Thursday, March 3, 2016

வேலை வாய்ப்பு எங்கே?

மோடி பிரச்சாரத்தின்போது அள்ளிவீசிய பல்வேறு பொய்கள் ஒவ்வொரு வரவு - செலவுத் திட்டத்திலும் மெய்யாக மாறாதா! என்று அவரை நம்பிய கோடானு கோடி மக்களிடம் எதிர்பார்ப்பு இருப்பதில் வியப்பொன்றுமில்லை. ஆனால் இரண்டு ஆண்டுகள் கழிந்தும், தான் அள்ளி வீசிய மாயாஜால வாக்குறுதிகளில் ஒன்றையாவது அவர் நிறைவேற்றி இருக்கிறாரா? என்றால் ஏமாற்றமே மிஞ்சும்.
2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆட்சி பீடம் ஏறிய உடன் நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறியதை இங்கே நினைவு கூரவேண்டும். நாட்டில் பொருளாதார சீர்திருத்தம் என்பது எங்களின் முதன்மையான கடமை என்றார். அவர் கூறிய இந்தச் செய்தியோடு தேசிய கலாச்சாரம் என்ற பெயரால் வரலாற்றுக் கழகத்தின் அத்தனை உறுப் பினர்களும் விலக்கப்பட்டு, சுதர்சன் ராவ் தலைமையில் காவிகளின் குழு அமர்ந்தது, பள்ளிகல்லூரிகளில் மாற்றம் கொண்டுவரும் முக்கிய பொறுப்பில் உள்ள இந்தக் குழு முழுமையாக காவிமயமானது. அப்போதே புரிந்து விட்டது, வளர்ச்சி, பொருளாதாரம் வேலைவாய்ப்பு எல்லாம் வெறும் பேச்சுதான். உண்மையில் காவிகளின் ஆட்சியே இவர்களின் உயிர்மூச்சு என்று உறுதியானது.
அடுத்த கட்டமாக சிறுபான்மையினரின் வழிபாட்டு இடங்களின் மீதான தாக்குதல் தொடங்கி, இன்று கன்னையா குமார் விவகாரம் வரை தொடர்கிறது. நாட்டில்  பொருளாதார வளர்ச்சி அபாயகட்டத்தில் சிக்குண்டுள்ளது. விலைவாசி உயர்ந்துகொண்டே இருக்கிறது. நடுத்தர மற்றும் ஏழை மக்கள் ஆலையின் கரும்பு போல் அவர்களின் உழைப்பு பிழியப்பட்டுக்கொண்டு இருக்கிறது.
இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. அனைத்து மாநிலங் களிலும் வேலைவாய்ப்பு என்பது கிட்டத்தட்ட இல்லாத நிலை, 20 முதல் 40 வயதுவரை உள்ள இளைஞர்களில் வேலை யில்லாதவர்கள் எண்ணிக்கை 21 கோடியைத் தாண்டிவிட்டது.
மீதமுள்ள பலர் கார்பரேட் நிறுவனங்களில் கொத்தடிமை களைவிட கேவலமாக நடத்தப்படுகின்றனர். பிரபல தனியார் எரிவாயு நிறுவனத்தில் இந்தியா முழுவதிலுமுள்ள கிளை நிறுவனங்களில் 3 லட்சத்து 18 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். ஆனால், அவர்களிடம் நேரடியாக மாதச் சம்பளம் பெறுபவர்கள் வெறும் 7 ஆயிரம் பேர்தான். இதில் 2 ஆயிரம் பேர் பயிற்சிப் பணியாளர்கள். அதாவது வெறும் அய்ந்தாயிரம் பேர்தான் அந்த தனியார் நிறுவனத்தின் நேரடிப் பணியாளர்கள், இவர்கள் அனைவரும் பெரும் பதவியில் இருப்பவர்கள். மற்றவர்கள் அனைவரும் மூன்றாம், நான்காம் நிறுவனங்களின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர்கள், அதாவது ஒருதனியார் நிறுவனத்தில் மட்டும் வேலை உத்திரவாதமின்றியும், எதிர்காலத்தில் எந்த ஒரு சேமிப்பும் இல்லாமல் நம்பிக்கை இழந்த நிலையில்
3 லட்சத்து 10 ஆயிரம் பேர்  உள்ளனர். மோடிக்கு மிகவும் நெருக்கமான 47 தனியார் நிறுவனங்களில் சுமார் ஒரு கோடி பேர் இதே போன்று எதிர்காலமற்ற நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களின் எதிர்ப்பிலிருந்து தப்பிக்கத் தான் பிரதம மந்திரி பென்சன் யோஜனா போன்றவைகளைக் காட்டி வாயைக் கட்டும் வேலையில் இறங்கியுள்ளார். இப்படிப் பட்ட ஒப்பந்த அடிப்படையில் வேலை தருவதைத்தான், நான் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவேன், என்று முழங்கினாரோ, ஒப்பந்த தொழிலாளர் முறை முடிவுக்குக் கொண்டு வரப்படவேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில், இப்படி ஓர் அறிவிப்பா?
விவசாயிகளுக்கு பல்வேறு நலன்களை அள்ளி வீசியுள் ளார். எப்படி தேர்தல் காலத்தில் ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றினாரோ, அதேபோல் ஒவ்வொரு வரவு - செலவு அறிக்கையிலும் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்.
முக்கியமாக விவசாயிகளின் வருமானத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் இரண்டு மடங்கு உயர்த்துவதாக கூறியிருக் கிறார். முதல் நாள் உத்தரப்பிரதேசத்தில் கூறினார். மறுநாள் நாடாளுமன்றத்தில் அப்படியே நகலெடுத்து அருண்ஜெட்லி கூறினார்.
உண்மையில் விவசாயிகள் இவ்வளவு ஏமாளிகளா? இன்றைய காலகட்டத்தில் பெரும்பான்மை விவசாயிகளின் வருவாய் ஆண்டிற்கு ரூ.20,000 மட்டுமே! இது நபார்டு வங்கி எடுத்த சர்வேயில் வெளிவந்த உண்மை. அதாவது மாதம் ரூ.1600 வருமானம் வாங்கும் ஒரு விவசாயி, மோடியின் வாக் குறுதிப்படி 2022 ஆம் ஆண்டு ரூ.3200 வருவாய் ஈட்டுவார்.  (ஆனாலும் ரூபாயின் மதிப்பைக் கணக்கிட வேண்டாமா?) இதைக் கணக்கு போட்டு பார்த்த ஏழை விவசாயி கண்ணீர் விடுகிறார். மோடியோ தனது அடுத்த பிரம்மாண்ட அறிவிப்பாக எதை அறிவிக்கலாம் என்று தனது கார்ப்பரேட் முத லாளிகளிடம் ஆலோசனைகேட்க புறப்பட்டுவிடுவார்.
தூய்மை இந்தியாவிற்கு  ரூ.5000 கோடி ஒதுக்கீடு செய்தி ருக்கிறார்கள். தூய்மை இந்தியா திட்டம் துவங்கி இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. முழு தோல்வியில் முடிந்த இந்த திட்டத்திற்கு ஏற்கெனவே தூய்மை இந்தியா சேவை வரி என்றபெயரில் தொகை வசூலிக்கப்படுகிறது, இப்போது மேலும் நமது பணத்தில் இருந்து ரூ.5000 கோடியைப் பிடுங்கி தூய்மை இந்தியாவில் கொட்டப்போகிறார்கள்.  பலன் கேள்விக்குறியே!
வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு இலவச எரிவாயு உருளை என்பதும் ஏமாற்று வேலைதான்; இந்தியாவில் கிராமப்புறத்தில் ரூ.27. நகரங்களில் ரூ.33 வருவாய் வறுமைக் கோட்டின் எல்லையாக நிதி ஆயோக் உறுதிசெய்துள்ளது. இன்றைய கணக்குப்படி மன்ரேகா திட்டத்தின் மூலம் கிராம மக்கள் நாளொன்று ரூ.100 வருவாய் ஈட்டுகின்றனர். நகரமக்களின் தினசரி வருவாய் 400-அய் எட்டியுள்ளது. இந்நிலையில் எந்த ஏழைக்கு இலவசமாம்?
வருவாய்க்கான எந்த ஒரு ஆதாரத்தையும் காட்டாமல் தேர்தல் அறிக்கை போல் வரவு- செலவு திட்ட அறிக்கையை வெளியிட்டு மக்களை தந்திரமாக ஏமாற்றும் செயலில் மோடி-அருண் ஜெட்லி குழு திறம்பட வேலைசெய்துள்ளது.
திராவிடர் கழகத் தலைவர் சுட்டிக்காட்டியதுபோல ஒப்பனை ஜிகினாதான் இதில் மினுக்குகிறது.

மூளையைப் பாதுகாக்க தவிர்க்க வேண்டிய 10 தவறுகள் (2)




5. சதா தூங்கிக் கொண்டே இருக்கும் ‘தூங்கு மூஞ்சிகள்’ பலரை நாம் பார்த்துள்ளோம்; ஓய்வுதானே - விடுமுறைதானே என்று சமாதானம் கூறி, படுக்கையையே இருப்பாகக் கொண்டு தூங்கிடும் நபர்களும் இந்த மூளை பாதிப்புக்கு ஆளாகக் கூடும்!
பலர் ஓய்வு - “இளைப்பாறுதல்” (Relaxation) என்பதை சதா தூங்குவது என்று தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது.
‘நல்ல பொழுதையெல்லாம் நாளும் தூங்கிக் கழித்த சோம்பேறிகளைப்’ பற்றிதான் ‘தூங்காதே தம்பி தூங்காதே’ என்று பட்டுக்கோட்டை கவிஞர் கல்யாண சுந்தரம் பாடி எச்சரித்தாரே அது நினைவிற்கு வருகிறதா?
6. சாப்பிடும்போது, தொலைக் காட்சியில் படம் பார்த்துக் கொண்டே சாப்பிடுவது, கணினியில்  வேலை செய்து கொண்டே சாப்பிடுவது என்பது மிகப் பெரிய கேடு. இது கட்டாயம் தவிர்க்கப்பட்டாக வேண்டும்!
உணவை நாம் உட்கொள்வது அடிப்படை உடல் நலப் பாதுகாப்பு - இன்றியாமையாக் கடமை. மற்ற வேலைகளை உணவினை முடித்து விட்டு செய்தால் என்ன குடியா மூழ்கிப் போகும்! எனவே இந்தத் தவறை செய்வதை நாம் அனைவருமே தவிர்த்தல் அவசியம்! அவசியம்!!
7. தூங்கும்போது தலைக்குல்லாயுடன் தூங்குவது, காலில் (உறை) சாக்ஸ் Socks) அணிந்து கொண்டே தூங்குவதும் மூளையின் இரத்த ஓட்டத்தைக் குறைத்து, இயங்கும் சக்தியையும் பாதிக்கும் என்பது மற்றொரு முக்கிய எச்சரிக்கையாகும்.
8. எட்டாவது எச்சரிக்கை - கவனத்தில் கொள்ள வேண்டியது. (மூளையின் ரத்த ஒட்ட பாதிப்பைத் தடுக்க)
பல்வேறு காரணங்களால் நாம் உடல் நலக் குறைவுடன் உள்ளபோது, (படுக்கையில் இருந்து கொண்டே) மூளைக்கு அதிக வேலை கொடுக்கும் பணிகளில் ஈடுபடுதல் கூடாது. இழுக்க முடியாத சுமையை என்ஜினுக்கு அளிப்பதுபோல.
9.  அதிகம் - சதா பேசிக்  கொண்டே இருப்பது , சிலர்  சளசளவென்று சதா - Non Stop  எஞ்ஜின் மாதிரி பேசிக் கொண்டே இருப்பார்கள். மற்றவர்களைப் பேசவிடாமலும், மற்றவர்கள் நாம் பேசுவதை விரும்புகிறார்களா? கேட்கிறார்களா? கவனிக்கிறார்களா? முகச் சுளிப்பை மிக நாசூக்காக வெளிப்படுத்துகின்றனரா? என்பது பற்றியெல்லாம்கூட சிறிதும் கவலைப்படாமல் பொத்தானை அழுத்திய டேப்ரிக்கார்டரைப்போல் பேசிக் கொண்டே இருப்பது மூளைக்குக் கேடு செய்வதாகும்! (அதற்காக எல்லோரும் மவுன சாமியாராக மாறி விட வேண்டும் என்பது பொருளல்ல - அளவுக்கு அதிகமாகப் பேசுவோர் தேவைக்கு அதிகமாகப் பேசும் ‘தொணதொணப்பை’ நிறுத்துவது நல்லது. சிலர் தொலைபேசியையே இப்படிப்பட்ட பேச்சுகள் மூலம் ‘தொல்லைப் பேசியாகவும்’  ஆக்கி விடுகிறார்கள். அது தவிர்க்கப்படல் நன்று.
10. ‘சிறுநீர் கழிக்கும் உணர்வு வரும்போது, அதனை தவிர்த்தலோ, தள்ளிப் போடுதலோ கூடாது’
சில நேரங்களில், சில சூழ்நிலைகளில் இது பலருக்கும் ஏற்படும் அனுபவம் தான் மறுப்பதிற்கில்லை. அதிலும் வயதானவர்கள் சர்க்கரை நோயாளிகள் மூத்திரத்தை அடக்கக் கூடாது; அது விரும்பத்தக்கதல்ல. பலரால் அடக்க முடியாது அவதிக்குள்ளாகும் நிலையும் ஏற்படுவது உண்டு. இது சிறுநீரகத்தில் கற்களை (Stones) உருவாக்கக்கூடும், இதற்குக் காரணம் இப்படி மூத்திரத்தை அடக்குவது என்றுதான் பலரும் - மருத்துவர்கள்கூட - கூறக் கேட்டதுண்டு.
ஆனால், இப்போது மூளைப் பாதுகாப்பு சம்பந்தமாக வந்துள்ள எச்சரிக்கைகளில், இப்படி அடக்கி வைப்பது, தள்ளிப் போடுவது மற்ற உறுப்புகளைவிட மூளையை  - அதன் சக்தியளித்தலை - அதன் பணிகளை வெகுவாகப் பாதிக்கும் என்றும் பத்தாவது கட்டளையாகக் கூறப்பட்டுள்ளது!
சாதாரண நமது வெகு மக்கள் எளிய பழமொழியைக் கூறுவார்களே, “ஆத்திரத்தை அடக்கினாலும் அடக்கலாம் ஆனால் மூத்திரத்தை அடக்கக் கூடாது’ என்று அது எவ்வளவு நூற்றுக்கு நூறு பெரிய மருத்துவ உண்மை அடங்கியுள்ள அனுபவக் கருத்து பார்த்தீர்களா?
எனவே, நாம் அனைவரும் கவனத்துடன் இந்த 10 தவறுகளையும் தவிர்த்து நல்வாழ்வு வாழ முயலுவோமாக!
- கி.வீரமணி
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Wednesday, March 2, 2016

