குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான
போராட்டத்தில் கலந்துகொண்ட 3,000 பேர் மீது பதிவு செய்யப்பட்ட தேசத்துரோக
வழக்குகளை ரத்து செய்ய ஆணையிட்ட முதல்வர் ஹேமந்த் சோரன் சட்டங்கள்
மக்களைப் பாதுகாப்பதற்கே, மக்களை மிரட்டி இன்னல் படுத்துவதற்கு அல்ல என்று
குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு
மத்தியில் நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேறிய
குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
அளித்துள்ளாதால் சட்டமாகி யுள்ளது. இன்று முதல் செயல்பாட்டுக்கும் வந்து
விட்டது.
இஸ்லாமியர்கள் தவிர்த்துப் பிற
மதத்தினருக்கு மட்டும் ஆதரவாக இருப்பது, பூர்வீக குடிமக்கள் தங்களது பெரும்
பான்மைக்கும், பாரம்பரியத்துக்கும் ஆபத்து இலங்கையில் இருந்து
தமிழகத்தில் குடியேறிய அகதிகள் இடம்பெறாதது என்பன உள்ளிட்ட பல்வேறு
அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள்
நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக, அசாம், திரிபுரா, மேகாலயா
உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் மேற்குவங்க மாநிலத்தில் மாணவர்கள்
மற்றும் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர்
டில்லியில் மாணவர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
அதுதவிர, தமிழகம், கருநாடகம் என குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக
போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட் டத்தின் போது ஆங்காங்கே ஏற்பட்ட
வன்முறையில் ரயில்கள், பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன.
பொதுச்சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.
உ.பி.யில் காவல்துறையினரே பேருந்துகளுக்குத் தீ வைக்கும் காட்சி சமூக ஊடகங்களில் உலா வருகிறது.
போராட்டக்காரர்கள்மீது காவல்துறையினரால்
வழக்குகள் போடப்பட்டு அடக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து
போராடிய மக்கள்மீது போடப்பட்டுள்ள வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில்,
மக்களை பயமுறுத்துவதற்கும், மவுனமாக்குவதற்கும் சட்டங்கள்
உருவாக்கப்படவில்லை. மாறாக பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வை
ஏற்படுத்துவதற்காகவே சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மக்களின் குரலாகவே
எனது அரசு செயல்படும். 3000 பேர் மீது போடப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கை
ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது பொய்யாக வழக்குப்பதிவு
செய்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல் அமைச்சர்
ஹேமந்த் சோரன் பதிவிட்டுள்ளார். அத்துடன், மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கிற்கு
மதிப்பளிக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு ஜார்க்கண்ட் முதல்வர்
வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முன்னதாக, ஜார்க்கண்ட் மாநிலம்
தன்பாத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில்
கலந்துகொண்ட 3,000 பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அவர்களில் 7 பேரின் பெயர் விவரங்கள் மட்டுமே குறிப்பிடப் பட்டுள்ளன.
மற்றவர்களின் பெயர் விவரங்கள் இல்லாமலே அவர்கள் மீது வழக்கு பதிவு
செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஜார்க்கண்ட் மாநிலம் பழங்குடியினர் 80
விழுக்காடு வாழும் மாநிலம் ஆகும். இதில் பெரும்பாலானோர் நாடோடிகள்
ஆவார்கள். இவர்கள் ஒவ்வொரு பருவத்திலும் இடம் பெயர்வதால் இவர்கள்
தங்களுக்காக எந்த ஆவணங் களையும் வைத்திருக்க வாய்ப்பில்லை. இதில் பெரும்
பாலானோர் முதல் தலைமுறையாக பள்ளிக்குச்செல்கிறார்கள். ஆகவே இந்தியாவில்
ஆவணங்கள் இல்லாத மக்கள் வசிக்கும் மாநிலங்களான மத்தியப்பிரதேசம்,
சத்தீஸ்கர், தெலுங்கானா, ஒடிசா வரிசையில் ஜார்கண்டும் சேரும்; ஆகவே தான்
இந்த மாநிலங்கள் தேசிய குடியுரிமைசட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகைக்
கணக்கெடுப்பை தங்கள் மாநிலங்களில் நடத்த மாட்டோம் என்று கூறியுள்ளன. அதே
போல் கேரளா, மேற்குவங்கம், டில்லி, மகாராட்டிரா, பஞ்சாப் மற்றும் அசாம்
மாநிலங்களும் அறிவித்துள்ளன.
பிஜேபியோடு கூட்டுச் சேர்ந்துள்ள கட்சிகள்
ஆளும் மாநிலங்களே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்புத்
தெரிவிக்கும் நிலையில், போலிக் கவுரவம் பார்க்காமல் மத்திய அரசே இந்தச்
சட்டத்தை விலக்கிக் கொள்வதே நல்லது.
மக்களுக்காகத்தான் சட்டமே தவிர,
சட்டத்துக்காக மக்கள் அல்ல. ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை எல்லாம் செயல்படுத்தத்
தொடங்கினால் நாடே கழுதை மேயும் குட்டிச் சுவராகிவிடும். ஆட்சியிருக்காது;
அடக்கு முறையை மட்டுமே செயல்படுத்த வேண்டிய ஓர் அரசாக மாறும்; முடிவில்
முற்றாகத் துடைத்தெறியப்படும் கட்சியாக, ஆட்சியாக சங்பரிவார் ஆகும் -
எச்சரிக்கை!
No comments:
Post a Comment