாபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு செல்வி சர வணன் மாலை அணிவிக்க, கழக கொடியை மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மு.சாந்தி ஏற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.
இந்நிகழ்விற்கு மகளிர் அணி தோழியர் தேவிகா தலைமை வகிக்க,  உமா மாணிக்கம் அனை வரையும் வரவேற்க இனிதே துவங்கியது ‘பெரியார்புரம்’ நிகழ்வுகள்.

 (தமிழர் தலைவர் அவர் களால் அன்போடு அழைக்கப் படும் கிராமம் என்பது சிறப்பு)

நிகழ்ச்சியின் துவக்கமாக பொற்செழியன் அவர்களின் ‘ஈரோட்டு பூகம்பம்’ பகுத்தறிவு கலைநிகழ்ச்சி ஊர் மக்களை வெகுவாகக் கவர்ந்தது. தொடர்ந்து மாணவ, மாணவியர்களோடு கழகத் தோழர், தோழியர்களுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத் தப்பட்டன இத்தோடு முற்பகல் நிகழ்வு முடிந்தது பகல் உணவாக எப்போதும் போல் புலால் விருந்து வழங்கப் பட்டது. கழக குடும்பங்கள் ஒன் றிணைத்து உணவு சமைத்து பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு உருவாக்கபட்டது
உணவு இடைவேளைக்குப் பிறகு மாணவ, மாணவியர்களுக்கு அண்ணா சரவணன் மற்றும் பழ. வெங்கடாசலம் சாந்தி ஆகி யோரின் கருத்துரை நிகழ்த்தப்பட் டது.

பட்டிமன்றம்
அதை தொடர்ந்து பட்டிமன் றம் எழுச்சியோடு துவங்கியது

மணியம்மையார்  படம் திறப்பு

இதன் தொடக்கமாக மணி யம்மையர் படம் உமா அவர் களால் திறந்து வைக்கப்பட்டது.
பட்டிமன்றத்தின் தலைப்பு தந்தை பெரியார் தொண்டில் விஞ்சி நிற்பது பெண் உரிமையா? பகுத்தறிவா? என்ற தலைப்புக்கு தகடூர் தமிழ்செல்வி மாநில ப.க.  செயல் தலைவர் அவர்கள் நடுவர் பொறுப்பை வகிக்க,

‘பெண் உரிமையே’ என்ற தலைப்பில் மு இந்திராகாந்தி  (மாவட்ட ப.க. தலைவர்), கதிர் செந்தில் மற்றும் மாவட்ட இளையராணி துணை செயலாளர் பெ.கோவிந்தராஜ் தங்கள் விவாதத்தை வைக்க,

அதற்குப் பதில் கொடுக்க ‘பகுத்தறிவே’ என்ற அணியில் திராவிடர் கழக மாவட்ட தலை வர் வீ சிவாஜி, செ.அனந்தசைனி (கிருஷ்ணகிரி) மற்றும் மகளிரணி பாசறை அமைப்பாளர் பெ. கோகிலா ஆகியோரின் எதிர் விவாதம் மக்களை வியப்பில் ஆழ்த்தியது.
இறுதியில் பட்டிமன்ற நடு வர் இறுதியில்  ‘பெண் உரி மையே’ என்ற தீர்ப்போடு நிகழ்ச்சி முடிந்தது.

இறுதியாக காசியம்மாள் நன்றி கூறினார்.


பரிசுகளை வழங்கி சிறப்புரை

திராவிடர் கழகம்  மாநில அமைப்பு செயலாளர் தருமபுரி ஊமை.ஜெயராமன்  அவர்கள் பரிசுகளை வழங்கி சிறப்புரை யாற்றினார்

 நிகழ்ச்சியில் பங்கேற்றோர்

ராஜா, மாணிக்கம், கோவிந்த சாமி அருணாசலம், சரவணன், முருகன்,  மு.சி.அறிவழகன், சின்னசாமி, மு சிசுபாலன், கரு பாலன், கிருஷ்ணன், ம.சுதா, ச.செல்வி, மென்மை, அரங்க. கோவிந்தராஜ், நளினி, அ தமிழ்ச் செல்வன் , மத்தூர் முருகேசன், விமல் சோபியா, அரசு, பழனி , எஸ்.எஸ்.மணியம்மை, சங்கரி, செல்வி சிவாஜி, கவிதா, தமிழரசு, செல்லதுரை, மாரவடி முனி யப்பன், வைரவேல், ராமசாமி, ம.சுந்தரம், சத்தியமூர்த்தி
பெரியார் பிஞ்சுகள் கனி மொழி, அன்பு, உதயா மற்றும் பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.

