Wednesday, January 29, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வுப் பிரச்சினை - புதிய திருப்பம்

தமிழ்நாடு அரசுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தாக்கீது!
இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்குத் தளர்வு மதிப்பெண் வழங்கிடுக!
தமிழ்நாடு அரசுக்குத் தமிழர் தலைவர் வேண்டுகோள்!



ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்குத் தளர்வு மதிப்பெண் வழங் காததைச் சுட்டிக் காட்டி, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், உடனடியாக தகுதித் தேர்வில்   இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தளர்வு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளது; அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு செயல்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு அரசு இடஒதுக்கீட்டுப் பிரச்சினையில் தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது. திராவிடர் கழகத்தின் ஒத்துழைப்பாலும், வழிகாட்டுதலாலும் 69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாப்புக்கு வழி விட்டவர் அன்றைய முதல் அமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள்.

தலைகீழ் மாற்றம் ஏன்?

இப்பொழுதோ அதற்கு மாறாகத் தொடர்ந்து நடந்து வருகிறார். குறிப்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் அ.இ. அ.தி.மு.க. அரசு செய்து வரும் குளறுபடிகள் மூலம்  ஒடுக் கப்பட்ட மக்கள் மத்தியில் கண்டனத்தையும் எதிர்ப்பையும் அதிமுக அரசு தொடர்ந்து சம்பாதித்துக் கொண்டு விட்டது.

பிற மாநிலங்களைப் பாரீர்!

தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) மிகச் சரியான வழிகாட்டுதலை அளித்துள்ளது.
அதன்படி இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்குத் தகுதி மதிப்பெண்களில் தளர்வு காட்டப்பட வேண்டும்.

ஆந்திரா, கேரளம், ஒரிசா, அஸ்லாம், பீகார் மாநிலங்களில் அத்தகு முறை பின்பற்றப்பட்டுள்ளது. குறிப்பாக ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் முன்னேறிய ஜாதியினருக்கு 60 மதிப்பெண்கள், பிற்படுத்தப்பட் டோருக்கு 50 மதிப்பெண்கள், தாழ்த்தப்பட்டோருக்கு 40 மதிப்பெண்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இடஒதுக்கீட்டுப் பிரச்சினையில் இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய - தந்தை பெரியார் பிறந்த சமூக நீதி மண்ணிலே, சமூக நீதிக்குச் சவக்குழி வெட்டப்பட்டது - மிகவும் கண்டிக்கத்தக்கது.

திராவிடர் கழகத்தின் தொடர் நடவடிக்கைகள்

பாதிக்கப்பட்ட மக்கள் வீதிக்கு வந்து போராடினார்கள். திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை சமூகநீதிப் பாதுகாப்பு மாநாடு இந்தப் பிரச் சினைக்காக சென்னைப் பெரியார் திடலில்  நடத்தப்பட்டது (5.7.2013).

மக்களின் எழுச்சியை வெளிப்படுத்தும் வகையில் 18.7.2013 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாக்கீது!

அ.இ.அ.தி.மு.க. அரசின் சமூக நீதிக்கு எதிரான அணுகுமுறையால் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோர், சிறுபான்மையினர், பெண்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிக்கான இடங்கள் நிரப்பப்படாத ஒரு கொடுமை  நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் இது குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் திரு. பு.பா. பிரின்ஸ்கஜேந்திரபாபு  அவர்களால் அனுப்பப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்  (National Commission of Scheduled castes) தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மற்றும் ஆசிரியர் தேர்வு ஆணையத்திற்கு அனுப்பியுள்ள 23.1.2014 நாளிட்ட கடிதத்தில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் மதிப்பெண் தளர்வு வழங்க வாய்ப்பு அளிக்கத் தவறியதைச் சுட்டிக் காட்டி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் தளர்வு வழங்கிட உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு தேர் வாணையத்தின் செயல்பாடு தன்னிச்சையானது - அநீதியானது  - சட்ட விரோதமானது - இடஒதுக் கீடுக்கு எதிரானது (Arbitrary, Unjust, Unlawful and Against the Reservation Policy)
 
 என்று கடினமான பதங்களையும் பயன்படுத்தியுள்ளது. அத்தோடு தேசிய தாழ்த்தப்பட்டோருக்கான ஆணையம் நிறுத்திக் கொள்ளவில்லை; இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்கத் தவறிய அதிகாரிகள்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு எண் 4இன் கீழ் நடவடிக்கை எடுக்கும்படியும் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு அரசு என்ன செய்ய வேண்டும்?

இதற்கு மேலும் தமிழ்நாடு அரசு வீண் வீம்பும், பிடிவாதமும் காட்டாமல், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக் குரிய தளர்வு மதிப்பெண் அடிப்படையில் ஏற்கெனவே தேர்வு எழுதியவர்களைத் தேர்வு செய்யுமாறு வலியுறுத் துகிறோம்.

ஆசிரியர் தேர்வு ஆணையம் இனி நடத்தவிருக்கும் தேர்வுகளை இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தளர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

அனைவருக்குமே வாய்ப்பு அளிக்க வாய்ப்பு உண்டே!

பேராசிரியர் முத்துக்குமரன் தலைமையிலான கல்விக் குழுவின் பரிந்துரை அடிப்படையில் 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற ரீதியில் செயல்பட்டால் ஆசிரியர் பயிற்சி பெற்று வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் அத்தனை ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் எளிதாகக் கிடைத்து விடுமே! இவற்றைப் பற்றி எல்லாம் தமிழ்நாடு அரசு சிந்திக்க வேண்டும்.
வேலையில்லாதாருக்கு வேலை வாய்ப்பு அளிப்பது என்பதும் ஓர் அரசின் அடிப்படை கடமை என்பதையும் நினைவூட்டுகிறோம். தமிழ்நாடு அரசு செயல்படுமாக!


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
சென்னை
28.1.2014


குறிப்பு: தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தமிழ்நாடு அரசு கல்வித்துறை செயலாளருக்கு அனுப்பிய ஆணை




இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Read more: http://viduthalai.in/headline/74259-kveeramani.html#ixzz2rlihIZZk

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...