Saturday, February 8, 2014

தாழ்த்தப்பட்ட மக்களுடைய கல்வியின் தலையில் கை வைப்பதா?

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை - 8.2.2014


 தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல (ஆதிந3) துறை அரசு ஆணை (நிலை) எண் 92 நாள் 11.9.2012இன்படி +2 படித்து முடித்து சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் இதர சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளைப் படிக்கும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் மற்றும் கிருத்துவமதம் மாறிய ஆதி திராவிடர் மாணவர் மாணவியர்களுக்கு முழுக் கட்டணத்தையும் மத்திய அரசின் உதவித் திட்டத்தின் கீழ் மாநில அரசு வழங்கும். இது 2011-2012ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்தது. 

ஆண்டு வருவாய் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் பெற்றோர்களின் வருமானம் இருக்க வேண்டும் என்பது மட்டும் தான் நிபந்தனை. 

இத்தகு நிதி உதவியின் காரணமாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள், மாணவிகள் பல்லாயிரக்கணக்கில் பொறியியல் கல்லூரிகள் உட்பட படித்துப் பயன் பெற்றனர். 

ஆண்டாண்டுக் காலமாக கல்வி உரிமை மறுக்கப்பட்ட, தீண்டத்தகாத மக்களாக வெறுக்கப்பட்டவர்கள் கல்வி வாய்ப்புப் பெற்றால்தான் சம உரிமை பெற்றவர்களாக வாழ முடியும் என்பது யதார்த்தமானதாகும். 

இந் நிலையில் ஏற்கெனவே உள்ள அரசாணை 92-க்குப் பதிலாக அரசாணை எண் 106 மற்றும் 107 என்று இரு ஆணைகள்  4.12.2013 நாளிட்டு ஆதி திராவிடர் பழங்குடியினர் நலத்துறையால் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய ஆணைகளின்படி ஏற்கெனவே சுயநிதிக் கல்லூரிகளுக்கான முழுக் கட்டணங்களையும் அரசே ஏற்கும் என்பதற்குப் பதிலாக, அரசு கல்வி நிறுவனங்களில் நிர்ணயிக்கப்பட்ட தொகை மட்டுமே சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கும் இருபால் மாணவர்களுக்கும் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக அரசு கல்லூரியில் ஆண்டுக் கட்டணம் ரூபாய் 40 ஆயிரம், தனியார் சுயநிதிக் கல்லூரிகளில் ஆண்டுக் கட்டணம் ரூ.70 ஆயிரம் என்ற நிலையில் இதுவரை 70 ஆயிரம் ரூபாயை முழுமையாக அரசே ஏற்றுக்கொண்டதற்குப் பதிலாக அரசு கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்ட வெறும் ரூ.40 ஆயிரத்தை மட்டும்தான் தனியார் கல்லூரிகளுக்கும் அளிக்கப்படும் என்பது  தான் புதிய ஆணையின் சாரமாகும். 

இந்தப் புதிய ஆணையின் காரணமாக அரசு செலுத்தும் தொகை போக மீதியை மாணவர்களே கட்டும் நெருக்கடியும், சுமையும் ஏற்பட்டுள்ளது. கட்டணத்தைச் செலுத்தாத மாணவர்கள் சுயநிதிக் கல்லூரிகளிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.

 தமிழ்நாடு அரசின் இந்த முடிவும், போக்கும் சமூக நீதிக்கு முற்றிலும் எதிரானதாகும். இவ்வளவுக்கும் மத்திய அரசால் அளிக்கப்படும் உதவி நிதி இது. 

மாநில அரசு மூலமாக, மத்திய அரசு ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் கல்விக்காக நிதியை வழங்குகிறது. இடையில் நந்தியாக இருந்து தமிழ்நாடு அரசு தடை செய்வது ஏன்? மத்திய அரசு கொடுக்கும் முழு நிதியையும் ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு அளிக்காமல், அந்த நிதியை வேறு துறைகளுக்குச் செலவிடுகிறார்கள் என்ற குற்றச்சாற்றும் எழுந்துள்ளது. சமூகநீதித் திசையில் அ.இ.அ.தி.மு.க. அரசு தொடர்ந்து தவறான அணுகுமுறையை மேற்கொண்டு வருவது கண்டிக்கத்தக்கதாகும். 

 ஆண்டாண்டுக் காலமாகக் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட மக்கள், முதல் தலைமுறையாக கல்லூரிகளின் படிக்கட்டுகளை மிதிக்கும்போது கால்களைத் தட்டிவிட வேண்டாம் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம். ஆச்சாரியார்தான் (ராஜாஜி) கல்வியில் கைவைத்தவர் என்ற கெட்ட பெயர் உண்டு. அந்த ஆச்சாரியார் வழியை அம்மையார் பின்பற்ற வேண்டாம். முறையான வேண்டுகோளுக்குத் தமிழ்நாடு அரசு செவி சாய்க்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம். 

இல்லையெனில், இது குறித்துக் களம் அமைக்க கழகம் தயங்காது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  

கி.வீரமணி
 தலைவர்
 திராவிடர் கழகம் 

சென்னை
8.2.2014

Tuesday, February 4, 2014

ரசல்


உலக நாத்திகச் செம்மல் பெட்ரண்ட் ரசல் அவர்களின் நினைவு நாள் இந்நாள் (1970) 98 ஆண்டுகள் 8 மாதம் 15 நாள்கள் வாழ்ந்து இன்ஃ புளூயன்சா காய்ச்சலால் மரணம் அடைந்தார். Why I am not a Christian என்ற அவரின் புகழ் பெற்ற ஆங்கில நூலை நான் ஏன் கிருத்துவன் அல்ல என்று தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டது - பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்.

குத்தூசி குரு சாமி அவர்கள் அதனை மொழி பெயர்த்தார். 1927ஆம் ஆண்டு மார்ச்சு 6 ஆம் தேதி இலண்டன் லோகாயத சங்கத்தின் (National Secular Society) சார்பில் பாட்டார்சி நகர மன்றம் ஒன்றில் இந்தத் தலைப்பில் ரசல் உரையாற் றினார். நான்கு ஆண்டு களுக்குள் 7 பதிப்புகள் வெளியிடப்பட்டன. அந்தக் கால கட்டத்தில் 24  ஆயிரம் நூல்கள் விற்பனையாயின என்பது சாதாரணமானதல்ல.

தனது மூன்றாவது வயதிலேயே ரசல் பெற் றோர்களை இழந்தார்.

ஆனாலும் அவர்தம் பெற்றோர்கள் தம் பிள்ளை மத மூடநம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு வளர்க்கப்பட வேண்டும் என்பதிலே உறுதியாக இருந்தனர். அதற்காக இருவரை, குழந்தை ரசலுக்குப் பாதுகாவலர் களாக நியமித்தனர் என் பது அந்தக் கால கட்டத்தில் ஆச்சரியமான தகவல்தான்.

11 வயது முதல் 38 வயது வரை கணிதம்தான் அவ ருக்கு எல்லாமுமாக இருந் தது. அதன் பிறகு சமு தாயச் சிந்தனைகள் அவரி டம் வேர்விட ஆரம்பித்தன. முதல் உலகப் போர் நடந்த போது அதன் தீய அம்சம் குறித்து எதிர்த்து எழுதி னார். அதன் காரணமாக கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக வேலை பறிபோயிற்று - சிறையும் அவரை வா என்று வரவேற்றது.

1910ஆம் ஆண்டில் லிபரல் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட ஒரு முயற்சி மேற்கொள்ளப் பட்டது. அக்கட்சியின் கூட் டத்தில் ரசல் பேசியபோது சில வினாக்கள் அவரிடம் தொடுக்கப்பட்டன.

கேள்வி: கடவுளைப் பற்றி நீங்கள் கவலைப் படாதவரா? 
ரசல்:ஆம்!

கேள்வி: சர்ச்சுக்குப் போவதுண்டா? 
ரசல்: நிச்சயமாகப் போக மாட்டேன். கேள்வி: இந்தக் கருத்தை இரகசியமாக வைத்துக் கொள்வீர்களா? ரசல்: இல்லை. வெளிப் படையாகவே கூறுவேன் என்றார் ரசல். விளைவு - அவருக்குத் தேர்தலில் நிற்க வாய்ப்பு மறுக்கப் பட்டது.

தந்தை பெரியார் போல பெண்ணுரிமைக் கருத்தில் முற்போக்கு எண்ணம் கொண்டவர்; அவர் எழுதிய திருமணமும் ஒழுக்கமும் (Marriage and Moral) எனும் நூல் தடை செய்யப் பட்டது.

குறிப்பு: மேலும் விவரங் களுக்கு ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் உண்மை இதழில் மார்ச்சு, ஏப்ரல் 1970, விடுதலை 15.2.1970 கட்டுரைகளைக் காண்க)

 - மயிலாடன்


Read more: http://www.viduthalai.in/e-paper/74602.html#ixzz2sKaa5b4q

அண்ணா நினைவு நாள் சிந்தனை

இன்று அறிஞர் அண்ணா நினைவு நாள் (1969) உலக நாத்திகச் சிந்தனையாளர் பெர்ட்ரண்ட் ரசல் மறைந்ததும் இதே நாளில்தான் (1970).

அண்ணா அரசியலுக்குச் சென்றார்; ஆனால் அடிப்படையில் திராவிடர் இயக்கத்தின் சிந்தனை-  தந்தை பெரியார் அவர்களிடமிருந்து வாலிப வயதில்  அவர் வரித்துக் கொண்ட கொள்கைகள் நிலை பெற்றவை.

அந்தக் காலத்தில் எம்.ஏ., படித்து நம் இயக்கத்திற்குத் தம்மை அர்ப்பணித்துக் கொள்ள வருவது என்பது அரிதினும் அரிது; ஒரு அண்ணா துரை, ஒரு ஏ.பி. ஜனார்த்தனம் என்றுதான் சொல்லப்பட்ட கால கட்டம் அது.

திருப்பூரில் தந்தை பெரியார் அவர்களைச் சந்தித்த நாள் தொட்டு, இந்த இயக்கத்தின் பால் தன்னை சங்கமித்துக் கொண்டார்.

அவர் எழுத்துகள் மணம் வீசக் கூடியவை. மனங்களைக் காந்தம் போல் ஈர்க்கக் கூடியவை; அவர் பேச்சு வசீகரமானது; கேட்டாரைக் கைபிடித்து இழுத்து வரும் ஈர்ப்பைக் கொண்டவை.

கருத்து - தந்தை பெரியார்; அதன் பிரச்சாரம் அண்ணாவுடையது. அந்தக் கால கட்டத்தில் டாக்டர் இரா.பி. சேதுபிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றவர்கள் எல்லாம் அறிஞர் அண்ணாவிடம் வாதிட்டு தோற்றேன்! தோற்றேன்!! என்று கூறிக் கொண்டு பின் வாங்கியதெல்லாம் சாதாரணமானவைகளா?

ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நிலையிலும் இந்த ஆட்சியே பெரியாருக்குக் காணிக்கை! என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் பதிவு செய்தாரே  - என்றென்றும் வரலாற்றில் ஒளிக்கற்றைகளை உமிழ்ந்து கொண்டிருக்கும் ஒப்பரிய பிரகடனம் அல்லவா அது!

1) சுயமரியாதைத் திருமணச் சட்டம், 2) சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டல் 3) இந்திக்கு இடம் இல்லை, இரண்டே மொழிகள் தான் தமிழ்நாட்டில் (தமிழ், இங்கிலீஷ்) என்பன வற்றைச் சட்டமாக்கி தம்மை நிரந்தர நாயகராக நிலை நிறுத்திச் சென்றவர் அண்ணா.

அண்ணாவுக்குப்பின் தம் தலைமையில் ஆட்சியைத் தொடங்கிய மானமிகு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் இது சூத்திரர்களின் ஆட்சி! என்றே பிரகடனப்படுத்தி, வரலாற்றில் அழியாப் பதிவைச் செய்து அழியாப் புகழ் பெற்றாரே!
பெண்களுக்குச் சொத்துரிமை முதல் பெண்கள் மறுமலர்ச்சியில் பெரும் பாய்ச்சல் போன்ற அத்தியாயங்களை உருவாக்கியதால் மகளிர் உரிமை ஆட்சி மாண்பாளர் எனும் வீறுமிக்க விருதுக்குச் சொந்தக்காரர் ஆனார்.

தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு, தமிழுக்குச் செம்மொழித் தகுதி, அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை, பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் என்று சமுதாயப் புரட்சியை நடத்திக் காட்டியவர் மானமிகு கலைஞர் அவர்கள்.

திராவிட இயக்கச் சித்தாந்தம், தந்தை பெரியார் ஊட்டிய உணர்வுகள் - இவற்றின் செயல் வடிவங் களாக அண்ணா, கலைஞர் ஆட்சிகள் மலர்ந்தன.
இன்று... இன்று.. அண்ணாவின் பெயரையும் தீரமிக்க திராவிட என்ற இன அடையாளக் கலாச் சாரங்களையும் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, அவற்றின்மீது ஆரியக் கலாச்சாரம் என்ற கள்ளிகளை விளைவிக்கும் ஆபத்தான போக்கு!

புத்தர் இயக்கத்தில் ஆரியம் புகுந்து சிதைத்தது போல, திராவிட இயக்கத்தில் ஆரியம் ஊடுருவி உருக்குலைக்கும் ஒரு வேலை துரிதமாகத் திட்டமிட்டு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.

திராவிட பெயரைச் சொல்லிக் கொண்டே பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டே ஒரு பிரிவினர் மதவாதத்திற்கும், ஜாதீய வாதத்திற்கும் நடை பாவாடை விரிக்கிறார்கள். அண்ணா நினைவு நாளில் அவர்  கட்டிக் காத்த தந்தை பெரியார் தத்துவங்களை திராவிட இயக்க சித்தாந்தங்களை முன்னெடுத்துச் செல்ல உறுதி கூறுவோம்! மூடுதிரை போட்டு வருவோர்களை அம்பலப்படுத்துவோம் - வாழ்க தந்தை பெரியார்! வாழ்க அறிஞர் அண்ணா!



Read more: http://www.viduthalai.in/home/71-2010-12-25-09-37-00/74612-2014-02-03-11-55-48.html#ixzz2sKLWzUr3

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5% மதிப்பெண் தளர்வு

ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

 அதன்படி, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம் சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு இனி 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும்.

 இது குறித்து சட்டப்பேரவையில் இன்று ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியது:

 ஆசிரியர் தகுதித் தேர்வு, அதாவது (Teachers Elegibility Test) தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு மதிப்பெண்ணில் சலுகை வழங்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளினை சில உறுப்பினர்கள் இங்கே தெரிவித்தனர்.

 2009-ம் ஆண்டைய குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மத்திய அரசால் இயற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுபவர்கள் அரசால் நியமிக்கப்பட்ட நிறுவனத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


 இந்தச் சட்டத்தின் அடிப்படையில், தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம், 1 முதல் 8-ம் ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வினை கட்டாயமாக்கி அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

 தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் அறிவிக்கைகளின்படி, 1 முதல் 5-ம் வகுப்புக்கான இடைநிலை ஆசிரியர்கள், தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் ஒழுங்குமுறை விதிகள் 2002-ன் படி ஆசிரியர் பயிற்சியில் இரண்டாண்டு பட்டயப்படிப்பும்; மேல்நிலைத் தேர்வில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். 2002-ம் ஆண்டு ஒழுங்கு விதிமுறைகளுக்கு முன் இரண்டாண்டு பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்றிருந்தால், மேல்நிலைத் தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

 அதேபோன்று, 6 முதல் 8 ஆம் வகுப்புக்கான பட்டதாரி ஆசிரியர்கள், தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் ஒழுங்குமுறை விதிகள் 2002-ன் படி, ஒர் ஆண்டு பி.எட். பட்டமும், பட்டப் படிப்பில் 45 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.

2002 ஆம் ஆண்டுக்கு முன் பி.எட். பட்டம் பெற்றிருந்தால், பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். 

இதன் பின்னர், தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தால் 1.4.2011 அன்று வெளியிடப்பட்ட கடிதத்தில், அந்தந்த மாநிலங்களில் கடைபிடிக்கப்படும் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு ஏற்ப, தாடிநத்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவினருக்கு மட்டும் மேல்நிலைத் தேர்வு மற்றும் பட்டப் படிப்பு தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்களில் 5 சதவீதம் தளர்வு அளிக்கலாம் என தெரிவித்துள்ளது.

 இதன்படி, 2002-ம் ஆண்டுக்கு பின் ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பை முடித்தவர்கள் மேல்நிலை தேர்வில் 40 சதவீத மதிப்பெண்ணும்; அதற்கு முன்னர் தேர்வு பெற்றவர்கள் 45 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்.

 ஆனால், தற்போது தமிழகத்தில் மேல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளவர்கள், அதாவது 35 சதவீதம் பெற்றவர்களும், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். எனவே, மத்திய அரசு அறிவித்துள்ளதை விட அதிகச் சலுகை தமிடிந நாட்டில் அளிக்கப்பட்டுள்ளது.

 அதே போன்று, 2002-ம் ஆண்டுக்கு பின் பி.எட். படித்தவர்கள், பட்டப் படிப்பில் 45 சதவீத மதிப்பெண்களும், அதற்கு முன்னால் பி.எட். படித்தவர்கள், பட்டப் படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். தமிழகப் பல்கலைக்கழகங்கள் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தாலே பட்டம் வழங்குவதால், மத்திய அரசு அறிவித்துள்ளதை விட தமிழகத்தில் அதிகச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 60 சதவீதம் பெற வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 அதே சமயத்தில், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு அந்தந்த மாநிலத்தில் உள்ள இட ஒதுக்கீடு கொள்கையின்படி தேர்ச்சி மதிப்பெண்களில் சலுகை வழங்கிடப் பரிசீலிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 ஆசிரியர் தகுதி தேர்வின் தேர்ச்சி, இட ஒதுக்கீட்டை நிர்ணயிப்பதில்லை. ஆசிரியர்களை பணியிடங்களில் நியமிக்கும்போது தான் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுகிறது. ஆசிரியர் நியமனத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக பின்பற்றப்படுகிறது.

 எனினும், இந்த அவையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற 60 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், இனி தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும்.

 அதாவது தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் ஆசிரியர் தகுதித் தேர்வில் இனி 55 சதவீதம் மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்கப்படுவார்கள். இந்தச் சலுகை தற்போது ஆகஸ்ட் 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டுள்ள தகுதி தேர்வுக்கும் பொருந்தும்" என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

Thursday, January 30, 2014

காந்தியின் ரத்தம் இன்னும் காயவில்லை


- மதுக்கூர் இராமலிங்கம்
 

“இது காந்தி பிறந்த நாடு, இங்கு வன் முறைக்கு இடமில்லை” என்று முகத்தை, சாந்தமாகவும், பாந்தமாகவும் கஷ்டப்பட்டு வைத்துக்கொண்டு நரேந்திர மோடி பேசுகிறார். இவருடைய சித்தாந்த குருவான நாதுராம் கோட்சேயும், பிரார்த்தனைக்கு வந்துகொண்டிருந்த மகாத்மா காந்தியை வணங்குவதுபோல நடித்துத்தான் அவரை வதை செய்தான். காந்தியை கொன்று முடித்துவிட்ட இவர்கள் இப்போது அவர் விதைத்துச்சென்ற மதச்சார்பின்மை, மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை போன்ற தத்துவக்கோட்பாடுகளை அறுத்து முடித்துவிட முயல்கிறார்கள்.

