Friday, June 28, 2019

புதிய கல்விக் கொள்கை : கருத்து கூற 6 மாத கால அவகாச நீட்டிப்பு கோரப்பட்ட நிலையில் ஒரு மாதம் மட்டும் நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு

புதிய தேசிய கல்வி கொள்கை குறித்து பரிந்துரைகளை அளிக்க இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரி ரங்கன் தலைமையிலான வல்லுனர் குழு அமைக்கப்பட்டது. அக்குழு தனது வரைவு அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை, பொதுமக்கள், மாண வர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்து கேட்புக்காக இணையதளத் தில் வெளியிடப்பட்டது.
கருத்து தெரிவிக்க ஜூன் 30-ஆம் தேதிவரை கால அவகாசம் அளிக் கப்பட்டு இருந்தது.
இந்த வரைவு அறிக்கை, நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்த பரிந்துரை செய்திருந் தது. இது, இந்தியை திணிக்கும் முயற்சி என்று தமிழ்நாட்டில் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், வரைவு அறிக்கை குறித்து கருத்து கூறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவை யில் நேற்று கேள்வி நேரத்தின்போது, திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓ பிரையன், எந்த ஆலோ சனை கூட்டமும் நடத்தாமல், வரைவு அறிக்கையை கஸ்தூரி ரங்கன் குழு தயாரித்ததா? என்று கேட்டார்.
அதற்கு மத்திய மனிதவள மேம் பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் கூறியதாவது:-
எல்லா மட்டங்களிலும், ஆலோ சனை நடத்திய பிறகு, வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கருத்துக்காக இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கருத்து கூறுவதற்கான கால அவகாசம், மேலும் ஒரு மாதத்துக்கு, அதாவது ஜூலை 31-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:- தனியார் பள்ளிகளில் நலிந்த பிரிவினருக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டப்பிரிவு, 2009-ஆம் ஆண்டில் இருந்து இருக்கிறது. ஆனால், 2014ஆ-ம் ஆண்டில் இருந்து தான் தீவிரமாக அமல்படுத்தப் பட்டது. அந்த ஆண்டு பலனடைந்த குழந்தைகள் எண்ணிக்கை 18 லட்சமாக இருந்தது. கடந்த ஆண்டு இது 41 லட்சமாக உயர்ந்தது. மத்திய இந்தி இயக் குநரகத்தில் காலியாக உள்ள இயக் குனர் பதவி விரைவில் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பசுப் பாதுகாப்பு பெயரில் வன்முறையா?

பசுக்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அப்பாவி மக்களைத் தாக்கி வன்முறையில் ஈடுபடும் பசு குண்டர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் சட்டத் திருத்தத்தை மத்தியப் பிரதேச அரசு கொண்டுவர முடிவு செய்துள்ளது.
இதற்காக பசு வதை தடுப்புச் சட்டம் 2004-இல் திருத்தம் கொண்டு வர  மத்தியப் பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் அரசு ஒப்புதல் அளித் துள்ளது.  பாஜக ஆட்சிக்கு வந்தபின், பசுக்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் சிலர் பசுக்களை விற்பனைக்குக் கொண்டுசெல்லும் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்கின்றனர். கடந்த ஆண்டில் இதுபோன்ற சம் பவங்கள் அதிகமாக நடந்தன.
இதைத் தடுக்கும் பொருட்டு ஒவ்வொரு மாவட்டந்தோறும் சிறப்பு காவல்துறை அதிகாரிகளை நியமித்து கண்காணிக்க உச்ச நீதிமன்றம், அனைத்து மாநில அரசு களுக்கும் உத்தரவிட்டது குறிப்பிடத் தக்கது.  இந்நிலையில் மத்தியப் பிரதேச அரசு கொண்டு வரும் சட்டத் திருத்தத்திற்கான திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டதை மாநில கால்நடைத்துறை அமைச்சர் லகான் சிங் யாதவ் உறுதி செய் துள்ளார்.
ஜூலை 8ஆ-ம் தேதி தொடங்கும் மழைக்கால சட்டப்பேரவைக் கூட் டத் தொடரில் இந்த திருத்தம் கொண்டுவரப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சட்டத் திருத்தத்தின் படி, பசுக்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் வன்முறையில் ஈடு படுவோர்களுக்கு குறைந்தபட்சம் 6 மாதம் முதல், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அப ராதமும் விதிக்கப்படும்.
மேலும், கும்பலாக வன்முறையில் ஈடுபட்டால் சிறை தண்டனை கூடு தலாக ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட்டு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். தொடர்ந்து இதேபோன்ற வன்முறையில் ஈடு பட்டால், தண்டனை இரட்டிப் பாக்கப்படும்.
மேலும், கும்பல் வன்முறையில் ஈடுபடுவோர் பொதுச் சொத்து களுக்கு சேதம் ஏதும் விளைவித்தால், அவர்களுக்கு ஒரு ஆண்டு முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் திருத்தம் கொண்டு வரப் பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பணம் செலுத்துவது குறைந்துள்ளது சுவிஸ் தேசிய வங்கி தகவல்

சுவிட்சர் லாந்து வங்கிகளில் இந்தியர்கள் பணம் டெபாசிட் செய் வது கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 6 சதவீதம் குறைந் துள்ளது என்று சுவிஸ் தேசிய வங்கி தெரிவித்தது.

இதுதொடர்பாக அந்த வங்கி வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ள தாவது:

இந்தியாவில் உள்ள சுவிட் சர்லாந்து வங்கிக் கிளைகளில் பணம் சேமிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.
சுவிட்சர்லாந்து வங்கி களில் இந்தியர்கள் பணம் சேமிப்பது குறைவது கடந்த 20 ஆண்டுகளில் இது இரண்டாவது முறையாகும். கடந்த ஆண்டில் மட்டும் 6 சதவீதம் குறைந்ததால், சுவிஸ் வங்கிகளுக்கு ரூ.6,757 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக வெளி நாட்டவர்களின் சேமிப்பு எண்ணிக்கை கடந்த ஆண்டு 4 சதவீதம் குறைந்துள்ளது. இதனால், ரூ.99 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய வாடிக்கையா ளர் கள், வங்கிகள், நிறுவனங்கள் ஆகியவை கணக்கில் எடுத் துக்  கொள்ளப்பட்டன.
தனிநபர்கள், வங்கிகள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு சுவிஸ் வங்கிகள் திருப்பித் தர வேண்டிய தொகையும் கணக் கில் எடுத்துக் கொள்ளப்பட் டன.
இந்திய வாடிக்கையாளர் களுக்குத் தர வேண்டிய ரொக்கம் கடந்த 2017ஆம் ஆண்டில் 50 சதவீதம் அதி கரித்தது.
2006ஆம் ஆண்டு முடி வில், சுவிஸ் வங்கிகளில் இந் தியர்கள் சேமித்து வைத்த பணம் ரூ.23,000 கோடியாக இருந்தது. இதுவே அதிகபட் சமாகும். அதன்பிறகு, 2011 ஆம் ஆண்டில் 12 சதவீதமும், 2013ஆம் ஆண்டில் 43 சதவீத மும் அதிகரித்தது.
கடந்த ஆண்டு முடிவில் மொத்தமுள்ள 248 வங்கி களில் 216 வங்கிகள் லாப மடைந்தன. 32 வங்கிகள் நஷ்டமடைந்தன என்று சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக் கப்பட்டுள்ளது.
கருப்புப் பணம் தொடர் பான தகவல்களைப் பகிர்ந்து கொள்ள சுவிட்சர்லாந்துடன் இந்தியா ஒப்பந்தம் மேற் கொண்டுள்ளது. அது கடந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
அதைத்தொடர்ந்து, சில தகவல்களை வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு முதல் முறையாக  வரும் செப்டம்பர் மாதம் சுவிஸ் அரசு பகிர்ந்து கொள்ள உள்ளது. இதன் பிறகு, ஆண்டுதோறும் கருப் புப் பணம் தொடர்பான தக வல்கள் பகிர்ந்துகொள்ளப் படும்.
இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணம் குறித்த தகவல்கள் எதுவும் இந்த அறிக்கையில் குறிப்பி டப்படவில்லை.
பல்வேறு நாடுகளிலிருந்து நிறுவனங்களின் பெயர்களில் சுவிஸ் வங்கிகளில் இந்தியர் களும், வெளிநாடு வாழ் இந் தியர்களும் சேமித்து வைத் திருக்கும் பணம் குறித்த தகவலும் சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

இதுதான் ஹிந்து மதம்!

கடவுள் நம்பிக்கையாளர்களும், மத நம்பிக்கையாளர்களும், பகுத்தறிவாளர்கள் கேட்கும் அடிப் படையிலான வினாக்களுக்குப் பதில் சொல்லாமல் திசை திருப்புவது அவர்களின் வாடிக்கையாகும்.

பல பெயர்களில் சொல்லப்பட்டாலும் கடவுள் ஒருவரே - அவருக்கு உருவம் கிடையாது - எங்கும் நிறைந்தவர் என்று பொதுவாக அவர்கள் சொல்லுவது வழக்கமே.

நடைமுறையில் என்ன நடக்கிறது? உருவமில்லாத கடவுளுக்கு உருவங்கள் உருவாக்கப்பட்டது ஏன்? மனைவி, வைப்பாட்டி, மக்கள் ஏன்? என்ற கேள்விக்கு விடை மட்டும் கிடைக்கவே கிடைக்காது.

அறியாமை அடர்ந்திருந்த காலத்தில் அச்சத்தின் காரணமாகக் கற்பிக்கப்பட்ட கடவுள், மதத்தின் கைக்குச் சென்று நிறுவன மாக்கப்பட்ட பின் தலபுராணங்களும், வண்டி வண்டியாகக் கதைகளும் புனையப்பட்டன.

வயிற்று வலி தீர வேண்டுமா? வைத்திஸ்வரன் கோயிலுக்கு வாருங்கள், திருமணம் ஆக வேண்டுமா? திருமணஞ்சேரி கோயி லுக்கு வாருங்கள், வழக்குகளில் வெற்றி பெற வேண்டுமா? கொல் லங்குடி வெட்டுடையான் (சிவகங்கை அருகில்) காளிகோயிலுக்கு வாருங்கள், செலவுக்குத் தட்டுப்பாடா? சிதம்பரம் அருகில் உள்ள வழித்துணை நாதர் (மார்க்கசகாயேஸ்வரர்) கோயிலுக்கு வாருங்கள் என்பதெல்லாம் எதைக் காட்டுகிறது?

ஒரே கடவுள் தான், நாமங்கள் தான் வெவ்வேறு என்று கூறி சமாளிக்கும் மதவாதிகள் ஒவ்வொரு கோயிலிலும் உள்ள கடவுளுக்கெல்லாம் வெவ்வேறு சக்திகளைக் கூறுவது ஏன்?

ஆரூரில் பிறக்க முக்தி -  தில்லையம்பதியைத் தரிசிக்க முக்தி, காசியில் இறக்க முக்தி, ஆனால் அண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்று கூறுவதெல்லாம் எதைக் காட்டுகிறது? எங்கள் கடையில் வாங்குங்கள். துணி சாயம் போகாது என்று சொல்லும் வியாபாரிக்கும், இவர்களுக்கும் என்ன வேறுபாடு?

பக்தியைக் காட்டி பண வசூல்தானே! கடவுள் தான் சர்வ சக்தி வாய்ந்தவராயிற்றே - அவருக்கு ஏன் பணம் - தங்கக் குவியல்?

மறைந்த காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி 1976 மே மாதம் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற அகில இந்திய இந்து மாநாட்டில் பேசும்போது "பக்தர்கள் பெரும்பாலோரிடம் வர்த்தக மனப்பான்மை  காணப்படுகிறது. கோயிலுக்குப் போவது ஒரு வகை ஃபேஷன் ஆகி விட்டது" என்று பேசவில்லையா?

இந்த நிலையில் என் மதம்தான் உயர்ந்தது, உன் மதம் மட்டமானது என்று பேசுவதெல்லாம் எதைக் காட்டுகிறது?

ஆர்.எஸ்.எஸ். வார இதழான விஜயபாரதத்தில் (21.6.2019 பக்கம் 35) ஒரு கேள்வி பதில்.

கேள்வி: நமது ஹிந்து மதம் கிறிஸ்துவ, முஸ்லிம் மதங்களி லிருந்து எந்த வகையில் மாறுபடுகிறது?

பதில்: எல்லா மதங்களும் உண்மை. அவர்கள் வழிபடும் கடவுள்களும் உண்மை என்று கூறுவது ஹிந்து மதம். ஆனால் மற்ற மதங்கள் எங்களது மதமே உண்மை, மற்றதெல்லாம் பொய், எங்கள் கடவுளை வணங்கினால் மட்டுமே உங்களுக்கு நற்கதி கிடைக்கும் என்று கூறுகின்றன - என்று ஆர்.எஸ்.எஸ். இதழ் எழுதுகிறது.

இதைச் சொல்லுவதற்கு விஜயபாரதத்துக்கோ, அவர்களின் கூட்டமான சங்பரிவார்களுக்கோ கிஞ்சிற்றேனும் யோக்கியதை உண்டா?

450 ஆண்டு கால வரலாறு படைத்த முஸ்லிம்களின் பாப்ரி மஸ்ஜித்தை அடித்து நொறுக்கியவர்கள் இதை எழுதுவதற்குத் தகுதி படைத்தவர்கள் தானா?

ஆர்.எஸ்.எஸின் தலைவராக இருந்த கே.எஸ். சுதர்சன் ஆக்ராவில் நடைபெற்ற - ஆர்.எஸ்.எஸ். ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் தேசியப் பாதுகாப்பு முகாமின் நிறைவு நிகழ்ச்சியில் பேசியது என்ன?

"இந்தியாவில் உள்ள கிறிஸ்துவர்களும், முஸ்லீம்களும் சிறீராமபிரான், சிறீகிருட்டிண பகவான் ஆகியோருடைய ரத்தம்தான் தங்களுடைய நரம்புகளில் ஓடிக் கொண்டி ருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்" ('தினமணி' 16.10.2000) என்று கூறினாரே.

இதுதான் இந்து மதம் மற்ற மதங்களையும் மதிக்கிறது என்பதற்கான அடையாளமும் - அத்தாட்சியுமா?

ஆர்.எஸ்.எஸின் குருநாதர் என்று மெச்சிக் கொள்ளும் எம்.எஸ். கோல்வால்கர் எழுதிய (We or our Nationhood Define)  நூலில் என்ன குறிப்பிடுகிறார்? தமிழில் மொழி பெயர்த்து நாகபுரி பாரத்பிரகாசன் வெளியிட்டுள்ள நூலின் பெயர் - "நாம் அல்லது நம் சமுதாயத் தன்மையின் விளக்கம்!" என்பதாகும். அந்த நூலின் 65ஆம் பக்கம் இவ்வாறு கூறுகிறது.

"ஹிந்துஸ்தானத்தில் வாழும் ஹிந்துக்களல்லாதார் ஹிந்துப் பண்பாடு, மொழி ஆகியவற்றை மேற்கொண்டு, ஹிந்து சமுதாயத்தை உயர்ந்த மதிப்பில் வைத்துப் போற்றி, ஹிந்து இனம் அதனுடைய பண்பாடு ஆகிய இரண்டின் புகழைத் தவிர வேறு எதையும் அவர்கள் வரவேற்கக் கூடாது. அதாவது அவர்கள் இந்நாடு, அதனுடைய பழமையான பாரம்பரியம் ஆகியவற்றைக் காண சகியாத தன்மையினையும், நன்றி கெட்ட தன்மையினையும் முற்றிலும் நீக்கிவிட்டு, உறுதியான எண்ணத்துடன் அன்பையும், பக்தியையும், அவைகளுக்குப் பதிலாகக் கொள்ளுதல் வேண்டும். ஒரே வார்த்தையில் கூற வேண்டுமானால் அவர்கள் அந்நியராக இருப்பதை விட்டொழிக்க வேண்டும். அவ்விதம் இருக்க அவர்கள்  விரும்பவில்லையென்றால், அவர்கள் ஹிந்து சமு தாயத்துக்கு முற்றிலும் கீழ்ப்பட்ட மக்களாக, சலுகைகள் எதுவும் பெறத் தகுதியற்றவர்களாக, கண்ணியமாக நடத்தப்படுவதனையோ அல்லது பிரஜா உரிமையினையோகூட அடைய அருகதை யற்றவர்களாக, சுருங்கக் கூறுமிடத்து எதனையும் கோர முடியாத மக்களாக வாழ்தல் வேண்டும்" என்கிறார் கோல்வால்கர். இதற்கு என்ன பொருள்?

மனிதநேயம் என்றால் என்ன என்று கடுகளவும் தெரியாத இந்த 'விஜயபாரதம்' வகையறாக்கள்தான் எல்லா மதங்கள், அவர்களின் கடவுள்கள் உண்மை என்று கூறுவது இந்து மதம்தான் என்று கதைப்பது - எவ்வளவு பெரிய பித்தலாட்டம் என்பதைத் தெரிந்து கொள்ளலாம் அல்லவா!

அவாளின் எண்ணம்

குருமூர்த்தி துக்ளக்கில் எழுதும் தலையங்கம், கேள்வி - பதில் எல்லாவற்றிலும் மீண்டும்,மீண்டும் வலியுறுத்துவது இது தான்; "அடேய் அதிமுக பயலுகளே.., ஒத்துமையாக இருங்கடா...ஒங்க கிட்ட ஒத்துமை இல்லாவிட்டால் திமுக வந்துடும்..! அய்யோ...! அப்புறம் எங்க  நிலைமை என்னாவது..?"
ஆயினும், "அதிமுகவினர் ஒற்றுமையாக இல்லாவிட்டால் என்னாவது...?"  என்ற பயமும் இந்த அம்பிகளை ஆட்டிப் படைக்கிறது.
சமீபத்திய துக்ளக்கில் ஒரு கேள்வியையும், பதிலையும் கவனியுங்கள்.
அதிமுகவின் ஒற்றை தலைமையை ஒரு வேளை ரஜினி ஏற்றால், அதிமுக பலப்பட வாய்ப்புள்ளதா?
அதிமுக தலைவர்களை ஜெயலலிதா ஒருமுகமாக போக வைத்து கட்டி மேய்த்தார்..! அதில் யாராவது ஒருவர் தலைவராக வேண்டும், மற்றவர்கள் மந்தையாக அவர் பின்னால் செல்ல வேண்டும்  என்பது இன்றைய நடைமுறைக்கு உதவாது....இதை அதிமுகவினர் புரிந்து கொண்டு, சென்ற வாரம் நாம் தலையங்கத்தில் கூறியது போல,கூட்டுத் தலைமை கலாச்சாரத்தை கொண்டு வந்தால், அதிமுக வலுவடையும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.
திமுக இருக்கும் வரை அதை எதிர்க்க அதிமுக என்ற கட்சி அவசியம். அதை அதிமுக சரிவர செய்யவில்லை  என்றால், அது ஏதாவது ஒரு வகையில் மறு அவதாரம் எடுக்கும். அதன் மறு அவதாரம் திமுக எதிர்ப்பு சக்திகளை ஒன்று சேர்க்கும். அதன் தலைவராக ரஜினி வரும் வாய்ப்பும் இருக்கிறது என்பது நமது கணிப்பு.
இந்த பதிலில் இருந்து, இந்த அம்பிகள்  ஏன் ரஜினியை அரசியலுக்கு இழுக்கிறார்கள் என்பதும், அது, திமுகவை எதிர்ப்பதற்காகவே அவரை அரசியலுக்குள் இழுத்துக் கொண்டு வரத் துடிக்கிறார்கள் என்பதும் தெளிவாகிறது.
அதாவது, இந்த பதிவின் ஆரம்பத்தில் நான் சொன்னது போல, இவர்களின் ஒரே மய்யபுள்ளி என்பது, ஒரு அரசியல் கட்சி யோக்கியமானதா? இல்லையா? என்பதை விடவும்,  அது பார்ப்பனிய ஆதிக்கத்தை கேள்வியில்லாமல் ஏற்றுக் கொள்ளும் தலைமையா? இல்லையா என்பதே! அந்த ஒரே மதிப்பீட்டில் தான் இருக்கும் இரு திராவிடக் கட்சிகளில், ஊழலில் ஓங்கி உயர்ந்து,  நாறிக் குமட்டும் கட்சியான அதிமுகவின்  ஆட்சியை தூக்கிச் சுமக்கிறார்கள்!
அத்துடன், கிருஷ்ணனின் பத்தாவது அவதாரமான கல்கி அவதாரத் திற்காகத்  தான் தாங்கள் நாளும் காத்திருப்பதாகச் சொல்லி வந்த இந்த அம்பிகள், இன்று அதிமுகவின் மறு அவதாரத்திற்காக காத்திருக்கும் நிலைமைக்கு இவர்களை திமுக அச்சமும், துவேஷமும் கொண்டு நிறுத்தியிருக்கிறதே..., என்று நினைத்தால், பரிதாபப் படுவதைத் தவிர, எனக்கு ஒன்றும் தோன்றவில்லை!

- சாவித்திரி கண்ணன்
பத்திரிகையாளர்

கறுப்புப் பணம் கணக்கிடும் முயற்சி கைவிடப்பட்டது!

மூன்று தேசிய அமைப்பு களும் மிகவும் வேறுபட்ட வெவ்வேறு மதிப்பீடுகளை அளித் திருப்பதால் இந்தியாவுக்கு உள் ளேயும், வெளியேயும் இருக்கும் இந்தியர்களின் கறுப்புப் பணம் மொத்தம் எவ்வளவு என்பதைக் கணக்கிடுவதை கைவிட்டு விட்ட தாக நாடாளுமன்றத்தின் நிதித் துறை நிலைக்குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து 'தி இந்து" ஆங்கில நாளேட்டின் 25.6.2019 இதழில் வெளியிடப்பட்டுள்ள சிறப்புச் செய்தியில் குறிப்பிடப்பட்டி ருப்பதாவது:
பல்வேறு அரசு அமைப்புகளும் வெவ்வேறு முறைகளைப் பின்பற் றுவதால், அவற்றிடையே வேறு பட்ட முடிவுகள் எடுக்கப்பட்டு, வேறு பட்ட புள்ளி விவரங்கள் கொடுக்கப் பட்டு இருப்பதால், இந்தியாவிற்கு உள்ளேயும், வெளியேயும் உலவும் கறுப்புப் பணத்தின் மொத்த அள வைக் கணக்கிடுவதைக் கைவிட்டு விட்டதாக நாடாளுமன்ற நிதித் துறை நிலைக்குழு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற நிலைக்குழு குறிப்பிட்டுள்ள மூன்று அமைப் புகள் பொது நிதி மற்றும் கொள் கைக்கான தேசியக் கல்வி நிலையம், நிதி மேலாண்மைக்கான தேசியக் கல்வி நிலையம் மற்றும் மேம்படுத் தப்பட்ட பொருளாதார ஆராய்ச் சிக்கான தேசிய கவுன்சில் ஆகியவை நாட்டில் உள்ள கணக்கில் வராத வருமானம் ஆகிய கறுப்புப் பணம் பற்றிய மதிப்பீடுகளைத் தெரிவித் துள்ளன. அவற்றின் மதிப்பீடுகள் கடுமையாக வேறுபட்டுள்ளன. அவற்றின் இடையேயான வேறு பாடு மொத்த உள்நாட்டு உற் பத்தியில் 7 சதவிகிதத்திலிருந்து 120 சதவிகிதம் வரை உள்ளது.
இதன் மூலம் நாட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள கறுப்புப் பணம் பற்றிய நம்பகமான மதிப்பீட்டை பெறுவது இயலாத தாகத் தோன்றுகிறது. இதற்கு காரணம் இந்த அமைப்புகள் பின் பற்றிய நடைமுறைகள் வேறுபட்டு இருப்பதேயாகும். மூன்று அமைப்பு களும் முடிவுக்கு வந்துள்ள கணக் கில் வராத வருவாயின் அளவு வேறுபட்டு உள்ளதால் அதைக் கணக்கிடுவது கடினமாக உள்ளது.
அறிக்கையில் வருவாய்த் துறைச் செயலாளர் அஜய் பூஷண் பாண்டே, "இந்தியாவில் அவற்றைக் கணக்கிடுவதற்கான பொருத்தமான முறையைக் கண்டுபிடிப்பதில் ஒத்தக் கருத்து ஏற்படவில்லை" என்று கூறியதாகக் குறிப்பிடப்பட் டுள்ளது. எனவே, நாடாளுமன்ற நிதித் துறை நிலைக்குழு கறுப்புப் பணத்தைத் தடுப்பதற்கான பல் வேறு நடவடிக்கைகளை விவரித் துள்ளது. நேரம் குறைவாக இருப்ப தாலும், செயல்படுவதற்கான வல்லு நர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாலும், இந்த மதிப்பீடுகள் முதற்கட்டமானவையாக மட்டுமே கருதப்படக் கூடியவையாகும்.
இதற்கிடையில், நிதி அமைச்சகம் (வருவாய்த் துறை) கறுப்புப் பணத்தைக் கண்டுபிடிப்பதில் மிக வும் தீவிரமாகச் செயல்பட்டு, குற்றம் செய்பவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டுக்கு உள் ளேயும், வெளியேயும் இந்த நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண் டும். இவற்றுடன் கறுப்புப் பணம் தொடர்பாக அமைக்கப் பட்ட 7 சிறப்புப் புலனாய்வுக் குழுக் களின் அறிக்கைகளின்மீது தொடர் நட வடிக்கைகள் மேற்கொள்ளவும் வே ண்டும் என்று அந்த நிலைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது. இவ்வாறு "தி இந்து ஆங்கில நாளேட்டின் சிறப்புச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயர்ஜாதியில் 'ஏழைகள்' அரசுப் பணிகளில் 28 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கும் நிலையில் அவர்களுக்கு மேலும் 10 சதவிகிதம் இட ஒதுக்கீடா?

மத்திய பி.ஜே.பி. அரசு செயல்படுவது யாருக்காக?
பசியேப்பக்காரர்களை வெளியே தள்ளி, புளியேப்பக்காரர்களை பந்தியில் அமர்த்துவதா?

மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில், உயர் ஜாதியில் உள்ள ஏழைகள்''' 28 விழுக்காடுக்கும் அதிகமாக இருக்கும்பொழுது,மேலும் 10 விழுக்காடு இடங்களை உயர்த்தி அறிவித்திருப்பது என்பது பசியேப்பக்காரர்களைப் பந்தியிலிருந்து வெளியே தள்ளி, புளியேப்பக்காரர்களைப் பந்தியில் அமர வைக்கும் சமுகநீதிக்கு எதிரான மத்திய அரசின் திட்டத்துக்குத் தமிழ்நாடு அரசு இரையாகக்கூடாது  என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

பெரியார் மண் - திராவிட பூமி - குறிப்பாக தமிழ் நாடு மற்ற பகுதிகளுக்கு சமுகநீதிக்கான கலங்கரை வெளிச்சத்தைப் பாய்ச்சியது - பாய்ச்சுகிறது.
தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீடு - எஞ்சிய 31 சதவிகித இட ஒதுக்கீடு என்பது திறந்த போட்டி - அனைத்து ஜாதியினரும் திறமை அடிப்படையில் போட்டியிடும் பொதுத் தொகுதியாகும்!

முன்னேறிய ஜாதியினர் எத்தனை சதவிகிதம்?

முன்னேறிய ஜாதியினரும் மற்றவர்களோடு இதில் போட்டியிட்டு இடங்களைப் பெறும் ஏற்பாடு தமிழ்நாட்டிலும் சரி, மற்ற வட மாநிலங்களிலும் முன் னேறிய ஜாதியினர் ஒரு சில மாநிலங்களில் கூடுதல் எண்ணிக்கை - உ.பி.யில் பார்ப்பனர் 16 சதவிகிதம், மற்ற ஜாதியினர் 12 சதவிகிதம் என்பது உயர்ஜாதியினர் சுமார் 20 சதவிகிதத்திற்கு அதிகமாக உள்ளனர்.
அவர்கள் ஏற்கெனவே கல்வி, உத்தியோகங்களில் விகிதாச்சாரத்திற்கு மேல் அதிகமான எண்ணிக்கை பெற்றுள்ளனர்.
இட ஒதுக்கீட்டில் 10 சதவிகிதம் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் (EWS) என்று கூறி, 5 நாள்களில் ஓர் அரசமைப்புச் சட்டத் திருத்தம் தேர்தலுக்கு முன்பு அவசர அவசரமாக பா.ஜ.க. மோடி அரசு கொண்டு வந்து, உடனே நடைமுறைப்படுத்திட மாநிலங்களை அவசரப்படுத்துகிறது. கூடுதல் இடங்கள், நிதி உதவி தருகிறோம் என்று மாநிலங்களின் நாக்கில் தேனைத் தடவுகிறது.

வறுமை ஒழிப்புத் திட்டமல்ல - இட ஒதுக்கீடு!

"இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல - சமுக சமத்துவ சம வாய்ப்பை உறுதி செய்ய வஞ்சிக்கப்பட்ட மக்களின் கல்விக் கண்களைத் திறப்பதாகும். வேலை வாய்ப்பைத் தந்து, சமப்படுத்த செய்யும் நீண்ட கால ஜாதி நோய்க்கான சிகிச்சை முறையாகும்.'' இது உச்சநீதிமன்ற தீர்ப்பின் வாசகம்.

பந்தியில் யாருக்கு முன்னுரிமை?

தீவிர சிகிச்சைப் பிரிவில், உயிருக்குப் போராடும் நோயாளிகளைக் கொண்டு வந்து படுக்கை தந்து சிகிச்சை செய்வதே சமுகநீதி!
ஏற்கெனவே கொழுத்துள்ள - ஆரோக்கியமாக உள்ள மருத்துவப் பரிசோதனைக்கு வந்துள்ளவர் களை அங்கே அனுமதித்து - நோயால் பாதிக்கப்பட்ட வர்களை வெளியே தள்ளுவதாகும்.
பசியேப்பக்காரர்களுக்குப்'' பந்தியில் முன்னுரிமை தருவதுதானே நியாயம்? புளியேப்பக்காரர்களை'' முதல் பந்தியில் அமர வைக்கலாமா? அவர்கள் அதிகம் சாப்பிட்டு அஜீரணக் கோளாறினால் அவதிப் படுகிறவர்கள் அல்லவா?

ஆங்கில இதழின் ஆய்வு தரும் புள்ளி விவரம்

மோடி அரசு வழங்கிய முன்னேறிய ஜாதியில் உள்ள ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு (ஆண்டுக்கு எட்டு லட்சம் ரூபாய் சம்பள ஏழைகள்' வீடு, நில புலம் உள்ள ஏழைகள், வறுமையாளர்களாம் - மத்திய அரசு ஆணைப்படி) வழங்குவதற்கு எந்த நியாயமும் இல்லை. மும்பையிலிருந்து வெளிவரும் எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லியில்'' (Economic and Political Weekly), (ஜூன் 8, பக்கம் 12) 5 பல்கலைக் கழக ஆய்வாளர்கள், அறிஞர்கள் எழு தியுள்ள ஓர் கட்டுரையில் வெளிவந்துள்ள தகவல்கள்.
மத்திய கல்வி நிறுவனங்களிலும், வேலை வாய்ப்புகளிலும் 10 சதவிகிதம் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முன்னேறிய ஜாதிக்காரர்களுக்கு ஒதுக்கி அரசமைப்புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வரக் காரணம் அவர்களுக்குரிய இடங்கள் கிடைக்கவில்லை என்று கூறியே!

ஆனால், உண்மை நிலை என்ன?

இந்த 5 ஆய்வாளர்களும் National Institution Ranking Frame work (NIRF) என்ற மத்திய மனிதவள (கல்வி) துறையின்கீழ் இயங்கும் - அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் துறைகளில் படிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய ஜாதி மாணவர்கள் எண்ணிக்கை பற்றிய இந்தியா முழுவதும் 445 உயர்கல்வி நிறுவனங்களில் (2018 கணக்குப்படி) ஆய்வு செய்ததில், அவர்கள் ஏற்கெனவே 28 சதவிகித இடங்களைப் பெற்றுள்ளனர், கல்வி கற்று வருகின்றனர் (There is no Under Representation - in fact over represention) என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்!

ஒடுக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்படுவர் 

இந்த 10 சதவிகிதம் சேர்ந்தால், புளியேப்பக்காரர் களாகி விடுவர். மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கு மேற்பட்ட ஏகபோகத்தை அவர்கள் அனுபவிக்கின் றனர்.
இதன்மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற் படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் போட்டி யிட்டுப் பெற்ற இடங்கள் வாய்ப்புகள் வெகுவாகக் குறைவாகிவிடும் பேராபத்து பொதிந்துள்ளது!
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டு மானத்தை உடைத்து நொறுக்கும் (Demolishing the basic structure of the Constitution of India) முயற்சியே இந்தப் பொருளாதார அடிப்படையிலான திட்டமாகும்.

நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போதே அவசரமா?

வழக்குகள் உயர்நீதிமன்றங்களில், உச்சநீதிமன் றத்தில் தி.மு.க., தி.க., விடுதலை சிறுத்தைகள் மற்றும் பல சமுகநீதி அமைப்புகள் போட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், எப்படியும் இந்த ஏகபோகத்தை உள்ளே திணித்துவிடவே - மத்திய ஆட்சி அவசர கூடுதல் நிதி ஒதுக்கீடு, அவசர கூடு தல் இடங்கள் என்று நாக்கில் தேனினை மாநில அரசுகளுக்கும், தனியார் கல்வித் துறைகளுக்கும் தடவுகிறது.
இதிலும் தமிழ்நாடுதான் திராவிடர் இயக்கம்தான் வழிகாட்டி. விழிகளைத் திறக்க வைக்கவேண்டிய விவேகமும், வேகமும் நிறைந்த கடமையாற்ற வேண் டிய நிலையில் இருக்கிறது.

