ஜி. சம்பத்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக
ஒரு புயலை உருவாக்குபவர்களை அவர்களது உடைகளில் இருந்தே அடையாளம் கண்டு
கொள்ளலாம் என்று தனது தேர்தல் பேரணியில் பேசியதற்கு ஒரு நாள் கழித்து, இந்த
சட்டம் பற்றி எந்த ஒரு இந்தியரும் கவலை கொள்ளத் தேவையில்லை என்று தனது
சுட்டுரையில் பிரதமர் மோடி பதிவு செய்துள்ளார். இந்த சட்டம் பற்றி
கவலைப்படத் தேவையில்லை என்று அரசு கூறுவதை கவனமாக பரிசீலிக்காமல்
நிராகரிப்பது நியாயமானது அல்ல. இந்த சட்டம் செய்வதெல்லாம், குடியுரிமை
என்னும் ஒரு பயனை அளிப்பது மட்டுமே என்பதையும், எவரிட மிருந்தும் எதையும்
அது எடுத்துக் கொள்ளவில்லை என்பதையும் அதன் விமர்சகர்களால் கூட மறுக்க
முடியாது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காள தேசம் ஆகிய நாடுகளில் மத
துன்புறுத்தலுக்கு உள்ளாகி அந்த நாடுகளில் இருந்து வெளியேறும் முஸ்லிம்கள்
அல்லாத மக்களுக்கு குடியுரிமை வழங்கும் பயனை மட்டுமே அது வழங்குகிறது.
இவையெல்லாம் உண்மைதான். ஆனால், இந்த
பயன்கள் இந்த நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகி யுள்ள அகமதியார்களுக்கும்,
ஷியாக்களுக்கும் அளிக் கப்படவில்லை. மத துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ள
இந்தியர் அல்லாத முஸ்லிம்களுக்கு மட்டுமே இந்த பயனை மறுப்பது என்ற வகையில்
பாகுபாடு காட்டப்படுகிறது. ஆனால், அது இந்தியர்களையோ அல்லது இந்திய
முஸ்லிம்களையோ எந்த விதத்தில் பாதிக்கிறது? உள்துறை அமைச்சர் எண்ணற்ற முறை
சுட்டிக் காட்டியது போல, இந்த சட்டம் முஸ்லிம்களைப் பற்றி குறிப்பிடவே
இல்லை. அப்படியிருக்கும்போது இந்த சட்டம் இந்திய முஸ்லிம்களுக்கு தீங்கு
விளைவிப்பது என்று எவ்வாறு கூறப்படுகிறது?
தேசிய குடியுரிமை பதிவேட்டுத் திட்டம் இல்லாத குடியுரிமை திருத்த சட்டம் தேவையே அற்றது
இக்கேள்விகளுக்கான விடையைக் காண, உள்துறை
அமைச்சரின் அறிவிப்புகளைத் தாண்டி, நாம் வெகு தூரம் செல்ல வேண்டியதில்லை.
முக்கியமாக இரண்டு விஷயங்களை அவர் அடிக்கோடிட்டுக் காட்டி இருக் கிறார்.
அசாமில் மேற்கொள்ளப்பட்ட தேசிய குடியு ரிமைப் பதிவேட்டு திட்டம் நாடு
முழுவதிலும் விரிவு படுத்தப்படும் என்பது முதலாவது. முதலில் குடியுரிமை
திருத்த சட்டத்தை நடைமுறைப் படுத்திவிட்டு அதன் பின் தேசிய குடியுரிமை
பதிவேட்டுத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவேன் என்று கூறிய இரண்டாவது, இந்த
வரிசையில் மிகமிக முக்கியமானது. சுருங்கக் கூறுவதானால், அசாமில்
நடைமுறைப்படுத்தப்பட்ட தேசிய குடியுரிமை பதிவேட்டு திட்ட கணக்கெடுப்பில்
சட்டத்திற்குப் புறம்பாக இந்தியாவில் குடியேறியவர்கள் என்று அடையாளம்
காணப்பட்ட லட்சக்கணக்கான இந்துக்களுக்கு மட்டுமன்றி, அயல்நாட்டினர் என்று
வகைப்படுத்தப்பட இயன்றவர்களும், இந்தியாவின் இதர பகுதிகள் முழுவதிலும்
இத்திட்டம் நிறைவேற் றப்படும்போது அங்கு இருக்கும் சீக்கியர்கள்,
பார்சிகள், ஜைனர்கள், புத்தர்கள், கிறித்துவர்கள் அனைவருக்கும் குடியுரிமை
வழங்கப்படுவதை உறுதிப் படுத்திக் கொள்ளும் பாதுகாப்பான ஒரு வலைதான்
குடியுரிமை திருத்த சட்டமாகும். அவர்கள் அனைவரது குடியு ரிமையும் முதலில்
குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் பாதுகாத்துக் கொள்ளப்படும். அதன்
பின்னர், குடியு ரிமையை மெய்ப்பிப்பதற்குத் தேவையான ஆவ ணங்கள் மூலம்
முஸ்லிம்கள் அல்லாத அனைத்து இந்திய மக்களும் பாதுகாக்கப்பட்டதற்கு
பின்னர்தான், அனைத்து இந்திய அளவிலான தேசிய குடியுரிமை பதிவேட்டுத் திட்டம்
நடைமுறைப்படுத்தப்படும். தேசிய குடியுரிமை பதிவேட்டு திட்டம் என்பது இல்லை
என்றால், குடியுரிமை திருத்த சட்டத்திற்கான தேவையே இருக்காது. தேசிய
குடியுரிமை பதிவேட்டு திட்டத்தின் நோக்கமே, இந்தியாவில் வாழும் மக்களை
"குடிமக்கள்" என்றும் "சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறியவர்கள்"
என்றும் இரண்டு வகையாகப் பிரிப்பதுதான். தேசிய குடியுரிமை பதிவேட்டு
திட்டம் நடைமுறைப்படுத்தப் படுவதற்கு முன், குடியுரிமை திருத்த சட்டத்தில்
குறிப்பிடப்படாத மதங்களைச் சார்ந்த மக்களைத் தவிர்த்த மற்ற அனைத்து
இந்தியர்களின் குடியுரி மையையும் பாதுகாப்பது தான் இந்த குடியுரிமை திருத்த
சட்டத்தின் நோக்கம்.
விடுபட்டுப் போகக் கூடும் என்ற அச்சம்
இது ஒரு சாதாரணமான கணக்குதான். தேசிய
குடியுரிமை பதிவேட்டு திட்டத்தின் காரணமாக இந்திய குடி மக்கள் என்ற
பட்டியலில் இருந்து நீக்கப்படக் கூடும் என்ற அச்சம் கொண்ட இந்துக்கள்,
புத்தர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள், பார்சிகள், கிறித்துவர்கள் என்ற
அனைத்து மதக் குழுக்களைச் சேர்ந்த மக்களையும் ஒன்றாகக் கூட்டி அதிலிருந்து
குடியுரிமை திருத்த சட்டத்தில் இருந்து பாதுகாக்கப்பட்ட இந்துக்கள்,
புத்தர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள், பார்சிகள், கிறித் துவர்கள் என்ற
அனைத்து மதக் குழுக்களைச் சேர்ந்த மக்களையும் கழித்துவிட்டால்,
எஞ்சியவர்கள் முஸ்லிம் மக்களாக மட்டுமே இருப்பார்கள். குடியுரிமை திட்ட
சட்டத்தால் அரியணை ஏற்றப்பட்ட இந்திய நாட்டில் சட்டமன்றத் தேர்தல்களில்
வாக்களிக்கும் உரிமை யற்றவர்கள் என்று நீக்கப்பட இயன்ற ஒரே சமூகமாக
முஸ்லிம்கள் இருப்பார்கள். மூச்சு விடுவதற்குத் திணறும் மீன்களைப் போல
தேசிய குடியுரிமை பதிவேட்டுத் திட்டம் என்னும் வலையில் மாட்டிக் கொள்ள
அவர்கள் தயாராக இருப்பார்கள். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு
முழுவதிலும் கொழுந்துவிட்டு எரியும் போராட்டத்தின் தீவிரத்தைக் கண்டு
வியப்படையும் ஒவ்வொரு இந்தியரும் ஒரு சில எளிமையான கேள்வி களுக்கு பதில்
கூற வேண்டிய தேவை படைத்தவர்களாக உள்ளனர். தேசிய குடியுரிமை பதிவேட்டு நடை
முறையில் இருந்து விலக்களிக்கப்பட்ட இந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள்,
ஜைனர்கள், புத்தர்கள், கிறித் துவர்கள் ஆகிய அனைவருக்கும் குடியுரிமை
திருத்த சட்டத்தின்படி குடியுரிமை வழங்கப்பட்ட பிறகு, முஸ்லிம் குடி மக்கள்
மட்டுமே எஞ்சியிருப்பர். இந்த நாடற்ற மக்கள் அகதிகள் முகாமுக்குக் கொண்டு
செல்லப் படுவார்களா? அல்லது முஸ்லிம் அல்லாத மக்கள் குடியுரிமை அதிகார
வரிசையில் உயர்ந்த நிலையில் இருக்கச் செய்யும்போது, முஸ்லிம்களுக்கு கீழான
ஒரு நிலை வழங்கப்படுமா?
குடியுரிமை திருத்த சட்டத்தை
நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று அரசே அறிவித்தாலும் கூட, இந்த சட்டம்
நிறைவேற்றப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் ஒரு செயலே, நாட்டின் சமூக
நல்லிணக்கத்திற்கு ஓர் ஆபத்தை விளைவிக்க இயன்ற ஒன்றாகவே இருக்கும். அதன்
காரணமே, மாபெரும் வெறுப்புணர்ச்சியைத் தூண்டிவிட இயன்றதாக அது இருப்பதே
ஆகும். இனப்படுகொலைக்கு முன்னோடி இத்தகைய வெறுப் புணர்வைத் தூண்டும்
பேச்சுதான் என்று இனப் படுகொலை தடுப்பு பற்றி ஆராய்ச்சி செய்த உலகின் தலை
சிறந்த வல்லுநர்கள் கருதுகின்றனர். "இனப்படு கொலை என்பது யூதர்களைக் கொல்வ
தற்கான நச்சு வாயு அறைகளில் தொடங்கவில்லை; அதற்கு வெகு காலத்திற்கு முன்பே
வெறுப்பு உணர்ச்சித் தூண்டுதல் தோன்றியபோதே அதுவும் தொடங்கப் பட்டுவிட்டது"
என்று இம்மாதத்தில் வரும் வெறுப் புணர்வுப் பேச்சு - இனப்படுகொலை
தடுப்பு நாளில், அய்க்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளரின் சிறப்பு
ஆலோசகர் அடமா டையிங் கூறியிருக்கிறார். இந்த குடியுரிமை சட்ட திருத்தம்
மற்றும் தேசிய குடியுரிமை பதிவேட்டு திட்டம் இரண்டும் ஒன்றாக இணைந்து ஓர்
அரசியல் கருவியாக உருவெடுக்கும் போது, இத்தகைய வெறுப்புணர்வு பேச்சு,
குறிப்பாக தேர்தல் காலங்களில், அத்தகைய செயல்பாடுகளுக்கு தூண்டுதலும்
ஊக்கமும் அளிப்பதாக இருப்பதற்கான ஆற்றல் பெற்றதாகும்.
ஒரு நிர்வாகக் கருவியாக, இனப்படுகொலை
செயல்களுக்கு எதிரான அரசமைப்பு சட்டப்படியான பாதுகாப்புகளை
பலவீனப்படுத்தும் ஆற்றல் கொண்டது அது. உலகின் மாபெரும் ஜனநாயக நாடான
இந்தியா, அது போன்ற இனப்படுகொலை செயல்பாடுகளுக்கு ஆதரவளிக்கும்
பெரும்பான்மை மத மக்கள் ஆதரவு நாடாக மாறிவிட நேர்ந்தால், அது பேராபத்தை
விளைவிப்பதாகவே முடியும்.