குஜராத்தில் மோடியின் ஆட்சியில்தான் சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் கொஞ்சம் கூட மனிதத்தன்மையின்றி நர வேட்டையாடப்பட்டார்கள். ஆனால் இவரோ காந்தியத்தின் கடைசி வாரிசு போல தன்னை வரித்துக்கொண்டு வார்த்தைப்பந்தல் போடுகிறார். 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் நாள் மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே சுட்டுக்கொலை செய்தான் என்பது ஒற்றைவரி வரலாறு. ஆனால் கோட்சேயின் பின்னால் ஒரு வெறிபிடித்த கும்பலே இருந்தது என்பது மறைக்கப்பட்ட, ஆனால் மறக்கக்கூடாத வரலாறு. ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மகாசபை ஒருபோதும் காந்தியை ஏற்றுக் கொண்டதில்லை. அவர்கள் கடல் கடந்து பாசிச ஹிட்லரையும், முசோலினியையும் தங்கள் நெஞ்சப்பரப்பில் வைத்து நேசித் தார்கள். ஹிட்லர் அப்பாவி யூதர்களை வேட்டையாடியதுபோல இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்களை ஒரேயடி யாக ஒழித் துக்கட்ட வேண்டும் என்றுவிரும்பினார்கள். அதற்கு காந்தி முன் வைத்த மதச்சார்பின்மை கோட்பாடு இவர்களுக்கு தடைக்கல்லாக இருந்தது. காந்தி கொலையின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு பங்கு உண்டு என்று கூறும்போதெல்லாம் அவசரமாக மறுக்கிறார்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பினால் இயக்கப்படுகிற பாஜகவினர்.

என்னுடைய அண்ணன் நாதுராம் கோட்சேவுக்கும் ஆர் எஸ்எஸ் அமைப்புக்கும் தொடர்பில்லை என்று கூறுவது அயோக்கியத்தனம். நாங்கள் இருவரும் வீடுகளில் வளர்ந்ததைவிட ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஷாகாவில் வளர்ந் ததுதான் அதிகம் என்கிறான் நாதுராமின் தம்பி கோபால் கோட்சே. காந்தியே ஆர்எஸ்எஸ் அமைப்பை பாராட்டினார் என்று உண்மை சற்றும் கலவாத அண்டப்புளுகை அவ்வப்போது அவிழ்த்து விடுகின்றனர் அவர்கள். ஆர்எஸ்எஸ் நடத்திய கூட்டம் ஒன்றில் காந்தி பங்கேற்றது உண்மை. ஆனால் அங்கு சென்றபோதும் (1925) காந்தி அவர்கள் தலையில் ஓங்கி குட்டிவிட்டுத்தான் வந்தார். “இந்தியாவில் இந்துக்களைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை என்று நினைத்தால், இந்துக்கள் அல்லாத பிறர் குறிப்பாக முஸ்லிம்கள் இங்குவசிக்க விரும்பினால் இந்துக்களுக்கு அடி மைகளாக மட்டுமே இருக்க முடியும் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் இந்துமதத்தை கொன்றுவிடுவீர்கள்” என்றார் காந்தி. ஆர்எஸ்எஸ் முன்வைத்த இந்துத்துவா கோட்பாட்டின்படி சிறுபான்மை முஸ்லிம்கிறிஸ்தவ மக்கள் இரண்டாம் தர குடிமக் களாகவே இருக்க வேண்டும் என்பதே விதி. அப்படி இருக்க முடியாது. அப்படி நினைத்தால் நீங்கள் இந்து மதத்தை கொன்றுவிடுவீர்கள் என்று காந்தி கூறியதால்தான், அவரையே இவர்கள் கொன்றுவிட்டார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் அபாயகரமான முகம் குறித்து காந்தியின் சீடரான நேருவுக்கு ஒரு தெளிவான பார்வை இருந்தது. தேசப்பிரிவினையின்போது ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து பட்டேலிடம் நேரு இப்படி கூறினார்,

 “தில்லியில் மட்டுமின்றி மற்ற இடங்களிலும் நடைபெற்ற கலவரங்களில் ஆர்எஸ்எஸ்சுக்கு பெரும் பங்கு உண்டு. அமிர்தசரஸில் அவருடைய செய்கைகள் தெளிவாக தெரிந்தன”. கோட்சே நீதிமன்றத்தில் அளித்த வாக்கு மூலத்தில் காந்தியை கொலை செய்ததை முற்றாக நியாயப்படுத்தினான். காந்தியின் தொடர்ந்த நிலையான முஸ்லிம்களுக்கு ஆதரவான இழிந்த போக்கே தன்னை கொலைசெய்ய தூண்டியதாக கூறிய அவன், கடைசிவரை முஸ்லிம்களுக்கு ஆதரவாக அவர் மேற்கொண்ட உண்ணாவிரதமே உடனடியாக அவரைக் கொல்ல வேண்டும் என்ற முடிவுக்கு தன்னைத் துரத்தியதாக கூறியிருக்கிறான்.இவ்வாறு கோட்சேயை கொலைக்களம் நோக்கி துரத்திய வார்த்தைகள் ஆர்எஸ் எஸ் தலைவர் கோல்வார்க்கருக்கு சொந்தமானவை. 1939ல் கோல்வார்க்கர் இப் படிக் கூறினார், “துரோகிகள் தேசியத் தலைவர்களாக முடிசூட்டப்படுவதும், தேச பக்தர் கள் இழிவுபடுத்தப்படுவதும் விசித்திரமானது,

 மிக மிக விசித்திரமானது”.கோட்சேயின் குல குருவான கோல் வார்க்கர் 1947ல் இப்படிச் சொன்னார். “இந்துமுஸ்லிம் ஒற்றுமையில்லாமல் சுதந்திர மில்லை என்று அறிவித்திருப்பவர்கள் அதன் மூலம் நமது சமுதாயத்திற்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார்கள். மகத்தான, தொன்மைமிக்க மக்களின் ஜீவாத்மாவை கொலை செய்கிற கொடும்பாவத்தை செய்து விட்டார்கள்”.இந்து - முஸ்லிம் ஒற்றுமை மிகவும் இன்றியமையாதது என்பதில் அழுத்தமான நம் பிக்கை கொண்டிருந்த காந்தியைத்தான் இவ்வாறு ஜாடை பேசினார் அவர். கோல் வார்க்கரின் வார்த்தைகளில் ஜீவாத்மாவை கொலைசெய்த, மக்களால் மகாத்மா என்று அழைக்கப்பட்ட காந்தியை கொலை செய்வது கோட்சேவுக்கு குற்றமாகப்படவில்லை.

மாறாக இந்துத் துவாவிற்கு செய்யும் மிகப்பெரிய தொண் டாகவே பட்டது.கோட்சேவின் கைகளில் கொலைக் கருவியை தந்ததில் வி.டி.சாவர்க்கருக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு. 1944ம் ஆண்டில் சாவர்க்கர் இப்படி எழுதினார், “காந்திஜிக்கு ஒரு பத்தானிய ஆட்சியோ அல்லது நிஜாம் முஸ்லிம் ஆட்சியோதான் நூறு சதவீத சுயராஜ்யமாக தெரிகிறது”.இவ்வாறு காந்திக்கு எதிராக கோல் வார்க்கர், சாவர்க்கர் போன்றவர்களால் ஊட்டிவளர்க்கப்பட்ட வெறுப்புத்தான் கோட்சேவின் கைகளில் துப்பாக்கியாக உருவெடுத்தது. காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட் டப்பட்டவர்களில் சாவர்க்கரும் ஒருவர். ஆனால் சந்தர்ப்ப சாட்சியங்களால் அவர்விடுவிக்கப்பட்டார். ஆனால் மரண தண்டனை விதிக்கப்பட்ட கோட்சே உள்ளிட்டகைதிகள் சாவர்க்கரின் கால்களில் விழுந்துஆசி பெற்று தாங்கள் செய்த கொலையை புனிதப்படுத்திக் கொண்டார்கள். விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இந்துத்துவா கும்பலுக்கு போற்றத்தக்க பங்கு எதுவும் இல்லை என்பதும், வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் அந்நியரிடம் வாய்தா கேட்கவும், மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு மண்டியிடவும் அவர்கள் தயாராக இருந்தார்கள் என்பதே உண்மை. ஆனால், சுதந்திரப்போராட்டத்தின் விளைவாக மக்களிடம் உருவாகியிருந்த ஒற்றுமையை, சமயம்கடந்த தேசப்பக்தியை சிதைப்பதிலேயே அவர்கள் குறியாக இருந்தார்கள். அதற்கு தடையாக இருந்த காந்தியை கொலை செய்யவும் அவர்கள் தயங்கவில்லை. காந்திஜியைப் பொறுத்தவரை அவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்தான். ஆனால்அவருடைய மதம் இந்துத்துவாவாதிகள் முன்னிறுத்திய மதம் அல்ல. “என்னைப் பொறுத்தவரை ராமனும், ரஹீமும் ஒன்று தான். ஒரே கடவுள்தான். வாய்மை மற்றும்நியாயம் என்ற கடவுளைத்தவிர வேறுஎந்தக்கடவுளையும் நான் அங்கீகரிக்க வில்லை” என்றார் காந்தி.

ஆனால் ஆர்எஸ் எஸ் அமைப்போ மனுவின் நவீன பதிப்பு. மக்களிடம் மூடநம்பிக்கைகளை, பய உணர்ச் சியை பரப்புவதன் மூலம் மதத்தை நிலை நிறுத்த வேண்டும் என்றவன் மனு. அவனை மனதிற்குள் கோவில்கட்டி கொண்டாடிய இந்துத்துவா கும்பலுக்கு காந்தி சொன்ன சத்தியம் எட்டிக்காயாய் கசக்கத்தானே செய்யும். அரசியலில் மதத்தைக் கலப்பதை காந்தி அடியோடு நிராகரித்தார். மதம் கடவுளுக்கும் மனிதனுக்குமான தனிப்பட்ட விஷயம் என்றார் அவர். “நான் ஒரு சர்வாதிகாரியாக இருந்தால் மதமும் அரசியலும் தனித்தனி யாகவே இருக்கும். என் மதத்தின் மேல் உறுதியாகக் கூறுகிறேன். அதற்காக என் உயிரையும் தருவேன்“ என்பது காந்தியின் கருத்தோட்டமாக இருந்தது.`உலகில் எந்த பகுதியிலும் தேசிய இனமும், மதமும் ஒரே வரையறைக்கு உட்பட்டதாக இல்லை. இந்தியாவிலும் அப்படி ஒருபோதும் இருந்ததில்லை’ என்பதுதான் காந்தியின் கருத்தாக இருந்தது. ஆனால் இவர்களோ இந்தியா முழுவதும் இந்து சாம்ராஜ்யம் விரிந்து பரந்து இருந்ததாகவும், முகலாயர்கள் வந்தபிறகுதான் அந்த சாம்ராஜ்யம் தகர்ந்து விட்டதாகவும் பொய்யான வரலாற்றை மெய் போல காட்டி வந்தவர்கள். எனவேதான் காந்தியின் மீது இவர்களுக்கு அளக்க முடியாத அளவுக்கு ஆத்திரம் இருந்தது.

காந்தியை கொலை செய்த கைத்துப்பாக்கி தற்போது கார்ப்பரேட் கைக்கூலி விளம்பர மினுமினுப்பில் வளர்ச்சிவேடம் போடுகிறது. காந்தியின் உருவப்படத்தின் மீது மலர்தூவி மவுனம் சாதிப்பது மட்டுமல்ல அவருக்குசெலுத்தும் அஞ்சலி. அவர் காத்துநின்ற, அதற்காக உயிரையும் தந்த மதச் சார்பின்மையை பாதுகாக்க உரக்கமுழங்குவதும், ஒன்றுபட்டு களமிறங்குவதும் தான் அவரை நினைக்கும் பொருத்தமான வழியாகும்!

-- நன்றி : தீக்கதிர்  30-01-2014

Wednesday, January 29, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வுப் பிரச்சினை - புதிய திருப்பம்

தமிழ்நாடு அரசுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தாக்கீது!
இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்குத் தளர்வு மதிப்பெண் வழங்கிடுக!
தமிழ்நாடு அரசுக்குத் தமிழர் தலைவர் வேண்டுகோள்!



ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்குத் தளர்வு மதிப்பெண் வழங் காததைச் சுட்டிக் காட்டி, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், உடனடியாக தகுதித் தேர்வில்   இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தளர்வு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளது; அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு அரசு இடஒதுக்கீட்டுப் பிரச்சினையில் தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது. திராவிடர் கழகத்தின் ஒத்துழைப்பாலும், வழிகாட்டுதலாலும் 69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாப்புக்கு வழி விட்டவர் அன்றைய முதல் அமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள்.

தலைகீழ் மாற்றம் ஏன்?

இப்பொழுதோ அதற்கு மாறாகத் தொடர்ந்து நடந்து வருகிறார். குறிப்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் அ.இ. அ.தி.மு.க. அரசு செய்து வரும் குளறுபடிகள் மூலம்  ஒடுக் கப்பட்ட மக்கள் மத்தியில் கண்டனத்தையும் எதிர்ப்பையும் அதிமுக அரசு தொடர்ந்து சம்பாதித்துக் கொண்டு விட்டது.

பிற மாநிலங்களைப் பாரீர்!

தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) மிகச் சரியான வழிகாட்டுதலை அளித்துள்ளது.
அதன்படி இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்குத் தகுதி மதிப்பெண்களில் தளர்வு காட்டப்பட வேண்டும்.

ஆந்திரா, கேரளம், ஒரிசா, அஸ்லாம், பீகார் மாநிலங்களில் அத்தகு முறை பின்பற்றப்பட்டுள்ளது. குறிப்பாக ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் முன்னேறிய ஜாதியினருக்கு 60 மதிப்பெண்கள், பிற்படுத்தப்பட் டோருக்கு 50 மதிப்பெண்கள், தாழ்த்தப்பட்டோருக்கு 40 மதிப்பெண்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இடஒதுக்கீட்டுப் பிரச்சினையில் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய - தந்தை பெரியார் பிறந்த சமூக நீதி மண்ணிலே, சமூக நீதிக்குச் சவக்குழி வெட்டப்பட்டது - மிகவும் கண்டிக்கத்தக்கது.

திராவிடர் கழகத்தின் தொடர் நடவடிக்கைகள்

பாதிக்கப்பட்ட மக்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை சமூகநீதிப் பாதுகாப்பு மாநாடு இந்தப் பிரச் சினைக்காக சென்னைப் பெரியார் திடலில்  நடத்தப்பட்டது (5.7.2013).

மக்களின் எழுச்சியை வெளிப்படுத்தும் வகையில் 18.7.2013 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாக்கீது!

அ.இ.அ.தி.மு.க. அரசின் சமூக நீதிக்கு எதிரான அணுகுமுறையால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோர், சிறுபான்மையினர், பெண்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிக்கான இடங்கள் நிரப்பப்படாத ஒரு கொடுமை  நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் இது குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் திரு. பு.பா. பிரின்ஸ்கஜேந்திரபாபு  அவர்களால் அனுப்பப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்  (National Commission of Scheduled castes) தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மற்றும் ஆசிரியர் தேர்வு ஆணையத்திற்கு அனுப்பியுள்ள 23.1.2014 நாளிட்ட கடிதத்தில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் மதிப்பெண் தளர்வு வழங்க வாய்ப்பு அளிக்கத் தவறியதைச் சுட்டிக் காட்டி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு வழங்கிட உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தேர் வாணையத்தின் செயல்பாடு தன்னிச்சையானது - அநீதியானது  - சட்ட விரோதமானது - இடஒதுக் கீடுக்கு எதிரானது (Arbitrary, Unjust, Unlawful and Against the Reservation Policy)
 
 என்று கடினமான பதங்களையும் பயன்படுத்தியுள்ளது. அத்தோடு தேசிய தாழ்த்தப்பட்டோருக்கான ஆணையம் நிறுத்திக் கொள்ளவில்லை; இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்கத் தவறிய அதிகாரிகள்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு எண் 4இன் கீழ் நடவடிக்கை எடுக்கும்படியும் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும்?