அன்று ஒரு நிர்பயா இன்று 30 நிர்பயாக்கள்

அரியானா, மாநிலம்  மிருதால் என்ற இடத்தில்
22-ஆம் தேதி நள்ளிரவு 30-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர்.  இக்கொடூர நிகழ்வினால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவிக்கலாம் என்று உதவி எண்கள் தரப்பட்டதும் டில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் தானே முன்வந்து விசாரணைக்குழுவின் முன்பு புகார் அளித்துள்ளார். இதன் படி அடையாளம் தெரியாத சிலர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அரியானாவில்  நடைபெறும் வன்முறையின் போது மாநிலம் முழுவதும் பல இடங்களில் பெண்கள் மீது பாலியல்வன்கொடுமைகள் நடத்தப்பட்டன.  இக்கொடூர நிகழ்வுகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் மாநில அரசின் அடியாட்கள், மற்றும் காவல்துறையினரின் மிரட்டல் காரணமாக வெளியே சொல்லப் பயந்து முடங்கிக் கிடக்கின்றனர். இந்த நிலையில் டில்லி-பானிபட் நெடுஞ்சாலையில் நடந்த   கூட்டுப்பாலியல் வன்கொடுமை ஆங்கிலப் பத்திரிகை ஒன்றின் மூலம் வெளிவந்தது, ஆனால் பாஜக முதல்வர் மனோகர்லால் கட்டாரும் மாநில காவல்துறையும் இப்படி ஒருசம்பவம் நடக்கவே இல்லை என்றும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுபாட்டில் உள்ளது என்று அறிக்கை விட்டுக்கொண்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் அரியானா-பஞ்சாப் உயர்நீதி மன்ற தலையீட்டின் காரணமாக மாநில அரசு விசாரணைக் குழு ஒன்றை அமைத்தது, இந்த விசாரணைக்குழு முன்பு முதல்முதலாக சம்பவம் நடந்த அன்று நானும் என்னைப்போன்ற பல பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினோம். மேலும் பாலியல்வன்கொடுமைக்கு ஆளக்கியவர்களை நான் அடையாளம் காண்பிப்பேன் என்றும் ஒருவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக விசாரணைக் குழுவின் தலைவர் ராஜசிறி ஞாயிறுன்று பத்திரிகையாளர் சந்திப்பில்  ‘கூட்டுப் பாலியல் நடந்ததாக கூறப்படும் நிகழ்வு குறித்தும், அது தொடர்பான விபரங்கள் குறித்தும் தெரிவிக்க சில எண்களைக் கொடுத்திருந்தோம்; சனிக்கிழமை இரவு டில்லியில் உள்ள நிராளா என்ற பகுதியில் இருந்து ஒருபெண் தான் இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டதாக கூறினார். உடனேஅவரிடம் ரகசிய இடத்தில் வைத்து வாக்குமூலம் பெற்றோம்; அதில் அவர் கூறியதாவது, அரித்துவாரில் புனித நீராடிவிட்டு நானும் எனது 14 வயது மகளும் டில்லி திரும்பிக்கொண்டு இருந்தோம்; பானிப்பட் நகரில் நாங்கள் வந்த பேருந்து வன்முறைக் கும்பாலால் தாக்கப்பட்டது, இதனை அடுத்து எங்களை நகரத்தின் புறநகரில் இறங்கச்சொல்லிவிட்டு நாங்கள் வந்த பேருந்தின் ஓட்டுனர் ஒடிவிட்டார். நானும் எங்களுடன் வந்த சில பெண்களும் டில்லி செல்ல ஒரு காரை ஏற்பாடு செய்ய முயற்சித்தோம். அப்போது வேன் ஓட்டுனர் ஒருவர் எங்களை டில்லி கொண்டுசென்று விடுவதாகக்கூறி பணமும் பெற்றுக்கொண்டார். அவர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்ற பிறகு வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடி விட்டார்.
ஏற்கனவே வயல்வெளிகளில் சில பெண்கள் ஓடுவது அவர்களை சிலர் துரத்திச் செல்வது கண்டு நாங்கள் அனைவரும் அச்சத்துடன் இருந்த போது எங்களையும் ஒரு கும்பல் வாகனத்தில் இருந்து பலவந்தமாக இழுத்துச் சென்றது; எனது கண் முன்னால் எனது 15 வயது மகளின் ஆடைகளை கிழித்து எறிந்தனர். நான் அவளை விட்டுவிடும்படி கெஞ்சினேன், என்னை கும்பல் வயல்வெளியில் அப்பால் தூக்கிச்சென்றனர். என்னை பாலியல் வன்கொடுமைச் செய்தவர்களை நான் நேரில் கண்டால் அடையாளம் காட்டுவேன் என்று கூறினார்.
அவரது மகளுக்கு என்ன ஆனது என்பதைக் கூற மறுத்துவிட்டார். இந்த நிலையில் இவ்விவகாரம் கூறித்து அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று பத்திரிகையாளர்கள் கேட்டபோது இவரது புகாரின் பேரில் அடையாளம் தெரியாத 7 பேர் மீது வழக்கு பதிவுசெய்துள்ளோம். என்று கூறினார்.
மேலும், இக்கொடூர நிகழ்வு தொடர்பாக இதுவரை 70க்கும் மேற்பட்ட பெண்கள், புகார் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் நேரில் வரப் பயப்படுகின்றனர். எழுத்து மூலமாக புகார் கொடுத்தால் மட்டுமே நாங்கள் நடவடிக்கை எடுக்கமுடியும், புகார் தெரிவிப்பவர்களுக்கு நாங்கள் அனைத்துவித பாதுகாப்பும் அளிக்கத்தயாராக உள்ளோம் என்று கூறினார் - விசாரணை குழுவின் தலைவர்.
ஞாயிறன்று மாலை இவ்விவகாரம் குறித்து தலைநகர் டில்லியில்  பாஜக பெண் தலைவர்களிடம் கேள்வி கேட்க முயன்றபோது யாரும் எந்த ஒரு பதிலும் கூறவில்லை, அதே நேரத்தில் மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார் இந்த விவகாரத்தை ஊடகங்கள் பெரிதாக்கி தனது ஆட்சிக்குக் களங்கம் விளைவிக்கப் பார்க்கிறது, இருப்பினும் பாதிக்கப்பட்ட மக்கள் நேரில் வந்து புகார் கொடுத்தால் தக்க நடவடிக்கை எடுப்போம் என்று கூறியுள்ளார்.
இப்படியொரு காட்டுவிலங்காண்டித்தனம் வேறு எங்கு நடந்திருக்கிறது? பிஜேபி ஆட்சியில் தான் நடந்திருக்கிறது. இந்திய தலைநகரமான டில்லியில் நிருபயா என்ற ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கடைசியில் மரணத்தைத் தழுவினார்.
இந்தியாவே கொந்தளித்து எழுந்தது. இப்பொழுது டில்லிக்கு அருகில் உள்ள அரியானாவில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் காட்டு விலங்காண்டித்தனமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரே - ஊடகங்கள் ஏன் குறட்டை விடுகின்றன? அரசியல் விமர்சக வித்தகர்கள் என்று தங்கள் முதுகை தாங்களே தட்டிக் கொள்வோர் ஏன் உறக்க நிலையில் உறைந்து கிடக் கின்றனர். மகளிர் ஆணையம் வாய் மூடிக் கிடப்பது ஏன்?
பாரதீய ஜனதா ஆட்சியாயிற்றே - பார்ப்பன ஜனதாவாயிற்றே பாதுகாக்க வேண்டுமே என்ற சுய ஜாதி வெறிதானே  இதற்குக் காரணம்?