நீக்கப்படுவதற்கான முன் எடுத்துக்காட்டுகள்
தேசிய நீரோட்டத்தில் இருந்து சில
இனங்களைச் சேர்ந்த மக்களை ஒதுக்கி வைப்பது என்ற குடியுரிமை நீக்க
சட்டங்களுக்கு வரலாற்று ரீதியிலான முன் எடுத்துக் காட்டுகள் ஏராளமாக உள்ளன.
ஜெர்மனி நாட்டின் ரெய்ச் குடியுரிமை சட்டம் அந்நாட்டு யூதர்களின்
குடியுரிமையைப் பறித்தது. அதன் பின் என்ன நடந்தது என்பதை அனைவருமே அறிவர்.
நம் நாட்டுக்கு அண்மையில் உள்ள மியான்மர் நாட்டில், 1982 ஆம் ஆண்டில்
நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டப்படி ரோஹின்யா முஸ்லிம்கள் நாடற்ற மக்களாக
ஆக்கப் பட்டனர். இவ்வளவுக்கும் அவர்கள்தான் ஆரகான் மலைப்பகுதிகளில்
வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களாக இருப்பவர்கள் ஆவர். அனைத்துலக
நீதிமன்றத்தில் இப்போது மியான்மர் இனப்படுகொலை குற்றச்சாட்டினை எதிர்
கொண்டுள்ளது.
"எந்த இந்தியனும் குடியுரிமையை இழக்க
மாட்டார்கள்" என்று அரசு அளித்துள்ள உறுதிமொழிகள் வரவேற்கத்தக்கவை.
ஆனாலும், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடியுரிமைப் பதிவேட்டு
திட்டம் ஆகியவற்றின் கீழ் எப்படியிருந்தாலும் முஸ்லிம்கள் இந்திய
குடிமக்களாக இருப்பதற்கு விடப்பட மாட்டார்கள் என்பதைப் பற்றி குடியுரிமை
திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தை மேற்கொண் டுள்ளவர்கள் மன நிறைவு
அடைந்திருக்கிறார்கள். அவர்கள் தங்கள் குடியுரிமையை இழந்த பிறகும் கூட,
"எந்த இந்தியனும் குடியுரிமையை இழந்துவிடவில்லை" என்று அரசு சொல்லிக்
கொண்டே இருக்கும். யார் இந்தியன் அல்லது யார் இந்தியன் அல்ல என்பதை
தீர்மானிப்பதே அரசுதான் என்பதே இதன் காரணம்.
குடியுரிமை திருத்த சட்டம் பற்றிய
அச்சங்கள் அனைத்தும் தவறானவை என்றும், சுயநலவாதிகள் மட்டுமே தேசத்தைத்
தவறான வழியில் நடத்திச் செல்கின்றனர் என்றும் கூறப்படுமானால், அது போன்ற
மக்களின் அச்சங்களை நீக்குவது என்பது பிரதமர் மோடிக்கு எளிதான ஒரு
செயலாகும். "எந்த இந்தியரும் குடியுரிமையை இழக்கமாட்டார்கள்" என்று
திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருப்பதற்கு மாறாக, தேசிய குடியுரிமை
பதிவேட்டு நடைமுறையை அரசு எப்போ துமே நடைமுறைப்படுத்தாது என்று
வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இந்த உறுதிமொழியை ஒவ்வொரு தேர்தல்
பிரச்சாரப் பேரணியிலும் அளிக்க வேண்டும்; தனது சுட்டுரையில் பதிவு செய்ய
வேண்டும்; தனது வானொலி உரையில் வலியுறுத்திக் கூற வேண்டும். இவற்றையெல்லாம்
அவர் செய்வாரா? அவ்வாறு அவரால் செய்ய முடியாவிட்டால், அல்லது அவர்
செய்யாவிட்டால், குடியுரிமை திருத்த சட்டத்தின் நோக்கம் வேறு என்ன என்பதை
அவரால் எவ்வாறு கூறமுடியும்?
நன்றி: 'தி இந்து' 19-12-2019
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்
No comments:
Post a Comment