Friday, January 4, 2013

மாபெரும் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் - திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி எச்சரிக்கை அறிக்கை !


உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அரசிதழில் தீர்ப்பை வெளியிடவில்லை என்பது நொண்டிச் சாக்கே!
இயல்பான சட்டக் கடமையைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏன்?
மாபெரும் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் - எச்சரிக்கை!
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் (கெசட்டில்) வெளியிடுவது மத்திய அரசின் இயல்பான கடமையாகும். அதை வெளியிடக் கூட தயங்கும் நிலையில், மாபெரும் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு - இறுதித் தீர்ப்பு வெளியானது 2007 ஆம் ஆண்டு!
காவிரி நதிநீர்ப் பங்கீடு சம்பந்தமாக நடுவர் மன்றம் அமைக்கும் தமிழ்நாட்டின் நீண்ட காலக் கோரிக்கையை நிறைவேற்றியவர் - மாநிலத்தில் தி.மு.க. ஆட்சியின்போது - மத்தியில் சமூகநீதிக்காவலர் வி.பி. சிங் அவர்கள்.
அதன்படி இடைக்கால நிவாரணமாக அந்நடுவர் மன்றம் தமிழ்நாட்டிற்கு கருநாடக அரசு ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. தண்ணீரை வழங்கவேண்டுமென்று ஆணை பிறப்பித்தது!
தொடக்கத்திலிருந்தே, கருநாடக அரசு இதன்படி, ஒரு சில ஆண்டுகள் தவிர, முழுமையாக நிறைவேற்றி தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் வழங்கவில்லை.
கருநாடகம் எந்தச் சூழலில் தண்ணீரைத் திறந்துவிடும் தெரியுமா?
வறட்சி ஏற்படும் காலத்தில் பங்கீடு எப்படி என்ற Distress Formula- வையும் பின்பற்றியும் நடந்துகொள்ளவே இல்லை.
நடுவர் மன்றத்தையே ஒப்புக்கொள்ளாமல் ஒவ்வொரு முறையும், அவசரச் சட்டம், பிறகு தனிச் சட்டம், வழக்கு, தாவா என்றெல்லாம் திட்டமிட்டே தண்ணீரைத் தர மறுத்தே வந்துள்ளது.
கிருஷ்ண ராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) மற்றும் கபினி போன்ற அணைகளில் குடகு பகுதியில் ஏராளம் மழை பெய்து, கருநாடகத்தில் உபரி மழைநீர் வெள்ளத்தைத் தடுக்க முடியாது என்ற நிர்பந்த நிலையில் மட்டுமே அவர்களது அணைகளைக் காப்பாற்றும் பொருட்டே, தமிழ்நாட்டுக்குத் தண்ணீரைத் திறந்துவிடுவது சில ஆண்டுகளில் நடந்தது!
இந்நிலையில், 16 ஆண்டுகள் கழித்து 2007 இல் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தரப்பட்டது. அதன்படி, 419 டி.எம்.சி. (தமிழ்நாடு கேட்டது 562 டி.எம்.சி.) கருநாடகாவிற்கு 270 டி.எம்.சி. (அது கேட்டது 465 டி.எம்.சி.), கேரளாவிற்கு 30 டி.எம்.சி., புதுவைக்கு 7 டி.எம்.சி., சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு 10 டி.எம்.சி. தனி ஒதுக்கீடாக (Reserved) வைக்கப்பட்டது.
128 முறை பேச்சுவார்த்தை
முன்பு பேச்சுவார்த்தைகள் இரு மாநிலங்களுக்கிடையே 127 முறை; சில வாரங்களுக்கு முன் ஒரு தடவை ஆக, சுமார் 128 தடவை நடைபெற்றும், உருப்படியான பலன் ஏதும் ஏற்படவில்லையே.
