மத்தியில் பிஜேபி அரசு நரேந்திர மோடி
தலைமையில் 2014இல் வந்தாலும் வந்தது. நாடெங் கும் ஜாதிய வாதங்களும்,
மதவாதங்களும் நிர்வாண கோலத்தில் தலை விரித்து ஆடித் தீர்க்க ஆரம்பித்து
விட்டன.
பொதுவாக பிஜேபி என்றாலே மதவாத ஆட்சி
என்பது நிலை நிறுத்தப்பட்ட கெட்டியான உண்மையாகிவிட்டது. 1992இல் பாபர்
மசூதியை பிஜேபி கும்பல் பட்டப் பகலில் இடித்துத் துவம்சம் செய்தது. ஏதோ
வெறிபிடித்த அடி மட்டத் தொண் டர்கள்தான் இந்தக் கேவலத்தை நடத்தினார்கள்
என்று சொல்ல முடியாது.
அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி,
அசோக் சிங்கால் போன்ற உயர் மட்டத் தலைவர்களே முன்னின்று வழிகாட்டி இந்த
அநாகரிகக் காட்டு விலங்காண்டித்தனத்தை அரங்கேற்றி முடித்தனர்.
நியாயமாக அந்த நிகழ்வுக்குப் பிறகு
பிஜேபி உள்ளிட்ட, சங்பரிவார் கும்பல் முற்றிலும் தடை செய்யப்பட்டு
இருக்க வேண்டும். பிஜேபி தேர்தலில் போட்டியிடும் உரிமையையும் இழக்கச்
செய்திருக்க வேண்டும். இதில் வெட்கக் கேடு என்னவென்றால், அந்தக்
குற்றத்தில் முதன்மைக் குற்றவாளிகளாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட
அத்வானி துணை பிரதமராகவும், முரளி மனோகர் ஜோஷி மனித வள மேம்பாட்டுத்
துறை (கல்வி) அமைச்சராகவும் ஆக முடிந்தது என்றால் இந்த வெட்கக் கேட்டை
என்னவென்று சொல்லுவது?
அதுவும் நரேந்திரமோடி பிரதமரான பிறகு
பிஜேபி - சங்பரிவார்த் தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் பேசுகின்ற
பேச்சு கேவலத்தின் உச்சமாகும்.
தாமரைக்கு வாக்கு அளித்தால்
இராமனுக்குப் பிறந்தவர்கள் என்றும், அப்படி வாக்களிக்காவிட்டால் முறை
தவறிப் பிறந்தவர்கள் என்றும் ஒரு மத்திய அமைச்சர் பேசுவதை என்ன சொல்ல!
பசுவதைத் தடுப்பு என்ற பெயரால் நாடு
முழு வதும் தாழ்த்தப்பட்டவர்கள் படுகொலை செய்யப் படவில்லையா? ஒரு காரின்
பின்னால் அந்தத் தோழர்களைக் கட்டி இழுத்துச் செல்லுவதும், சந்தைக்கு
மாடுகளை ஏற்றிச் செல்லும் வியாபாரி களை வழிமறித்து அவர்களின் கால்களில்
இலாடம் அடிப்பதும் உலகில் வேறு எங்காவது நடந்ததாகக்
கேள்விப்பட்டதுண்டா?
மீசை வைத்திருந்ததற்காகவும், குதிரையில்
ஏறி வந்ததற்காகவும், கோயில் திருவிழாவை வேடிக்கை பார்க்க வந்தார்
என்பதற்காகவும் தாழ்த்தப்பட்ட வர்கள் அடித்துக் கொல்லப்பட்டதானது -
இந்தியா காட்டுவிலங்காண்டித் தன்மையது என்பதற்கான எடுத்துக் காட்டாகும்.
இராமராஜ்ஜியத்தை உண்டாக்க இருப்பதாகக்
கூறும் உ.பி. முதல் அமைச்சர் அனுமனை மலைவாழ் தலித் என்கிறார். இன்னொரு
வகையில் இதே இந்து மதம்தான் அனுமனைக் கோயில் கட்டிக் கும்பிடுகிறது.
கடவுள்களில்கூட உயர் ஜாதி - தாழ்ந்த ஜாதி என்று வகை பிரிப்பதுதான் அவர்கள் போற்றும் இந்து மதத்தின் யோக்கியதை!
உத்தரகாண்டில் ஒரு செய்தி வெளி
வந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் தெக்ரி மாவட்டம் நைன்பர்க் என்ற
கிராமத்தைச் சேர்ந்த ஜிதேந்திர தாஸ் என்ற 23 வயது தாழ்த்தப்பட்ட சமுக
இளைஞர் ஒரு திருமண வீட்டில் உயர் ஜாதியினர் என்று சொல்லப் பட்டவர்களுடன்
சமமாக அமர்ந்து உணவு உண்ட தால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.
இப்பொழுது ஏற்பட்டுள்ள இன்னொரு அபாயம் -
ஜாதி, மதவெறி என்றால் என்னவென்று தெரியாத சில மாநிலங்களில்கூட மதவெறி,
ஜாதி வெறி அபாயம் தலைதூக்கி நிற்கிறது.
பிஜேபி மத்தியில் அதிகாரத்திற்கு
வந்ததால் ஏற்பட்ட தாக்கம்தான் இதற்குக் காரணம் என்று சொல்ல வேண்டும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச் சார்பின்மை (Secular)
என்ற அடிப்படைக் கோட்பாட்டையே ஏற்காத ஓர் அரசு மத்தியில் அதி கார
பீடத்தில் உள்ளதால் ஏற்பட்ட தீய விளைவே இது.
நடந்து முடிந்த - நடக்க இருக்கிற தேர்தலில் நாட்டு மக்கள் நல்லதோர் தீர்ப்பை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
No comments:
Post a Comment