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


ஏழை-எளிய நடுத்தர மக்கள் மகிழ இந்த பட்ஜெட்டில் ஒன்றுமில்லை

மறைமுகவரிகளைச் செலுத்தும் ஏழை-எளிய
நடுத்தர மக்கள்மகிழ இந்த பட்ஜெட்டில் ஒன்றுமில்லை
வேலை வாய்ப்புக்கும் வழி செய்யவில்லை     ற்ஒப்பனைகள் நிறைந்த பட்ஜெட் இது!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
மூன்றாவது மொழி என்றபெயரால் பிஜேபி அரசில் சமஸ்கிருதம் நுழைகிறது

மத்திய பிஜேபி அரசின் மூன்றாவது நிதி நிலை அறிக்கையில் (2016-2017) கல்வித்துறைக்கு ஒதுக்கீடு குறைவு, மறைமுக வரிகளைச் செலுத்தும் ஏழை - எளிய நடுத்தர மக்கள் மகிழ இந்த பட்ஜெட்டில் ஒன்றுமில்லை; ஒப்பனைகள் நிறைந்த பட்ஜெட் இது! என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
பிரதமர் மோடி தலைமையிலான அரசு - தேசிய ஜனநாயக கூட்டணி (ழிஞிகி) பதவியேற்றபின்பு, அவரது நிதியமைச்சரான அருண்ஜெட்லி சமர்ப்பிக்கும் மூன்றாவது நிதி நிலை அறிக்கையாகும் இது. (2016-2017 பொது பட்ஜெட்).
துவக்கத்தில் நிறைவேற்றப்பட்ட இடைக்கால பட்ஜெட்டைக் கணக்கில் எடுக்கத் தேவையில்லை.
இரண்டு நிதி நிலை அறிக்கைகள்தான் இவர்களால் உருவாக்கப்பட்டவை.
சென்ற நிதிநிலை அறிக்கை, மோடி  அரசு முழுக்க முழுக்க, ஒரு கார்ப்பரேட்டுக்களுக்கான, கார்ப்பரேட்டுகளால் வழி நடத்தப்படும் கார்ப்பரேட் அரசு என்ற தோற்றத்தையே  கூச்ச நாச்சமின்றி வெளிப்படுத்துவதாக அமைந்ததோடு, பாதுகாப்புக் கருவிகள் தயாரிப்பு உட்பட பலவும் தனியார் துறைக்கே தாரை வார்க்கப்பட்டன.
அதானிகளும், அம்பானிகளும்
வரவேற்கும் பட்ஜெட்
அதானிகளும், அம்பானிகளும், மிட்டல்களும், பஜாஜ், பிர்லா, டாடாக்களும் மகிழ்ச்சி அடைந்து வரவேற்ற பட்ஜெட்டாக அது அமைந்தது!
இப்போது கொணரப்பட்ட பட்ஜெட்டில் கிராமப்புற வளர்ச்சி, விவசாயிகளின் நலனுக்காக வேளாண்துறைக்கு மட்டும் 44,485 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீண்ட கால நீர்ப்பாசன திட்டத்துக்காக 20 ஆயிரம் கோடி நிதி, ரூ.6 ஆயிரம் கோடியில் நிலத்தடி நீர் மேம்பாட்டுத் திட்டம், ரூ.86,500 கோடியில் நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் 2 ஆயிரம் மண் வள விதை ஆய்வு மய்யங்களும் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 2022-இல் - அதாவது அடுத்த 5 ஆண்டிற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது!
இது அவர்களுக்கு நாக்கில் தேன் தடவுவதுகூட அல்ல; தேன் என்று காகிதத்தில் எழுதி, அதை நக்கிப் பார்த்து சுவையுங்கள் என்று கூறுவதுபோன்றதொரு வேடிக்கை!!
முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன்சிங் அவர்கள் இதுபற்றி ஒரு நிதர்சனமான உண்மையைக் கூறி இருக்கிறார்.
“நாட்டின் பொருளாதார வளர்ச்சி 14 சதவிகிதத்தை எட்டினால் ஒழிய இந்த இலக்கு - அதாவது விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பு ஆக்கவே முடியாது” என்று கணித்துள்ளார்.
ஜெட்லியின் பட்ஜெட் விவசாயிகளின் ‘காதில் பூ சுற்றுவது’ அல்லாமல் வேறு என்ன?
வரும் 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களை மனதிற் கொண்டே, கிராமப்புற விவசாயிகளின் வாக்கு வங்கி பா.ஜ.க. பக்கம் திரும்ப வேண்டும் என்ற விழைவின்மூலம் எடுத்துள்ள பா.ஜ.க.வின் புதிய ‘அவதாரமாகும்!’
கடன் சுமையால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை இன்னமும் குறைந்த பாடில்லை.
விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்ய எதுவும் இந்த பட்ஜெட்டில் கூறப்படவில்லை. விவசாயிகள் பெறும் குறைந்தபட்ச வருமானம் கூட - வட்டி கட்டுவதிலும் அசல் கட்ட முடியாது திணறும் நிலையிலும் உள்ளதை மாற்றாமல் எப்படி வருமானத்தை 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்க முடியும்?
நிதி நிலையைக் கேள்வி
குறியாக்கும் வாராக் கடன்
பல கோடிக்கணக்கில் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் ‘கார்ப்பரேட் திமிங்கலங்கள்’ கடனை வாங்கி திருப்பிக் கட்டாமலேயே வாராக் கடன்களால், பல தேசியமயமாக்கப்பட்ட பிரபல வங்கிகளின் நிதி நிலைமையே கேள்விக் குறியாகும் நிலையில் உள்ளது!
ஆனால் ஏழை விவசாயிகள் மாத்திரம், அரை வயிற்றுக் கஞ்சிகூட இல்லாமல் அவதியுறும் நிலையில் கடனைத் திருப்பித் தருவது என்பது எந்த அளவுக்கு சாத்தியமும் நியாயமும் ஆகும்?
உரமானியம் வங்கிக் கணக்கில் சேர்த்துஅளிக்கப்படும் என்பதுகூட, எந்த அளவு அவர்களுக்குப் பயன்படும்? ‘ஆன்லைன்’ மூலம் விவசாயப் பொருள் விற்பனை என்பது கிராமப்புற விவசாயிகளுக்கு எளிதா? இல்லையே!
வேலை வாய்ப்புக்கு ‘வேலை’ இல்லை
வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்தினைப் பெருக்கிடும் (Generation of jobs) பெரும் புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்பு ஏதும் இல்லை - பூதக் கண்ணாடி வைத்துத் தேடினாலும்கூட!
மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின்கீழ், இந்த பட்ஜெட்டில் ரூ.32,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறதே என்று உடனே சிலர் கேட்கக் கூடும்.
அதிலும் சுட்டிக் காட்டப்பட வேண்டிய மற்றொரு ரகசியம் ஒளிந்திருக்கிறது!
இத்திட்டம் - கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டம் தொடங்கப்பட்ட போது முந்தைய அரசால் ஒதுக்கப்பட்ட தொகை ரூ.40,000 கோடி
அதனைவிட இப்போது இத்தொகை ஒதுக்கீடு நியாயப்படி கூட்டப்பட்டிருக்க வேண்டாமா? இல்லையே!
ரூ.8,000 கோடி குறைவாகத்தானே ஒதுக்கப்பட்டிருக்கிறது?
கல்வித் துறைக்கு ஒதுக்கீடு குறைவு
அதுபோல பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி, 2015-2016ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.69 ஆயிரத்து 794 கோடி;  இந்த நிதி மக்கள் தொகைப் பெருக்கத்தில், அதிகமாக ஒதுக்கப்படுவதற்குப் பதிலாக ரூ.63 ஆயிரத்து 836 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது!
இதில் 62 நவோதயா பள்ளிகளை நாடு முழுவதும் துவக்கப் போகிறார்களாம்!
இது ஹிந்தித் திணிப்பு அல்ல, மூன்றாவது மொழியாக சமஸ்கிருத திணிப்புக்கு அடித்தளமிடும் திட்டமிட்ட செயல்,
மறைந்த கல்வி அறிஞர் நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள் நவோதயா பள்ளிகள் பற்றிக் குறிப்பிடுகையில்,
“சுற்றியும் குடிசைகள் நிறைந்த பகுதிக்கு நடுவே கட்டும் அரண்மனை போன்ற ஆடம்பரம் அது!’’ என்றார் பொருத்தமாக!
அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்
நாணயமாக மறைக்காமல் முறையாக வரி செலுத்தும் அரசு ஊழியர்கள் மற்றும் நிரந்தர வருவாய் உள்ள பிரிவினர் (Fixed income groups)  மக்களுக்கு, நடுத்தர வர்க்கத்தினருக்கு எந்தவித புதிய சலுகையும் - இல்லை.
எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்; வீடு வாங்குவோருக்கு உதவி என்பதும், சிறு விதிவிலக்கு, ஒட்டகத்தின்மீது
வைக்கப்பட்ட சிறு வைக்கோலை எடுத்த கதை போன்ற ஆறுதலேயாகும்!
நான்  பிரதமரானதும்  கறுப்புப் பணத்தை 60 நாட்களில்,  வெளியே கொண்டு வருவேன், ஒவ்வொருவருக்கும் ரூபாய் 15 லட்சம் அவர்கள் வீடு தேடி வரும் என்று வாக்குறுதியை அள்ளி வீசினார் மோடி.
பதவிக்கு வந்து 2 ஆண்டுகள் ஓடிய நிலையில், கறுப்புப் பணம் வெளி நாடுகளிலிருந்து வந்து குவிந்ததா? குதித்ததா?
உள்நாட்டுக் கறுப்புப் பணத்தைக் கொண்டு வரக்கூட இயலாத நிலையில், மயிலே மயிலே இறகுபோடு, உனக்கு இந்தந்த சலுகை, என்று கெஞ்சியும் கொஞ்சியும்தானே, கறுப்பை ஓரளவு அரசு கஜானாவுக்குள் கொண்டு வரும் முயற்சிகள் உள்ளன?
மறைமுக வரிகளால் ஏழைகளுக்குச் சுமை
மறைமுக வரிகளைச் செலுத்தும் ஏழை  - எளிய நடுத்தர மக்கள் மகிழ  இந்த பட்ஜெட்டில் ஒன்றுமில்லை.
பாதுகாப்புத் துறை ((Defence) ) பற்றிய ஏனோ தெளிவாக குறிப்பிடாத நிலை என்ற  கேள்வி.
ஏழாவது நிதிக் கமிஷன் பரிந்துரையை  செயற்படுத் தினால் வருமானம் கூடும் என்றாலும் பழைய வரி விலக்குதான் என்பது நிரந்தர வருமானமுள்ளவர்களை பாதிக்குமா? இல்லை.
பிரதமர் மோடி ‘பாசா’னாரா?
பிரதமர் மோடி தேர்வில் உண்மையாகவே தேறி விட்டார் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஏதோ “கிரேஸ் மார்க்’’ கருணை அடிப்படையில் போடப்பட்டு, 35 மார்க்கில் பாசாகும் நிலையும்கூட இதில் சந்தேகம்தான்!
திட்டங்களின் வெற்றியைப் பொறுத்தே அந்தப் பாஸ்கூட உறுதி செய்யக் கூடும்!!
தோற்றம் வேறு - நிஜ பிம்பம் வேறு!
பொதுவாக இதன் தோற்றம் வேறு, நிஜ பிம்பம் வேறு, என்ற நிலைதான்!
ஒப்பனைகள் நிறைந்த பட்ஜெட் இது!
புறத்தோற்றத்திற்கும், அக நிலைக்கும் ஆழமான வேறுபாடு உண்டு!


கி.வீரமணி  
தலைவர்,  திராவிடர் கழகம்


1.3.2016
சென்னை

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

மூளையை பாதுகாக்க தவிர்க்க வேண்டிய 10 தவறுகள் (1)


நமது மூளையின் சக்தியும், உழைப்பும் மிக மிக முக்கியமானதல்லவா?
மூளையின் இரத்த ஓட்டம் சரியாக இருந்தால் பல்வேறு பிரச்சினைகள், நோய்கள்கூட நம்மை எளிதில் அண்டாது விரட்டி விடலாம்!
அது எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் வண்ணம் பார்த்துக் கொள்வது, நமது உடல் நலத்திற்கு மிகவும் உதவிடும் அரண் ஆகும்!
எந்த ஆபத்து நம் உடலின் எப்பகுதிக்கு வருவதாக இருப்பினும் முதலில் அபாய மணி ஒலியை அடித்து நம்மை எச்சரிக்கை செய்வது அதுதானே!
அது மட்டுமா பாலியல் உணர்வுக்கும் அங்கிருந்துதான் ஆணையும், ஆயத் தமும் பிறக்கிறது என்பதை பல பாலியல் மருத்துவர்களும் கூறுகின்றனர்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மூளையைச் சரிவர இயங்க விடா மல் பாதிக்கச் செய்யக் கூடிய - நாம் கவனமாக, தவிர்க்க வேண்டிய 10 செய்திகளை, இணையத்தின் வழி, நமது அருமை மருத்துவ நிபுணர் டாக்டர் எம்.எஸ். இராமச்சந்திரன் அவர்கள் அனுப்பியுள்ளார்.
(இதுபோன்ற பல்வேறு பயனுள்ள சுவையுள்ள செய்திகளை நம்மைப் போன்ற நண்பர்கள் வட்டத்திற்கு தவறாது அனுப்பி மகிழ்பவர் அவர்!)
அந்த 10 செய்திகள் இதோ: படிப்ப தோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள். நடை முறைப்படுத்தி, நலம் காப்பதில் தனி கவனம் செலுத்துங்கள் நண்பர்களே.
1. முதலாவது தவறு
காலைச் சிற்றுண்டியைப் புறக்கணிப்பது அல்லது தவிர்ப்பது.
நமது வீட்டிலுள்ள பல வயது வந்த மாணவர்கள் - பிள்ளைகள்கூட இதில் - தவிர்ப் பதில் குறியாய் இருக்கின்றனர்.
பள்ளி, கல்லூரி செல்ல நேரமாகி விட்டது என்று அவசர அவசரமாக “அரக்கப் பறக்க” ஓடுவதினால், காலைச் சிற்றுண்டியை அலட்சியப்படுத்தி, பட்டினியோடு வகுப்பிற்கு அல்லது வேலைக்குச் செல்லுவது, மூளையை கெடச் செய்யும், (ரத்த  ஓட்டத்தைக் குறைத்து சோர்வைப் பெருக்கச் செய்யும் - அதனால் கவனக் குறைவும், குறிப்பாக கவனக் குவிப்பைச் (சிஷீஸீநீமீஸீtக்ஷீணீtமீ) செய்ய இயலாமல் போய் விடும்.
ஆங்கிலத்தில் ‘ஙிக்ஷீமீணீளீ திணீst’ என்பது சரியான காரணப் பெயர் ஆகும். இரவு உணவு முடித்து பட்டினியாக இருந்தால், வயிற்றின் செரிமான உறுப்புக்கள் உணவுக்காக ஏங்கும் நிலையும் திரவம் சுரக்கும் தன்மையும் வயிற்றின் பல பாகங்களில் நாளா வட்டத்தில் புண்கள் - ‘அல்சர்’கள் ஏற்படவும், சோர்வு ஏற்படவும் வழி வரும்.
மேலை நாட்டவர் கணக்குப்படி, காலைச் சிற்றுண்டி போதிய அளவில் எடுத்துக் கொள்வது பல வகையிலும் சக்தியைக் கொடுக்கக் கூடியதாகும்.
2. அதற்காக உணவை எப்போதும் அளவுக்கு மீறிச் சாப்பிடுவதும் கூடாது கூடவே கூடாது!
எவ்வளவு பெரிய விருந்து, சுவையுள்ள உணவு வகைகள் என்றாலும்  ஒரு 25 விழுக்காடு - இல்லை 10 முதல் 15 விழுக் காடு இடத்தையாவது காலி வைத்து சாப்பாட்டை முடிப்பது மிக நல்ல வாழ் வுக்கு உதவக் கூடியதாகும்.
இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்ற உணர்வு இருக்கும்போதே, கட்டாயமாக திணிக்காமல் உடனே - சபலங்களை ஒதுக்கி வைத்துவிட்டு - எழுந்துவிடுதல் மிக அருமையான முறையாகும்!
‘மீதூண் விரும்பேல்’ என்ற மூதுரைதான் எவ்வளவு அருமையான ஒன்று. அதிகம் சாப்பிடுவது உடலை மட்டும் கெடுக்காமல், மூளையையும் கெடுக்கும் என்பது இதன் மூலம் பெறப் படும் மற்றொரு எச்சரிக்கையாகும்.
3. இரவில் நேரங் கடந்து தூங்குவது மிகப் பெரிய கேடு ஆகும்!
உடலுக்கு உணவு எவ்வளவு முக்கி யமோ அவ்வளவு முக்கியம் தூக்கமும் ஆகும்! உரிய நேரத்தில் தூங்கும் பழக்கம், உரிய நேரத்தில் விழிக்கும் பழக்கம், நம் ஆயுளை வளர்க்கும் வழி முறைகளில் ஒன்று!
உணவு, தூக்கம், போதிய ஓய்வு, (தூக்கம் என்பதன் மூலம் ஓய்வு கிடைக்கிறது). வெகு நேரங் கழித்து படுக்கைக்குச் செல்லுவது விரும்பத்தக்கதல்ல. இளமையில் இது ஒரு பழக்கமாகி விட்டால், முதுமையில் அதுவே வழக்கமாகி விடக் கூடும். எனவே இதிலும் கவனம் செலுத்துவது மிக மிக முக்கியம்.
4. நம் உடலுக்கு சர்க்கரை தேவைதான். எதுவும் அளவோடு இருத்தல் எல்லா விதிகளிலும் தலையாய விதியாகும்.
பலருக்கு ‘மீதூண் விரும்பல்’ காரண மாகவும், இனிப்புத் தின்பண்டங்கள், நொறுக்குத் தீனியை கண்ட கண்ட நேரத்தில் எல்லாம் சாப்பிடுவது, போன்ற பலவும் - எல்லா மாவுச் சத்துக்களும் கார்போ ஹைட்ரேட்ஸ் (Carbohydrates)
சர்க்கரையாக மாறி நமது உடலில் சேரு கின்றன. ஆகவே இதில் எச்சரிக்கை தேவை.
நிறைய சர்க்கரையை உருவாக்கிடும் உணவுகள் எவையாயினும் (இனிப்பு மட்டுமே என்று எண்ணாதீர்!) அது நமது கணையத்தை மட்டும் பாதிப்பதில்லை; மூளையின் ரத்த ஓட்டத்தையும் பாதிக்கிறது எச்சரிக்கை, என்று இதன் மூலம் மருத்துவ அறிஞர்கள் கூறுகின்றனர்.
- கி.வீரமணி
(தொடரும்)

Tuesday, March 1, 2016

பிஜேபிக்கு வந்த திடீர் தேசியக் கொடி பற்று!

பாரதீய ஜனதாவுக்கும் ஆர்.எஸ்.எசுக்கும் திடீரென்று தேசியக் கொடியின் மீதான பற்று சும்மா பீறிட்டுக் கிளம்பி விட்டது; அவர்கள் சொல்லுவதை நாம் நம்பத்தான் வேண்டும்; இல்லாவிட்டால் நம்மீது தேச விரோத குற்றப் பத்திரிக்கையைப் படிக்க ஆரம் பித்து, விரும்பினால் சிறையிலும் தள்ளி விடுவார்கள்.
நாடு முழுவதும் உள்ள 46 மத்திய பல்கலைக் கழகங்களில் 207 அடி உயரத்துக்குக் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டு ஆண்டுமுழுவதும் மூவண்ணக் கொடி பறக்க விடப்பட வேண்டும் என்று மத்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் நடத்திய கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டு, தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
அய்தராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை மரணத்தைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் அமைச்சரின் கூட்டம் நடைபெற்றுள்ளது.
முதலாவதாக டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட உள்ளதாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
Òஅனைத்து மத்திய பல்கலைக்கழகங்களின் மய்யப்பகுதிகளிலும்  தேசியக் கொடி கம்பீரமாக, பெருமிதத்துடன் பறக்க விடப்படும்’’ என்று துணை வேந்தர்களுடனான அமைச்சரின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த ஆர்.பி.எஸ். சிங் கூறும்போது, “தேசியம் என்று கூறும்போது வெறுமனே கொடியை ஏற்றுவது மற்றும் வந்தே மாதரம் பாடுவது என்று பொருள் அல்ல. அரசமைப்பின்மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை உணர்த்துவதாக இருக்கவேண்டும். ஜனநாயக முறையில் உள்ள அரசின் அங்கங்களை மதிப்பதாக இருக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்!
சிபிஅய்(எம்) கட்சியைச்சேர்ந்த பிருந்தா காரத்தும் அரசின் இம்முடிவை குறைகூறியுள்ளார்.
Òஇதுநாள்வரையிலும் தேசியக் கொடி என்பதை தேவையற்றதாக பார்த்து வந்தவர்கள், நாடு விடுதலை அடைந்த நேரத்தில் தேசியக் கொடியை நிராகரித்த சங் பரிவார் அமைப்பைச் சார்ந்தவர்கள், தேசியக்கொடிக்குப் பதிலாக பக்வா ஜண்டா (ஆர்.எஸ்.எஸ். காவிக்கொடி)வை ஏற்ற விரும்பியவர்கள்’’ என்று கருத்துக் கூறியுள்ளார்.
இப்பொழுது மூவண்ண தேசியக் கொடியை ஏற்றச் சொல்லுவானேன் என்ற நியாயமான வினாவை எழுப்பியுள்ளார்.
பிருந்தாகாரத் குறிப்பிட்டது ஏதோ ஏனோதானோ என்ற எதிர்ப்புக் கருத்தல்ல -  அவர் கூறியதற்கு ஆதாரங்கள் உண்டு.
காந்தியார் கொலையைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. அகண்ட பாரதம் அமைந்த பிறகு காவிக்கொடியை, தேசியக்கொடியாக எங்கள் அலுவலகத்தில் ஏற்றுவோம் என்று ஆர்.எஸ்.எஸ். தீர்மானம் நிறைவேற்றியது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மீதான தடையை நீக்கவேண்டுமென்றால் நீங்கள் மூவண்ணக்கொடியை தேசியக்கொடியாக ஏற்கவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் அன்றைய உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல் கூறினார்.
ஆனால் அதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நிராகரித்தது.  2001 ஆம் ஆண்டு குடியரசுதினத்தில் நாக்பூரில் உள்ள தலைமையகத்தில் இளைஞர் தேசிய அமைப்பைச் சேர்ந்த சிலர் ஊர்வலமாகச் சென்று ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தின் முன்பு தேசியக்கொடியை ஏற்றினர்.
இதன் காரணமாக அந்த அமைப்பைச் சேர்ந்த பாபா மென்தே, ரமேஷ் கலாம்பே, திலீப் சட்டானி ஆகியோர்மீது அலு வலக ஊழியர்களை கொலைசெய்ய முயற்சித்தது, அலுவலகத்தில் உள்ள பழைமைவாய்ந்த பொருட் களை திருட வந்தது மற்றும் அலுவலக வளாகத்தை மனிதக் கழிவுகளால் அசிங்கம் செய்தது என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை அவர்கள் மீது சுமத்தி, நீதிமன்றத்தில் வழக்காடி 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை வாங்கிக்கொடுத்தனர். ஆர். எஸ்.எஸ் அமைப்பினர் இதுபோன்ற வீண் பழிகளை யும், அபாண்டங்களையும் சுமத்துவதில் கை தேர்ந்தவர்களே!
2002 ஆம் ஆண்டில் பாஜக ஆட்சி அமைந்ததும் இனி தங்கள் ஆளுமை என்பதற்கு அடையாளமாக சுதந்திர தினத்தன்று மட்டும் ஆர்.எஸ்.எஸ்., அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
அவர்களின் உண்மை வரலாறு இவ்வாறு இருக்க மூவண்ண தேசியக் கொடியை 207 அடி உயரத்தில் ஏற்ற வேண்டும் என்று கூறுவது எல்லாம் பச்சையான சந்தர்ப்பவாதமே!
கொடியில் அல்ல - நாட்டுணர்வு - என்பது எதை நோக்கிப் பயணிக்கிறது என்பதுதான் முக்கியமானது. மிக மிக முக்கியமானது, மக்களை மதவாரியாகக் கூறுபோடுவதுதான் நாட்டுக்குச் செய்யும் தொண்டா? நான் இந்து நேஷனலிஸ்ட் என்று சொன்னவரின் தேசியம் நாட்டை மக்களைப் பிளவுபடுத்த தானே பயன்படும்?

மூன்றாவது மொழி என்றபெயரால் பிஜேபி அரசில் சமஸ்கிருதம் நுழைகிறது

 மூன்றாவது மொழி என்றபெயரால் பிஜேபி அரசில் சமஸ்கிருதம் நுழைகிறது
நயவஞ்சகமாகத் திணிக்க முயற்சி - எச்சரிக்கை! எச்சரிக்கை!!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
http://viduthalai.in/images/stories/dailymagazine/2015/dec/19/veeramanik.jpg