உச்சநீதிமன்றம், பிரதமர் தலைமையில் உள்ள காவிரி நதி நீர் ஆணைய ஆணைப்படிகூட விடப்படும் நீரின் அளவால் தமிழ்நாட்டிற்குக் குறுவை சாகுபடியை தமிழ்நாட்டில் மூன்றில் ஒரு பகுதி நிலங்களில் மட்டுமே நடைபெறக்கூடிய நிலையில், 2 பகுதி நடைபெறாமலும், சம்பா பயிர் நட்டும் காய்ந்து, கருகி வாடியதாலும், மனமுடைந்த காவிரிப் பாசன விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை 12-க்குமேல் பெருகியும் வந்துள்ள நிலையில்கூட, மேற்சொன்ன உச்சநீதிமன்ற ஆணைக்கும் கட்டுப்படாமல், பிரதமர் தலைமையில் உள்ள காவிரி நதிநீர் ஆணைய உத்தரவுக்குக் கட்டுப்படாமல் தண்ணீர் தர மறுத்து அடம் பிடிக்கிறது கருநாடகம்.
கருநாடகத்தில் அனைத்துக் கட்சிகளும் ஓரணியில்!
சற்றும் மனிதாபிமானம் அற்று, ஒரு சொட்டுத் தண்ணீர் கூட தமிழ்நாட்டிற்குத் தர இயலாது என்று அடம் பிடிக்கிறது கருநாடக அரசு. (வாக்கு வங்கி அரசியல் முழு முதற்காரணம்) அங்கு அனைத்துக் கட்சிகளும் ஒரே அணி; ஒரே குரல் அங்கே! அந்த முதலமைச்சர் 10 முறை அனைத்துக் கட்சிக் கூட்டம்; பிரதமரைச் சந்திக்க சர்வக் கட்சிக் குழு என்ற நடைமுறை கருநாடகத்தில்.
தமிழ்நாட்டில், அது அறவே இல்லை; எல்லாம் முதலமைச்சர் நினைப்பதுதான்! எத்தனைக் கட்சிகள் கோரிக்கை வைத்தும், இப்பிரச்சினையில் அரசு அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமுறை கூட கூட்டப்படவே இல்லை.
இங்கும் எதிர்க்கட்சிகள் மீதும், ஆளுங்கட்சியும், மற்றவர்களும் பரஸ்பர குற்றச்சாற்று வைத்து அரசியல் நடக்கும் அவலமான நிலை!
இந்நிலையில், இறுதித் தீர்ப்பு (நடுவர் மன்றத்தின்) வந்த 90 நாள்களில் மத்திய அரசின் கெசட்டில் வெளியிட்டிருக்கவேண்டிய நடுவர் மன்றத் தீர்ப்பு - 5 ஆண்டுகளாகியும் மத்திய அரசால் வெளியிடப்படாத வேதனையான நிலை!
அரசிதழில் வெளியிட்டால்...
இப்படி வெளியிட்டால்தான் அத்தீர்ப்புக்கு சட்ட வலிமை ஏற்படும்; அப்படி வெளியிட்ட பிறகு நடுவர் மன்றம் முடிந்துவிட்டதாகவும், அதன்படி பிரதமர் தலைமையில் அமைந்த காவிரி நதிநீர் ஆணையமும் தானே முடிவுக்கு வந்ததாகக் கருதப்படும்.
உடனடியாக தீர்ப்பு செயல்படுத்தப்படவேண்டியதாகி விடும்.
இதனைக் கருநாடக அரசு வேண்டுமென்றே எதிர்க்கிறது.
அதனை மத்திய அரசு கெசட்டில் வெளியிடவேண்டும் என்பது சட்டப்படி கடமை. சலுகையோ, விருப்பத்தையொட்டியதோ அல்ல; கட்டாயம் வெளியிடப்படவேண்டியதாகும்.
சில வாரங்கள் முன்பு உச்சநீதிமன்றமே உரத்த குரலில் மத்திய அரசு வழக்குரைஞரைப் பார்த்து, ஏன் இன்னும் தீர்ப்பை வெளியிடாமல் உள்ளீர்கள் என்று கேட்டு, அதற்கு விரைவில் வெளியிடுவோம் என்று கூறி பல வாரங்களுக்குமேல் ஓடிவிட்டன!
மத்திய அரசின் போக்கு...
இப்போதும் மத்திய அரசின் போக்கு பாம்புக்குத் தலை; மீனுக்கு வால் காட்டுவது மாதிரி தட்டிக் கழிக்கும் வகையில், சில செய்திகளை சட்ட அமைச்சகம் பரிசீலிக்கிறது என்று கசிய விடுவது, தமிழ்நாட்டு விவசாயிகளுக்கும், சட்டக் கடமைக்கும், உச்சநீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதிக்கும் விரோதமானது  - கண்டிப்பாக விரோதமானதே!
உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது நொண்டிச்சாக்கு - அடிப்படையற்றது. (அந்த உச்சநீதிமன்றம்தானே கெசட்டில் வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது).
ஸ்டே ஏதாவது உள்ளதா? உச்சநீதிமன்றம் இதை வெளியிடத் தடையா வழங்கியுள்ளது? இல்லையே! பின் ஏன் இந்த செப்படி வித்தை, ஜாலங்கள்? உடனடியாக வெளியிடாவிட்டால் பெரும் போராட்டம் வெடிப்பது - மக்கள் கிளர்ச்சியாக வெடிப்பது தவிர்க்க இயலாது!
மத்திய அரசின் இயல்பான சட்டக் கடமையைச் செய்வதில்கூட, இப்படி ஓர் அரசின் அழுத்தமா தேவை?
வெட்கம்! மகாவெட்கம்!! வேதனை!!!

- கி. வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
3.1.2013


தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Wednesday, January 2, 2013

கைலி கட்டும் ரெங்கநாதர்

2013 புத்தாண்டு பிறந்தது. கோயில்களில் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு என்று செய்திகள் வெளி வந்தன.
சங்கராச்சாரியார்கள், இந்து முன்னணிக்காரர்கள் வறட்டுத் தவளையாய்க் கத்திப் பார்த்தனர். ஆங்கிலப் புத்தாண்டு நம் புத்தாண்டல்ல; அது கிறித்துவர்களுக்கானது.
இந்துக் கோயில்கள் நடை சாத்தப்பட்ட பிறகு நள்ளிரவுகளில் திறந்து வைக்கக் கூடாது; அது ஆகம விரோதம் - சாஸ்திர விரோதம் என்று கதறிப் பார்த்தனர்.
வியாபாரம் ஆயிற்றே! இந்துக் கோயில்களை அன்று திறந்து வைத்தால் நன்கு போனியாகுமே, விட்டு விடுவார்களா?
மைலாப்பூர் முண்டகக் கண்ணியம்மனுக்கு, அதி காலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜையும் நடைபெற்றதாம்.
பூங்கா நகர் ஏகாம்ப ரேஸ்வரர் கோயில், பெசண்ட் நகர் அஷ்ட லக்குமி கோயில்களிலும் சென்னை வடபழனி முருகன் கோயிலில் விடியற்காலை 3 மணிக்கும், தியாகராயர் நகர் வெங்கடாசலபதி கோயிலில் அதிகாலை 2 மணிக்கும் - சிறப்புப் பூஜைகள் நடந்தனவாம்.
அய்யோ பாவம் சங்க ராச்சாரியார்கள், அய்யோ பாவம் இந்து முன்னணி ராம கோபாலன்கள் ஆந்தை யாய்க் கத்தி என்ன பயன்? தவளையாய்க் கத்தி கண் டது என்ன?
இந்துக்களுக்கு எண் ணாயிரம் கோயில்கள் இருந்தும் போதாது; வேளாங் கண்ணி மாதா கோயிலானாலும் சரி, நாகூர் தர்காவாக இருந் தாலும் சரி அங்கு சென்று கும்பிடு தண்டம் போடு பவர்கள் பெரும்பாலும் இந்துக்கள் தானே - மறுக்க முடியுமா? அங்கெல்லாம் சென்று இந்து முன்னணி கள் மறியல் செய்வது தானே!
ஒரு தகவல் தெரியுமா? நாம் கூறுவதல்ல; கல்கி இதழில் (12.9.1982) வெளி வந்துதான் இதோ:
ஸ்ரீ ரங்கம் அரங்கநா தர் திருக்கோயிலில் அர் ஜுன மண்டபத்தில் துலுக்க நாச்சியார் சன்னதி ஒன்று இருக்கிறது.
அமாவாசை, மாதப் பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் துலுக்க நாச்சியாருக்காக உற்சவ மூர்த்தி ஸ்ரீரங்கநாதருக்கு திருமஞ்சனம் செய்து கைலி கட்டி அலங்கரிக் கிறார்கள் என்று செய்தி வெளியாகி உள்ளது.
இவர்களது கடவுளே கைலி கட்டி, முஸ்லிம் கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்டுள்ளாரே... இதனை எதிர்த்துப் போராடுவார்களா?  சொல்லுவது  கல்கி; விடுதலையல்ல; உண்மை இதழும் அல்ல! அக்கிரகாரத்து இதழ் தான்.
ஒரு வகையில் சொல் லப் போனால் ஸ்ரீரங்க நாதரே முஸ்லீம்களுக்கு உறவாகிவிட்ட பிறகு, இங்குள்ள இந்துத்துவா கூட்டம் இஸ்லாமியர் களை எதிர்ப்பது கடவுள் விரோதம் அல்லவா!
இந்துப் பக்தர்கள் சிந்திப்பார்களாக!
-   மயிலாடன்

செய்திச் சிதறல்கள்


விலையில்லாததா?
அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் தேர் தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி விலையில்லா ஆடுகளைப் பொது மக் களுக்குக் கொடுத்தது. விலையில்லா, ஆடுகள், விலையுள்ள ஆடுகளாகி விட்டன. அவை கசாப்புக் கடைக்குச் சென்று விட்டன என்ற புகார் தொடர்ந்து வந்து கொண்டுள்ளது.
இப்பொழுது கால்நடை வளர்ப்புத் துறைக்குப் புதிய வேலை என்ன தெரியுமா? அப்படிக் கொடுக்கப்பட்ட ஆடுகள் இருக்கின்றனவா? விற்கப் பட்டனவா? என்று விவரம் சேகரிப்பது.
இது மாதிரி செய்வதைவிட அனைவருக்கும் இலவசக் கல்வி எல்லா நிலைகளிலும் என்பதைக் கொண்டு வந்தால் இந்தத் தலை முறைக்கு மட்டுமல்ல; அடுத்துவரும் தலைமுறைக்கும் பயன்படுமே!
####
மதிப்பெண்தான் மதிப்பா?
+2 தேர்வு மற்றும் 10ஆம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் மதிப்பெண்கள் பெறுவது தொடர்பாக ஒரு சுற்ற றிக்கை தமிழ்நாடு அரசு தேர்வுத் துறையிலிருந்து வெளி வந்துள்ளது.
எழுத்துத் தேர்வில் +2 தேர்வில் 150-க்கு 70 மதிப்பெண்கள் பெற வேண்டும்; செய்முறைத் தேர்வில் 50-க்கு 30 மதிப்பெண்கள் பெற வேண்டுமாம். எழுத்துத் தேர்வில் உரிய மதிப்பெண் பெற்று செய்முறைத் தேர்வில் 30 மதிப்பெண் பெறா விட்டால் தோல்வி தானாம். 10ஆம் வகுப்பிலும் இதுபோன்ற குளறுபடிகள் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை எப்படி இருந்தது? அதில் என்ன குறைபாடு? ஏனிந்த மாற்றம் என்பது விளக்கப்படவில்லை.
குறிப்பாக செய்முறைத் தேர்வில், தேர்வாளர் மனப்பான்மையைப் பொறுத்து மதிப்பெண்கள் மாறக் கூடும்.
கிராமப்புறங்களில் இன்னும் சோதனைச் சாலைகள் (டுயடிசயவயசல) எந்த அளவுக்கு முன்னேறியிருக்கின் றன என்பது தெரிந்த ஒன்றே!
டாக்டர் அம்பேத்கர் கூட 35 மதிப்பெண் பெற்று தான் தேர்வில் வெற்றி பெற்றார். அப்படி வெற்றி பெற் றவர்தான் இந்தியாவின் அரசியல் சாசனத்துக்கே சிற்பியானார் என் பதை மறந்து விட்டு, மதிப்பெண்களைப் பிடித்துத் தொங்க வேண்டாம்! உச்சநீதிமன்ற நீதிபதி ரவீந்திரனே இதனைச் சுட்டிக் காட்டினார்.
மதிப்பெண் மதியை அளக்கும் மதிப்பெண்ணா? தேவையில்லாமல் கிராமப்புறப் பிள்ளைகளின் எதிர் காலத்தோடு விளையாட வேண்டாம்.
#####
கடலைத் திருவிழாவாம்!
ஓசூர் ராஜகணபதி நகர் ஆஞ்ச நேயர் கோயிலில் ஒரு முட்டாள்தன மான விழா, ஆங்கிலப் புத்தாண்டுத் தினத்தன்று; அந்தக் குரங்குக் கட வுளுக்கு (ஆஞ்சநேயருக்கு) வேர்க் கடலை தூவி தேர்த்திக் கடனாம். இப்படி செய்தால் வேர்க் கடலை மகசூல் பிரமாதமாக இருக்குமாம்.
நாட்டில் தண்ணீர்த் தட்டுப்பாட் டால் விவசாயம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு நிலைமைகள் மோசமாகி இருக்கின்றன.
ஆஞ்சநேயருக்கு நேர்த்திக் கடன் செய்தால் மாதம் மும்மாரி பொழிந்து விவசாயம் கிடுகிடு என்று விண்ணை முட்டி கொழிக்கும் என்றால் இந்தச் சுலபமான வழியை டெல்டா பகுதி களிலும்கூட நடத்தலாமே!
இதுதான் விஞ்ஞான மனப்பான் மையை வளர்க்கும் வழியா? மதத்தை முதலில் ஒழித்தாலே நாடு சுபிட்சம் அடையும் என்க!
@@@@@
பலே பஞ்சாப்!
பாலியல் தொடர்பான வழக்கு களில் பாதிக்கப்படும் பெண்களை காவல் நிலையங்களுக்கு அழைத்து விசாரிக்கக் கூடாது;
பெண்கள் வீட்டுக்கே சென்று விசாரிக்க வேண் டும் என்று பஞ்சாப் முதல் அமைச்சர் பிரகாஷ்சிங் பாதல் ஆணை பிறப் பித்துள்ளார்.
நியாயமான ஒன்றே! டில்லியில் பேருந்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரைக் கூடத் தெரிவிக்கக் கூடாது என்கிற நாகரிகம் பாராட்டத்தக்கதே. அதே கண்ணோட்டத்தில் இதை அணுக வேண்டியதுதான் சரியானது.
வேலியே பயிரை மேய்வதுபோல இரவு நேரத்தில் பெண்களைக் காவல் நிலையத்திற்கு அழைக்கக் கூடாது என்ற நிலை
ஆணைகளையும் மீறி, அழைத்துச் சென்று பாலியல் வன் முறைகளை நடத்துவது சர்வ சாதார ணமாக நடக்கவில்லையா!
(விழுப்புரத்தில் ரீடாமேரிக்கு என்ன நடந்தது?)
இந்த நிலையில் பஞ்சாப் முதல் வரின் ஆணையை மத்திய அரசின் உத்தரவாகக் கூட வெளியிடலாமே! இதை மற்ற மற்ற மாநில அரசுகளும் பின்பற்றலாமே!

மிரட்டலுக்கு அஞ்ச வேண்டாம்!


கடந்த 22ஆம் தேதி (டிசம்பர் 2012) சென்னையில் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தி.மு.க. தலைவர், முன்னாள் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றிட சூளுரை எடுப்போம் என்று கூறியுள்ளார்.
இதனை எதிர்த்து இந்து முன்னணி அமைப்பாளர் திருவாளர் இராம. கோபாலர் நீட்டி முழங்கி இருக்கிறார். புனித ராமர் பாலத்தைப் பாதுகாத்தே தீருவோம். உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் இந்தத் திட்டத்தைக் கைவிடக் கோருவதுடன் ராம சேதுவை தேசியச் சின்னமாக அறிவிக்க வேண்டு மென்று மனு தாக்கல் செய்துள்ளது. ராமர் பாலத்தை அழிக்கத் துடிக்கும் கொடிய எண்ணத்தை மத்திய அரசு பின்பற்றினால், அது படுதோல்வியடைந்து காணாமற் போய்விடும். கோடிக்கணக்கான ராம பக்தர்களின் கோபத்தைக் கிளறி நாடு தழுவிய போராட்டங்களுக்கு இடம் தர வேண்டாம் என்று பற்களை நர நர என்று கடித்துக் கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதில் நான்கு பிரச்சினைகளைக் கவனிக்க வேண்டும்.
1) இந்து முன்னணி வகையறாக்கள் ராமன்மீது அளவற்ற பக்தியும், அவர் சக்திமீது அளவற்ற நம்பிக் கையும் உடையவர்கள் என்பது உண்மையானால், அவர்கள் என்ன செய்ய வேண்டும்? ராமன் பஜனை பாட வேண்டும் ராம் ராம் என்று கோடிக்கணக்கில் எழுதலாம்.
ராமனை வேண்டி யாகங்கள் செய்யலாம். அதுதானே அவர்கள் நம்பும் ஆன்மீகத்துக்கு அழகு? ராம் ராம் என்ற சொல்லி குரங்குகள் கற்களைப் போட்டவுடன் அது இலங்கைக்குப் பாலமாக உரு பெற்றது என்று கதைப்பது உண்மையானால், இந்த ராம பக்தர்கள் ராமனிடம் தானே மனுபோட வேண்டும்? ஏன் தேவையில்லாமல் கலைஞரோடு, மத்திய அரசோடு மோத வேண்டும்?
2) இந்தத் திட்டத்தை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறது அண்ணா பெயரைக் கட்சியில் சுமந்து கொண்டுள்ள அண்ணா திமுக ஆட்சி.
ராமனைப்பற்றி அண்ணாவின் கொள்கை என்ன? இராமாயணத்தைத் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று சொன்னவர் அறிஞர் அண்ணா அல்லவா?
ராமனுக்காக வக்காலத்து வாங்கிப் பேசி, அண் ணாவிடம் வாதிட்டு வெல்ல முடியாமல் தோல் வியை ஒப்புக் கொண்டு பலரும் வெளியேறவில்லையா?
ஒரு வளர்ச்சித் திட்டத்தில் மத நம்பிக்கைகளைப் புகுத்துவது சரியானதுதானா? இதிலிருந்து வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை மத நம்பிக்கை என்பது விளங்க வில்லையா?
இதே அண்ணா தி.மு.க. இதற்குமுன் இரண்டு தேர்தல் அறிக்கைகளில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதே - அந்தப் பாலத்திற்கு ஆடம்ஸ் பிரிட்ஜ் என்று அ.இ. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலே குறிப்பிட்டுள்ளதே - இப்பொழுது முரண்படுவது ஏன்?
இந்தத் திட்டம் நிறைவேறினால் அது திமுகவுக்கு நற்பெயரை உண்டாக்கி விடுமே என்ற பொறாமை எண்ண அரசியல் கண்ணோட்டம்தானே இதற்குக் காரணம்?
மக்களுக்கான வளர்ச்சித் திட்டம் என்பதைவிட தங்களுடைய சொந்த அரசியல் பதவிதான் முக்கியம் என்று கருதுகிறவர்கள் எப்படி நல்லாட்சி நடத்தக் கூடியவர்களாக இருக்க முடியும்?
3) இந்தத் திட்டத்தை உருவாக்கியது தொடக்கத்தில் பிஜேபி மத்தியில் ஆட்சியில் இருக்கும் பொழுதுதான். மத்திய அமைச்சர்கள்தான் இந்தத் தடத்திலேயே இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்கு ஒப்புதல் அளித்தவர்கள். அப்பொழுது ஒப்புதல் அளித்த போது இது ராமன் பாலம் என்று யாரும் சொல்ல வில்லையே!
4) 2500 கோடி ரூபாய்க்கான திட்டம், தமிழ் நாட்டில் தென் மாவட்டங்களில் பெரிய பொருளாதார வளர்ச் சியைக் கொடுக்கக் கூடிய திட்டம், பல்லாயிரக் கணக்கானோர்க்கு வேலை வாய்ப்பை வழங்கக் கூடிய திட்டம், கிட்டத்தட்ட முக்கால் பகுதி நிறை வேறிய பிறகு அதனை முடக்குவது சரியா? இதில் நீதிமன்றம்கூட இடைக்கால தடை விதிப்பது எந்த வகையில் நியாயம்?
மக்கள் பணம் இப்படி நாசமாக வேண்டுமா என்பதைப் பொது மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப் பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறதே (51A(h) - அதற்கு முரணாக இதிகாசக் கற்பனைக் கதாபாத்திரமான ராமனை இழுத்துக் குளிர் காய்வது சரிதானா?
சேதுசமுத்திரத் திட்டத்தை செயல்படுத்தினால் கடும் போராட்டம் வெடிக்கும் என்ற அச்சுறுத்தலுக்கு அஞ்சத் தேவையில்லை, அதனையும் எதிர்த்து மக்கள் சக்தியை நம்மால் திரட்ட முடியும் - எச்சரிக்கை!

Tuesday, January 1, 2013

உள ரீதியான உறுதி தேவை!


இந்தியா உலக நாடுகள் முன் தலைகுனியும் நிகழ்வுகள் அவ்வப்பொழுது நிகழ்வதுண்டு.
இந்தியா சுதந்திரம் அடைந்ததாகக் கூறி மகிழ்ச்சிக் கூத்தாடிய கால கட்டத்தில், அதற்காகப் போராடிய தலைவரான காந்தியாரை இந்துத்துவா வெறியன் ஒருவன் சுட்டுக் கொன்றான்.
காந்தியாரை நாங்கள் காப்பாற்றினோம் - உங்களால் காப்பாற்ற முடியவில்லையே என்று வெள்ளைக்காரன் ஏகடியம் செய்த நிலை!
450 ஆண்டு கால வரலாறு படைத்த சிறுபான்மை மக் களான இசுலாமியர்களின் வழிபாட்டுத்தலத்தை அயோத்தியில் பெருந் தலைவர்கள் வழிகாட்ட, இந்துத்துவா காவி வெறி கூட்டமான சங்பரிவார்க் கும்பல் பட்டப் பகலில் எந்தவிதக் கூச்சமுமின்றி இடித்து முடித்தனர் (1992 டிசம்பர் 6)
2002 பிப்ரவரியில் குஜராத் மாநில அரசே முன்னின்று சிறுபான்மை மக்களான முசுலிம்களை ஆயிரக்கணக் கில் கொன்று குவித்தது.
அந்தக் கட்சியைச் சேர்ந்த பிரதமரான வாஜ்பேயியே எந்த முகத்தோடு நான் வெளிநாடு செல்லுவேன் என்று கூனிக் குறுகினார்.
இந்தியாவில் இந்து சாமியார்கள் என்பவர்கள் ஆயிரக்கணக்கில் நிர்வாணமாக வந்து கும்பமேளாவில் குளிப்பது - இந்த 21ஆம் நூற்றாண்டிலும் இந்தியா காட்டுவிலங்காண்டி நாடாக இருக்கிறதே என்று வெளி நாட்டவர்கள் பரிகசிக்கும் போக்கு இன்னொரு பக்கம்.
இந்தக் கால கட்டத்தில் மிகக் கேவலமான அவமானம் என்பது இந்தியாவில் பெண்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை.
இந்தியாவின் தலைநகரான டில்லியே இதற்குத் தலைமை தாங்குகிறது என்றால், இது படுகேவலம் அல்லவா!
புதுடில்லியில் பேருந்தில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் கயவர்களால் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு எவ்வளவோ முயன்றும் அந்தப் பெண்ணின் உயிரைக் காப்பாற்ற முடியாத பரிதாபமே!
அதனைத் தொடர்ந்து வட மாநிலங்களிலும்,தமிழ் நாட்டிலும் சிறுமிகள் காம மிருகங்களால் வேட்டை யாடப்படும் கேவலம்!
இதில் வேதனை என்னவென்றால், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், சென்னை ஆர்ப்பாட்டத் தில் (29.12.2012) குறிப்பிட்டது போல புதுடில்லியிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி பெண் முதல் அமைச்சர்கள் இருக்கும் நிலையில், இத்தகு கொடுமைகள் பெண்களுக்கு நடந்திருக்கிறதே என்பதுதான். இந்தியாவில் நிலவும் இந்துத்துவா மனப்பான்மை என்பது பெண்களை ஓர் உயிராகக் கூடப் பாவிக்காத தன்மை கொண்டதாகும்.
பெண்களையும், பிராமணரல்லாதாரையும் கொல் லுதல் பாவமாகாது என்கிறது இந்துக்களின் முக்கிய சாஸ்திர நூலான மனுதர்மம் (அத்தியாயம் 11, சுலோகம் 66).
படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோகச் சிந்தனை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார் என்பதும் அதே மனுதர்மம்தான் (அத்தியாயம் 9, சுலோகம் 17).
இத்தகைய மனப்பான்மை உள்ள இந்து சமூக அமைப்பில் பெண்களைக் காமப் பொம்மைகளாகக் கருதும் நிலை இன்னும் தொடர்கிறது.
இதற்கு என்ன தீர்வு? முத்தேவிகள் இந்து மதத்தில் இருக்கிறார்களே. அவர்களைப் பூசை போட்டால் தீர்வு கிடைக்குமா? எத்தனை எத்தனை ஆண்டு காலமாக நவராத்திரி பூஜைகளை நடத்தி வந்திருக்கின்றனர்? சக்தி, கல்வி, செல்வம் என்றெல்லாம் வியாக்கியானம் செய்து வந்துள்ளனர்.
அதன் பலன் இதுதானா? சிந்திக்க வேண்டும்  -குறிப்பாகப் பெண்கள்!
பெண்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ளுதல், தேவைப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களைத் தாக்குதல் என்கிற அளவுக்குப் பக்குவமும், சக்தியும் பெற்றாக வேண்டும்.
பள்ளிகளில் பெண் பிள்ளைகளுக்குக் கராத்தே பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும், துப்பாக்கி அனுமதி வேண்டும் என்றும் சென்னை ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மகளிரணி மற்றும் பாசறையினர் முழக்கமிட்டது வெறும் ஆர்ப்பாட்டச் சொற்கள் அல்ல.
இன்றைய நடைமுறையில் தேவைப்படக் கூடியவை. நான்கு இடங்களில் பெண்களைச் சீண்டியவர்கள் பெண்களால் தாக்கப்பட்டனர்; அடித்து விரட்டப்பட்டனர் என்று செய்தி பரவினாலே போதுமே,  நிலைமை கட்டுக்குள் வந்து விடாதா?
தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆளும் கை என்றார் புரட்சிக் கவிஞர். பெண்கள் இராணுவ அதிகாரிகளாக, விமான ஓட்டிகளாக வளர்ந்துவிட்ட காலம் இது அல்லவா!
உரிய பயிற்சி அளிக்கப்பட்டால் பெண்கள்மீதான வன்முறை   விடை பெறும். அதைவிட மிக முக்கியம், பெண்கள் உளரீதியாக, உறுதிபடைத்தவர்களாக வளர்த்தெடுக்கப்படுவதாகும். பாடத் திட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் பெண்ணியச் சிந்தனைதான் அதற் குத் துணை நிற்க முடியும் - அரசுகள் சிந்திக்கட்டும்!!

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...