எச்சரிக்கையாக இருக்கவேண்டும் தமிழ்நாடு அரசு

தமிழ்நாடு அ.தி.மு.க. அரசு இதில் உறுதியாக இருக்கவேண்டும். முதலில் சிறியதாகத்தான் - கன்னக் கோல் ஓட்டை தொடங்கும்; பிறகு சுவரே இடிந்து விழுந்துவிடும் - எச்சரிக்கை - ஏமாந்துவிடக்கூடாது.

கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்
சென்னை
28.6.2019

Thursday, June 27, 2019

கெப்ளர் கண்டுபிடித்த புதிய கோள்கள்!


அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா, கெப்ளர் விண் தொலைநோக்கி மூலம் ஏராளமான தகவல்களை சேகரித்துள்ளது.
இந்த தகவல்களை வைத்து ஆராய்ச்சி செய்வதற்கே பல காலம்ஆகும் என்பது வெட்ட வெளிச்சம்.
ஜெர்மனியை சேர்ந்த விண்வெளி ஆய்வா ளர்கள், கெப்ளர் விண்தொலைநோக்கி சேகரித்த தகவல்களைவைத்து ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த ஆய்வில், நமது சூரிய மண்டலத்திற்கு அப்பால் உள்ள பல கிரகங்களை கண்ட றிந்துள்ளனர்.
இதுவரை, 18 புதிய கிரகங்களை அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
இதுவரை கெப்ளர் உள்ளிட்ட பல விண் தொலைநோக்கிகள் தந்த தகவல்களின்படி, 4 ஆயிரம்புதிய கோள்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதில் பெரும்பாலானவை நெப்டியூன் கிரகத்தின் அளவே உள்ளவை.
ஆனால் அண்மையில் ஜெர்மானிய விண்வெளி விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கும் புதிய கோள்கள்,  பூமியின் அளவைக் கொண்டவை என்பது தான் மிகவும் சிறப்பிற்குரியது.
இது பூமிக்கு மாற்றான வாழிடங்களை கண்டுபிடிப்பதை சுவாரசியமாக்கிருக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

நிலவில் விநோத உலகம் கண்டுபிடிப்பு


பூமியைப் போலவே சந்திரனிலும், நிறைய உலோகங்கள் தாதுக்கள் உள்ளன. இதனால் தான், நிலாவில் சுரங்கத் தொழில் செய்ய, இப்போதே பல விண்வெளி அமைப்புகள் திட்டமிட்டு வருகின்றன.
நிலாவின் தென் துருவப் பகுதியில், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், விண்கல் தாக்கியதால், 2,500 கி.மீ அளவுக்கு பெரும் பள்ளம் உள்ளது.
இந்தப் பள்ளத்தாக்கில் ஒரு விநோதமான உலோகம் இருப்பதை விஞ்ஞானிகள் அண்மையில் கண்டறிந்துள்ளனர்.
நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிலாவைத் தாக்கிய விண்கல்லின் மிச்சம் மீதி, நிலாவிற்குள் சில நூறு மைல்கள் வரை புதைந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
ஒரு சில விஞ்ஞானிகள், அந்த விநோத உலோகத் திட்டு, இரும்பு- நிக்கல் கலவையாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
வேறு சிலரோ, அவை ஆக்சைடு திட்டுக்கள் என்கின்றனர்.
நிலாவின் பரப்பில், ஈர்ப்பு விசை வேறுபாடுகளை வைத்து அமெரிக்க விஞ்ஞானிகள் இந்த உலோகத் தாது இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

ஜெட் விமானத்தை பறக்க வைக்கும் பிளாஸ்டிக் குப்பை!

வீண் குப்பையாகப் போகும் பிளாஸ் டிக்கை மறுசுழற்சி செய்ய, பல தொழில் நுட்பங்கள் வந்த படியே உள்ளன. இருந்தாலும், அவை மீண் டும் அதே பிளாஸ்டிக் பொருட் களை உருவாக்கு பவைகளாகவே இருக் கின்றன.
ஒரு மாறுதலுக்கு, குறைந்த அடர்த்தி உள்ள பாலியெத்திலின் குப்பையை, ஜெட் விமானங்களுக்கு எரிபொருளாக ஆக்கும், புதிய தொழில்நுட்பத்தை, வாசிங்டன் மாநில பல்கலைக் கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
குறைந்த அடர்த்தியுள்ள பிளாஸ்டிக் குப்பையை அரைத்து குருணைகளாக ஆக்கி, பிறகு அதை தங்கள் சிறப்பு முறைப்படி பதப்படுத்தினர்.  இதன் பின், அந்தக் கழிவு, 85 சதவீதம் ஜெட் விமான எரிபொருளாகவும், 15 சதவீதம் டீசலாகவும் மாற்றப்பட்டன.
தாங்கள் உருவாக்கிய இந்த புதிய முறையில் பிளாஸ்டிக் கழிவுகள், 100 சதவீதம் எரிபொருளாக மாற்றப்படும் என, விஞ்ஞானிகள் உறுதியாக உள்ளனர்.
இந்த புதுமை, 'அப்ளைடு எனர்ஜி' இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

கருணை வேலைவாய்ப்பு: சீராய்வு செய்து உத்தரவுகள் வழங்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தலை மை ஆசிரியராக பணி புரிந்தவர் சீனிவாசன். இவர் கடந்த 2001-ஆம் ஆண்டில் பணியில் இருந்தபோது இறந்தார்.
இதனால் கருணை வேலை கேட்டு அவரது மகள் பரணி சக்தி 2006ஆ-ம் ஆண்டில் விண்ணப்பித்தார். இவரது மனுவை நிராகரித்து கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதை ரத்து செய்து கருணை வேலை வழங்க உத்தரவிடக் கோரி அவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். 

இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் பிறப்பித்த உத்தரவு வரு மாறு:-
கருணை வேலை போன்ற சிறப்பு வேலைவாய்ப்பு திட் டங்களை அமல்படுத்தும் சமயத்தில் அரசு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கருணை வேலை வழங்கும் போது சம்பந்தப்பட்ட நபர்களின் விவரங்களை சேகரிப்பதில் அதிகாரிகள் எவ்வித சமரசத்துக்கும் இடம் அளிக்கக்கூடாது.
ஏழ்மை நிலையில் இருப்ப வர்களுக்கு மட்டுமே கருணை வேலை வழங்க வேண்டும். கருணை வேலை என்பது விதிவிலக்கானது. அதை சட்டப்பூர்வ உரிமை யாக யாரும் கோர முடியாது.

இளைஞர்களின் கனவு

லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கின்றனர். அவர் களின் கனவு, கருணை வேலை வழங்கும் திட்டத் தால் பறிபோய் விடக் கூடாது. அரசு வேலையில் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கும் போது ஏழை குடும்பங்களை சேர்ந்த தகுதியான நபர்கள் அரசு வேலைக்கு தேர்வாகும் சூழ் நிலை உருவாகும்.
அரசு ஊழியர் இறந்த தால் உண்மையிலேயே பாதிப்பை சந்திப்பவர் களுக்கு வேலை வழங்கும் திட்டமாக மட்டுமே கருணை வேலை திட்டத்தை பார்க்க வேண்டும்.
தலைமை செயலாளருக்கு உத்தரவு

எனவே தமிழகத்தில் கருணை வேலைவாய்ப்பு திட்டத்தை தலைமை செயலாளர் முழுமையாக சீராய்வு செய்து, அரசி யலமைப்பு கொள்கைக்கு ஏற்ற வகையில் கருணை வேலைவாய்ப்பு திட்டத்தை அனைத்து துறைகளிலும் அமல்படுத்தும் வகையில் உரிய உத்தரவுகள், வழி காட்டுதல்கள், சுற்றறிக் கையை பிறப்பிக்க வேண்டும்.
இந்த உத்தரவுகள், வழி காட்டுதல்கள், சுற்றறிக்கை களை மீறும் அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடைமுறைகளை 8 வாரத் திற்குள் முடிக்க வேண்டும்.
_இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

ஹிந்தி திணிப்போ திணிப்பு


இப்பொழுது மாற்றப்பட்ட பெயர்ப் பலகை. முதலில் இருந்த பெயர்ப் பலகையில் என்ன அலுவலகம் என்பது புரியும்படி தமிழில் இருந்ததைக் கவனியுங்கள்.
 
முதலில் இருந்த பெயர்ப் பலகை
 
சென்னை, ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது மத்திய அரசின் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம்'' இதன் வாயிலில் தமிழில் பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது, ஆனால், தற்போது அந்த நிறுவனத்தின் பெயரையே இந்தியில் பவிஷ்ய நிதி பவன்'' என வைத்துள்ளனர் . நரேந்திர தாமோதர தாஸ் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் பதவி ஏற்றுக் கொண்டதில் இருந்து , அனைத்து திட்டத்தின் பெயர்களையும் இந்தியில் மட்டுமே அறிவித்துக்கொண்டு இருந்த நிலையில் இப்போது , அரசு அலுவலகங்களின் பெயர்களையும் இந்தியில் மாற்றும் நிலைக்கு வந்துள்ளனர்.

அரசு அதிகாரியை தாக்கிய பா.ஜ.க. எம்.எல்.ஏ. கைது

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஆக்கிரமிக்கப்பட் டுள்ள கட்டிடங்களை இடிக்க மாநக ராட்சி  சார்பில் உத்தரவிடப்பட்டது. இதற்கான பணியில் அதிகாரிகள் ஈடு பட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பா.ஜ.க. மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்கியாவின் மகனும் இந்தூர்- 3 தொகுதி சட்டமன்ற உறுப் பினருமான ஆகாஷ் விஜய்வர்கியா தனது ஆதரவாளர்களுடன் வந்து இடிக்கும் பணியை அதிகாரிகள் நிறுத்த வேண்டும் என தடுத்துள்ளார்.

அப்போது  மாநகராட்சி அதிகாரி களுக்கும்  ஆகாஷ் ஆதரவாளருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  பின்னர் கோபமடைந்த ஆகாஷ் அதி காரியை  அனைவரின் முன்னிலையில், கிரிக்கெட் மட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. அத்துடன், தன்னுடைய ஆதரவாளர்களுடன் சேர்ந்து அங்கு இருந்த சக அதிகாரிகளையும்  தாக்கினர். காவல்துறையினர் தடுக்க முயன்ற போதும், தொடர்ந்து அவர் தாக்குதலில் ஈடுபட்டார்.

இதனையடுத்து, தாக்குதல் நடத்திய விஜய்வர்கியா மற்றும் அவரது ஆதர வாளர்கள் மீது அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் தாக்குதல் நடத்தியது, பொதுப் பணியை செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆகாஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 10 பேர் மீது  எஃப்.அய்.ஆர் பதிவு செய்யப்பட்டது.  இதனையடுத்து நக ராட்சி அலுவலரை தாக்கிய ஆகாஷ் விஜய்வர்கியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Wednesday, June 26, 2019

வட நாட்டு அரசியல் தளத்தை புரட்டிப் போட்ட சமுக நீதிக் காவலர் வி.பி.சிங்

"ஆயிரம் ஆண்டு பழைமை நிறைந்த முறையை எதிர்த்து போராடி வருகிறோம் என்பது எமக்குத் தெரியும். அவ்வாறு செய்திடும்போது, நாங்கள் சிக் கலுக்கும், சிரமத்திற்கும் ஆளாவோம் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால், ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் அதற்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்."

இது, 1990-ஆம் ஆண்டு, நவம்பர் 7-ஆம் தேதி, அன்றைய பிரதமர் வி.பி.சிங், தனது அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பின் மீது நடந்த விவாதத்தில் மக்களைவையில் கூறியவை.

அரசியலில் நேர்மை, சமுதாய ஒற்றுமையில் அக்கறை, மதச்சார்பின்மை கொள்கை, சமுக நீதி  இதனைக் காப்பாற்ற அதிக விலை கொடுத்தவர் வி.பி.சிங்.

1986-87இல் நிதி அமைச்சராக இருந்தபோது, வரி ஏய்ப்பு செய்த அம்பானி நிறுவனம் மீதும், அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு நெருக்கமாக இருந்த அமிதாப் பச்சன் ஆகியோர் மீதும் துணிந்து நடவடிக்கை எடுத்தவர். அதன் காரணமாக நிதி அமைச்சர் பதவியில் இருந்து  பாதுகாப்புத் துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.

பீகார், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இதற்கு முன்னர், பார்ப்பனர்களும் உயர் ஜாதி யினரும்தான் முதல்வர் என்ற நிலை மாறி இன்று பார்ப் பனரல்லாதாரும் முதல்வர் என்ற நிலை ஏற்பட்டது எப்படி?

ராம்விலாஸ் பஸ்வான், ராம்தாஸ் அதாவலே போன்ற விளிம்பு நிலை சமுதாயத்தினர் இன்று அரசியல் கட்சி உருவாக்கி, ஆட்சி பீடத்தில் பங்கு பெறுவதும், உதித் ராஜ் போன்ற இந்திய வருவாய் துறையின் முன்னாள் அதிகாரி, பாஜக நாடாளுமன்ற வேட்பாளராகவே புதுடில்லியில் போட்டியிட்ட தும், இதற்கு முன்பு நினைத்து பார்த்திட முடிந்ததா?

இந்த அரசியல் மாற்றமெல்லாம் எப்போது நடந்தது? காங்கிரசிலிருந்து வி.பி.சிங் வெளியேறி, ஜன்மோர்ச்சா அமைப்பை தொடங்கி, பின்னர் ஜனதா தளம் எனும் கூட்டமைப்பை துவங்கி, தேர்தலில் வெற்றி பெற்று 1990-இல் பிரதமர் ஆனதற்கு பின்புதானே.

தேர்தல் நேரத்தில் மக்களிடத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் முதன்மையானது, ஆட்சிக்கு வந்தால், மண்டல் குழு பரிந்துரையை நிறைவேற் றுவேன் என கூறியவாறு, வேலை வாய்ப்பில் பிற் படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளித்திடும் ஆணையை 1990 ஆகஸ்டு 7-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

எதிர்பார்த்தவாறே, பார்ப்பனர்கள் கடுமையான எதிர்ப்பை சாலைகளிலும், ஊடகங்களிலும் தெரிவித்தனர். கட்சியில் தன் செல்வாக்கை மேம்படுத்திக் கொள்வதற்காக, வி.பி.சிங் நாட்டை பிளவு படுத்துவதாக குற்றம் சாற்றினர்.
இவ்வாறு குற்றம் சாட்டுபவர்கள், 16.6.1989-இல் புதுடில்லியில் வி.பி.சிங் பேசிய போதும் சரி, பின்னர், 18.9.1989-ல் சென்னையில் பேசியபோதும், மண்டல் அறிக்கையை தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றும் என்று வி.பி.சிங் சொன்னதை, வசதியாக மறந்து அல்லது மறைத்து தங்களது எதிர்ப்பை ஆக்ரோசமாகக் காட்டினர்.

நாட்டின் பெரும்பான்மை மக்களாகிய சூத்திர மக்களின் உரிமை சாசனமாம் மண்டல் பரிந்துரையை 1980 முதல் முடக்கி வைத்ததை வெளியில் கொண்டு வந்தவர் வி.பி.சிங்.

இதற்காக தனிப் பெருமை எதையும் வி.பி.சிங் கொண்டாட வில்லை. மாறாக, தந்தை பெரியார், பாபாசாகிப் அம்பேத்கர், லோகியா ஆகியோரது கனவை தனது அரசு நனவாக்கியதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இன்று மக்களவையில் பெரியார் வாழ்க என்ற முழக்கத்துடன், தமிழக நாடாளுமன்ற உறுப் பினர்கள் பதவி ஏற்றார்கள் என்றால், அதற்கு முன்னோடியாக 1990-லேயே, நாடாளுமன்றத்தில் தந்தை பெரியாரின் பெயரை முழங்கியவர் வி.பி.சிங்.

அதுமட்டுமல்ல; பின்னர் 1996-இல் அய்க்கிய முன்னணி ஆட்சி அமைத்தபோது, தனக்கு அளிக்கப்பட்ட பிரதமர் வாய்ப்பை ஏற்க மறுத்து, தேவகவுடா பிரதமராகும்வரை, புதுடில்லியில் நுழையாமல் தவிர்த்தவர்; மீண்டும் 1997-இல் தேவகவுடாவிற்குப் பிறகு, அய்.கே.குஜ்ரால் பிரத மராக வழிவகுத்தவரும் வி.பி.சிங் தான்.