ஸ்மார்ட்போனால் பார்வை பறிபோகும் அபாயம்!


ட்ரான்சியன்ட் ஸ்மார்ட்போன் பிளைண்ட்னஸ் என்ற பிரச் சினையைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

நம்மில் பலருக்கு இந்தப் பிரச் சினை வரும் அபாயம் அதிக முள்ளது. பகல் இரவு பாராமல் செல்போனில் வசிக்கும் ஜீவி களின் கவனத்துக்கு - தினமும் இரவில் தூங்கும்போது படுத்தபடியே இடதுபக்கம் சாய்ந்து, வலது கண்ணால் ஸ்மார்ட்போன் ஸ்கிரீனை தொடர்ச்சியாக பார்ப்பவர்களுக்கு தற்காலிகமாக பார்வை இழப்பு ஏற்படுமாம். அதன் பெயர் தான் ட்ரான்சியன்ட் ஸ்மார்ட்போன் பிளைண்ட்னஸ் என்கிறார்கள் மருத்துவர்கள்.

முகத்தின் இடது புறம் தலையணையில் புதைந்திருக்க, வலது கண்ணால் சிரமப்பட்டு ஸ்மார்ட் ஃபோன் ஸ்கீரீனை நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதால் விளையும் விபரீதம் இது. 
சரியாக உறங்காமல், விடியும் முன்பே விழித்து, படுத்த நிலையி லேயே ஸ்மார்ட்போனைப் பார்ப்பதை தொடர் பழக்கமாகக் கொண்டிருப்பவர்களுக்கும் இப்பிரச்சினை என்கிறது ஒரு ஆராய்ச்சி. இரவில் உறங்காமல் ஸ்மார்ட்போனை மேற்சொன்ன விதத்தில் பயன்படுத்துபவர்களுக்கு தற்காலிக பார்வையிழப்பு பிரச்சினை ஏற்படுவதாக மருத்துவர்களும் உறுதி செய்தனர்.

லண்டனில் உள்ள மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனை மருத்துவர் ஓமர் மஹ்ரூ கூறுகையில், ‘சூரிய வெளிச்சத்தை பார்த்துக் கொண்டிருந்த பின், சட்டென்று அறைக்குள் நுழையும் போது, சில கணங்களுக்கு கண் பார்வையே மங்கலானது போலக் காட்சிகள் தெளிவற்று இருக்கும். எந்தளவுக்கு பளிச்சென்ற வெளிச்சத்தை நேரடியாக விழித்திரை சந்தித்ததோ, அதே அளவுக்கு சாதாரண நிலையில் இக்குருட்டுத்தன்மை நீடிக்கும்.

ஸ்மார்ட்போனில் பளிச்சென்ற ஸ்கீரினில் செய்திகளை தொடர்ந்து பார்த்தபடி இருந்துவிட்டு, வெளியில் வரும் போது, சாதாரண வெளிச் சத்தில் காட்சிகள் தெளிவாக தெரியாது. சில கணங் களுக்குப்பின் இது சரியாகி கண் பார்வை இயல்பு நிலைக்கு திரும்பிவிடும். ஆனால் இதையே தொடர் பழக்கமாகக் கெண்டிருந்தால் விழித்திரை பிரச்சி னைகள் ஏற்பட்டு நிரந்தரமாக பார்வையிழப்பும் ஏற்படலாம்‘ என் கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

தூங்குவதற்கு அரை மணி நேரம் முன்பாக தொலைக்காட்சி, கணினி மற்றும் ஸ்மார்ட் போன் என எந்த வெளிச்ச திரையையும் பார்க்காமல் கண்களை மூடி சற்று நேரம் ரிலாக்ஸ் செய்துவிட்டு அதன் பின் உறங்கச் சென்றால் நிச்சயம் இந்த பிரச்சினை ஏற்படாது.

தலையங்கம்

ஜூலை 12

இவ்வாண்டு ஜூலை 12ஆம் நாள் - சமூக நீதி வரலாற்றில் குறிப்பிடத்தக்க நாள்! ஆம், அன்றுதான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம்  ஒன்று நடைபெற உள்ளது.

சமூகநீதி, மதச் சார்பின்மை, மாநில உரிமைகளை முன்னிறுத்தி சென்னைப் பெரியார் திடலில் ஒத்தக் கருத்துள்ள கட்சிகளின் அமைப்புகளின் தலைவர்களை, பிரதிநிதிகளை  - திராவிடர் கழகத்தின் சார்பில் அழைத்து ஒருங்கிணைத்து "ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு" உருவாக்கப்பட்டது (27.3.2017) அதன் ஒருங் கிணைப்பாளராக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை அக்கூட்டத்தில் ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

சமூகநீதி, மதச் சார்பின்மை, மாநில உரிமைகள் என்ற முப்பெரும் கோட்பாடுகளை மய்யப்படுத்தி இவ்வமைப்புத் தோற்றுவிக்கப்பட்டது.

4.7.2017 அன்று கூடிய அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வரும் 12.7.2017 புதனன்று காலை 11 மணிக்கு மாவட்டத் தலைநகரங்களில் சமூகநீதிக்கான மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய் யப்பட்டது.

மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான 'நீட்' எனும் அகில இந்திய நுழைவுத் தேர்வு ஒன்றினை நடத்திட மத்திய அரசும், இந்திய மருத்துவக் குழுவும் (விசிமி) முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.
2016-2017 ஆம் ஆண்டிலேயே இது அறிமுகப் படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் எழுந்த கடும் எதிர்ப்புப் புயல் காரணமாக கடந்தாண்டு தமிழ்நாட்டிற்கு விலக்குக் கொடுக்கப்பட்டது.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் நிரந்தரமாகவே 'நீட்' தேர்விலிருந்து விலக்குத் தேவை என்பதுதான் நமது உறுதியான நிலைப்பாடு. இன்னும் சொல்லப் போனால் சமூகநீதி கண்ணோட்டத்தில் 'நீட்' தேர்வு என்பது இந்திய அளவிலேயேகூட வேண்டாத - கூடாத - ஒவ்வாத ஒன்றாகும். தமிழ்நாட்டைப் போல மற்ற மற்ற மாநிலங்களிலும் எதிர்ப்புக் குரல் ஓங்க வேண்டியது அவசியமே!

பிஜேபி என்ற சமூக அநீதிக்கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் 'நீட்' தேர்வை எதிர்க்கின்றன.

தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் 'நீட்'டிலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குத் தேவை என்ற முறையில் இரு மசோதாக்கள் ஒரு மனதாகவே நிறைவேற்றப்பட்டுள்ளன (31.1.2017).
இந்த மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சிகளும் தமிழ்நாட்டில் வற்புறுத்தியும், மாநில அரசு கடிதம் எழுதியும், மத்திய அரசு அசைந்து கொடுக்கவில்லை.

இதில் வெட்கக் கேடு என்னவென்றால் தமிழ்நாடு அரசின் மசோதாவை குடியரசுத் தலைவருக்கே அனுப்பிக்கூட வைக்கவில்லை மத்திய பிஜேபி அரசு.
இதைவிட மாநில அரசை ஒரு மத்திய அரசு எப்படி அவமதிக்க முடியும்? மாநில அரசை மட்டுமல்ல;  ஒட்டு மொத்தமாக தமிழ்நாடே கொந்தளித்து எழும் ஒரு முக்கியப் பிரச்சினையில் மத்திய அரசு பாராமுகம் காட்டுகிறது என்றால், தமிழ்நாட்டு மக்களையே அவமதித்ததாகத்தான் பொருள்படும்.

குடியரசுத் தலைவரிடம் ஏன் அனுப்பவில்லை என்ற கேள்வி தமிழ்நாட்டில் பொங்கி எழுந்த பிறகுகூட, மத்திய பிஜேபி அரசு கண்டு கொள்ளாதது - அதன் ஜனநாயக விரோதப் போக்கையும், சமூக நீதியில் அது கொண்டிருக்கும் கடுமையான வெறுப்புணர்வு நிலைப்பாட்டையும் தானே வெளிப்படுத்துகிறது!

தமிழ்நாடு அரசும் - சட்டப் பேரவையில் நிறைவேற்றி விட்டோம் கடிதமும் எழுதி விட்டோம் - அத்தோடு தமது கடமை முடிந்து விட்டது என்று 'கொட்டாவி' விடுவது கண்டனத்துக்குரியது!
தமிழ்நாடு சமூகநீதிப் பயிரின் தாய்ப்பூமி, இந்திய அரசமைப்புச் சட்டம் முதல் முதலாக திருத்தப்படுவதற்குக் காரணமான தந்தை பெரியாரின் மண்.

69 சதவீத இடஒதுக்கீட்டை சட்ட ரீதியாக நிலை நிறுத்திய மாநிலம் தமது நாடு. எம்.ஜி.ஆர். அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது - பிற்படுத்தப்பட்ட  மக்களின் இடஒதுக்கீட்டில் வருமான வரம்பு ஆணையைக் கொண்டு வந்ததால், அது வரை தேர்தலில் தோல்வி என்றால் என்னவென்று அறியாத எம்.ஜி.ஆருக்குத் தமிழ்நாட்டு மக்கள் 'நல்லதோர்' பாடம் கற்பித்தனர்.

39 மக்களவைத் தொகுதியில் 37 இடங்களில் எம்.ஜி.ஆர். தோல்வியைத் தழுவினார் என்பதை எம்.ஜி.ஆர். பெயரால் ஆட்சி நடத்தும் அ.இ.அ.தி.மு.க புரிந்து கொள்ள வேண்டாமா?

தமிழ்நாட்டின் சமூகநீதியைப் புறக்கணித்த மத்திய பிஜேபி அரசுக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் எந்த முகம் கொண்டு அ.இ.அ.தி.மு.க.ஆதரவுக் கரம் நீட்டுகிறது?
மத்திய பிஜேபி அரசிடம் சரணா கதி படலம் என்பதுதான் அஇஅதிமுக அரசின் முக்கிய அடையாளமா?
நடந்து முடிந்த 'நீட்' தேர்வின் முடிவுகள் நாடு எதிர் பார்த்தபடியே,  நாம் எச்சரித்தபடியே ஒடுக்கப்பட்ட மக்கள், கிராமப்புற மக்கள் மருத்துவக் கல்லூரிகளில் உள்ளே நுழை யாதபடி இரும்புக் கதவைப் போட்டு விட்டது.

38.8 சதவீத இருபால் மாணவர்கள்தான் தகுதி மதிப்பெண் பெற்றுள்ளனர் என்றால் இந்தச் சமூக அநீதியை என்னென்று சொல்லுவது!

சமூகநீதி பிரச்சினையில் தந்தை பெரியாரின் தமிழ் மண் எப்பொழுதுமே தோல்வி கண்டதில்லை; எடுத்து வைத்த அடியையும் பின் வாங்குவதில்லை; வீதிகளில் மக்கள் படை வீறு கொண்டு எழுந்தால் எஃகு கோட்டைகளும் தூள் தூளாக ஆகாதா!

ஜூலை 12ஆம் தேதி ஆர்ப்பாட்டம் - அரிமா சேனை யின் போர் முழக்கமாக நடக்கட்டும்! கட்டுப்பாட்டுடன் மக்கள் குரல் விண்ணை முட்டட்டும்!!

கட்சியில்லை - ஜாதியில்லை - மதமில்லை - பேத மில்லை சமூக நீதித் தடத்தில் வெற்றிக் கொடி நாட்டிட அலை அலையாய் வாரீர்! வாரீர்!!

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...