Thursday, January 30, 2014

காந்தியின் ரத்தம் இன்னும் காயவில்லை


- மதுக்கூர் இராமலிங்கம்
 

“இது காந்தி பிறந்த நாடு, இங்கு வன் முறைக்கு இடமில்லை” என்று முகத்தை, சாந்தமாகவும், பாந்தமாகவும் கஷ்டப்பட்டு வைத்துக்கொண்டு நரேந்திர மோடி பேசுகிறார். இவருடைய சித்தாந்த குருவான நாதுராம் கோட்சேயும், பிரார்த்தனைக்கு வந்துகொண்டிருந்த மகாத்மா காந்தியை வணங்குவதுபோல நடித்துத்தான் அவரை வதை செய்தான். காந்தியை கொன்று முடித்துவிட்ட இவர்கள் இப்போது அவர் விதைத்துச்சென்ற மதச்சார்பின்மை, மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை போன்ற தத்துவக்கோட்பாடுகளை அறுத்து முடித்துவிட முயல்கிறார்கள்.

குஜராத்தில் மோடியின் ஆட்சியில்தான் சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் கொஞ்சம் கூட மனிதத்தன்மையின்றி நர வேட்டையாடப்பட்டார்கள். ஆனால் இவரோ காந்தியத்தின் கடைசி வாரிசு போல தன்னை வரித்துக்கொண்டு வார்த்தைப்பந்தல் போடுகிறார். 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் நாள் மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே சுட்டுக்கொலை செய்தான் என்பது ஒற்றைவரி வரலாறு. ஆனால் கோட்சேயின் பின்னால் ஒரு வெறிபிடித்த கும்பலே இருந்தது என்பது மறைக்கப்பட்ட, ஆனால் மறக்கக்கூடாத வரலாறு. ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மகாசபை ஒருபோதும் காந்தியை ஏற்றுக் கொண்டதில்லை. அவர்கள் கடல் கடந்து பாசிச ஹிட்லரையும், முசோலினியையும் தங்கள் நெஞ்சப்பரப்பில் வைத்து நேசித் தார்கள். ஹிட்லர் அப்பாவி யூதர்களை வேட்டையாடியதுபோல இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்களை ஒரேயடி யாக ஒழித் துக்கட்ட வேண்டும் என்றுவிரும்பினார்கள். அதற்கு காந்தி முன் வைத்த மதச்சார்பின்மை கோட்பாடு இவர்களுக்கு தடைக்கல்லாக இருந்தது. காந்தி கொலையின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு பங்கு உண்டு என்று கூறும்போதெல்லாம் அவசரமாக மறுக்கிறார்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பினால் இயக்கப்படுகிற பாஜகவினர்.

என்னுடைய அண்ணன் நாதுராம் கோட்சேவுக்கும் ஆர் எஸ்எஸ் அமைப்புக்கும் தொடர்பில்லை என்று கூறுவது அயோக்கியத்தனம். நாங்கள் இருவரும் வீடுகளில் வளர்ந்ததைவிட ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஷாகாவில் வளர்ந் ததுதான் அதிகம் என்கிறான் நாதுராமின் தம்பி கோபால் கோட்சே. காந்தியே ஆர்எஸ்எஸ் அமைப்பை பாராட்டினார் என்று உண்மை சற்றும் கலவாத அண்டப்புளுகை அவ்வப்போது அவிழ்த்து விடுகின்றனர் அவர்கள். ஆர்எஸ்எஸ் நடத்திய கூட்டம் ஒன்றில் காந்தி பங்கேற்றது உண்மை. ஆனால் அங்கு சென்றபோதும் (1925) காந்தி அவர்கள் தலையில் ஓங்கி குட்டிவிட்டுத்தான் வந்தார். “இந்தியாவில் இந்துக்களைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை என்று நினைத்தால், இந்துக்கள் அல்லாத பிறர் குறிப்பாக முஸ்லிம்கள் இங்குவசிக்க விரும்பினால் இந்துக்களுக்கு அடி மைகளாக மட்டுமே இருக்க முடியும் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் இந்துமதத்தை கொன்றுவிடுவீர்கள்” என்றார் காந்தி. ஆர்எஸ்எஸ் முன்வைத்த இந்துத்துவா கோட்பாட்டின்படி சிறுபான்மை முஸ்லிம்கிறிஸ்தவ மக்கள் இரண்டாம் தர குடிமக் களாகவே இருக்க வேண்டும் என்பதே விதி. அப்படி இருக்க முடியாது. அப்படி நினைத்தால் நீங்கள் இந்து மதத்தை கொன்றுவிடுவீர்கள் என்று காந்தி கூறியதால்தான், அவரையே இவர்கள் கொன்றுவிட்டார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் அபாயகரமான முகம் குறித்து காந்தியின் சீடரான நேருவுக்கு ஒரு தெளிவான பார்வை இருந்தது. தேசப்பிரிவினையின்போது ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து பட்டேலிடம் நேரு இப்படி கூறினார்,

 “தில்லியில் மட்டுமின்றி மற்ற இடங்களிலும் நடைபெற்ற கலவரங்களில் ஆர்எஸ்எஸ்சுக்கு பெரும் பங்கு உண்டு. அமிர்தசரஸில் அவருடைய செய்கைகள் தெளிவாக தெரிந்தன”. கோட்சே நீதிமன்றத்தில் அளித்த வாக்கு மூலத்தில் காந்தியை கொலை செய்ததை முற்றாக நியாயப்படுத்தினான். காந்தியின் தொடர்ந்த நிலையான முஸ்லிம்களுக்கு ஆதரவான இழிந்த போக்கே தன்னை கொலைசெய்ய தூண்டியதாக கூறிய அவன், கடைசிவரை முஸ்லிம்களுக்கு ஆதரவாக அவர் மேற்கொண்ட உண்ணாவிரதமே உடனடியாக அவரைக் கொல்ல வேண்டும் என்ற முடிவுக்கு தன்னைத் துரத்தியதாக கூறியிருக்கிறான்.இவ்வாறு கோட்சேயை கொலைக்களம் நோக்கி துரத்திய வார்த்தைகள் ஆர்எஸ் எஸ் தலைவர் கோல்வார்க்கருக்கு சொந்தமானவை. 1939ல் கோல்வார்க்கர் இப் படிக் கூறினார், “துரோகிகள் தேசியத் தலைவர்களாக முடிசூட்டப்படுவதும், தேச பக்தர் கள் இழிவுபடுத்தப்படுவதும் விசித்திரமானது,

 மிக மிக விசித்திரமானது”.கோட்சேயின் குல குருவான கோல் வார்க்கர் 1947ல் இப்படிச் சொன்னார். “இந்துமுஸ்லிம் ஒற்றுமையில்லாமல் சுதந்திர மில்லை என்று அறிவித்திருப்பவர்கள் அதன் மூலம் நமது சமுதாயத்திற்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார்கள். மகத்தான, தொன்மைமிக்க மக்களின் ஜீவாத்மாவை கொலை செய்கிற கொடும்பாவத்தை செய்து விட்டார்கள்”.இந்து - முஸ்லிம் ஒற்றுமை மிகவும் இன்றியமையாதது என்பதில் அழுத்தமான நம் பிக்கை கொண்டிருந்த காந்தியைத்தான் இவ்வாறு ஜாடை பேசினார் அவர். கோல் வார்க்கரின் வார்த்தைகளில் ஜீவாத்மாவை கொலைசெய்த, மக்களால் மகாத்மா என்று அழைக்கப்பட்ட காந்தியை கொலை செய்வது கோட்சேவுக்கு குற்றமாகப்படவில்லை.

மாறாக இந்துத் துவாவிற்கு செய்யும் மிகப்பெரிய தொண் டாகவே பட்டது.கோட்சேவின் கைகளில் கொலைக் கருவியை தந்ததில் வி.டி.சாவர்க்கருக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு. 1944ம் ஆண்டில் சாவர்க்கர் இப்படி எழுதினார், “காந்திஜிக்கு ஒரு பத்தானிய ஆட்சியோ அல்லது நிஜாம் முஸ்லிம் ஆட்சியோதான் நூறு சதவீத சுயராஜ்யமாக தெரிகிறது”.இவ்வாறு காந்திக்கு எதிராக கோல் வார்க்கர், சாவர்க்கர் போன்றவர்களால் ஊட்டிவளர்க்கப்பட்ட வெறுப்புத்தான் கோட்சேவின் கைகளில் துப்பாக்கியாக உருவெடுத்தது. காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட் டப்பட்டவர்களில் சாவர்க்கரும் ஒருவர். ஆனால் சந்தர்ப்ப சாட்சியங்களால் அவர்விடுவிக்கப்பட்டார். ஆனால் மரண தண்டனை விதிக்கப்பட்ட கோட்சே உள்ளிட்டகைதிகள் சாவர்க்கரின் கால்களில் விழுந்துஆசி பெற்று தாங்கள் செய்த கொலையை புனிதப்படுத்திக் கொண்டார்கள். விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இந்துத்துவா கும்பலுக்கு போற்றத்தக்க பங்கு எதுவும் இல்லை என்பதும், வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் அந்நியரிடம் வாய்தா கேட்கவும், மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுத்துவிட்டு மண்டியிடவும் அவர்கள் தயாராக இருந்தார்கள் என்பதே உண்மை. ஆனால், சுதந்திரப்போராட்டத்தின் விளைவாக மக்களிடம் உருவாகியிருந்த ஒற்றுமையை, சமயம்கடந்த தேசப்பக்தியை சிதைப்பதிலேயே அவர்கள் குறியாக இருந்தார்கள். அதற்கு தடையாக இருந்த காந்தியை கொலை செய்யவும் அவர்கள் தயங்கவில்லை. காந்திஜியைப் பொறுத்தவரை அவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர்தான். ஆனால்அவருடைய மதம் இந்துத்துவாவாதிகள் முன்னிறுத்திய மதம் அல்ல. “என்னைப் பொறுத்தவரை ராமனும், ரஹீமும் ஒன்று தான். ஒரே கடவுள்தான். வாய்மை மற்றும்நியாயம் என்ற கடவுளைத்தவிர வேறுஎந்தக்கடவுளையும் நான் அங்கீகரிக்க வில்லை” என்றார் காந்தி.

ஆனால் ஆர்எஸ் எஸ் அமைப்போ மனுவின் நவீன பதிப்பு. மக்களிடம் மூடநம்பிக்கைகளை, பய உணர்ச் சியை பரப்புவதன் மூலம் மதத்தை நிலை நிறுத்த வேண்டும் என்றவன் மனு. அவனை மனதிற்குள் கோவில்கட்டி கொண்டாடிய இந்துத்துவா கும்பலுக்கு காந்தி சொன்ன சத்தியம் எட்டிக்காயாய் கசக்கத்தானே செய்யும். அரசியலில் மதத்தைக் கலப்பதை காந்தி அடியோடு நிராகரித்தார். மதம் கடவுளுக்கும் மனிதனுக்குமான தனிப்பட்ட விஷயம் என்றார் அவர். “நான் ஒரு சர்வாதிகாரியாக இருந்தால் மதமும் அரசியலும் தனித்தனி யாகவே இருக்கும். என் மதத்தின் மேல் உறுதியாகக் கூறுகிறேன். அதற்காக என் உயிரையும் தருவேன்“ என்பது காந்தியின் கருத்தோட்டமாக இருந்தது.`உலகில் எந்த பகுதியிலும் தேசிய இனமும், மதமும் ஒரே வரையறைக்கு உட்பட்டதாக இல்லை. இந்தியாவிலும் அப்படி ஒருபோதும் இருந்ததில்லை’ என்பதுதான் காந்தியின் கருத்தாக இருந்தது. ஆனால் இவர்களோ இந்தியா முழுவதும் இந்து சாம்ராஜ்யம் விரிந்து பரந்து இருந்ததாகவும், முகலாயர்கள் வந்தபிறகுதான் அந்த சாம்ராஜ்யம் தகர்ந்து விட்டதாகவும் பொய்யான வரலாற்றை மெய் போல காட்டி வந்தவர்கள். எனவேதான் காந்தியின் மீது இவர்களுக்கு அளக்க முடியாத அளவுக்கு ஆத்திரம் இருந்தது.

காந்தியை கொலை செய்த கைத்துப்பாக்கி தற்போது கார்ப்பரேட் கைக்கூலி விளம்பர மினுமினுப்பில் வளர்ச்சிவேடம் போடுகிறது. காந்தியின் உருவப்படத்தின் மீது மலர்தூவி மவுனம் சாதிப்பது மட்டுமல்ல அவருக்குசெலுத்தும் அஞ்சலி. அவர் காத்துநின்ற, அதற்காக உயிரையும் தந்த மதச் சார்பின்மையை பாதுகாக்க உரக்கமுழங்குவதும், ஒன்றுபட்டு களமிறங்குவதும் தான் அவரை நினைக்கும் பொருத்தமான வழியாகும்!

-- நன்றி : தீக்கதிர்  30-01-2014

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...