தகவல் அறியும் சட்டம், கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்திற்கு அடிகோலியவர்களான அருணா ராய், நிகில் தேவ் ஆகியோர், வி.பி.சிங் மறைவை ஒட்டி விடுத்த இரங்கலுரையில், வி.பி.சிங் வரலாறு, மண்டல் பரிந்துரையை நடைமுறைப் படுத்த போராடியதோடு முடிந்துவிடவில்லை; ஏழை மக்களின் பக்கமும், நில ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் அவர் போராடியது எங்களுக்கு ஊக்கம் அளித்தது; இந்த சட்டங்கள் நிறைவேற வழி வகுத்தது என்று நன்றியோடு நினைவு கூர்ந்தார்கள்.

தனது இறுதி நாள்வரை ஏழை மக்களின் உரிமைக்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குமாகவே தனது வாழ்வுப் பயணத்தை மேற்கொண்டவர். அரசியலில் நேர்மை, ஊழலுக்கு எதிரான நடவடிக்கை, மதச்சார்பின்மை, சமுக நீதி ஆகியவற்றில் உறுதியான செயல்பாடு என போராடிய ஒரு மாமனிதரை, இந்த பார்ப்பன, பனியாக் கும்பலும் அதன் அடிவருடிகளாக திகழும் ஊடகங்களும் என்றைக்காவது பாராட்டியதுண்டா? மாறாக இன்றளவும் புழுதிவாரி தூற்றித்தான் வருகின்றன. இதுதானே இவர்களின் யோக்கியதை.

இதைவிட மிக கொடுமை; வி.பி.சிங் அவர்களாலே அடை யாளம் காணப்பட்டு இன்றளவும் அரசியல் செய்யும் லாலு பிரசாத், நித்திஷ் குமார், முலாயம்சிங், சரத் யாதவ், ராம் விலாஸ் பஸ்வான் போன்றோர், வி.பி.சிங் பற்றி எந்த மூச்சும் விடாமல் இருப்பதுதான்.

ஆனால், சமுக நீதிக்கு முன்னோடியாக இருக்கும் தமிழ் நாடு, என்றும் அவரது நினைவை, சமுக நீதி உணர்வை போற்றுகிறது என்றால், காரணம் இது பெரியார் மண். வி.பி.சிங் பதவி இழந்த நிலையில், அவரை தமிழ் நாட்டிற்கு அழைத்து, மாநிலம் முழுவதும் பிரச்சார பயண ஏற்பாட்டை செய்தவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர். அவரை பல்வேறு மா நாடுகளிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற செய்து, வி.பி.சிங் அவர்களை சமுக நீதிக் காவலர் என மக்கள் மன்றத்தில் அடையாளப் படுத்தியவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அதனால்தான், தன் வாழ் நாள் இறுதிவரையிலும், பெரியார் இயக்கத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும் அளவற்ற அன்பைச் செலுத்தினார் வி.பி.சிங்.

தற்போது மிருக பலத்துடன் மத்தியில் இரண்டாம் முறையாக பதவி ஏற்றுள்ள மோடி அரசின் செயல்பாடுகள், சமுக நீதிக்கு எதிராக, மதச்சார்பின்மைக்கு எதிராக, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக இருக்கின்றது; தேசிய கல்விக் கொள்கை, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று ஒற்றை ஆட்சி, ஒற்றை மொழி, ஒற்றைக் கலாச்சாரம், ஒற்றைத் தலைமை என்ற பாசிச இலக்கை நோக்கி செல்ல முனைகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் மக்கள் விரோத, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயல்பாடுகளை எதிர்க்க, தந்தை பெரியாரின் தத்துவம் ஒன்றுதான் தீர்வு என பிற மாநிலங்கள் எண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில், தமிழகத்தில் மக்கள் தந்த தீர்ப்பு, இத்தகைய எண்ணத்தை வட மாநிலங்களில் ஏற்படுத்தி உள்ளது. தந்தை பெரியாரின் சமுக நீதி, மதச் சார்பின்மை தத்துவத்தை இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்லும் பெரும் பொறுப்பும் கடைமையும், பெரியார் இயக்கத்திற்கும், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கும் உள்ளது.

வி.பி.சிங் எந்த தத்துவத்திற்காக வாழ்ந்தாரோ, எந்தக் கொள்கைக்காக பிரதமர் பதவியை இழந்தாரோ, அந்த சமுக நீதி, மதச்சார்பின்மை கொள்கையை நிறைவேற்ற வி.பி.சிங் பிறந்த நாளில் உறுதி  ஏற்போம். அதுவே, வி.பி.சிங் அவர்களுக்கு நாம் அளிக்கும் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி.
வாழ்க வி.பி.சிங்; வெல்க சமுக நீதி.
-  குடந்தை கருணா

தமிழகத்தில் ஜூலை18-இல் மாநிலங்களவைத் தேர்தல் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான அறிவிப்பு செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜூலை 1-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய ஜூலை 8 கடைசி நாள். வாக்குப் பதிவு தேவையாக இருக்கும் பட்சத்தில் ஜூலை 18-இல் வாக்குப் பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 18 மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் உள்ளன. அவற்றில் டி.ரத்னவேல், வி.மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜூ னன், ஆர்.லட்சுமணன் ஆகிய நான்கு அதிமுக உறுப்பினர்களுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜாவுடைய பதவிக் காலமும் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
 
மேலும், மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டதால், திமுக உறுப்பினர் கனிமொழி தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். அவரது பதவி விலகல்  கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் சார்புச் செயலாளர் பவன் திவான் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் ஜூலை 1-இல் தொடங்குகிறது. வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய ஜூலை 8-ஆம் தேதி கடைசி. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூலை 9-இல் நடைபெறும். வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் ஜூலை 11. வாக்குப் பதிவு தேவை இருப்பின் ஜூலை 18-இல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அதே நாளில் மாலை 5 மணிக்கு நடைபெறும். தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் ஜூலை 22-இல் நிறைவடையும்.

சுதந்திரமாக... வெளிப்படையாக...: மாநிலங்களவைத் தேர்தலை சுதந்திரமாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் நடத்த வேண்டும். தேர்தலை உன்னிப்பாக கவனிக்க பார்வையாளர்களை நியமிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்புச் செயலாளர் பவன் திவான் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவைத் தேர்தலை நடத்தும் பணிகளை சட்டப் பேரவைச் செயலகம் மேற்கொள்ளும். தேர்தல் தொடர்பான அனைத்துப் பணிகளையும் இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் கண்காணிக்க தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நியமிக்கப்பட உள்ளார். தேர்தல் குறித்த அனைத்து உத்தரவுகளும் கண்காணிப்பு அதிகாரி சாகு வழியாக சட்டப் பேரவைச் செயலகத்துக்கு தெரிவிக்கப்படும்.

மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற வேட்பாளர் ஒருவர் 34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும். அதன்படி, பேரவையில் 123  சட்டமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள அதிமுகவும், தனது சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் 108 எம்எல்ஏக்களை வைத்துள்ள திமுகவும் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை இடங்களை சரிபாதியாக பிரித்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் ஜூன் 28-இல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் கிண்டியில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் பா.ஜோதி நிர்மலாசாமி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:
இந்த வேலைவாய்ப்பு முகாம் கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் ஜூன் 28-ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல்  2 மணி வரை நடைபெறுகிறது.
இந்த முகாமில்  35-வயதுக்குட்பட்ட 8-ஆம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, அய்.டி.அய்.,  பட்டயப் படிப்பு,  கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் (மாற்றுத் திறனாளிகள் உள்பட) கலந்து கொள்ளலாம்.
இந்த முகாமில் 10-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 1000-க்கும் மேற்பட்ட   பணியிடங்களுக்கு ஆள்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்தச் சேவைக்கு கட்டணம் ஏதுமில்லை.  வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த வாய்ப்பினை  பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

கீழடியில் 5ஆம் கட்ட அகழாய்வு: செங்கற்களால் ஆன கட்டடம் கண்டறிதல்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 5-ஆம் கட்ட அகழாய்வின் போது, செங் கல் கட்டடம் கண்டறியப் பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச் சந்தை திடலில் கடந்த 2015 மார்ச் முதல் மத்திய தொல் பொருள் ஆய்வு மய்யத்தின் மூலம் மூன்று கட்டமாக அக ழாய்வு நடைபெற்றது. இதில் இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்த செங்கல் கட்டுமான வீடுகள், மண்பாண்டங்கள் உள்பட ஏராளமான பழங் கால பொருள்கள் கிடைத் தன. மேலும் தமிழ்ப் பிராமி எழுத்துகள் பொறிக்கப் பட்ட ஓடுகளும் கிடைத்தன. இதையடுத்து, நான்காம் கட்ட அகழாய்வுப் பணியினை தமிழக தொல்லியல் துறை கடந்த 2018 -ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த ஆய்வில் 5,820 தொல் பொருள்கள் கண்டெடுக்கப் பட்டன. நான்கு கட்ட அகழாய்வில் கிடைத்த 13,638 தொல் பொருள்களும் தொல்லியல் துறை அலுவ லகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில்,  ஜூன் 13-ஆம் தேதி தமிழ் ஆட்சி மொழி மற்றும் கலை பண்பாட்டுத் துறை அமைச் சர் க.பாண்டியராஜன்,5-ஆம் கட்ட அகழாய்வுப் பணியை தொடங்கி வைத்தார். சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் ரூ.47 லட்சம் மதிப்பீட்டில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதில் தரைக்கு கீழே உள்ள கட்டமைப்பை அறியும் பொருட்டு, மும்பையில் உள்ள இந்திய புவி காந்த விசையியல் நிறுவனத்துடன் இணைந்து ஆய்வு செய்யப் பட்டு பணிகள் தொடங்கின.  இதில் நான்கு குழிகளை ஆய்வு செய்த பின், 5-ஆவது குழியினை தோண்டும் பணி செவ்வாய்க்கிழமை நடை பெற்றது. அப்போது, தரையிலிருந்து சுமார் ஒரு அடி ஆழத்தில் செங்கல் கட்டடம் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து தொல்லியல் துறை அலுவலர்கள் கூறிய தாவது:

5-ஆம் கட்ட அகழாய்வுப் பணியில் கடந்த சில நாள்களாக 4 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு பணிகள் நடைபெற்றன.
அதில், ஏற்கெனவே அகழாய்வு செய்த இடத்தில் கிடைத்ததுபோல், மண் பாண்ட ஓடுகள் உள் ளிட்ட ஏராளமான தொல் பொருள்கள் கிடைத்துள் ளன.
செவ்வாய்க்கிழமை 5-ஆவது குழியைத் தோண்டும் போது, சுமார் ஒரு அடி ஆழத்தில் சிதைவு பெறாத நிலையில் செங்கற்களால் ஆன கட்டடம் கண்டறியப் பட்டது. அதுகுறித்த ஆய்வுப் பணிகள் நடை பெற்று வருகின்றன. இந்த இடத்தில் இன்னும் ஏராள மான தொல் பொருள்கள் கிடைக்கும் நம்பிக்கை உள் ளது என்றனர்.

ரோபோவை இயக்கும் ஸ்மார்ட் போன் செயலி கண்டுபிடிப்பு

ஸ்மார்ட் போனின் மூலம், ரோபோவை இயக்கக் கூடிய செயலியை அமெரிக்காவின் புர்டியு பல்கலைக்கழகத்தின் இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் கார்த்திக் ரமணி கண்டுபிடித் துள்ளார்.

இதற்காக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள "விஆர்ஏ' செயலியில் ரோபோ செல்ல வேண்டிய வழித்தடத்தைக் கை விரலால் வரைந்து விட்டு, அந்த ஸ்மார்ட் போனை எடுத்து ரோபோவில் வைத்துவிட வேண்டும். அவ்வளவுதான். நாம் போட்ட வழித்தடத்தில் செய்ய வேண்டிய பணிகளைச் செய்துகொண்டு ரோபோ தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும்.

ரோபோவுக்கு கண்களாகவும், மூளை யாகவும் ஸ்மார்ட் போன்தான் செயல்படுகிறது. ஸ்மார்ட்போன் ரோபோவில் இருக்கும் வரை ரோபோ தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும். இந்த வகையிலான ஸ்மார்ட்போன் மூலம் ரோபோவைப் பயன்படுத்தி செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது, குப்பை அகற்றுவது, பொருள்களை இடம் மாற்றுவது போன்ற பணிகள் வெற்றிகரமாகச் செய்து பார்க்கப் பட்டன.

தொழிற்சாலைகளில் ரோபோக்களை இயக்க இந்த "விஆர்ஏ' செயலி பயன்படும் என்றும் ரோபோக்களுக்காக பெரும் பொருட் செலவு செய்ய இயலாத சிறு தொழிற் நிறுவனங்களுக்கு இந்த செயலிகள் பயன்படும் என்றும் ஆராய்ச்சியாளர் கார்த்தி ரமணி தெரிவித்துள்ளார்.

நாட்டில் புழக்கத்தில் உள்ள பணம் ரூ.21.71 லட்சம் கோடி

நாட்டில் 2019ஆம் ஆண்டு மே இறுதி வரை யிலான காலகட்டத் தில் ரூ.21.71 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில் உள் ளன.

2016-இல் மேற்கொள்ளப்பட்ட  பணமதிப்பிழப்புக்கு முன்பு இருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் 22 சதவீதம் அதிகரித்துள்ளதாக  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு, கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி வரை ரூ.17,74,187 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. 2019ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி நிலவரப்படி, 21,71,385 கோடி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. இது 22 சதவீதம் அதிகரிப்பாகும்.
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பழைய 1000, 500 ரூபாய்  நோட்டுகளை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதற்கு பதிலாக புதிதாக 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தன.

Tuesday, June 25, 2019

ரிசர்வ் வங்கி இணையதளத்தில் வங்கிகள் குறித்து புகார் தெரிவிக்க புதிய வசதி

வர்த்தக வங்கிகள், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மீதான புகார்களை தெரிவிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி புதிய வழிமுறை ஒன்றை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் ‘புகார் மேலாண்மை அமைப்பு’ (சி.எம்.எஸ்.) என்ற புதிய  மென்பொருள் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நேற்று தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலகம் அல்லது ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு தீர்வு காணப்படும். வங்கிகள் தொடர்பான வாடிக்கையாளர்களின் அனுபவத்தை சிறப்பாக மாற்றவும், அவர்களது குறைகளை தீர்ப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த செயலி மூலம் புகார் தெரிவித்தவுடன் தானாகவே ஒப்புதல் தகவல் கிடைக்கும். தங்களின் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை உள்ளிட்ட நிலைத்தகவலும் பின்னர் அதில் வெளியிடப்படும். தங்களின் புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் வாடிக்கையாளர்களுக்கு திருப்தி இல்லை என்றால் மேல்முறையீடு செய்யவும் அதில் வசதி செய்யப்பட்டு இருப்பதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கிய சொத்துகளின் மதிப்பு ரூ.34 லட்சம் கோடி



புதுடில்லி, ஜூன்25, இந்தியாவிலும், வெளிநாடு களிலும் இந்தியர்கள் பதுக் கிய கணக்கில் காட்டாத சொத்துகளை மதிப்பிடு மாறு தேசிய பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில், தேசிய நிதி மேலாண்மை நிறுவனம், தேசிய பொது கொள்கை மற்றும் நிதி நிறுவனம் ஆகிய 3 நிறுவனங்களை  கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய நிதி அமைச்சகம் கேட்டுக் கொண்டது. அதன்படி நிறு வனங்களும் ஆய்வு செய்து  மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தன. இந்த அறிக் கைகளை ஆய்வு செய்ய காங்கிரஸ் உறுப்பினர் எம்.வீரப்பமொய்லி தலை மையில் நிதிக்கான நாடாளு மன்ற நிலைக்குழு அமைக்கப் பட்டது.
அக்குழு, தனது அறிக்கை யை கடந்த மார்ச் 28ஆம் தேதி மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அதன்பிறகு நாடாளுமன்றம் கலைக்கப் பட்டதால், அந்த அறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இப்போது நாடாளுமன்ற நிலைக்குழு தாக்கல் செய் துள்ள அறிக்கையில், 1980 _2010ஆம்  ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், இந்தியர்கள் வெளிநாடு களில் பதுக்கிய கணக்கில் காட்டாத சொத்துகளின் மதிப்பு ரூ.26 லட்சத்து 88 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.34 லட்சத்து 30 ஆயிரம் கோடி வரை இருக்கும் என்று தேசிய பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
தேசிய பொருளாதார மேலாண்மை நிறுவனம், 1990ஆம் ஆண்டில் இருந்து 2008ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்ற இந்தியர்களின் சட்ட விரோத சொத்து களின் தற்போதைய மதிப்பு ரூ.9 லட்சத்து 41 ஆயிரத்து 837 கோடி இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. தேசிய பொதுக்கொள்கை மற்றும் நிதி நிறுவனம், 1997ஆம் ஆண்டில் இருந்து 2009ஆம் ஆண்டு வரை வெளிநாடு களுக்கு சென்ற இந்தியர் களின் சட்டவிரோத சொத் துகளின் மதிப்பு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2 சதவீதத்தில் இருந்து 7.4 சதவீதம் வரை இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.  பெரும்பாலான சொத்துகள் ரியல் எஸ்டேட், சுரங்கம், மருந்துகள், பான் மசாலா, குட்கா, புகையிலை, தங்கம், வெள்ளி, திரைப்படம், கல்வி ஆகிய துறைகளில் முதலீடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
கருப்பு பண உருவாக்கம் மற்றும் கருப்பு பண குவிப் பை மதிப்பிட நம்பகமான வழிமுறை இல்லை என்றும், இந்த மதிப்பீடுகளை செய்ய ஏற்றுக்கொள்ளப்பட்ட துல்லியமான வழிமுறை இல்லை என்றும் அந்த நிறுவனங்கள் கூறியுள்ளன. யூகங்கள் அடிப்படையிலே யே இந்த மதிப்பீடு செய் யப்பட்டுள்ளது. 3 அறிக்கை களிலும் ஒருமித்த தன்மை இல்லை. நேரமின்மை காரணமாக, இந்த நிலைக் குழுவால் முழுமையாக ஆய்வு செய்ய முடியவில்லை. எனவே, இதை முதல்கட்ட அறிக்கையாகவே கருத வேண்டும்.  இருப்பினும், இவற்றை அடிப்படையாக கொண்டு, வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணம் மற்றும் கணக்கில் காட்டாத சொத் துகளை மீட்கும் நடவடிக் கைகளை மத்திய நிதி அமைச்சகம் விரைவுபடுத்த வேண்டும் என்று நாடாளு மன்ற நிலைக்குழு எதிர்பார்க் கிறது என தெரிவிக்கப் பட்டுள்ளது.

மோடி ஆட்சியில் பதவி விலகல் படலம் தொடர்கிறது

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் அரசுட னான கருத்து வேறுபாட் டால் பொருளாதார நிபுணர்கள் பதவி விலகுவது தொடர்ந்து வருகிறது.  ரிசர்வ் வங்கி ஆளுநராக 2013 முதல் 2016 வரை ரகு ராம்ராஜன் பதவி வகித்தார். அவருக்கும் மத்திய அரசுக் கும் இடையே கருத்து வேறு பாடுகள் இருந்தன.  அவ ரைத் தொடர்ந்து, ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப் பேற்ற உர்ஜித் படேல், தனது பதவிக்காலம் நிறை வடையும் முன்பே கடந்த ஆண்டு டிசம்பரில் பதவி விலகினார்.
இதனிடையே, நிதி ஆயோக் துணைத் தலைவ ராக இருந்த அரவிந்த் பன காரியா கடந்த 2017 ஆகஸ் டிலும்,  தலைமை பொருளா தார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் கடந்த ஆண்டு ஜூனிலும் பதவி விலகினர். பிரதமருக்கான பொருளாதார ஆலோ சனை குழுவில் இடம் பெற்றிருந்த பகுதி நேர உறுப்பினர் சுர்ஜித் பல்லா,  கடந்த ஆண்டு டிசம்பரில் பதவி விலகினார். இந்நிலையில் ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் விரல் ஆச்சாரியா தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். அவரது பதவிக்காலம் முடிவ டைய இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில் அவர் பதவி விலகியுள்ளார்.

அரசுடனான கருத்து வேறுபாடு

ரிசர்வ் வங்கியின் தன் னாட்சியை வலியுறுத்தியும், மத்திய நிதியமைச்சகத்தை விமர்சித்தும் பல்வேறு தரு ணங்களில் இவர் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற் படுத்தின. கடந்த அக்டோ பரில் நிகழ்ச்சியொன்றில் பேசிய இவர், மத்திய அரசின் கொள்கைகள் உருவாக்கமா னது, குறுகிய கண்ணோட்டமும் அரசி யல் சிந்தனைகளும் கொண் டதாக உள்ளது என்று தெரிவித்தார். ரிசர்வ் வங்கி கையி ருப்புத் தொகை மீதான அதிகாரம் யாருக்கு உள்ளது என்பது உள்ளிட்ட பல் வேறு விவகாரங்களில் மத் திய அரசுக்கும் ரிசர்வ் வங் கிக்கும் கருத்து வேறுபாடு கள் நிலவியதையும் ஆச் சார்யாவின் கருத்துகள் அம் பலப்படுத்தின. இதே போல், வட்டி விகிதங்கள் நிர்ணயத் திலும் இவர் சில எதிர்ப்பு களை பதிவு செய்திருந்தார்.

'துக்ளக்' ஏட்டிற்கு கடும் எச்சரிக்கை!

இன்று காலை வெளிவந்துள்ள குருமூர்த்தி அய்யர் அண்ட் கோவின் 'துக்ளக்' ஏட்டில், கீழ்க்காணும் ஒரு அறிவிப்பு வெளிவந்துள்ளது.
"நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் "பெரியார் வாழ்க" என்று கோஷ மிட்டுள்ளனர். தவிர, திமுக தரப்பில் இருந்து சமீப காலமாக, இது பெரியார் மண், திராவிட பூமி என்று கீறல் விழுந்த கிராமபோன் ரிக்கார்டு மாதிரி திரும்பத் திரும்ப குரல்கள் ஒலிக்கின்றன. இதற்குப் பதில் தரும் விதமாக பா.ஜ.க. தரப்பில் இருந்து ஓரிருவர், பெரியார் பற்றி திமுக ஆரம்ப காலத்தில் செய்த விமர் சனங்கள், தலித்துக்கள் பற்றிய பெரியாரின் பார்வை - ஆகியவற்றை மேற்கோள் காட்டி, ஊடக விவாதங் களில் கருத்துக்களை முன் வைக்கத் துவங்கியுள்ளனர். இந்த வகையில் பெரியாரின் 'மறுபக்கம்' வெளிப்படுவது வரவேற்புக்குரியதே" - இதுதான் குரு மூர்த்தி அவர்களின் விஷ உருண்டை!
"தந்தை பெரியார் எப்போதும் ஓடும் வற்றாத லட்சிய ஜீவநதி"; அது உங்கள் "புனித(?) கங்கையைப்" போல தூய்மைப் படுத்த பல்லாயிரக்கணக் கான கோடி மக்கள் வரிப் பணத்தை நாசமாக்க  வேண்டியது அல்ல!
அட, நானே அறிவாளி வகையறாரே,
பாதை இல்லாத ஊருக்கெல்லாம் ஈரோட்டுப் பாதை போட்டு மானமும், அறிவும் மறக்கப்பட்ட, மறுக்கப்பட்ட மக்களுக்கு அதை மீட்டுத் தந்த போர்த் தலைவர் - தந்தை பெரியார். காற்றை விதைத்து, புயலை அறுவடை செய்யப் போகிறீர்கள்.
இனமான இறுதிப் போர் இப்போது - அதுவும் அறப்போர்; அறிவுப் போர்!
அந்த வகையில் நீங்கள் எவ்வளவு "சிண்டு முடித்தனம்", சீலமற்ற சிறுமை நிறைந்த கயமைத்தனத்தை - உங்கள் கூட்டம் முதல் கட்டவிழ்த்து விட்டால் அது ஆரிய - திராவிடப் போர் என்ற பண்பாட்டு உரிமைப் போருக்குப் புதிய ஆயுதங்களை எங்களுக்கு வழங்கிய தாகவே பொருள்!
ஆழந் தெரியாமல் காலை விட்டு, அந்த  நதியைத் தடுக்கிறோம் என்று அசட்டுத்தனத்தோடும், அறியாமை கலந்த ஆணவத்தோடும் இறங்கினால்,  அந்த உணர்ச்சி வெள்ளம் உங்களை அடித்துச் செல்லும் என்பது புரியும்.
பல முக்கிய பார்ப்பனரின், பா.ஜ.க. போற்றும் ஒப்பனை வீரர்களின் முகமூடியைக் கழற்றி, உண்மை முகம் காட்டிட நமக்கு அது உதவியதாகவே அமையும். எதிர்கொள்ள, பதிலடி தர, தயாராக காத்திருக்கிறோம் - காத்திருக் கிறோம்!!

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த சிறுமி கொலைக்கு உ.பி. அரசுதான் காரணம்

‘உத்தரப் பிரதேசத்தில் தலித் சிறுமி கடத்தி கொலை செய்யப்பட்டதற்கு மாநில அரசின் அலட்சியம்தான் காரணம்,’ என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. சமீபத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ‘உத்தரப் பிரதேசத்தில் பாலியல் பலாத்கார சம்பவங்கள், கொலைகள் அதிகரித்து விட்டன.
அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின் றனர், ஆனால், மாநில அரசு இதனை பற்றி கவலைப்படுவது இல்லை’ என்று குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில், உன்னாவ் கிராமத்தில் வீட்டிற்கு வெளியே தனது குடும்பத் தினருடன் தூங்கிக் கொண்டிருந்த  12 வயது தலித் சிறுமி கடந்த வியாழன்று இரவு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு அரசின் அலட்சியப் போக்குதான் காரணம் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி யுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘அஜய் சிங் பிஸ்த் (உபி. முதல்வர் யோகி ஆதித்யாநாத்தின் இயற்பெயர்) ஆட்சியானது தலித்து களுக்கு எதிரான அட்டூழியங்கள், கொடூரமான குற்றங்களுக்கு ஒப்பாகி இருக்கிறது. உன்னாவில் 12 வயது சிறுமி கடத்தப்பட்டு செங்கலால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அவமானகரமானது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட் டது தெளிவாகிறது.
இது, காட்டாட்சியா?’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காவல் துறை அதிகாரி கூறுகையில், “கடத்தி கொல்லப்பட்ட சிறுமி, தலித் சமு தாயத்தை சேர்ந்தவர்.
அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா? இல்லையா? என்பது உடற் கூராய்வுக்கு பிறகே தெரியும்,” என்றார்.

Friday, June 14, 2019

இந்திக்கு இங்கே இடமில்லை!

(தமிழகத்தில் இனி எதிலும் இந்தி இல்லை என்ற தீர்மானத்தை நிறைவேற்றி, 1968 ஜனவரி 23ஆம் தேதி சட்டமன்றத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை இங்கே தரப்படுகிறது.)

நேற்றைய முன்தின தொடர்ச்சி...

இரும்பாலைகளை வடநாட்டி லேயே பிலாயிலும், துர்க்காபூரிலும், ரூர்க்கேலாவிலும் ஆரம்பித்தார்கள்; அதுவும் நம்முடையதுதானே என்று இங்கு நம்மை நாமே சமாதானம் செய்து கொண்டோம்.
நம்முடைய சேலம் இரும்பாலைத் திட்டம் தூங்கிக் கொண்டிருப்பதை நாம் உணராதவர்கள் அல்ல; பெரும் பெரும் தொழிற்சாலைகளை திடீர் திடீர் என்று அந்தப் பகுதிகளிலேயே ஆரம்பித்துக் கொண்டார்கள். இருந் தும் அந்தப் பகுதியும் நம்முடைய தேசத்தைச் சேர்ந்ததுதானே என்று நம்மையே நாம் ஆறுதல் செய்து கொண்டோம், காண்ட்லா துறை முகத்தை ஏற்படுத்திக் கொண்டு, அதை சுங்கத் தீர்வை இல்லாத துறைமுகம் என்று அறிவித்துக் கொண்டார்கள். நம்முடைய தூத்துக் குடி துறைமுகம், ஆழ்கடல் ஆக்கப் படும் சேது சமுத்திரத் திட்டம் ஆகியவை ஒன்றாக இணைக்கப்பட்டு நிறைவேற்றப்படவேண்டும் என்று நாமும் 15 வருடங்களாகக் கோரி வருகிறோம்.
இருந்தும் அது நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. அதைச் செயலாற்ற முடியாத பொறுமையோடு நாம் இருந்து கொண்டி ருக்கிறோம். எதற்கும் ஓர் எல்லை உண்டு!
இந்தி பேசும் பகுதியிலிருக் கிற மாணவர்கள் இரு மொழி கள் மட்டுமே கற்கவேண்டியவர் களாயிருக்கும் பொழுது, இந்தி பேசாத பகுதி மாணவர்கள் மூன்று மொழி கற்க வேண்டி யிருப்பது வேறு பாடானதாகும். எனவே இந்தி பேசாத பகுதி மாணவர்கள் மூன்று மொழி படிக்குமாறு கட்டாயப்படுத்தப் படக்கூடாது என்று இந்த மன்றம் பரிந்துரைக்கிறது
வறுமைக்குத்தான் எல்லை இல்லை என்று சொல்லி யிருக்கிறார் கள். மற்ற எல்லாவற்றுக்கும் எல்லை உண்டு. எல்லை கடவாமல் நாமும் பொறுமையோடுதான் இருந்து கொண்டு வருகிறோம். பொறு மையின் கடைசி எல்லைக்கே - அந்த எல்லையின் விளிம் புக்கே நாம் வந்துவிட்டோம் என்பதை எப்படித் தெரிவிப் பது? இதுவரை நம்முடைய துயரத்தையும் துன்பத்தையும், மனக்கொதிப்பையும் உணரா மல் இருந்து கொண்டிருக்கிற அந்தப் பகுதியில் உள்ள மக்க ளுக்கும் உணர்த்த வேண்டும் என்பதற்காகத்தான்
மும்மொழித் திட்டத்தை இரு மொழித் திட்டம் என்று மாற்று கிற முறையில் இந்தி அகற்றப் படும் என்ற முறையில் தீர் மானத்தைக் கொடுத்திருக் கிறோம்.
நீ வேளைக்கு ஒரு பேச்சுப் பேசுகிறாய்! முன்னாலே மும் மொழித் திட்டத்தை ஏற்றுக்கொண்டாய், இப்போது மும் மொழித் திட்டத்தை எதிர்க்கிறாய் - என்பதாகச் சொன் னார்கள். அவர்களுக்கு இருக்கிற நோக்கம் எல்லாம், நான் ஒரு நிலை யான கொள்கையைக் கொண்டவன் அல்ல. திடமான உறுதி படைத்தவன் அல்ல, எந்த எந்த நேரத்தில் எதை எதைப் பேசினால் சாதகமோ அதை அதைப் பேசுகின் றவன் என்ப தாகப் பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதுதான். நான் கடந்த முப்பத்தைந்து வருடங்களாக பொதுமக்களிடத் தில் பழகி வருகிறேன். இனி மேல் இவர்களுடைய நற்சாட்சிப் பத்திரத்தை - இவன் உறுதி யாக இருப்பவன்தான் - என்ப தான நற்சாட்சியைப் பெற்றுப் போக வேண்டும் என்பதில்லை. இந்திய அரசியல் சட்டத்தினு டைய 17வது பிரிவை நீக்க வேண்டுமென்று பேசுவது, புரட்சிகரம் என்று இங்கு கருதப் படுகிறது. 1958ஆம் ஆண்டிலே மார்ச் மாதம் 11 ஆம் தேதியன்று.
ஆங்கிலம் மத்திய அரசின் ஆட்சி மொழியாக காலவரம் பின்றி நீடிக்கும் வகையில் அரசியல் சட்டத்தின் 17வது பிரிவு தகுந்த முறையில் திருத் தப்படவேண்டும் என்று இம் மன்றம் தனது உறுதியான கருத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
- என்ற தீர்மானத்தை எங்கள் கட்சித் தோழர் திரு.அன்பழகன் கொடுத்து, அது வாக்குக்கு விடப்பட்டு, 14 பேர்கள் அதை ஆதரித்தும், 121 பேர்கள் எதிர்த்தும் வாக் களித்தார்கள். 1958 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11 ஆம் தேதி மற்றொரு தீர்மானமும் போடப்பட்டது.
இந்தி பேசும் பகுதியிலிருக் கிற மாணவர்கள் இரு மொழி கள் மட்டுமே கற்கவேண்டியவர் களாயிருக்கும் பொழுது, இந்தி பேசாத பகுதி மாணவர்கள் மூன்று மொழி கற்க வேண்டி யிருப்பது வேறு பாடானதாகும். எனவே இந்தி பேசாத பகுதி மாணவர்கள் மூன்று மொழி படிக்குமாறு கட்டாயப்படுத்தப் படக்கூடாது என்று இந்த மன்றம் பரிந்துரைக்கிறது இந்தத் தீர்மானத்தைக் கொடுத்தவர் நம்முடைய நண்பர் எம்.பி.சுப் பிரமணியம் அவர்கள்.
அதுமட்டுமல்ல; மத்திய சர்க்கார் பரீட்சையிலே தமிழ், ஒரு மொழியாக ஏற் றுக் கொள்ளப்பட வேண்டு மென்று தீர்மானம் நாங்கள்தான் முதலில் கொடுத்தோம். யாரோ பேசும்பொழுது குறிப்பிட்டார்கள். திரு.சங்கரய்யா என்று நினைக் கிறேன் - பொதுமக்கள் போராட்டத்திற்குப் பிறகுதான் இந்த நிலை வந்தது என்று குறிப்பிட்டார்கள். 1965ல் ஆகஸ்டு மாதம் 5ஆம் தேதி - (நான் அப்பொழுது இல்லை) என்னு டைய நண்பர்கள் எதிர்க்கட்சி யிலே இருந்த நேரத்திலே இப்படி யொரு தீர்மானம் தரப்பட்டது -
`யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வுகளை எழுது வதற்கான மொழிகளில் ஒன் றாக தமிழையும் ஆக்கவேண் டியது பற்றி மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டுமென்று மாநில அரசிடம் இந்த மன்றம் பரிந்துரைக்கிறது.
அதற்கு ஆதரவு - 34, எதிர்ப்பு 77, ஆகவே 17வது பிரிவு திருத்தப்பட வேண்டுமென்பதையும், தமிழ், பரீட்சை மொழியாக ஆகவேண்டும் என்பதையும், மும்மொழித் திட்டம் தங்களுடைய மாணவர்களுக்கு கேடு செய்யும் என்பதையும் இன்றல்ல நேற்றல்ல, 1958-லிருந்து வலியுறுத்தி எடுத்துக்காட்டியிருக்கிறோம்.
என்.சி.சி.யில் இந்தி ஆணைச் சொற்கள் பயன்படுத்தப் படுவதால் மேலும் இந்தி மறைமுகமாகவும் திணிக்கப்படுவ தால், இந்திச் சொற்களை நீக்க வேண்டுமென்றும், அப்படி நீக்காவிட்டால் என்.சி.சி. அணிகளை கலைத்துவிட வேண்டு மென்றும் சொல்கிறோம்.
தொடர்பு மொழி வேண்டாமா என்று கேட்டார்கள்.
பரந்த இந்தியாவிலே ஒரு பகுதி மக்களுக்கும் இன்னொரு பகுதி மக்களுக்கும் எந்த எந்த, அளவில், எந்த எந்த முறையில், எந்த எந்த இடத்தில் தொடர்பு இருக்கும் என்று கருதுகிறீர்கள்?
ஒரு வீட்டிலே இருக்கிறவர்கள் தொடர்பு இல்லாமல் இருக்கக்கூடாது. மாதக்கணக்கில் மாமியாரும் மருமகளும் பேசவில்லையென்றால், அதனாலே கணவனுக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை. கன்னியாகுமரியி லிருந்து 20 பேர்கள் கிளம்பி கான்பூருக்குப் போய் அங்கே பாஷை தெரியாமல் கதறுகிறார்கள் என்று கருதுகிறீர்களா?
- நன்றி: 'முரசொலி', 13.6.2019

