Thursday, December 26, 2019

மூடநம்பிக்கையின் முடைநாற்றம்!

இன்று சூரிய கிரகணம் என்பது அறிவியல் ரீதியான உண்மையே. வெறும் கண்ணால் பார்க்காதீர்கள் என்ற அறிவிப்பும் ஏற்றுக் கொள்ளத்தக்கதே - பார்க்க வேண்டுமானால் அதற்கென்றுள்ள கண்ணாடி வழி பார்க்கலாம் - இது அறிவியலின் நிலைப்பாடு.
அதே நேரத்தில் இதற்குள்ளும் மூடநம்பிக்கையை புகுத்தி புரோகிதச் சுரண்டலை நடத்தும் ஆரியத்தின் அயோக்கியத்தனத்தை என்னவென்று சொல்லுவது!
சூரியகிரகணம் உள்ள நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாதாம். யார் சொன்னது? விஞ்ஞான ரீதியாக மெய்ப்பிக்கப்பட்டதா என்பது முக்கியமான கேள்வியாகும்.
இந்து அற நிலையத்துறை ஓர் அறிவிப்பைக் கொடுத்துள்ளது. சூரிய கிரகணம் நடைபெறும் கால கட்டத்தில் கோயில் நடை சாத்தப்படுமாம்.
சூரிய சக்திக்கு முன் சாமிகளுக்குச் சர்வமும் அடங்கிவிடுமோ? என்ன பைத்தியக்காரத்தனம் - பிள்ளை விளையாட்டு இது!
சூரியனைப் பற்றி எத்தனை எத்தனையோ மூடநம்பிக்கைகள் இந்த நாட்டில்! சூரியனை சூரிய நாராயணன் ஆக்கி, சாயாதேவி என்ற மனைவியும், நமன், வருணன், கர்ணன், சுக்ரீவன், சனி முதலிய புத்திரர்கள் உண்டு என்றும் புராணங்களில் எழுதிக் குவித்துள்ளனரே!
சூரியன்  பாண்டுராஜன் மனைவியாகிய குந்திதேவியை, அப்பெண்ருது ஆவதற்கு முன்னதாகவே வன்புணர்ச்சி செய்து, கர்ணன் என்ற ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்தாகவும் கதை கட்டி வைத்துள்ள வெட்கக் கேட்டை என்னவென்று சொல்லுவது!
உண்மையில் வானவியல் விஞ்ஞானம் என்ன கூறுகிறது? பூமியிலிருந்து 15 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. அதன் வெப்பத்தின் அளவு ஒரு கோடியே 50 லட்சம் சென்டிகிரேட் - விளிம்பில் 6000 டிகிரி சென்டி கிரேட்!
இவ்வளவு தூரத்தில் இருக்கும் போதே  பூமியில் வெப்பம் தாளாமல் தவிக்கிறோம்.
உண்மை இவ்வாறு இருக்க, குந்திதேவியைப் புணர்ந்தான் என்று சொல்லுவது எல்லாம் இந்தப் பார்ப்பனீயத்தின் ஆபாச அழுக்குக் கடல் பீடித்த வெட்கக் கேடே!
சூரியன் என்பது ஒரு நட்சத்திரமே தவிர, கிரகம் அல்ல; ஆனால் சூரியனை கிரகத்தின் பட்டியலில் வைத்து ஜோதிடம் சொல்லி மக்களை ஏமாற்றிப் பிழைக்கின்றனர்,
பூமியைத்தான் சூரியன் சுற்றுகிறது என்பதுதான் ஜோதிடமாம்;  இந்த 2019லும் இதனை நம்புவதும், சூரியகிரகணம், சந்திர கிரகணம் தோஷம் என்பதெல்லாம் எதைக் காட்டுகிறது?
நம் நாட்டின் கல்வி முறை அறிவியலை சொல்லிக் கொடுக்கிறதே தவிர, அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவில்லை. அறிவி யலைப் பள்ளியில் சொல்லிக் கொடுக்கும் பேராசிரியர் உட்பட வீட்டுக்குப் போய் தோஷம் கழிக்கிறார்களே!
இந்திய அரசமைப்புச் சட்டம் 51A(h) என்ன கூறுகிறது?  அறிவியல் மனப்பான்மையையும், சீர்திருத்த உணர்வையும், மனிதநேயத்தையும் மக்களிடம் வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று சொல்லவில்லையா?
மத்திய, மாநில அரசே முன் வந்து இந்த சூரிய மூடநம்பிக்கையை விளக்கி மக்களிடம் நல்லறிவைக் கொளுத்த வேண்டாமா? இதற்காகத் தொலைக்காட்சிகளை, ஊடகங்களைப் பயன்படுத்திட வேண்டாமா?
அறிவியல்  நன்கொடையான தொலைக்காட்சிகளும் இது குறித்து மக்களுக்குத் தெளிவை உண்டாக்க வேண்டாமா?
அரசமைப்புச் சட்டம் கூறும் இந்தப் பணியைச் செய்வது இந்தியத் துணைக் கண்டத்திலேயே பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகம்தான்!
சூரிய கிரகணம் நேரத்தில் சாப்பிடக் கூடாது என்ற மூடநம்பிக்கையை முறிடியடிக்கும் வகையில் அந்த நேரத்தில் சென்னை பெரியார் திடல், திராவிடர் கழகத்தின் தலைமையிடத்தில்  இன்று காலை 10 மணிக்கு பெரியார் திடல் வளாகத்தில் உள்ள பணியாளர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அந்த நேரத்தில் சிற்றுண்டி சாப்பிட்டு விளக்கமும் அளிக்கப்பட்டது. இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் விஞ்ஞான விளக்கவுரையை வழங்கினார்.
இப்பொழுது மட்டுமல்ல, 22.7.2009 அன்றும் இது மாதிரியே மூடநம்பிக்கையின் முதுகெலும்பை முறிக்கும் செயல் திட்டத்தை (Demonstration) செய்து காட்டியது.   பெரியார் கல்வி நிறுவனங் களிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியிலும் செய்முறை விளக்கம் நடத்திக் காட்டப்பட்டது.
2012ஆம் ஆண்டில்  மாயன் காலண்டர் அடிப்படையில் குறிப்பிட்ட நாளில் உலகம் அழியப் போகிறது என்ற புரளியைக் கிளப்பி விட்டனர்.
அதனை முறியடிக்கும் வண்ணம் சென்னைக் கடற் கரையில் (22.12.2012) திராவிடர் கழகத்  தலைவர் தலைமையில் அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கி, கடற்கரையில் நடை பயிலும் பொது மக்களுக்குக் கூட விளக்கம் அளிக்கப்பட்டது.
மூடநம்பிக்கைகள்தான் பார்ப்பனீயத்திற்கு முதலீடு - எனவே எந்த சந்தர்ப்பம் கிடைத்தாலும் அதனைத் தவறவிடாமல் புரோகிதச் சுரண்டலுக்கான சடங்குகளைத் திணித்து விடுவார்கள்!
இவற்றை எல்லாம் முறியடிக்க தந்தை பெரியாரைப் படிக்க வேண்டும். சிந்தனையை கூர் தீட்டிக் கொள்ள வேண்டும். ஆம், எல்லா வகையான முற்போக்குக்கும் தந்தை பெரியார் தேவைப் படுகிறார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...