மூன்றாவது மொழி - விருப்பப்பட்டவர் படிக்கலாம் என்று தந்திரமாகச் சொல்லி சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சியில் மத்திய பிஜேபி அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை ஈடுபட்டு வருகிறது - இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - அந்தச் சதியை முறியடிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை  வருமாறு:
சமஸ்கிருதத்தை எப்படியும் திணித்து, இந்தியாவின் ஆட்சிமொழியாகவே - அது செத்த மொழி - மக்களால் பேசப்படாத மொழி என்ற யதார்த்த நிலை இருந்தபோதிலும் எப்படியும் நிறைவேற்றி விட வேண்டும் என்ற இந்துத்துவ அஜெண்டாவை நிலை நிறுத்த, மத்திய அரசின் கல்வித் துறை (மனிதவள மேம்பாட்டுத் துறை மூலம்) தொடர் முயற்சிகளை சளைக்காமல் - ஆனால் தந்திரமாகச் செய்து வருகின்றனர்.
பார்ப்பன கலாச்சார திணிப்பு!
பன் மதங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்களைக் கொண்ட நமது இந்திய நாட்டின்,
எம்மதம் ஹிந்துமதம் (இந்துத்துவா).
எம்மொழி சமஸ்கிருதம்
எம்கலாச்சாரம் பார்ப்பனீய (சமஸ்கிருத) கலாச்சாரம்
இவைதான் இருக்க வேண்டும்.
மற்ற சிறுபான்மையோர் எம் மதத்தையும் கடவுளையும் ஏற்றால்தான் அவர்களுக்கு இங்கே இடம் உண்டு. இல்லையேல் அவர்கள் வேறு வழிதான் பார்க்க வேண்டும்’ என்று ஆர்.எஸ்.எஸ். தத்துவக் கர்த்தா கோல்வால்கர் கூறியுள்ளதை, மெல்ல மெல்லக்கூட இல்லாமல், அவசர அவசரமாக மத்திய ஆட்சி தம் வசம் என்ற வாய்ப்பினைப் பயன்படுத்தி செய்துவிட முயற்சிக்கின்றனர். (ஆதாரம் “ஞான கங்கை”, நமது தேசிய பாரம்பரியத் தன்மை நூல்கள் - ஆர்.எஸ்.கோல்வால்கர்)
யார்  இந்த கோபால்சாமி அய்யங்கார்?
இதற்கு இப்போது தேசியப் போர்வை போர்த்தப்பட்டு, முக்காட்டுடன் உலா வருகிறது! ஹிந்திகூட அல்ல நேரிடையாகவே சமஸ்கிருதம் மூன்றாவது மொழியாக, மும்மொழிக் கொள்கைப்படி கல்வி நிலையங்களில் சொல்லிக் கொடுக்கப்பட வேண்டும் என்று கோபால்சாமி அய்யங்கார் தலைமையில், அமைந்த கமிட்டி பரிந்துரை செய்துள்ளதாம்!
இந்த தமிழ்நாட்டுப் (நீடாமங்கலம்) பார்ப்பனர் வடமாநிலத்தில் தலைமை செயலாளர், பிறகு மத்திய உள்துறை செயலாளர், பிறகு ஓய்வுக்குப் பின்னரும் தேர்தல் தலைமைக் கமிஷனர் எல்லாப் பதவிகளையும் பார்த்து விட்டு, இப்போது திருப்பதியில் மத்திய அரசால் நடத்தப் பெறும் ‘ராஷ்டிரிய சமஸ்கிருத வித்தியா பீடத்தின் ‘வேந்தராக’ - இல்லை - ‘அத்தியட்சராக’  (Chancellor) உள்ள நிலையில், அவர் தலைமையிலான கமிட்டிதான் இப்படிப் பரிந்துரை செய்துள்ளது!
தந்திரம் - சூழ்ச்சி - இவையே அவாள் முறை
நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைத்த கதைபோலத் தான் இது!
இவர் தந்திரமானதொரு பதிலைக் கூறி எதிர்ப்புகளை சமாளிக்க முயலுகிறார்!
எப்போதும் தந்திரம், சூழ்ச்சி தானே அவாள் முறை.
“சமஸ்கிருதத்தைக் கட்டாயம் ஆக்க எங்கள் கமிட்டி பரிந்துரைக்கவில்லை. மூன்றாவது மொழியாகப் படிக்க வைக்க வேண்டும் என்றுதான் கூறியுள்ளோம்.
அரசியல் சட்டத்தின் 8ஆவது அட்டவணை மொழிகளில் எதனை வேண்டுமானாலும், தேர்வு செய்யலாம் என்று கூறியுள்ளார்! (‘ஹிந்து’ 27.2.2016).
மேலெழுந்த வாரியாகப் பார்க்கும் எவருக்கும் இது சரிதானே என்று தோன்றக் கூடும். ஆனால், இதைச் சற்று ஆழமாக, நுணுகி ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
மற்ற மொழிகள் கற்க வாய்ப்பு உண்டா?
மற்ற மொழிகளுக்கு மற்ற மாநிலங்களில் அல்லது மத்திய பள்ளி கல்வி நிறுவனங்களில் சொல்லிக் கொடுக்க ஆசிரியர்கள் உண்டா?
எம் மொழியான செம்மொழி தமிழை இந்தியாவின் எல்லா மாநில - மத்தியக் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் களை நியமித்துச் சொல்லிக் கொடுக்கும் ஏற்பாடு உண்டா?
உருது பேசும் வட மாநிலங்களில் குறிப்பாக உ.பி. போன்றவைகளில்கூட, ஹிந்துஸ்தான் - உருது - அறவே புறக்கணிக்கப்பட்டு, அந்த இடத்தைத்தானே ஹிந்தி முன்பு பிடித்துக் கொண்டது?
இந்தக் குமுறல் அங்கே இன்னமும் உண்டே! அதுபோல வடகிழக்கு மாநிலங்களிலும் மேற்கு வங்கம், பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் ஹிந்திக்கு எதிர்ப்பு என்பது நீறு பூத்த நெருப்பாக அவ்வப்போது எரிகிறதே! இந்த நிலையில், பொறியை அணைக்கத் தீவட்டியைப் பயன்படுத்தி பெட்ரோலை ஊற்றிய கதைபோல “செத்த மொழி” சமஸ்கிருதத்தை மறைமுகமாகத்திணிப்பது ஏன்?
ராஜாஜியே தோற்ற இடம் இது
‘உடம்பெல்லாம் மூளை’ என்று பார்ப்பனர்களால் வர்ணிக்கப்பட்ட திரு. இராஜகோபாலாச்சாரியார்  (ராஜாஜி)அவர்களால்கூட, ஹிந்தியைப் புகுத்த முடியாது, இறுதியில் அவரே பெரியார் வழிக்கு வந்து,  ‘Hindi Never; English Ever’ ’ என்ற முழக்கத்தைக் கொடுத்தாரே!
நாடு மறந்து விட்டதா? பார்ப்பன வல்லாண்மையின் வெளிப்பாடுதான் இந்த சமஸ்கிருத மொழித் திணிப்பு.
அதில் அறிவியல், பல நூல்கள் உள்ளனவாம்!
மற்ற மொழிகளில் இல்லையாம்! என்னே விசித்திர வாதம்!
எச்சரிக்கை! எச்சரிக்கை!!
கல்யாணம், கருமாதி, கோயில் பூஜை புனஸ்காரம் தவிர, புதிதாக தமிழ்நாட்டில் புகுந்துள்ள யாகங்களைத் தவிர,  இம்மொழிக்கும் இதனை வைத்துப் பிழைப்போருக்கும், எங்கேயும் வாய்ப்போ, புழக்கமோ இல்லாதபோது, இப்படி ஒரு புதுக்கரடி புகுவானேன்?
நயவஞ்சகமாகத் திணிக்கும் முயற்சியை முறியடிப்போம்.
எச்சரிக்கை! எச்சரிக்கை!!
கி.வீரமணி  
தலைவர்
திராவிடர் கழகம்


29.2.2016
சென்னை

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...