இதற்கு மேலும் தமிழ்நாடு அரசு வீண் வீம்பும், பிடிவாதமும் காட்டாமல், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக் குரிய தளர்வு மதிப்பெண் அடிப்படையில் ஏற்கெனவே தேர்வு எழுதியவர்களைத் தேர்வு செய்யுமாறு வலியுறுத் துகிறோம்.

ஆசிரியர் தேர்வு ஆணையம் இனி நடத்தவிருக்கும் தேர்வுகளை இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தளர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

அனைவருக்குமே வாய்ப்பு அளிக்க வாய்ப்பு உண்டே!

பேராசிரியர் முத்துக்குமரன் தலைமையிலான கல்விக் குழுவின் பரிந்துரை அடிப்படையில் 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற ரீதியில் செயல்பட்டால் ஆசிரியர் பயிற்சி பெற்று வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் அத்தனை ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் எளிதாகக் கிடைத்து விடுமே! இவற்றைப் பற்றி எல்லாம் தமிழ்நாடு அரசு சிந்திக்க வேண்டும்.
வேலையில்லாதாருக்கு வேலை வாய்ப்பு அளிப்பது என்பதும் ஓர் அரசின் அடிப்படை கடமை என்பதையும் நினைவூட்டுகிறோம். தமிழ்நாடு அரசு செயல்படுமாக!


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை
28.1.2014


குறிப்பு: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழ்நாடு அரசு கல்வித்துறை செயலாளருக்கு அனுப்பிய ஆணை




இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Read more: http://viduthalai.in/headline/74259-kveeramani.html#ixzz2rlihIZZk

ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு வழங்க வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணில் தளர்வு வழங்க வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

 இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் விபு நய்யர் ஆகியோருக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் மண்டல இயக்குநர் டி.வெங்கடேசன் அனுப்பியுள்ள கடிதத்தின் விவரம்:

பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் ஜனவரி 16-ஆம் தேதி மனு அளித்துள்ளார்.

இந்த மனுவைப் பரிசீலித்ததில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் விதிமுறைகளைப் பின்பற்றி இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகை வழங்கப்படும் என தமிழக அரசின் ஆணையிலேயே (அரசாணை எண்.181) குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணில் ஆசிரியர் தேர்வு வாரியம் சலுகை வழங்கவில்லை.

ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அரசாணையின் 9 (ஏ) பிரிவைச் செயல்படுத்த பள்ளி நிர்வாகங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அனுமதியும் வழங்கவில்லை.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தன்னிச்சையான இந்த நடவடிக்கை, தமிழக அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக உள்ளது.

முதல்வர் ஜெயலலிதா, ஜனவரி 12-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையிலும் கூட விரிவுரையாளர்களுக்கான ஸ்லெட், நெட் தேர்வு நடைமுறைகளே ஆசிரியர் தகுதித் தேர்விலும் பின்பற்றப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

ஸ்லெட், நெட் தேர்வுகளில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகை வழங்கப்படுகிறது.

எனவே தமிழக அரசின் அரசாணையின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இடஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்தாததற்கு காரணமான அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விஷயங்கள் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து உடனடியாக அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். தவறினால், புதுதில்லியில் உள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைமையகத்தின் கவனத்துக்கு இந்த விவகாரம்  எடுத்துச் செல்லப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் நடவடிக்கை :

ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்து, தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, மதிப்பெண் சலுகை அளிக்க, அரசாணையில் வழிவகை செய்துவிட்டு, அதை அமல்படுத்த, ஆசிரியர் தேர்வு வாரியம் முன் வராததை, தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின், சென்னை மண்டல இயக்குனர், கடுமையாக விமர்சித்து உள்ளார்.இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக, டி.ஆர்.பி., செயல்படுவதாக குற்றம் சாட்டி உள்ள இயக்குனர், 'உடனடியாக, டி.இ.டி., தேர்வில், மதிப்பெண் சலுகை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; தவறினால், தேசிய ஆணையத்தின் கவனத்திற்கு, பிரச்னை கொண்டு செல்லப்படும்' என, எச்சரித்து உள்ளார். இந்த விவகாரம், பூதாகரமாக மாறி இருப்பதால், மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்து, டி.ஆர்.பி., தீவிர ஆலோசனையில் இறங்கி உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த பிரச்னையில், தன்னிச்சையாக, டி.ஆர்.பி., எந்த முடிவும் எடுக்க முடியாத நிலை உள்ளது.ஆணையத்தின் உத்தரவு குறித்து, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய முடிவை எடுக்க, டி.ஆர்.பி., தீர்மானித்து உள்ளது. மதிப்பெண் சலுகை அளிப்பது குறித்த அறிவிப்பை, முதல்வரே வெளியிடுவார் எனவும், எதிர்பார்க்கப்படுகிறது.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...