அய்தராபாத்தில் உள்ள தகவல் தொழில் நுட்ப (அய்.டி.) நிறுவனம் 7.8 கோடி நபர்களின் ஆதார் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றுக்கொண்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம் அய்தராபாதில் அய்.டி.கிரிட்ஸ் இந்தியா என்ற பெயரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனம் ஆந்திரா, தெலங்கானாவைச் சேர்ந்த 7.8 கோடி நபர்களின் ஆதார் எண் விவரங்கள் அடங்கியுள்ள தகவல் பெட்டகத்தை சட்டவிரோதமாக பெற்றுள்ளது என புகார் எழுந்தது.
ஆந்திரா, தெலங்கானாவில் 8.4 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தொடர்பான செல்போன் செயலியைத் தயாரிக்க இந்த நிறுவனம் ஆதார் தகவல்களை சட்ட விரோத மாக எடுத்துள்ளதாகத் தெரிகிறது. தெலுங்கு தேசம் கட்சிக்காக சேவா மித்ரா ஆப் என்ற பெயரில் செல்போன் செயலியை உருவாக்கும் முயற்சியில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
ஆதார் சட்டப்படி ஆதார் தகவல்களை எடுப்பது சட்ட விதிமீறல் ஆகும். ஆதார் தகவல்கள் வைத்துள்ள மத்திய ஆதார் தகவல் மய்யத்திலிருந்தோ அல்லது மாநில ஆதார் தகவல் மய்யத்திலிருந்தோ இந்தத் தகவல்கள் சம்பந்தப்பட்ட அய்.டி. கிரிட்ஸ் இந்தியா நிறுவனத்தால் திருடப்பட்டிருக்கலாம் என்று தடயவியல் நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஅய்டிஏஅய்) சார்பில் மாதாப்பூர் காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அய்.டி.கிரிட்ஸ் இந்தியா நிறுவனம் மீது முதல் தகவல் அறிக்கை (எப்அய்ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.
அநேகமாக இந்த வழக்கு சிறப்பு விசாரணைக்குழுவிடம் (எஸ்அய்டி) ஒப்படைக்கப்படலாம் எனத் தெரிகிறது.
மேலும் அய்.டி.கிரிட்ஸ் நிறுவனத்திலிருந்து கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்குகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அந்த ஹார்ட் டிஸ்குகளில் மொத்தம் 7,82,21,397 பேரின் ஆதார் தகவல்கள் உள்ளன. இதில் உள்ள தரவுகளின் (டேட்டா) அளவுடன் ஒப்பிடும்போது, அது ஆதார் மய்யத்திலிருக்கும் தரவுகளின் அளவுடன் ஒத்துப் போகிறது.
இதுகுறித்து யுஅய்டிஏஅய் துணை இயக்குநர் டி.பவானி பிரசாத் கொடுத்துள்ள புகாரில் கூறும்போது, வாக்காளர் மனோநிலை பற்றி பகுப்பாய்வு செய்து அதற் கேற்ப பிரச்சாரத்தை திட்டமிட வாக்காளர்களின் விவரங்கள் மற்றும் ஆதார் தகவல்களை மித்ரா ஆப் பயன்படுத்தி வந்துள்ளனர். வாக்காளர்களின் விவரங்களும் திருட்டு வழியில் திரட்டப்பட்டுள்ளன என்பது விசாரணையில் தெரியவந்துள் ளது என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment