கடந்த 22ஆம் தேதி (டிசம்பர் 2012) சென்னையில் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தி.மு.க. தலைவர், முன்னாள் முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றிட சூளுரை எடுப்போம் என்று கூறியுள்ளார்.
இதனை எதிர்த்து இந்து முன்னணி அமைப்பாளர் திருவாளர் இராம. கோபாலர் நீட்டி முழங்கி இருக்கிறார். புனித ராமர் பாலத்தைப் பாதுகாத்தே தீருவோம். உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் இந்தத் திட்டத்தைக் கைவிடக் கோருவதுடன் ராம சேதுவை தேசியச் சின்னமாக அறிவிக்க வேண்டு மென்று மனு தாக்கல் செய்துள்ளது. ராமர் பாலத்தை அழிக்கத் துடிக்கும் கொடிய எண்ணத்தை மத்திய அரசு பின்பற்றினால், அது படுதோல்வியடைந்து காணாமற் போய்விடும். கோடிக்கணக்கான ராம பக்தர்களின் கோபத்தைக் கிளறி நாடு தழுவிய போராட்டங்களுக்கு இடம் தர வேண்டாம் என்று பற்களை நர நர என்று கடித்துக் கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதில் நான்கு பிரச்சினைகளைக் கவனிக்க வேண்டும்.
1) இந்து முன்னணி வகையறாக்கள் ராமன்மீது அளவற்ற பக்தியும், அவர் சக்திமீது அளவற்ற நம்பிக் கையும் உடையவர்கள் என்பது உண்மையானால், அவர்கள் என்ன செய்ய வேண்டும்? ராமன் பஜனை பாட வேண்டும் ராம் ராம் என்று கோடிக்கணக்கில் எழுதலாம்.
ராமனை வேண்டி யாகங்கள் செய்யலாம். அதுதானே அவர்கள் நம்பும் ஆன்மீகத்துக்கு அழகு? ராம் ராம் என்ற சொல்லி குரங்குகள் கற்களைப் போட்டவுடன் அது இலங்கைக்குப் பாலமாக உரு பெற்றது என்று கதைப்பது உண்மையானால், இந்த ராம பக்தர்கள் ராமனிடம் தானே மனுபோட வேண்டும்? ஏன் தேவையில்லாமல் கலைஞரோடு, மத்திய அரசோடு மோத வேண்டும்?
2) இந்தத் திட்டத்தை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருக்கிறது அண்ணா பெயரைக் கட்சியில் சுமந்து கொண்டுள்ள அண்ணா திமுக ஆட்சி.
ராமனைப்பற்றி அண்ணாவின் கொள்கை என்ன? இராமாயணத்தைத் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று சொன்னவர் அறிஞர் அண்ணா அல்லவா?
ராமனுக்காக வக்காலத்து வாங்கிப் பேசி, அண் ணாவிடம் வாதிட்டு வெல்ல முடியாமல் தோல் வியை ஒப்புக் கொண்டு பலரும் வெளியேறவில்லையா?
ஒரு வளர்ச்சித் திட்டத்தில் மத நம்பிக்கைகளைப் புகுத்துவது சரியானதுதானா? இதிலிருந்து வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை மத நம்பிக்கை என்பது விளங்க வில்லையா?
இதே அண்ணா தி.மு.க. இதற்குமுன் இரண்டு தேர்தல் அறிக்கைகளில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதே - அந்தப் பாலத்திற்கு ஆடம்ஸ் பிரிட்ஜ் என்று அ.இ. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலே குறிப்பிட்டுள்ளதே - இப்பொழுது முரண்படுவது ஏன்?
இந்தத் திட்டம் நிறைவேறினால் அது திமுகவுக்கு நற்பெயரை உண்டாக்கி விடுமே என்ற பொறாமை எண்ண அரசியல் கண்ணோட்டம்தானே இதற்குக் காரணம்?
மக்களுக்கான வளர்ச்சித் திட்டம் என்பதைவிட தங்களுடைய சொந்த அரசியல் பதவிதான் முக்கியம் என்று கருதுகிறவர்கள் எப்படி நல்லாட்சி நடத்தக் கூடியவர்களாக இருக்க முடியும்?
3) இந்தத் திட்டத்தை உருவாக்கியது தொடக்கத்தில் பிஜேபி மத்தியில் ஆட்சியில் இருக்கும் பொழுதுதான். மத்திய அமைச்சர்கள்தான் இந்தத் தடத்திலேயே இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்கு ஒப்புதல் அளித்தவர்கள். அப்பொழுது ஒப்புதல் அளித்த போது இது ராமன் பாலம் என்று யாரும் சொல்ல வில்லையே!
4) 2500 கோடி ரூபாய்க்கான திட்டம், தமிழ் நாட்டில் தென் மாவட்டங்களில் பெரிய பொருளாதார வளர்ச் சியைக் கொடுக்கக் கூடிய திட்டம், பல்லாயிரக் கணக்கானோர்க்கு வேலை வாய்ப்பை வழங்கக் கூடிய திட்டம், கிட்டத்தட்ட முக்கால் பகுதி நிறை வேறிய பிறகு அதனை முடக்குவது சரியா? இதில் நீதிமன்றம்கூட இடைக்கால தடை விதிப்பது எந்த வகையில் நியாயம்?
மக்கள் பணம் இப்படி நாசமாக வேண்டுமா என்பதைப் பொது மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப் பான்மையை வளர்க்க வேண்டும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறதே (51A(h) - அதற்கு முரணாக இதிகாசக் கற்பனைக் கதாபாத்திரமான ராமனை இழுத்துக் குளிர் காய்வது சரிதானா?
சேதுசமுத்திரத் திட்டத்தை செயல்படுத்தினால் கடும் போராட்டம் வெடிக்கும் என்ற அச்சுறுத்தலுக்கு அஞ்சத் தேவையில்லை, அதனையும் எதிர்த்து மக்கள் சக்தியை நம்மால் திரட்ட முடியும் - எச்சரிக்கை!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment