Thursday, June 7, 2018

தோழர்களே நீங்கள் அத்துணை பேரும் ஒவ்வொருவரும் களம் காணுகின்ற வீரர்களாக மாறுங்கள்!

உதயசூரியன் ஆட்சி மீண்டும் உதிக்கின்ற வரையில் உறங்கமாட்டோம் - பணியாற்றுவோம் என்று உறுதிகொள்ளுங்கள்!

அயன்புரத்தில்  நடைபெற்ற கலைஞர் 95 பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர்  சங்கநாதம்



சென்னை, ஜூன் 7- நீங்கள் அத்துணை பேரும் செயல் வீரர்களாக மாறுங்கள். ஒவ்வொருவரும் களம் காணுகின்ற வீரர்களாக மாறுங்கள். களத்தில் காணுவோம் -  உதயசூரியன் ஆட்சி மீண்டும் உதிக்கின்ற வரையில் உறங்கமாட்டோம் - பணியாற்றுவோம் - போராடுவோம் - வெற்றி பெறுவோம் என்ற உணர்வை நீங்கள் பெறுங்கள்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

உடன்பிறப்பு-7 கலைஞர் 95 கருத்தரங்கம்!

5.6.2018 அன்று சென்னை அயன்புரம் போர்ச்சியஸ் சாலை, ஜாயின்ட் ஆபீஸ் அருகில் நடைபெற்ற சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. வில்லிவாக்கம் கிழக்குப் பகுதி சார்பில் உடன்பிறப்பு-7 கலைஞர் 95 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கருத்தரங்கத்தில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்

அவரது உரை வருமாறு:

95 ஆண்டு அகவை காணுகின்ற

ஒப்பற்ற தலைவர் கலைஞர்

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவர் அறிவாசான் தந்தை பெரியார் அவர்களால், மாணவப் பருவத்திலேயே பயிற்சி கொடுக்கப்பட்டு, பேரறிஞர் அண்ணா அவர்களால் அரசியல் துறையில் செதுக்கப்பட்டு, இன்றைக்கு 95 ஆவது அகவையில், தன்னுடைய தலைவர், தனக்கு வழிகாட்டியாக இருந்த அறிவாசான் எந்த 95 வயதை எட்டிப் பிடித்தாரோ, அதையே அவருடைய தொண்டன், தோழன் உழைப்பின் மூலமாக நான் எட்டிப் பிடித்திருக்கிறேன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு 95 ஆண்டு அகவை காணுகின்ற ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்களுடைய இந்தப் பிறந்த நாள் பெருவிழா - திருவிழாவை முன்னிட்டு நடைபெறக்கூடிய இந்தக் கூட்டத்திற்கு வருகை புரிந்துள்ள உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உதயசூரியன் உதிக்கவேண்டும்; இருட்டை

அகற்றவேண்டும்; விடியல் வரவேண்டும்

இந்த மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சி என்று சொன்னாலும், இன்றைய ஆட்சியாளருடைய செயலற்ற தன்மையினால், பல உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கக்கூடிய நிலை இருக்கிறது. ஒரு பக்கம் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியாகிறார்கள்; இன்னொரு பக்கம் நீட்டிற்குப் பலியாகிறார்கள். இந்தக் கொடுமைகள் சொல்லொணாக் கொடுமை என்றால், இந்த இருட்டிலிருந்து மக்களை வெளியே கொண்டுவரவேண்டுமானால், இந்தத் துயரம், துன்பத்திலிருந்து வெளியே வரவேண்டுமானால், ஒரே வழி, உதயசூரியன் உதிக்கவேண்டும்; இருட்டை அகற்ற வேண்டும்; விடியல் வரவேண்டும் என்பதைத் தவிர வேறு கிடையாது.

இன்றைக்கு மாலையில் இந்தக் கூட்டத்திற்கு வரும் பொழுது உற்சாகத்தோடு கிளம்பினாலும்கூட, வந்த செய்தி நம்மையெல்லாம், நம் நெஞ்சங்களையெல்லாம் கனத்த அளவிற்கு, வேதனையாலும், துயரத்தாலும் இருக்கக் கூடிய அளவிற்கு, ஒரு அனிதாவினுடைய மறைவு என்பது எப்படி யெல்லாம் நம் உள்ளத்தை உலுக்கி இருக்கிறது- ஒரு மாணவி, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவி, கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய ஒரு மாணவி, தன்னுடைய நெஞ்சில், மருத்துவக் கனவை சுமந்து கொண்டிருக்கக் கூடிய அந்த நிலையில், ஒரு ஏழை பாட்டாளி, கூலித் தொழிலாளியின் ஒருவருடைய பிள்ளை, அந்த மாணவி, தமிழ்நாடு அரசின் மாநிலக் கல்வித் திட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்றாலும், இப்போது வைக்கப்பட்டிருக்கின்ற சூழ்ச்சிப் பொறி இருக்கிறதே - நீட் என்ற அந்த சூழ்ச்சிப் பொறியின் காரணமாக, மிகப்பெரிய அளவிற்கு தற்கொலை செய்துகொண்ட செய்தி நம் எல்லோருக்கும் தெரியும்.

நாம் அப்பொழுதே சொன்னோம், ஒரு அனிதாவோடு இது முடிந்துவிடவேண்டும், ஆட்சியாளர்களே கொஞ்சம் கண் திறங்கள். உங்களுடைய செயலற்றத் தன்மையிலிருந்து, உங்களுடைய உறக்கத்திலிருந்து நீங்கள் கொஞ்சம் விழித் தெழுங்கள். உரிமையை வலியுறுத்தவேண்டி டில்லிக்கு வலி யுறுத்துங்கள். இதன்மூலம் பல அனிதாக்களை உருவாக்காமல் தடுக்கலாம் என்று சொன்னோம்.

ஆனால், கேளாக் காதுகள், பார்க்காத கண்கள், செயலற்ற கைகள் இவைகள்தான் இந்த ஆட்சியினுடைய அங்கங்கள் என்று சொல்லக்கூடிய அந்த நிலை இருக்கின்ற காரணத்தால், இன்றைக்கு மாலையில் வந்திருக்கின்ற இன்னொரு தொடர் பலி எண்ணிப்பாருங்கள்.

தற்கொலை செய்துகொண்ட மாணவி பிரதீபாவின் தந்தை ஒரு சாதாரண தொழிலாளி- விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள பெருவளூரைச் சேர்ந்தவர் சண்முகம். கட்டடத் தொழிலாளியாவார்.

ஏற்கெனவே தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் தந்தை மூட்டை தூக்குகிற ஒரு தொழிலாளி.

மீண்டும் போர்க்களத்திலே

வரவேண்டிய காலகட்டம்

தோழர்களே, எவ்வளவு வேதனையோடு நாம் கூடியி ருக்கிறோம். இந்த நிலையில், கலைஞர் அவர்களுடைய அந்த நினைவு என்பது இருக்கிறதே, அதைப் பார்க்கும்பொழுது, நாமெல்லாம் செயல் வீரர்களாக மாறித்தான் தீரவேண்டும் - அவருடைய உழைப்பை நாம் பகிர்ந்துகொண்டால்தான், இப்படிப்பட்ட கொடுமைகளுக்கு அப்போதுதான் முற்றுப் புள்ளி வைக்க முடியும். திராவிடர் இயக்கம் மீண்டும் போர்க்களத்திலே வரவேண்டிய காலகட்டம் வந்துவிட்டது என்று சொல்லக்கூடிய ஒன்றை இந்த நிகழ்ச்சி மேலும் மேலும் சொல்லிக் கொண்டிருக்கிறது.

போராட்டங்கள் தேவையா? என்று சில புத்திசாலிகள் எல்லாம் இப்பொழுது கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு பக்கத்தில் இருக்கட்டும். அவர்களைப்பற்றி நாம் அதிகமாகப் பேசி விளம்பரப்படுத்தி விடக்கூடாது - அதைத் தான் அவர்கள் விரும்புகிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு நிலையில், இன்று வந்த செய்தியைப் படிக்கிறேன்.

நீட் தேர்வு என் மகளைக் கொன்றுவிட்டதே!

பிரதீபாவின் தந்தை கதறல்!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள பெருவளூரைச் சேர்ந்தவர் சண்முகம். கட்டடத் தொழிலாளி.  மனைவி அமுதாவும் கூலித் தொழிலாளி. இவர்களுக்குப் பிரியா (வயது 24), பிரதீபா (வயது 18) என்ற இரண்டு மகள்களும், பிரவீன்ராஜ் (வயது 21) என்ற மகனும் உள்ளனர்.

வேகாத வெயிலில் கல் உடைத்தும், மண் சுமந்தும் நாம் படும் வேதனைபோல் நம் பிள்ளைகளும் வேதனைப் படக்கூடாது. அவர்களைப் படிக்க வைத்து, பெரிய ஆளாக்கவேண்டும் என்கிற ஆசைக் கனவு அந்த ஏழைத் தம்பதிகளுக்கு.

குடும்ப சூழ்நிலையை அறிந்து பிள்ளைகளும் வைராக்கியதோடு படித்தார்கள். பிரியா வேலூரில் எம்.சி.ஏ. படிக்கிறார். பிரவீன் ராஜ் மயிலத்தில் இன்ஜி னியரிங் படிக்கிறார்.

அப்பா.... அண்ணனும், அக்காவும் பொறியியல் துறையில் படிக்கிறார்கள். நான் டாக்டருக்கு படிக்கி றேனப்பா என்று பிரதீபா கூறி இருக்கிறார்.

நீட் டாக்டர் ஆகணும்னு எனக்கும் ஆசைதாண்டா செல்லம். ஆனால், இந்த அப்பாவால் அவ்வளவு பணம் செலவழிக்க முடியுமான்னு தான் தயக்கமா இருக்குடா... என்று தந்தை சொன்னதும், பிரதீபா ஆறுதல் சொல்லி தேற்றி இருக்கிறார். நீங்க கவலைப்படாதீங்கப்பா. நான் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கி சல்லி காசு செலவில்லாமல் அரசு கல்லூரியில் படித்து டாக்டராகி காட்டுகிறேன் என்று மகள் தைரியமாக சொன்னதைக் கேட்டு, அந்த ஏழைத் தந்தையும் பூரித்துப் போனார். உன்னால் முடியும்டா கண்ணு, படி என்று உற்சாகப்படுத்தினார்.

கழுத்தில் ஸ்டெதஸ்கோப்பும், வெள்ளை கோட்டும் அணிந்தபடி மகள் பல மருத்துவர்கள் மத்தியில் நடமாடுவது போல் தந்தை கனவு கண்டார்.

பிரதீபாவின் கனவு அதற்கும் ஒருபடி மேலாக இருந்தது. தான் வாழும் கிராமத்தில் ஏழைகளாய் வாழும் மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை செய்வதுபோலவும், அந்தக் கிராமத்துப் பெண் களெல்லாம், மவராசி நீ நல்லா இருப்பாய் என்று வாயார வாழ்த்தியதையும் கேட்டு ஆனந்தப்படுவது போன்ற கனவு.

நீட்டை ஒழிக்கின்றவரை நாம் ஓயமாட்டோம்!

ஆனால், என்ன நடந்தது நண்பர்களே! அந்தக் கொடு மையைப் பாருங்கள். திராவிடர் இயக்கம் ஏன் போராட்டக் களத்தில் நின்றது. இங்கே இருக்கின்ற அத்தணை தலை வர்களும், தோழர்களும் நீட்டை எதிர்த்து போராட்டக் களத்தில் நேற்றுவரை நின்று கொண்டிருக்கிறோம். நாளைக்கும் நிற்போம். நீட்டை ஒழிக்கின்றவரை நாம் ஓயமாட்டோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைய நிலை இருக்கிறது.

ஆனால், மறுகணமே அதுவும் நடக்கத்தான் போகிறது. நிச்சயம் நம்மால் முடியும் என்கிற நம்பிக்கைப் பிறந்தது.

10 ஆம் வகுப்புத் தேர்வில், தற்கொலை செய்துகொண்ட பிரதீபா என்ற பெண் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்த, ஒரு கூலித் தொழிலாளியினுடைய மகள். அந்த நிலையில், அந்த மாணவி பிரதீபா 500-க்கு 490 மதிப்பெண்களைப் பெற்றிருக்கிறார்.

இத்தனைக்கும் அவர் மேட்டுக்குடியல்ல; உயர்ந்த ஜாதி யல்ல - மனுதர்மப் பரம்பரையில் பாரம்பரியமாக அய்.ஏ.எஸ். பிள்ளைகள் - அப்பன், தாய், தாத்தா இவர்கள் எல்லாம் சொல்லிக் கொடுப்பார்கள் என்பதல்ல - ஒரு பக்கம் மாட்டுத் தொழுவம் - இன்னொரு பக்கம் குடிசை - மற்றொரு பக்கம் கல் உடைக்கும் தொழிலாளியின் கருவிகளைத் தவிர வேறு கிடையாது. இந்தச் சூழ்நிலையில் வளர்ந்த பிரதீபாவிற்கு மகிழ்ச்சி. பிளஸ் டூ தேர்விலும் இதுபோன்றே மதிப்பெண் எடுக்கவேண்டும் என்று.

நீட் தேர்வின் குறைபாடுதான் காரணம்

பிளஸ் டூ தேர்விலும் 1200-க்கு 1125 மதிப்பெண்களைப் பெற்றார். தைரியமாக நீட் தேர்வை எழுதுகிறேன் என்று எழுதி னார். ஆனால், அதில் வெற்றி பெறவில்லை. அந்தத் தோல்வி அவரை மிகப்பெரிய அளவிற்கு துவளச் செய்திருக்கிறது. ஆனால், அந்தத் தோல்விக்கு அவருடைய அறிவு குறைவா காரணம்? நீட் தேர்வின் குறைபாடுதான் காரணம்.

நீட் தேர்வு என்பது தமிழகத்தை வஞ்சிப்பதற்காக. ஒடுக்கப் பட்ட மக்களை, தாழ்த்தப்பட்ட மக்களை, பிற்படுத்தப்பட்ட மக்களை, கூலித் தொழிலாளியாக, ஏழைத் தொழிலாளியாக, பாட்டாளிகளாக இருக்கின்ற மக்களை வஞ்சிப்பதற்காக வந்த ஒன்று என்பதற்கு அடையாளமாக இதோ பாருங்கள் இந்த செய்தியை!

பிரதீபா எழுதிய கடிம்!

நீட் தேர்வை பிரதீபா எழுதுகிறார்; அதில் தோல்வி அடைகிறார். அந்தத் தோல்வியை இளந்தளிரான பிரதீபாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அதனுடைய விளைவாக ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு, விஷத்தைக் குடித்து, தன்னுயிரை மாய்த்துக் கொள்கிறார்.

மருத்துவராக ஆகவேண்டும் என்று கனவு கண்ட அந்தப் பிள்ளை - தந்தைக்கு உறுதி சொன்ன அந்தப் பிள்ளை - தாய்க்கு உறுதி சொன்ன அந்தப் பிள்ளை!

அந்தக் கடிதத்தில் என்ன எழுதி வைத்திருக்கிறார் என்பதை எங்களுடைய ஏடுகள்கூட அல்ல - அந்தக் கடிதத்தை அப்படியே வெளியிட்டுள்ள மாலைமலர் பத்திரிகையில் இருப்பதை படிக்கிறேன். இந்தப் பத்திரிகை அரசாங்கத்திற்கு ஆதரவான பத்திரிகையாகும்.

அந்தக் கடிதத்தை அப்படியே படிக்கிறேன்.

மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு தன் கைப்பட ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். அந்தக் கடிதத்தில் கூறி இருப்பதாவது:

கேளுங்கள் தாய்மார்களே, தோழர்களே! நீட்டை ஆதரிக் கின்ற நெஞ்சமற்ற தோழர்களே, நீங்களும் கேளுங்கள்! இதுவரையில் செவிடாக இருந்த உங்கள் காதுகள் இனிமேலாவது கொஞ்சம் வேலை செய்யட்டும்.

நான் 2018 மே மாதம் 6 ஆம் தேதி நடந்த நீட் தேர்வை தமிழ் மொழியில் எழுதினேன். தமிழ் மொழியில் உள்ள வினாக்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டு கேட்கப்பட்டு இருந்தது. எனவே, அந்த வினாக்களுக்கு அதற்குரிய மதிப்பெண்களை வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இந்தக் கடிதத்தை அவர் சென்னையில் உள்ள நீட் சம் பந்தப்பட்ட அலுவலகத்தை அனுப்பி வைக்க எழுதி உள்ளார். இதுதான் பிரதீபாவின் கடைசி மொழி. இதற்கு உறுதிமொழி தரப்போவது யார்?

டி.கே.ரெங்கராஜன் எம்.பி. தொடர்ந்த வழக்கு!

இதற்கிடையில், இன்னொன்றையும் இணைத்துச் சொல்ல வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவையில் தோழர் டி.கே.ரெங்கராஜன் அவர்கள்,

நீட் தேர்வில் பெரிய குளறுபடிகள் நடைபெற்று இருக்கின்றன. கேள்விகள் எல்லாம் தப்பும் தவறுதலாக இருக்கின்றன. பாடத் திட்டங்களில் இல்லாத கேள்விகள் - மொழி பெயர்ப்பு தவறு - பொருளில் தவறு என்றெல்லாம் சுட்டிக்காட்டி பல புகார்களைக் கொடுத்திருக்கிறார்கள். ஆகவே, நீட் தேர்வு முடிவினை வெளியிடக்கூடாது என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் அவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்படுகிறது.

தடை வந்துவிடுமோ என்று முன்கூட்டியே நீட் தேர்வு முடிவினை வெளியிட்டனர்!

ஆனால், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தால், நீட் தேர்வு முடிவுக்கு தடை கொடுத்துவிடுவார்களோ என்று அறிந்து, 2 மணிக்கு வெளிவரவிருந்த நீட் தேர்வு முடிவுகள் - 11.30 மணிக்கே வெளியிடப்பட்டது.

ஏன்? நீதிமன்றத்தையும் சேர்த்து ஏமாற்றுவதற்காக. எவ்வ ளவு வஞ்சகம் -எவ்வளவு பெரிய கொடுமை. தவறு அங்கே இருக்கிறது - அதற்கு உயிர்ப் பலி இங்கே!

பாவம் புரியாத இளந்தளிர்கள், விரக்தி, தோல்வி மனப்பான் மையால் தற்கொலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

கலைஞர் வாழ்க! சொல்வதற்குப் பொருள்!

எனவே தோழர்களே, இப்படிப்பட்ட ஒரு ஆட்சி தேவையா? என்பதை முடிவு கட்டுவதுதான் கலைஞர் வாழ்க! சொல்வதற்குப் பொருள்.

கலைஞர் வாழ்க! கலைஞருடைய ஆயுள் நீளுக என்று சொல்லிவிட்டுப் போவது நமது பணியல்ல! கலைஞர் அவர்கள் களத்தில் எதைச் செய்வாரோ அதை செய்தாக வேண்டும் நாம். கலைஞருடைய உணர்வுகள் நம்மை இயக்கிக் கொண்டிருக்கின்றன. காரணம், அவர் பெரியாரிடம் இருக்கும் துணிவைப் பற்றியவர். அண்ணாவிடம் இருக்கின்ற கனிவைக் கொண்டவர். அ06ட்ட கலைஞர் அவர்களுடைய இந்தப் பிறந்த நாள் விழாவில், என்னுடைய உரையைத் தொடங்குவதற்குமுன் இந்தத் துயரச் சம்பவத்தை உங்களுக்குச் சொன்னேன். எல்லோரும் எழுந்து நின்று, ஒரு நிமிடம் மறைந்த அந்த இளந்தளிருக்கு நம்முடைய இரங்கலைத் தெரிவிக்கவேண்டும் என்று அன்போடு வேண்டிக் கொள்கிறேன்.

(அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் அமைதி காத்தனர்).

தோழர்களே! கலைஞர் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப்பற்றி இங்கே ஏராளம் சொன்னார்கள். அடுத்ததாக தோழர் திருநாவுக்கரசர் அவர்கள் தெளிவாக சொல்லுவார்கள்.

கலைஞர் அவர்களுடைய சிறப்புகளை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் சொல்லலாம். அப்படி சொல்லுவதின்மூலம் நமக்கு சிறப்பு - கலைஞருக்கு அல்ல! கலைஞருடைய உணர் வுகளை நாம் இப்போது களத்தில் அதை செயலாக்கிக் காட்டுவதுதான் கலைஞர் அவர்கள் 95 ஆண்டு காலம் வாழ்ந்திருப்பதற்கு மிகப்பெரிய பொருளாகும். அவர் அடை யாளம் காட்டிய செயல் தலைவர் நம்மிடையே இருக்கிறார். ஒரு நல்ல எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். ஜனநாயகத்தில் எந்த உணர்வுகளை மற்றவர்கள் பிரதிபலிக்கிறார்களோ, அதை ஏற்று செயல்படக் கூடிய மாமனிதராக அவர் இன்றைக்கு செயல் வீரராக காட்சியளித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு சொக்கத் தங்கங்கள் போன்று தோழர்கள், உடன்பிறப்புகளாகிய நீங்கள் எல்லாம் உற்சாகத்தோடு களம் காணுவதற்குத் தயாராக இருக்கிறீர்கள்.

கலைஞருக்கு ஈடு கலைஞர்தான்;

உழைப்பின் உருவம் அவர்!

இப்படிப்பட்ட  இந்தக் காலகட்டத்தில், பொதுமக்களுடைய உணர்வுகள் என்பது இருக்கிறதே, நமக்கு மட்டுமல்ல; ஏதோ நாம் கட்சி உணர்ச்சியினால் சொல்லுகிறோம்; கலைஞரோடு பழகியவர் என்பதற்காக சொல்கிறேன் என்பது அல்ல. இந்த நாட்டில் எத்தனையோ செய்திகளில், கலைஞருக்கு ஈடு கலைஞர்தான்; உழைப்பின் உருவம் என்று சொன்னால், அதற்கு ஈடு யாராவது உறுதியாக சொல்ல முடியுமா? என்பதை எண்ணிப்பாருங்கள்.

அதுமட்டுமல்ல, 95 ஆண்டுகால வாழ்க்கையில், 82 ஆண்டுகால பொதுவாழ்க்கையைக் கொண்ட ஒரு மாமனிதர் - இந்தியாவின் வரலாற்றில் அல்ல - உலக வரலாற்றிலேயே வேறு யாராவது இருக்கிறார்களா? விரலை மடக்க முடியுமா? என்று எண்ணிப் பாருங்கள்.

சிலர் உளறுகிறார்கள், திராவிடத்தால் வீழ்ந்தோம் - திராவிடத்தை வீழ்த்துவோம் - கழகங்களே இல்லாத தமிழகம் என்று - எத்தனையோ கொம்பன்கள் சொல்லி, இருக்கின்ற இடம் தெரியாமல் போயிருக்கிறார்கள். அதிலே இவர்கள் சேருவதற்குத் துடித்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, வேறொன்றுமில்லை. மலையோடு மோதினால், உடைவது மலையாக இருக்காது - மண்டையாகத்தான் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிய வேண்டிய காலகட்டம். ஆகவே, அதனைப் புரிந்தாகவேண்டும். பாராட்டிப் போற்றி வந்த பழைமை லோகம்

ஈரோட்டு பூகம்பத்தால் இடியுது பார்! என்று தன்னுடைய பொதுவாழ்க்கையைத் தொடங்கியவர், இறுதிவரையில் பகுத் தறிவாளர்.

கலைஞர் ஒரு பல்கலைக் கொள்கலன்

கலைஞர் அவர்களிடம் செய்தியாளர்கள் கேட்கி றார்கள், எத்தனையோ செய்திகள், எத்தனையோ பெருமைகள், எத்தனையோ சாதனைகள் அவருடைய வாழ்நாளில். எழுத்தில், பேச்சில், திரைத்துறையில். அவர் ஒரு பல்கலைக் கொள்கலன். அவர் போல் அத்துணை அம்சங்களிலும் முன்னாலே நிற்கக்கூடியவர்கள் யாரும் கிடையாது என்பது எல்லோருக்கும் தெரியும். எதிரிகள்கூட மறுக்கமாட்டார்கள்.

அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில், இன்றைக்கு மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய செய்தி என்ன? கலைஞ ருடைய பெருமைகளை அடுத்து திருநாவுக்கரசர் அவர்கள் சொல்வார். அன்றைக்கும் சொன்னார்.

போராட்ட உணர்வை நம்முடைய தோழர்கள்

கொஞ்சம்கூட தள்ளி வைக்கக்கூடாது!

நண்பர்களே! அந்தப் பெருமைகளைவிட, நாங்கள் இப் பொழுது உங்களுக்கு நினைவூட்டவேண்டியது - இப்போது நமக்கு ஒரு போராட்டக் குணம் வேண்டும். அந்த போராட்ட உணர்வை நம்முடைய தோழர்கள் கொஞ்சம்கூட தள்ளி வைக்கக்கூடாது. இந்தக் காலகட்டம், அதற்கு மிக முக்கியமான காலகட்டம். அதை சொல்லுவதற்குத்தான் நான் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தவேண்டும் என்று நினைக்கிறேன்.

அருமைத் தோழர்களே, எண்ணிப்பாருங்கள்! எதிர்க்கட்சி என்று சொல்லுகின்ற நேரத்தில் - எதிர்நீச்சல் என்பது இருக்கிறதே, அது அவருக்குக் கைவந்த கலை. ஆட்சியில் இருக்கும்பொழுது மிகவும் அமைதியாக இருப்பார். ஆனால், எதிர்நீச்சல் என்று வந்துவிட்டால், கலைஞருக்கு நிகர் கலைஞர்தான்.

நெருக்கடி காலம் - இந்த இயக்கத்தையே அழித்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். 42 ஆண்டுகளுக்கு முன்பு - வயதானவர்களுக்கு இந்த வரலாறு தெரியும் - இன்றைய இளைஞர்களுக்கு அந்த வரலாறு தெரியாது.

நெருக்கடி காலத்தில் சிறையில் அடிபட்டோம்!

அன்றைக்கு இந்த இயக்கமே இருக்காது என்று சொன்னார்கள். ஆனால், கலைஞர் அவர்கள் அதை அணுகிய முறை இருக்கிறதே, அது எளிதானதா? எத்தனை முறை சிறைச்சாலைகள். சிறையில் அடிபட்டோம்; தளபதி ஸ்டாலின் அடிபட்டார்; ஆற்காடு வீராசாமி அடிபட்டார்; திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் - திராவிடர் கழகத் தோழர்கள் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் இதுபோன்ற பல இயக்கத் தோழர்கள் சிறைச்சாலையில் அடிபட்டார்கள் என்பதெல்லாம் ஒரு பக்கத்தில் இருந்தாலும்,

வெளியில் இருந்தவர்களின் நிலை என்ன? என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும். கலைஞருக்கு கார் ஓட்டுவார் ஒருவர். அடுத்த நாள் காலையில் நாங்கள் எல்லாம் அவரை வரவேற்போம் - எங்கே தெரியுமா? சிறைச்சாலைக்குள்ளே! கலைஞருக்குக் கார் ஓட்டினால், அடுத்தது சிறைச்சாலைதான் அவருக்கு. ஏனென்றால், கலைஞரை தனிமைப்படுத்தவேண்டும் என்று மற்றவர்கள் நினைத்தார்கள். ஆனால், அப்படி நினைத்தவர்கள் தோற்றார்கள் - கலைஞர் வென்றார்! அதுதான் மிக முக்கியம்.

அவருடைய வெற்றி என்பதை தேர்தல் வெற்றியை வைத்துக் கணக்குப் போடாதீர்கள். அதிலே அவரை வீழ்த்து வதற்கு யாராலும் முடியவில்லை.

கொஞ்சம் சூடு இருந்தால், சுரணை இருந்தால்,

சுயமரியாதை இருந்தால்...

ஆனால், அதைவிட மிக முக்கியம் - அந்தக் காலகட்டத்தில் முரசொலியை அவர் நடத்திய விதம் - திராவிட முன்னேற்றக் கழகத்தை நடத்திய விதம். அதுதான் இந்த அஸ்திவாரம் என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். எதிரிகளுக்கு நினைவூட்ட நான் கடமைப்பட்டு இருக்கிறேன். கழகங்களையெல்லாம் அழித்துவிடுவோம் என்று டில்லியை வைத்துக்கொண்டு ஆட்டம் போடுகிறீர்களே! டில்லிக்குத் தலையாட்டுகிறீர்களே! கொஞ்சம் சூடு இருந்தால், சுரணை இருந்தால், சுயமரியாதை இருந்தால், நீட் தேர்வுக்கு இப்படிப்பட்ட ஒரு கொடுமை - இப்படிப்பட்ட பலிகள் வந்திருக்குமா?

நீங்கள் வேறொன்றும் செய்யவேண்டாம் - விளக்கெண் ணெய் குடிக்கவேண்டியதில்லை - வேப்பெண்ணெய் குடிக்க வேண்டியதில்லை - நீங்கள் ஒன்றும் தண்டால் எடுக்க வேண்டியதில்லை.

இந்த மண்ணுக்கு சமூகநீதி மண் என்ற வரலாறு உண்டு!

ஒன்றரை ஆண்டுகளுக்குமுன் சட்டபூர்வமாக - நமக்கு இருக்கிற உரிமை - சட்டமன்றத்தில் மிகத் தெளிவாக தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து, காங்கிரசு பேரியக்கம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எல்லோரும் ஒருமித்த குரலில், அரசியல் பார்க்காமல், தமிழ்நாட்டின் நலன் முக்கியம் என்று நினைத்து, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுடைய சமூகநீதிக் கொடி தாழ்ந்து பறக்கக்கூடாது - கீழே இறக்க அனுமதிக்கக் கூடாது - ஆகவே, அந்த நிலை உயர்ந்த நிலையில் இருக்கவேண்டும் என்று பெரியார் மண் - இந்த மண்ணுக்கு சமூகநீதி மண் என்ற வரலாறு உண்டு என்ற அடிப்படையை அவர்கள் தெளிவாகக் காட்டியதன் காரணமாகத்தான், அரசியல் சட்டம் நமக்கு வழங்கியுள்ள - ஏற்கெனவே காங்கிரசு கொண்டு வந்த தீர்மானமாக - உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையாகக் கொண்டு வந்திருந்தாலும்கூட, அவர்கள் ஜனநாயக உரிமைப்படி, அரசியல் சட்டத்தினுடைய கடமையை அவர்கள் பறிக்கவில்லை - அதிகாரத்தைப் பறிக்கவில்லை.

அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிறது!

ஒன்றை அவர்கள் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டினார்கள். அது என்னவென்றால், எந்த மாநிலம் நீட் தேர்வை விரும்ப வில்லையோ - அந்த மாநிலத்திற்கு விதிவிலக்கு அளிக்க உரிமை உண்டு. இது அரசமைப்புச் சட்டத்தில் இருக்கக்கூடியது.

காரணம், ஏற்கெனவே, கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தது. கல்வி என்பது முழுக்க முழுக்க நாம் முடிவெடுக்கவேண்டிய செய்தி. இதற்கும், டில்லிக்கும் சம்பந்தம் இல்லை. மத்திய அரசுக்கும், இதற்கும் சம்பந்தமில்லை.

பிறகு அது நெருக்கடி காலத்தில், ஒத்திசைவுப் பட்டியலுக்கு (கன்கரண்ட் லிஸ்ட்) பொதுப் பட்டியல் என்று தமிழில் மொழிப் பெயர்ப்பார்கள் - அது சரியானது அல்ல. ஒத்திசைவுப் பட்டியல் என்றால், மாநில அரசினுடைய ஒப்புதல் பெற்ற பிறகுதான், இந்தத் துறையில் சட்டம் இயற்ற முடியும். ஆனால், அதை அவர்கள் செய்தார்களா? என்றால், கிடையாது.

நாடாளுமன்ற நிலைக்குழுவில், தெளிவாக சொல்லியிருக் கிறார்கள். எந்த மாநிலம் நீட் தேர்வை விரும்பவில்லையோ அந்த மாநிலத்திற்கு விலக்குக் கொடுங்கள். விலக்குக் கோருவதற்கு மாநிலங்களுக்கு உரிமை உண்டு.

மாநிலங்களுக்கு உள்ள உரிமை!

இது பிச்சையல்ல - சலுகையல்ல - அல்லது மோடியிடமோ, உள்துறையிடமோ கெஞ்சி கேட்கவேண்டியதும் கிடையாது. மாநிலங்களுக்கு உள்ள உரிமை அது.

அந்த உரிமையைப் பயன்படுத்தித்தான், ஒன்றரை ஆண்டுகளுக்குமுன், இதே ஆட்சி இரண்டு மசோதாக்களை நிறைவேற்றியது.

இந்த சம்பவம் நடைபெற்ற பிறகு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், திராவிட முன்னேற்ற கழக செயல் தலைவர் அவர்கள் தெளிவாக, தீர்மானம் கொடுத்துப் பேசியிருக்கிறார்கள்.

என்ன பதில் சொன்னார்கள் ஆளுங்கட்சியினர்?

ஒன்றரை ஆண்டுகளுக்குமுன் அந்த இரு மசோதாக்களை நாம் நிறைவேற்றினோமே, அது இப்பொழுது எங்கே இருக்கிறது?

தெரியாது என்கிறார்கள்.

குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இருக்கிறது என்றால், ஒன்றரை ஆண்டுகாலத்திற்கு அதற்கு என்ன வேலை?

நீங்கள் கடிதம் எழுதுங்கள் குடியரசுத் தலைவருக்கு - ஏற்கெனவே அவர் மிகவும் சங்கடத்தோடு அமர்ந்திருக்கிறார் - அதற்கும், அவருக்கும் சம்பந்தம் கிடையாது என்பதுபோல. ஏற்கெனவே அவர் கோவிலுக்குள் கூட அவரால் உள்ளே செல்ல முடியவில்லை.

கோவிலுக்கு வெளியே படிக்கட்டுகளில் அமர்ந்து வழி பாட்டினை செய்து வரக்கூடிய ஒரு நிலை இருக்கிறது இன்றைய காலகட்டம்.

ஆகவே, நண்பர்களே! நீங்கள் சிந்திக்கவேண்டும்.இங்கே நடைபெறுகிற ஆட்சி ஒன்றரை ஆண்டுகாலம் நடை பெறுகிற ஆட்சி ஒரு பொம்மலாட்ட ஆட்சி - டில்லிக்குத் தலையாட்டுகிற ஆட்சி. எந்த நேரம் டில்லி கயிறை இழுத்தால், நாம் போய்விடுவோம் என்று நினைத்து, அதுவரையில் நாம் ஆட்சியில் இருப்போம் என்று டில்லிக்கு சலாம் போடுகிற ஓர் ஆட்சி என்று சொன்னால், இந்த ஆட்சிக்கு கலைஞருடைய ஆட்சியை எண்ணிப்பாருங்கள்.

கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருக்கும்பொழுது என்ன செய்தார் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும் தோழர்களே!

ஒரே வார்த்தையில் கலைஞர் சொன்னார்,

உறவுக்குக் கைகொடுப்போம்

உரிமைக்குக் குரல் கொடுப்போம்!

என்றார்.

இன்றைக்கு உரிமைக்குக் குரல் கொடுக்காத ஊமையர்களின் ஆட்சி எதற்காகத் தேவை இந்த நாட்டில்? இதைத்தான் நீங்கள் நன்றாக எண்ணிப் பார்க்கவேண்டும்.

எதைச் செய்தால் கலைஞர் வாழ்வார்? எதைச்

செய்தால் கலைஞர் அவர்களுடைய ஆயுள் நீளும்?

எனவே, கலைஞர் வாழ்க! கலைஞருடைய ஆயுள் வளர்க! என்று நாம் வாழ்த்துவதற்கு இந்தக் கூட்டத்தை நாம் போட்டிருக்கிறோம் என்றால், அதன்மூலமாக, எதைச் செய்தால் கலைஞர் வாழ்வார்? எதைச் செய்தால் கலைஞர் அவர்களுடைய ஆயுள் நீளும்? எதைச் செய்தால் அவருடைய மகிழ்ச்சி, உற்சாகம் ஊற்றெடுத்துப் பெருக்கும்.

மீண்டும் ஒரு மாற்றம் தேவை! அந்த மாற்றம் டில்லியில் மாற்றம்! தமிழகத்தில் மாற்றம். டில்லியில் ஒரு மோடி வித்தை -

இங்கே அந்த மோடி வித்தையைக் கைக்கொண்டி ருக்கக்கூடிய ஒரு ஆட்சி.

மத்தியில் காவி ஆட்சி

இங்கே ஆவி ஆட்சி

என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.

எனவே, காவிக்கும் வேலையில்லை - ஆவிக்கும் வேலை யில்லை என்று முடிவெடுக்க - களம் காணுங்கள்! களம் காணுங்கள் என்று சொல்லி என்னுரையை முடிக்கிறேன்.

ஒவ்வொருவரும் களம் காணுகின்ற

வீரர்களாக மாறுங்கள்

இது அறிவார்ந்த அரங்கம் - நீங்கள் அத்துணை பேரும் செயல் வீரர்களாக மாறுங்கள். ஒவ்வொருவரும் களம் காணு கின்ற வீரர்களாக மாறுங்கள். களத்தில் காணுவோம் -  உதயசூரியன் ஆட்சி மீண்டும் உதிக்கின்ற வரையில் நாங்கள் உறங்கமாட்டோம் - பணியாற்றுவோம் - போராடுவோம் - வெற்றி பெறுவோம் என்ற உணர்வை நீங்கள் பெறுங்கள்!

அதுதான் கலைஞர் வாழ்க! கலைஞர் வாழ்க! கலைஞர் வாழ்க! என்பதற்கு அடையாளமாகும்

நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வாழ்க கலைஞர்!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...