திருநெல்வேலிச் சீமையில் உள்ள கிராமத்திலிருப்பவர்கள் சென்னைப் பட்டணத்தைப் பார்த்ததேயில்லை என்பதை நீங்கள் அறிய மாட்டீர்களா? சென்னை கடற்கரையைப் பார்க்க முடியாமல் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாததா ? தொடர்பு, தொடர்பு என்று சொல்லுகிறீர்கள். திரு.ஹாண்டே அவர்கள் சொல்கிற தொடர்பு புரிகிறது. படித்தவர்களிடையே உள்ள தொடர்பு அது - புரிகிறது. நிர்வாகம் நடத்துகிறவர்களிடையே தொடர்பு, அதுவும் புரிகிறது. அரசியல்வாதிகளி டையே தொடர்பு, அதுவும் புரிகிறது. வியாபாரிகளிடையே தொடர்பு. அதுவும் புரிகிறது. யாத்திரிகர்களிடையே தொடர்பு. அதுவும் புரிகிறது. 100க்கு எத்தனை பேர் இங்கே திண்டாடுகிறீர்கள்? எந்தத் தவிப்பு ஏற்பட்டு அவர்கள் யாரிடத்திலே மனுப் போட்டார்கள்.
ஏதோ இங்கிருந்து அணி அணியாக அங்கே செல்வதைப் போலவும், அங்கி ருந்து அணி அணியாக இங்கு வருவதைப் போலவும், அவர்கள் எல்லாம் மொழி இல்லாத காரணத் தால் திகைத்துக் கொண் டிருக்கிறார்கள் என்ற முறையிலே கற்பனை செய்து கொள்கிறார்களே தவிர வேறு ஒன்றும் இல்லை .
தொடர்பு மொழி என்று பேசுகிறீர்களே வாருங்கள் 1937க்கு! அப்பொழுது இந்திக்கு தொடர்பு மொழி என்று பெயர். மதிப்பிற்குரியவர், எங்களுடைய நண்பர் - எல்லாத் தகுதிகளும் உடைய வர் என்று ஒப்புக் கொள்ளப்பட்டவர் - பட அளவிலே இங்கே பார்த்துக் கொண்டிருக் கிறோமே அவர்- ராஜாஜி அவர்கள், அன்று இந்தியை தேசிய மொழி என்று சொன்னார் கள், கட்டாயமாகப் படிக்க வேண்டுமென் றார்கள். அதைப் படிக்காவிட்டால் இந்தியனாக முடியாது என்றார்கள். அதைப் படித் தால்தான் இந்தியாவிலே வாழலாம் என்றார்கள். அதைப் படிக்காதவன் தேசத்துரோகி என்றார்கள். அப்போதுதான் மதிப்புமிக்க ம.பொ.சி. அவர்கள் சொன்னபடி நாங்கள் எதிர்த்தோம். என்னை முதல் முதலாகச் சிறைச் சாலைக்கு அனுப்பியவரும் ராஜாஜிதான்! முதல் முதலாக மந்திரி பதவியை ஏற்றுக் கொள்ளும் படியான நிலையை உண்டாக்கியவரும் ராஜாஜிதான் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறைச்சாலைக்கு அனுப்பினார் என்பதால் கோபமோ, மந்திரி பதவியை அடையச் செய்தார் என்பதால் அவரிடத்தில் அளவு கடந்த சந்தோஷமோ எனக்கு இல்லை. ஏனென்றால் அதை அவர் விரும்பவில்லை .
பிறருடைய கோபம், பிறருடைய சந்தோஷம் இவைகளை வைத்துக் கொண்டு அவர் தம்முடைய கொள்கைகளை வகுத்துக் கொள்ளவில்லை என்பது, என்னைவிட அவரிடத் தில் நெருங்கிப் பழகியவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
இதே மன்றத்தில் 1958இல், "ராஜாஜி புளியமரம்; அந்த நிழலிலே எதுவும் வளராது; அண்ணாதுரை நீ போகாதே'' என்றார்கள். அந்த மரநிழலிலே மலர்ந்து இவ்வளவு பெரிய தேக்கு மரங்களாகிவிட்ட பிறகு என்னை மட்டும் அங்கு போக வேண் டாம் என்கிறீர்களே; ஏதோ நான் போனேன், நல்லபடியாகத்தான் வந்தேன், (சிரிப்பு) 1957ஆம் ஆண்டு தேசிய மொழி என்று கருதப்பட்ட இந்தி, புகுத்தப்பட்டது.
மகாத்மா காந்தியின் தேசிய நிர்மாணத் திட்டங்களில் ஒன்று அது. அப்போது நான் எட்டாவது - ஒன்பதாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது “இந்தி தமிழ் சுயபோதினி” என்ற புத்தகம் இருக்கும், அதன் விலை ஆறணா அல்லது எட்டணா இருக்கும். அதைக் கையில் வைத்துக் கொண்டிருப்பதும், ஒரு காலணாவில் ஓட்டை போட்டு ஒரு குச்சியைச் சொருகி தக்கிளி வைத்துக் கொண்டிருப்பதும் நம்மாலான தேசபக்தி என்று நினைத்து மாணவர்கள் எல்லாம் வைத்துக் கொள்வார்கள்; நானும் வைத்துக் கொண்டேன். அன்றிலிருந்தே இந்திக்கு எதிர்ப்புக் காட்டப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டுப் புலவர்கள், பெரும் பேராசிரியர்கள், மறைந்த சோமசுந்தர பாரதியார், மறைந்த சேதுப்பிள்ளை, மறைந்த உமா மகேசுவரம்பிள்ளை, மறைந்த மறைமலையடிகள், இன்றும் நல்லவேளையாக நம்மிடையே இருந்து வரும் பெரியார் ராமசாமி ஆகிய இப்படிப்பட்டவர்கள் எல்லாம் சேர்ந்து, அந்த நாட்களில் இந்தியை எதிர்த்து ஆயிரம்பேர் சிறை சென்றார்கள்.
அதிலே இரண்டு பேர் மருத்துவமனையில் இறந்துபட்டார்கள். அதற்குப் பிறகு கட்டாய இந்தி என்பது எடுபட்டு, விருப்பப் பாடம் என்று ஆயிற்று. விருப்பப் பாடம் என்று ஆனபின் இந்தி ஆபத்து இல்லை யென்று வேறு வேலைகளைப் பார்த்தோம்.
தமிழ்நாட்டுப் புலவர்கள், பெரும் பேராசிரியர்கள், மறைந்த சோமசுந்தர பாரதியார், மறைந்த சேதுப்பிள்ளை , மறைந்த உமா மகேசுவரம்பிள்ளை , மறைந்த மறைமலையடிகள். இன்றும் நல்லவேளையாக நம்மிடையே இருந்துவரும் பெரியார் ராமசாமி ஆகிய இப்படிப்பட்டவர்கள் எல்லாம் சேர்ந்து, அந்த நாட்களில் இந்தியை எதிர்த்து ஆயிரம் பேர் சிறை சென்றார்கள்.
ஓமாந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்கள் முதலமைச்சராக வந்தபோது மறுபடியும் இந்தி புகுத்தப்பட்டது. நாங்கள் மறுபடியும் போராட்டத்தைத் துவக்கினோம். அந்தப் போராட்டத்தில் பல கஷ்டங்களை மேற்கொண்டோம். பலர் சிறைச்சாலைக்குச் சென்றார்கள். பின்னர் இந்திக்கு இந்திய அரசியல் அரங்கத்தில் தேசிய மொழி என்று சொல்வதற்குப் பதிலாக, ஆட்சிமொழி என்ற பெயர் கொடுக்கப்பட்டது.
'ஆட்சி மொழி' என்றால் இந்திக்காரர்கள்தானா எங்களை ஆளவேண்டுமென்ற அரசியல் கிளர்ச்சி எழுந்த காரணத்தால், ஆட்சிமொழி என்பதையும் மாற்றி இது ஆட்சி மொழி என்பது கூட அல்ல; இது இணைப்புமொழி” என்ற பெயர் கொடுக்கப்பட்டது.
இப்போது பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் இந்தி மட்டுந்தான் இணைப்பு மொழி என்று சொல்லவில்லை.
இந்தி இந்தியாவுக்குள் இணைப்பு மொழி, ஆங்கிலம் உலகத்திற்கு இணைப்பு மொழி என்று இணைப்பு மொழியை இரண்டாகச் சொல்லுகிறார்கள். இந்த வார்த்தை மாற்றங்கள் எல்லாம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்தைக் குறிப்பதாகும். வெறும் வார்த்தை ஜாலங்கள் அல்ல.
நாங்கள் அதற்காகப் பாடுபட்டவர்கள் என்ற முறையில் நொந்து போனவர்கள் என்ற முறையில் - கொடுமைகளைத் தாங்கிக் கொண்டவர்கள் என்ற வகையில் இன்றைய தினம், “இந்திப் பாடம் இனி இல்லை" என்று நான் தீர்மானத்தைப் படித்தபோது, அதிலே எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை என்னால்தான் உணர்ந்து கொள்ளமுடியுமே தவிர, அதற்காகக் கஷ்டப்படாதவர்களால் உணர்ந்து கொள்ளமுடியாது
இந்திய அரசியல் சட்டத்தில் இந்தி புகுத்தப்பட்டது முதற்கொண்டு எதிர்த்துக் கொண்டு வருகிறோம்.
அதுபற்றி நேரு உறுதிமொழி அளிக்க வேண்டுமென்பதை வற்புறுத்துவதற்காக அப்போது வர இருந்த குடியரசுத் தலைவருக்குக் கருப்புக்கொடி காட்ட வேண்டும். நம்முடைய மனக் கொதிப்பைத் தெரிவிக்க வேண்டுமென்று தீர்மானம் போட்டு உடனே அப்போது என்னோடு இருந்த சம்பத், குடியரசுத் தலைவரைப் பார்த்து உறுதிமொழி தருவதாகச் சொல்லிய பிறகு, நாங்கள் அதற்கு மேல் அந்தக் காரியத்தில் ஈடுபட வேண்டாமென்று முடிவு செய்தோம்.
அதற்குப்பிறகு நேருவினுடையஉறுதி மொழி சீனப் படையெடுப்பு நேரத்தில் எல்லாப் பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டது.
அப்போது கொண்டு வரப்பட்ட சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சென்னைக் கடற்கரையில் கூட்டம் கூட்டப்பட்டது. அதிலே கலந்து கொள்வதற்காக நான் டில்லியில் இருந்து விமானம்மூலம் வந்தேன்.
ராஜாஜியும் நானும் சேர்ந்து கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறபோது அவர்கள் சொன்னார்கள் அப்போது எனக்கும் ராஜாஜி அவர்களுக்கும் இன்று இருக்கிற நெருக்கம் கூட இல்லை பலபேர் ஆச்சரியப்படுகிறார்கள்:
''நானும் காமராஜரும் ஒன்றாக உட்கார்ந்திருக்க வேண்டியிருக்க நானும் அண்ணாத்துரையும் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்திருப்பதைக் கண்டு ஊரே ஆச்சரியப்படுகிறது. ஆனால் அதிலே உண்மையான பாடம் இருக்கிறது. இந்திப் பிரச்சினையில் காமராஜர் பிரிய வேண்டி வந்தது. ஆங்கிலம் எங்கள் இருவரையும் ஒன்றாகச் சேர்த்தது" என்று ராஜாஜி அவர்கள் சொன்னார்கள். அப்போது முதலமைச்சராக இருந்த பக்தவத்சலம் அவர்கள், நாங்கள் எல்லாம் 'மே' - 'ஷெல்' என்பதற்காகத் தகராறு இட்டுக் கொண்டிருந்த நேரத்தில் டில்லிப் பட்டணத்திற்கு வந்து பத்திரிகை நிருபர்களைச் சந்தித்தபோது 'மே' என்று இருந்தாலே போதும்; பரிபூரண திருப்தியை அளிக்கிறது என்று சொல்லி விட்டுப் போய்விட்டார்கள்.
- நன்றி: 'முரசொலி', 14.6.2019

தமிழ்நாட்டில் திட்டமிட்ட ஹிந்தி திணிப்பு தமிழை புறந்தள்ளி - இந்தி மயமாகும் திருச்சி இந்திய மேலாண்மை கழகம்

திருச்சி - காரைக்குடி நெடுஞ்சாலையில் அமையப் பெற்றுள்ள இந்திய மேலாண்மை கழக மானது(IIM    TRICHY) 2016 முதல் செயல்பட்டுவருகிறது. இந்த கல்வி நிறுவனத்தில் தமிழர்களுக்கான கல்விவாய்ப்பு, வேலைவாய்ப்பு எந்த அளவில் செயல்படுத்தப்படுகிறது என்பதே கேள்விக்குறியாகத்தான் இருக்கின்ற சூழலில், அக்கல்வி நிறுவனத்தின் வாயிலில் முன்பு அமையப் பெற்றிருந்த முகப்புபதாகையில் இந்திமொழி முதலிடத்திலும், ஆங்கிலம்  இரண்டாவதிடத்திலும், தமிழ்மொழி மூன்றாவதிடத்திலும்  அமையப் பெற்றிருந்தது.
இது சார்ந்து பலர் கல்விநிறுவனத்திடமும், சமுக ஊடகங்களிலும் தமது கண்டனத்தை தெரிவித் திருந்தனர்.
இதனை பொருட் படுத்தாத அக்கல்விநிறுவனம், தொடர்ந்து இப்போது அக்கல்வி நிறுவனத்தின் வாயிலில் புதிதாக பிரம்மாண்ட நுழைவாயில் கட்டப் பட்டுக்கொண்டு இருக்கின்றது.
அதன் ஒரு முன்னெடுப்பாய், அக்கல்வி நிறுவனத்தின் வாயிலில் இரண்டு பெரும் பதாகைகள் கல்வி நிறுவனத் தின் முக்கிய பெயர் பதாகையாக வைக்கப்பட்டிருக்கிறது.
அப்பதாகைகளில் தமிழ் மொழிக்கு இடம் முழுவதுமாக மறுக்கப்பட்டி ருக்கிறது.
இந்த செயல் கட்டாயமாக அக் கல்வி நிறுவனம் கட்டிக்கொண்டிருக் கும் நுழைவாயில் மாடத்தில் பொறிக்கப்படவிருக்கிற கல்வி நிறுவனத்தின் முகப்பு பெயரின் முன் மாதிரியாகவே இருக்கலாம். அதன் முன்னோட்டமாகவே தமிழை புறம் தள்ளி
இந்தியில் (மற்றும்  ஆங்கிலத்திலே) பதாகை வைத்திருக்கிறார்கள். ஆகவே அவர்கள் தமிழை தனது நுழைவாயிலி லிருந்து முழுவதுமாக நிராகரிக்க  வாய்ப்புள்ளது.
ஏற்கெனவே இதன் அருகாமையிலிருக்கும் திருச்சிராப்பள்ளி படைக் கலத் தொழிற்சாலை (ளிதிஜி) நுழைவு வாயிலில் தொடர்ந்து தமிழ் மறைக் கப்பட்டு மறுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Thursday, June 13, 2019

எரிவாயு குழாய் திட்டம்: மத்திய அரசு உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு

தூத்துக் குடியை சேர்ந்த செல்லம் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
இந்தியன் ஆயில் நிறுவ னத்தின் சார்பில் ரூ.700 கோடி மதிப்பில் ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடியில் உள்ள ஸ்பிக், ஸ்டெர்லைட் உள்ளிட்ட பல்வேறு ஆலைகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டம் செயல்பட உள்ளது.
இதற்காக ஆறுகள், கால் வாய்கள், சாலைகள், வனப் பகுதிகள், பாதுகாக்கப்பட்ட சுற்றுச்சூழல் பகுதிகள், சக்கரைக் கோட்டை பறவைகள் சரணா லயம், மன்னார் வளைகுடா பகுதியின் பவளப்பாறைகள் வழியாக குழாய் பதிக்கப் படுகிறது. இதற்காக விளை நிலங்களை கையகப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.
இதுதொடர்பான ஒரு வழக் கில், ஏற்கெனவே நிலங்களை கையகப்படுத்த இடைக்காலத் தடை உள்ளது.
இந்நிலையில் ராமநாதபுரம்  தூத்துக்குடி இடையே குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்திற்கு முன் கூட்டியே சுற்றுச்சூழல் அனுமதி பெறத் தேவையில்லை என மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கடந்த 23.8.2018இல்  உத்தரவிட்டுள்ளது.
இத்திட்டத்தால் பறவைகள் சரணாலயம், பவளப்பாறைகள் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இத்திட்டத்துக்கு  சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
அதுவரை அந்த உத்தரவை செயல்படுத்த தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நேற்று விசா ரித்த நீதிபதிகள் எம்.சத்திய நாராயணன், பி.புகழேந்தி ஆகி யோர், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலருக்கு அறிவிப்பு அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 17க்கு தள்ளி வைத்தனர்.

உ.பி.யில் சட்டம் படும்பாடு! ஆக்ரா நீதிமன்றத்தில் பார் கவுன்சில் தலைவி சுட்டுக் கொலை

புதியதாக தேர்ந் தெடுக்கப்பட்ட உத்தரப் பிரதேச பார் கவுன்சில் தலைவி தர்வேஷ் யாதவ் ஆக்ரா நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்..
உத்தரப் பிரதேச மாநில பார் கவுன்சில் தலைவருக்கான தேர் தலில் கடந்த 10 ஆம் தேதி அன்று பெண் வழக்குரைஞரான தர்வேஷ் யாதவ் தலைவியாக தேர்ந் தெடுக்கப்பட்டார். உத்தரப் பிரதேச பார் கவுன்சிலின் முதல் பெண் தலைவர் இவர் என்பது குறிப் பிடத்தக்கது.
இவர் தலைவியாக தேர்ந்தெடுக் கப்பட்டு இரண்டு நாட்களே ஆன நிலையில் இவர் ஆக்ரா நீதி மன்றத்தில் நடந்த பாராட்டு விழாவில் கலந்துக் கொண்டார்.
பாராட்டு விழாவில் தர்வேஷ் யாதவ் உரையாற்றிக் கொண்டிருக் கும் போது அவரது சக வழக்குரை ஞரான மனீஷ் சர்மா என்பவர் திடீரென எழுந்து அவரை துப் பாக்கியால் சுட்டுள்ளார். அவரை மற்றவர்கள் தடுக்கும் முன்பு தன்னைத் தானே சுட்டுக் கொண் டுள்ளார். இருவருக்கும் இடையில் வெகுநாட்களாக பகை இருந்ததாக சொல்லப்படுகிறது.
உடனடியாக இருவரும் மருத் துவமனைக்கு எடுத்துச் செல்லப் பட்டுள்ளனர். மருத் துவமனையில் தர்வேஷ் யாதவ் இறந்ததாக அறி விக்கப்பட்டார். மனீஷ் சர்மா கவ லைக்கிடமான நிலையில் சிகிச்சை யில் உள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் மனீஷ் உபயோகித்த துப்பாக்கி உரிமம் பெற்றதாகும். தற்போது அந்த துப்பாக்கி காவல் துறையினரிடம் உள்ளது.  தர்வேஷ் யாதவ் உடல் உடற் கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்தித் திணிப்பு நோக்கத்தைத் தூர வீசுங்கள்.....

தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை

இந்தியா முழுமைக்கும் விரிக்க வேண்டிய காலம் இது!

நூறு வருடங்களை ஒரு கூட்டுவண்டியாக உருமாற்றி, அந்த வண்டியின் மாடுகளை ஒரு பானைக்குள்ளேயே சுற்றிச் சுற்றி ஓடவைக்க முடியுமா? இந்திய ஆட்சியாளர்களால் முடியும். புதிய கல்விக் கொள்கையின் பெயரால் நூறு வருடங்களுக்கு முந்தைய அபிலாஷைகளையும் சிந்தனைகளையும் சாத்தியப்படுத்த திரும்பத் திரும்ப டில்லிக்காரர்கள் முற்பட்டுக்கொண்டேயிருப்பதைப் பார்க்கும்போது, இந்நாட்டுக் குழந்தைகளுக்கு எப்போதுதான் விமோசனமோ என்று தோன்றுகிறது. இந்தியா முழுமைக்கும் இந்தியைப் பரப்புவதன் மூலம் இந்திய தேசியத் தைக் கட்டுறுதியானதாக்க முடியும் என்பது நூற்றாண்டு பழைய சிந்தனை. காங்கிரஸ் கைக்கு ஆட்சியதிகாரம் கொஞ்சம்போல வரத் தொடங்கிய 1938 முதலாக இந்த முயற்சியை டில்லி முயன்றுகொண்டிருக்கிறது; தமிழ்நாடு எதிர்த்துக்கொண்டிருக்கிறது. இடையில் நாடு சுதந்திரம் அடைந்து, அதற்குப் பின் எழுபதாண்டு களாக ஒரு கூட்டு வாழ்க்கையை நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்; உலக வரைபடம் எவ் வளவோ மாறிவிட்டிருக்கிறது. டில்லியின் எண்ணங்கள் மாறவில்லை; கடந்துவந்திருக்கும் பாதையிலிருந்து எந்தப் பாடத்தையும் அவர்கள் படிக்கவும் இல்லை.
ஏன் தமிழ்நாடு உரிய கவனம் பெறவில்லை?
புதிய கல்விக் கொள்கையின் வரைவானது முன்மொழியும் மும்மொழிக் கொள்கை - தாய் மொழி, ஆங்கிலம், கூடவே இன்னொரு மொழி - தொடர்பான விவாதங்களை ஒரு வார காலமாகக் கவனித்துவருகிறேன். ‘இந்தி வேண்டும்’ என்று பேசும் அரசியல்வாதிகள் மட்டும் அல்ல; ‘இந்தி கூடாது’ என்று பேசும் கல்வியாளர்களும்கூட ஒரு விஷயத்தை எப்படி கவனிக்கத் தவறுகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. டில்லிக்கு மாற்றான ஒரு மொழிக் கொள்கையைக் கடந்த அரை நூற்றாண்டாக தமிழ்நாடு கைக்கொண்டுவருகிறது. அது உண் டாக்கியிருக்கும் சமுக, பொருளாதார மாற்றங்கள், தாக்கங்களுக்கு ஏன் இந்த விவாத அரங்குகள் கவனம் அளிக்க மறுக்கின்றன?
தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டையும் கற்பிக்கும்; தமிழுக்கு அடுத்து, உலக மொழியான ஆங்கிலத்துக்குத் தமிழ்நாட்டு அரசு முக்கியத்துவம் கொடுக்கும் என்பது திராவிடக் கட்சிகளின் முதல் முதல்வரும், திராவிட இயக்கத்தின் ராஜ்ஜியக் கனவுகளுக்கு உயிர் வடிவம் கொடுத்தவருமான அண்ணாவின் முடிவு. இந்த முடிவு எத்தகைய தொலை நோக்கிலானது என்பதை உலகின் முன்னணி நாடுகள் இன்று எத்தகைய மொழிக் கொள் கையைப் பின்பற்றுகின்றன என்கிற பார்வையினூடாகத்தான் உணர முடியும்.
உலகம் எந்த மொழியில் படிக்கிறது?
உலகின் பெரும்பாலான நாடுகள் தங்களு டைய குழந்தைகளுக்கு ஒரு மொழியை - பெரும்பாலும் தாய்மொழியை - கற்பிக்கும் ஒரு மொழிக் கொள்கையையே தொடக்கக் கல்வியில் பின்பற்றுகின்றன. குழந்தைகள் நடுநிலைக் கல்விக்கு மாறும்போது இரண்டாவதாக ஒரு மொழியைப் பயிலும் வாய்ப்பை வழங்குகின்றன; இந்த மொழியாகப் பெரும்பாலும் ஆங்கிலமே அமைகிறது.
பிரிட்டனும் அமெரிக்காவும் ஆங்கிலத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஜெர்மன், பிரான்சு, இஸ்ரேல் போன்ற நாடுகள் முறையே பிரெஞ்சு, ஜெர்மன், ஹீப்ரூ மொழிகளுக்கு வழங்குகின்றன; சர்வதேச அளவில் எல்லாத் துறைகளிலும் ஆங்கிலத்துக்கு ஈடுகொடுக்கும் அளவுக்குத் தங்கள் மொழியை வளர்த்தெடுத்தி ருப்பதன் வாயிலாக இம்முடிவை அவை வெற்றிகரமானதாக்கி இருக்கின்றன. அதேசமயம், பள்ளிக்கூடம் வழியே திணிப்பு நடப்பதில்லை என்பதால், ஏனைய மொழி களைக் கற்பது ஆர் வத்தின் அடிப்படையில் இங்கெல்லாம் நிறைய நடக்கிறது. இலக்கியமோ சமுகவியலோ படிப்ப வர்கள், நாடு கடந்து வணிகத்தில் ஈடுபடுபவர்கள் சர்வ சாதாரணமாக அய்ந்தாறு மொழிகள் வரை அறிந்திருக்கிறார்கள்.
புதிய நூற்றாண்டுக்குள் பெரும் சவால்களுக்கு இடையே தங்களை முன்னகர்த்திக்கொள்ள வேண்டியிருந்த நாடுகள் அனைத்துமே தாய் மொழிக்கு அடுத்து ஆங்கிலத்துக்கு முக்கியத் துவம் அளிக்கும் வழக்கத்தையே கொண்டிருக் கின்றன. சமுக, பொருளாதார முன்னேற்றத்துக்கு மொழிக் கொள்கையை ஒரு முக்கியமான கருவியாகக் கையாண்ட இரு வெற்றிகரமான ஆசிய முன்னுதாரணங்கள் என்று ஜப்பானையும் சிங்கப் பூரையும் சொல்லலாம். இதில் சிங்கப்பூரின் வெற்றி மிக வேக மானது. தாய்மொழியையும் ஆங்கிலத்தையும் சரிசமமாகப் பாவிப்பதன் வாயிலாக உலகச் சமுகங்களோடு இணைந்து பணியாற்றுவதோடு, பெரும் மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்பதில் நவீன சிங்கப் பூரைச் செதுக்கிய லீ குவான் யூவின் பார்வையை அண்ணாவின் பார்வையோடு பல விதங்களில் ஒப்பிட முடியும்.
சிங்கப்பூர் முன்னுதாரணம்
இன்று உலக அளவில் விமரிசையாகப் பேசப்படும் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கான முக்கியக் கருவியாக அதன் இருமொழிக் கொள் கையையே குறிப்பிட்டார் லீ. தமிழ்நாட்டின் முதல்வராக அண்ணா பொறுப்பேற்றதற்கு இரு ஆண்டுகளுக்கு முன் -  1965இல் சிங்கப்பூர் முழுச் சுதந்திரம் அடைந்தது. பிறப்பால் ஒரு சீனர் என்றாலும், மேட்டுக்குடியான லீயின் வீட்டில் பேசப்படும் மொழியாக ஆங்கிலமே இருந்தது. ஆங்கிலப் பள்ளிக்கூடங்கள் வழி வளர்ந்தவர் என்பதோடு, பிற்பாடு பிரிட்டனில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்றவர் என்பதால், சர்வதேசத்துடனான போட்டியில் ஈடுபட அன்றைக்கு மிகவும் பின்தங்கிய சமுகமாக இருந்த சிங்கப்பூரர்களுக்கு ஆங்கிலம் எவ்வளவு முக்கியம் என்பதை லீ உணர்ந்திருந்தார்.
முக்கியமாக, பல கலாச்சாரச் சமுகமான சிங்கப்பூரின் எழுச்சிக்கு, அங்குள்ள ஒவ்வொரு சமுகக் குழுவும் தன்னை அந்நாட்டின் இணை யான சமுகமாகக் கருதும் நிலையை உருவாக்க வேண்டியது அவசியம் என்பதை லீ புரிந்து கொண்டிருந்தார். நாட்டின் ஆட்சிமொழியைத் தேர்ந் தெடுக்கும்போது, அந்த மொழி எல்லா சமுகங்களுக்கும் இணையான தொலைவில் இருப்பதன் வாயிலாகவே இணையான போட்டியையும் வாய்ப்புகளையும் உண்டாக்க முடியும் என்று அவர் கருதினார். இந்தப் பின்ன ணியில்தான் சிங்கப்பூரின் ஆட்சிமொழிகளாக மாண்டரீன், மலாய், தமிழ், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளும், நாட்டின் பொது தேசிய அடையாள மொழியாக ஆங்கிலமும் அறிவிக்கப்பட்டன.
இந்தியாவின் ஆட்சிமொழிகளாக அதன் தேசிய மொழிகள் அத்தனையையும் அறிவிக்க வேண்டும்; உலகோடு உறவாடும் மொழியாக ஆங்கிலத்தை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அண்ணா, தன்னுடைய வாதத்தில் சுட்டிக்காட்டிய மிக முக்கியமான அம்சமாக, “இந்தியாவின் ஆட்சிமொழி எல்லா சமுகங் களுக்கும் சம தொலைவு உடையதாக இருக்க வேண்டும்” என்பதையே குறிப்பிட்டார் என்பது இங்கே நினைவுகூரப்பட வேண்டியதாகும். நாம் ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுக்கையில், ஆங் கிலத்தில் ஒரு தேர்வை நடத்துகையில், ஒரு இந்தி மாணவருக்கும் தமிழ் மாணவருக்கும் சம தொலைவில் உள்ள மொழியாக அது இருக்கும்; ஆனால், இந்தியை ஆட்சிமொழியாக்கி அதில் ஒரு தேர்வை நடத்துகையில், இந்தி மாணவருக்கு அது நெருக்கமானதாகவும் தமிழ் மாணவருக்கு அது அந்நியமானதாகவும் மாறிவிடும்; விளை வாக, சமுகங்கள் இடையே பாரபட்சம் நிலவும் என்று கருதினார் அண்ணா.
இதைத்தான் நாடாளுமன்றத்தில், “இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி பேசும் மக்களுக்கு அதுவே தாய்மொழி, அதுவே அரசுமொழி, அதுவே பயிற்றுமொழி; கூடவே, அதுவே மத்திய அரசின் மொழி. இந்தி பேசும் மக்களுக்குத்தான் எத்தனை சலுகைகள், வாய்ப்புகள், உரிமைகள்? இந்தி பேசாத மக்களுக்கு மறுபுறம் இவை எவ்வளவு பாதிப்புகளை உண்டாக்கும்?” என்று அவர் கேட்டார்.
ஆட்சிமொழி விவாதத்தின்போது அண்ணா சுட்டிக்காட்டிய அமெரிக்க உதாரணத்தை இங்கே நினைவுகூரலாம். “ஆங்கிலம் என்ற சாளரத்தின் வழி ஒட்டுமொத்த உலகத்தையும் நாம் காண முடியும்” என்று குறிப்பிட்ட அண்ணா சொன்னார், “அமெரிக்கா என்ற நாடு உருவானபோது அங்கே குடியேறியவர்களில் 20% பேர் மட்டுமே பிரிட்டிஷ் தீவுகளிலிருந்து சென்றவர்கள். 80% பேர் ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி என்று அய்ரோப்பிய நாடுகளிலிருந்து சென்றவர்கள். இருந்தும் ஆங்கிலத்தையே ஆட்சிமொழியாகத் தேர்ந்தெடுத்தது அமெரிக்கா என்பதை நினைவில் கொள்ளுங்கள்!” சிங்கப்பூரில் லீ இதைத்தான் செய்துகாட்டினார்.
இந்தியை மட்டும் இந்தியா ஆட்சிமொழியாக வரித்துக் கொள்வதற்கான நியாயத்தைக் காட்டி லும் பல மடங்கு நியாயம் மாண்டரீனை மட்டும் சிங்கப்பூர் ஆட்சிமொழியாக வரித்துக் கொள் வதற்கு அதற்கு இருந்தது. இந்தியாவில் இன்றைக்கும் இந்தி பேசுவோர் எண்ணிக்கை 50%-அய்த் தாண்டவில்லை. சிங்கப்பூர் மக்கள் தொகையில் மாண்டரீனைத் தாய்மொழியாகக் கொண்ட சீனர்கள் 76.8%, மலாய்கள் 13.9%, இந்தி யர்கள் 7.9%, மற்றவர்கள் 1.4%. லீ நினைத்திருந்தால், மாண்டரீனை மட்டும் ஆட்சிமொழியாக அறிவித்து, பெரும்பான்மையினரான சீனர் களைத் திருப்திப்படுத்தி, அரசியல்ரீதியாகக் காலத்துக்கும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அதையே ஒரு தேசியவாதக் கருவியாக மாற்றிக் கொண்டிருக்கவும் முடியும். லீ அப்படி நடந்து கொள்ளவில்லை.
ஆங்கிலத்தைத் தேர்ந்தெடுத்ததுடன் மட்டும் அல்லாமல், ஒவ்வொரு சமுகத்தின் தாய்மொழி யையும் லீ அங்கீகரித்தார். ஒவ்வொரு சிங்கப் பூரரும் ஆங்கிலத்துடன் அவரவர் தாய் மொழியைக் கட்டாயம் படிக்க வேண்டும்; தாய் மொழியில் ஒருவர் கொண்டிருக்கும் வேர்களே பிற்பாடு அவருடைய எதிர்கால ஆளுமையைத் தீர்மானிப்பதாக அமையும் என்றார். “தாய் மொழியை மட்டுமே கற்றுத் தேர்ந்தால் நாம் வெறும் ‘ஒருமொழிப் பிள்ளை’களாக இருப்போம்; உலகோடு போட்டியிட்டு வாழ்க்கையை உயர்த்திக் கொள்ள முடியாது.
அதே சமயம், ஆங்கிலத்தை மட்டுமே அறிந் திருந்தாலும் பின்னடைவுதான்; ஏனென்றால், தாய்மொழியில் ஆழமற்ற நாம் நம்முடைய கலாச்சார அடையாளத்தை இழந்திருப்போம், உலகில் நமக்குரிய இடம் எது, நாம் யார் என்ற தன்னம்பிக்கையையும் இழந்திருப்போம்” என்று குறிப்பிட்டார் லீ.
சிங்கப்பூரைத் தமிழ்நாட்டுடன் ஒப்பிடலாமா?
ஒரு மூன்றாம் உலக நாட்டின் சாத்தியங் களையும் சவால்களையும் புரிந்துகொண்டு லீ எடுத்த முடிவு உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. சர்வதேச வர்த்தகத்தில் சிங்கப்பூரின் முக்கியமான உடைமையாக சிங்கப்பூரர்களின் மொழித்திறனே திகழ்கிறது. உலகமயமாதலுக்கு சிங்கப்பூரர்களை முன் கூட்டித் தயார்படுத்தியவர் என்று லீயின் இருமொழிக் கொள்கையைப் புகழ்கிறார்கள்.
குஜராத், மகாராட்டிரம் போன்ற பெரிய மூலதன செல்வம், வணிகக் கலாச்சாரம் அற்ற, கேரளம் -  பஞ்சாப் போன்ற நீர் நில வளமும் கொண்டிராத, உத்தர பிரதேசம் போல ஜன நாயகத்தில் பெரிய பேரம் பேசத்தக்க மக்கள் தொகை பலமும் இல்லாத தமிழ்நாடு இந்தியாவின் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக இன்று நிற்பதன் பின்னணியில், உலகமயமாக்கல் சூழலுக்கு முகங்கொடுத்ததில் அது முதல் வரிசையில் நின்றதன் பின்னணியில் அண்ணா உருவாக்கிய இருமொழிக் கொள்கையின் பங்களிப்பை என்றேனும் இங்குள்ள நிபுணர்கள் பேசியது உண்டா? சுதந்திரத்துக்கு எழுபதாண்டுகளுக்குப் பின்னரும் சமுகங்களுக்கு இடையே ஒரு சமநிலை இன்னும் இந்நாட்டில் உருவாக்கப் படாததன் பின்னணியில் இந்திய அரசின் மொழிக் கொள்கையின் தோல்விகளை என் றைக்கு இந்நாட்டின் நிபுணர்கள் விவாதிக்கப் போகிறார்கள்?
அனுபவங்கள் வாயிலான படிப்பினை
தொலைநோக்கில் சிங்கப்பூருடன் ஒப்பிடத் தக்கது என்றாலும் - இந்திய அளவில் முன் வரிசையில் நின்றாலும் - விளைவுகளில் தமிழ் நாட்டின் கல்வியை சிங்கப்பூருடன் ஒப்பிடத்தக்க சூழல் இன்று இல்லை. முக்கியமாக மொழி சார்ந்து  தமிழ், ஆங்கிலம் இரண்டிலும்  மோசமான சிக்கலை எதிர் கொள்கிறார்கள் நம்முடைய மாணவர்கள். ஆங்கிலத்தில் மட்டுமின்றி தமிழிலும் பலருக்கு ஆளுமை இல்லை. ஆனால், இது இருமொழிக் கொள்கையின் தோல்வி அல்ல; அம லாக்கத்தின் தோல்வி. இந்தியக் கல்விச் சூழலின் கூட்டு விளைவு என்றும் சொல்லலாம்.
கிட்டத்தட்ட அய்ம்பதாண்டுகள் நாட்டின் சர்வ அதிகாரங்களையும் தன் கையில் வைத் திருந்த லீக்கு அவருடைய கனவுக்கேற்பப் பள்ளிக்கூடங்களை உருமாற்றுவதற்கான எல்லா வாய்ப்புகளையும் சிங்கப்பூர் அவருக்கு வழங்கியது. லீயின் கனவை சிங்கப்பூர் சமுகம் தனதாக்கிக்கொண்டு கூடவே உழைத்தது. தமிழ்நாட்டிலோ ஆட்சிக்கு வந்த ஓராண்டில் அகால மரணத்தால் விடைபெற்றுக்கொண்டார் அண்ணா. கல்வியில் முடிவெடுக்கும் அதி காரத்தை மாநிலங்களிடமிருந்து படிப்படியாகத் தன் வசம் நோக்கி இழுத்துக்கொண்டது டில்லி. போதாக்குறைக்கு கல்வியை வணிகமாக்கித் தங்கள் அரசியலுக்கான எரிசக்தியாக்கும் கலாச் சாரத்தை அரசியல் வாதிகள் இங்கே உரு வாக்கினர்; தமிழை அடுத்தடுத்த தளங்களுக்கு வளர்த்தெடுக்கும் பணியிலும் வீழ்ச்சி ஏற்படவும் அவர்களே காரணமாயினர். மேலும், உலகெங்கும் இருமொழிக் கொள்கையை வரித்துக்கொண்ட நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் தமிழ்நாட்டை அழுத்துகின்றன.
பிரிட்டனுக்குச் சென்றிருந்தபோது “பிரிட்டிஷ் குழந்தைகள் இன்று எதிர்கொள்ளும் பெரிய சவால் ஆங்கிலம். தாய்மொழியில் மோசமாகச் சறுக்குகிறார்கள்” என்று அங்குள்ள கல்வி யாளர்கள் சொல்லக் கேட்டு அதிர்ந்தேன். அமெ ரிக்காவில் பள்ளிக் கல்வியைப் பாதியில் நிறுத்தும் ஆப்பிரிக்க, அய்ரோப்பிய இன மாணவர்களில் பெரும்பாலானோர் ஆங்கிலத்தையே காரண மாகச் சொல்கிறார்கள். இருமொழிக் கொள் கையை வரித்துக்கொண்டிருக்கும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் இன்று எதிர்கொள்ளும் பெரிய கல்விச் சிக்கலும் ஆங்கிலம்தான்; தரமான ஆங்கில ஆசிரியர்கள் போதிய அளவில் இல்லாதது அங்கே தேசியப் பிரச்சினையாகவே உருவெடுத்திருக்கிறது என்கிறார்கள். அரேபிய நாடுகளும் சீனாவும்கூட இதே சிக்கலை எதிர் கொள்கின்றன. உலகளாவிய மொழியான ஆங் கிலத்தின் தேவை உலகெங்கும் நாளுக்கு நாள் அதிகம் உணரப்படுகிறது; அதேசமயம், தாய் மொழி -  ஆங்கிலம் இரண்டையும் வெற்றிகர மாகக் கற்பிப்பது ஒரு சவாலாக இருக்கிறது. எங்கெல்லாம் கல்வியை அர்ப்பணிப்புமிக்க கவனத்தோடு அரசுகள் அணுகுகின்றனவோ அங்கெல்லாம் இந்தச் சவால் வெற்றிகரமாக எதிர்கொள்ளவும்படுகிறது.
புதிய தலைமுறைகளை உருவாக்க உண்மை யாகவே ஒரு புதிய கல்விக் கொள்கையைத்தான் இந்தியா விரும்புகிறது என்றால், உலகெங்கும் உள்ள கல்விச் சூழலோடு தமிழ்நாட்டின் கடந்த கால பலங்கள் - பலவீனங்களை ஒப்பிட்டு தீவிரமாகப் பரிசீலிப்பதன் வாயிலாகவே டில்லி அந்தப் பார்வையைப் பெற முடியும். ஒட்டுமொத்த இந்தியாவிலும் இருமொழிக் கொள்கையை வெற்றிகரமாக அமலாக்க முற்படுவதற்கான சாத்தியங்களை யோசிப்பதன் வாயிலாக இந்தியாவின் கல்விக் கொள்கை மட்டும் அல்ல; இந்தியாவின் ஆட்சிமொழிக் கொள்கையும் புதிய வெளிச்சத்தைப் பெறும்.
- சமஸ்,

தொடர்புக்கு: samas@thehindutamil.co.in
நன்றி: இந்து தமிழ் திசை - 11.6.2019

(குறிப்பு: மேற்கண்ட படத்தில் அண்ணாவுடன் லீக் குவான் யூ படத்திற்கு பதிலாக தற்போதைய பிரதமர் படம் தவறாக இணைக்கப்பட்டுள்ளது.)
பிறஇதழிலிருந்து....

நிலவுக்குப் பயணமாகிறது சந்திரயான்-2 விண்கலம்

நிலவில் இறங்கி ஆராய்ச்சியில் ஈடு படுவதற்காக ரூ.603 கோடி செலவில் உருவாக்கப்பட் டுள்ள சந்திரயான்-2 விண் கலம் ஜூலை 15-ஆம் தேதி நிலவுக்குப் பயணமாகிறது.
இதுகுறித்து இஸ்ரோ தலைவரும், மத்திய விண் வெளித் துறையின் செயலாள ருமான கே. சிவன் செய்தியா ளர்களிடம் கூறியது:
விண்வெளி ஆராய்ச்சிக் காக இந்தியாவின் சார்பில் சந்திரயான்-1, மங்கள்யான்-1, ஆஸ்ட்ரோட்சாட் போன்ற விண்கலங்களை விண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளோம். அதன் தொடர்ச்சியாக, நிலவில் தரையிறங்கி ஆராய்ச் சிப் பணியில் ஈடுபடுவதற்காக சந்திரயான்-2 விண்கலம் ஜூலை 15-ஆம் தேதி அதி காலை 2.51 மணிக்கு ஆந்திர மாநிலம், சிறீஹரி கோட் டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-மார்க் 3 ராக்கெட்டின் வழியாக ஏவப்படுகிறது.  இதில் ஏதா வது கோளாறு ஏற்பட்டால், ஜூலை 16 அல்லது 17-இல் விண்ணுக்குச் செலுத்து வோம்.
சந்திரயான்-2 விண்கலத் தில் ஆர்ப்பிட்டர்(சுற்று கலம்), லேண்டர் (தரையிறங்கி), ரோவர்(தரைசுற்றி வாகனம்) ஆகிய மூன்று பகுதிகள் உள்ளன. இந்த ஒருங்கிணைந்த பகுதி 1.3 டன் எடை கொண்டதாகும். விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் நினைவாக லேண்டருக்கு விக்ரம் என்றும், ரோவருக்கு பிரக்யான் என்றும் பெயர் சூட்டியுள்ளோம்.
ஜிஎஸ்எல்வி-மார்க் 3 ராக்கெட் மற்றும் ஒருங் கிணைந்த பகுதியின் எடை 3.8 டன் எடை கொண்டதாக இருக்கும். அதன் 15-ஆவது நிமிடத்தில் அந்த ராக்கெட் டில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் விடுவிக்கப்பட்டு, பூமியில் இருந்து 170 கி.மீட் டர் தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும்.
அதன்பிறகு மேற்கொள் ளப்படும் 5 நகர்த்தல்கள் மூலம் பூமியில் இருந்து 170 கி.மீ. அருகிலும், 40,400 கி.மீ தொலைவிலும் 5 சுற்று வட்டப் பாதையில் 16 நாள்கள் பயணித்து, இறுதி யாக பூமியை சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி, மற்றொரு நகர்த்தல் மூலம் நிலவின் வட்டப் பாதையில் சந்திரயான்-2 நிலைநிறுத்தப் படுகிறது.
பலகட்ட ஆய்வு, சோத னைகளுக்குப் பிறகு சந்திர யான்-2 திட்டம் குறித்து ஜூன் 14-ஆம் தேதி ஆய்வு செய்யப்பட்டு, பெங்களூரில் இருந்து ஆர்ப்பிட்டர் சிறீஹரிகோட்டாவுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு ஜூன் 17-ஆம் தேதி லேண்டர், ரோவர் அனுப்பப்படும்.  இந்தத் திட்டத்தின் இயக்குநராக பெண் விஞ்ஞானி வனிதா செயல்பட்டுவருகிறார்.
இந்தத் திட்டத்தில் பணி யாற்றும் விஞ்ஞானிகளில் 33 சதவீதம் பேர் பெண்கள் என் பது பெருமைக்குரியது.

Wednesday, June 12, 2019

உ.பி பத்திரிகையாளர் கைதுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்: உடனடியாக விடுவிக்க உத்தரவு

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறு கிளப்பும் வீடியோவை பதிவிட்டதாக புகார் கூறி பத்திரி கையாளர் கைது செய்யப் பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம் அவரை உடனடியாக பிணையில் விடுவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித் துள்ளது.
உத்தரப்பிரதேச முதல்வர் அலுவலகத்துக்கு வெளியே கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய பெண் ஒருவர், தான் யோகி ஆதித்யநாத்தை திருமணம் செய்துக் கொள்ளும் விருப்பத்தை அவருக்கு அனுப்பியுள்ளதாகக் கூறினார்.
இந்த வீடியோ காட்சிகளை டில்லி நொய்டாவைச் சேர்ந்த செய் தியாளர் பிரசாந்த் கனோஜியா என் பவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
இதையடுத்து கனோஜியாவிற்கு எதிராக லக்னோவில் உள்ள ஹஸ்ராத்கஞ்ச் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
டில்லியில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் கனோஜின் மனைவி, கைதுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில்  வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற கோடை விடுமுறை கால நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, அஜய் ரஸ்தோகி அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாணைக்கு வந்தது.
விசாரணையின்போது, பிரசாந்த் கனோஜியாவை விடுவிக்க உ.பி அரசு தரப்பில் ஆஜரான வழக் குரைஞர் ஆட்சேபம் தெரிவித்தார். அவரை விடுவித்தால், அவர் செய்த செயல் நியாயம் என்றாகிவிடும் என கூறினார். ஆனால், அவரது வாதத் தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.
பின்னர் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:
‘‘உ.பி முதல்வர் குறித்து சமுகவலைதளங்களில் கருத்து பதிவிட்டதற்காக பத்திரிகையாளரை கைது செய்ததை சரியானதாக கருது கிறீர்களா? ஒவ்வொரு தனி நபருக்கும் தனது கருத்தை சுதந்திரமாக தெரிவிக்க உரிமை உள்ளது. சில நேரங்களில் சில விஷயங்கள் தவிர்க்கப்பட வேண்டியவைதான், அதற்காக கைது செய்வீர்களா?
அதுமட்டுமின்றி பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைப்பது எப்படி சரியாகும். கனோஜியாவை உடனடியாக பிணையில் விடுதலை செய்ய வேண் டும்’’ எனத் தெரிவித்தனர்.

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...