Friday, April 27, 2018

எது தொலைய வேண்டும்?

தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கம் தோன்றிய இந்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக அரசியல் புரட்டர் களுக்குப் பேச மேடையில்லாமலும், மதப்புரட்டர்களுக்கு மரியாதை இல்லாமலும், புராணப் பிரசங்கத்திற்கு இடமில்லாமலும் செய்து விட்டதோடு இவைகள் மூலம் அவரவர்களின் சொந்த வியாபாரத்திற்கும் இடையூறு ஏற்பட்டு விட்ட விபரம் இவைகளினால் வயிறு வளர்த்துக் கொண்டிருந்தவர்கள் நெருப்பில் விழுந்த புழுத் துடிப்பது போல் துடிப்பதினாலே விளங்கும். இதுபோலவே பார்ப்பன ஆதிக்கமும் புரோகிதர்கள் ஆதிக்கம் ஆங்காங்கு ஒருவாறு மறைந்து கொண்டே வருவதும் வெள்ளிடை மலை. இந்த இரண்டு ஆண்டுகளுக்குள் சுமார் பதினா யிரம் பேருக்கு மேலாகவே போலி அரசியலையும், புரட்டுப் பார்ப்பனியத்தையும் விட்டு விலகி விட்டதாக அவர்கள் தங்கள் பெயரை வெளிப்படுத்தி இருப்பதையும், ஆயிரக் கணக்கான சடங்குகள் பார்ப்பனர்களை நீக்கி நடத்தி இருப்பதாக வெளியாகி வருவதையும், அநேகர் தங்கள் குலகுரு என்கின்ற போலிக் குருமார்களை நீக்கியிருப்பதையும் கவனித்துப் பார்ப்பவர்கள், இச் சுயமரியாதை இயக்கம் இத்தமிழ் நாட்டில் எவ்வளவு தூரம் வேரூன்றி வருகின்றது என்பதை உணரலாம்.
இந்நிலையில் ஸ்ரீவரதராஜுலு நாயுடு சுயமரியாதை இயக்கம் தொலைய வேண்டும் என்றும், அதைத் தொலைத்தாலொழிய தேசியம் வளராதென்றும், ஆதலால் அதைத் தொலைப்பது என்பதே தனது வேலையாகக் கொண்டிருப் பதாகவும் வீரமுழக்கம் செய்கிறார். எனவே இது எதற்காக என்பதைப் பற்றியும் சுயமரியாதை இயக்கம் தொலைய வேண்டுமா அல்லது ஸ்ரீமான்கள் வரதராஜுலு, சத்தியமூர்த்தி, குப்புசாமி முதலியார் போன்றார்களின் தேசிய இயக்கம் தொலையவேண்டுமா என்பதைப் பற்றியும் ஒரு முடிவுக்கு வரவேண்டுமாய்ப் பொதுமக்களை வேண்டிக் கொள்கின்றோம்.
திரு. வரதராஜுலு முதலியோரின் தேசியம் என்பது காங்கிரசா, அல்லது சுயராஜ்யக் கட்சியா, அல்லது தேசியக் கட்சியா, அல்லது ஓம்ரூல் கட்சியா, அல்லது மிதவாதக் கட்சியா, அல்லது மற்றெதுவோ என்பதை திரு. வரதராஜுலு சொல்லுவாரா? அல்லது அவர்களுடைய தலைவர்களாவது மற்றக் கூலிகளாவது சொல்வார்களா என்று கேட்கின்றோம். அன்றியும் இவை எதனுடைய கொள்கைகளாவது இன்னது என்பது திரு. வரதராஜுலு அவர்களுக்குத் தெரியுமா? என்று கேட்கின்றோம்?
ஸ்ரீரங்கம் கோவிலில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் இன்னது என்று தெரியாமலும், அதனால் இன்ன பலன் உண்டு என்பதை உணராமலும், எப்படி ரயில்வே கம்பெனிக்காரன் தனது வரும்படிக்காக எல்லோரையும் ஸ்ரீரங்கம் உற்சவத்திற்குப் போங்கள் என்று விளம்பரம் செய்கின்றானோஅதுபோலவும்,கும்பகோணம் மாமாங்கக் குளத்தின் தண்ணீரின் யோக்கியதை இன்னதென்று தெரியாமலும் அதில் குளித்தால் இன்ன பலன் கிடைக்கும் என்று தெரியாமலும், எல்லோரும் மாமாங்கத்திற்குப்போய் மோட்சமடையுங்கள் என்று எப்படி ரயில்வேகாரன் விளம்பரம் செய்கின்றானோ அது போலவும் சுயராஜ்ஜியம் இன்னது, தேசியம் இன்னது அதன் பலன் இன்னதாகும் என்பதைப் பற்றி ஒரு சிறு அறிவும் இல்லாமல் எல்லோரும் சுயராஜ்ஜியம் அடைய வேண்டும் தேசியத்தில் சேரவேண்டும் என்று தங்கள் தங்கள் லாபத்திற்கும் வயிற்றுப் பிழைப்புக்கு மாக கூப்பாடு போடுவதல்லாமல் இதில் வேறு ஏதாவது காரியம் உண்டா என்று கேட்கின்றோம்.
இந்த 42 வருஷகாலமாக சுயராஜ்ஜியத்திற்குப் பாடுபட்ட வர்களின் நிலைமை என்ன? அதனால் மக்களுக்கு ஏற்பட்ட பலன் என்ன? என்று கேட்ட கேள்விக்கு யாராவது இது வரை பதில் இறுத்திருக்கிறார்களா? ஒரு சிறு விளம்பரக்காரன் ஏதாவது ஒன்று சொன்னதாக வெளியானால் உடனே அவனைப் பிடித்து அவனுக்கு எலும்பு போட்டு அதை மறுக்கும்படி கடிதம் எழுதி வாங்கியோ கற்பனை செய்தோ மறு நாளே பதிலெழுதும் முறையில் வெளிப்படுத்தப்படும். தமிழ் நாடு போன்ற பத்திரிகைகளும் திரு. வரதராஜுலு போன்ற தேசியப் பிழைப்புக்காரர்களும் 33 கோடி மக்களை ஏமாற்றிப் பிழைக்கத்தக்க வழிதான் சுயராஜ்ஜியமும் தேசியக் கூப்பாடும் என்றால் இவர்கள் ஏன் அதற்கு உடனே பதில் சொல்லக் கூடாது என்று கேட்கின்றோம்.
இன்றைய உத்தியோக பெருக்குக்கும், வரி உயர்வுக்கும், கட்சிப்பிரதி கட்சிக்கும், ஏழைகள் கஷ்டத்திற்கும், அரசாங் கத்தின் அநீதிக்கும் சுய ராஜ்ஜிய கூச்சலும் தேசியப் புரட்டும் காரணமா இல்லையா என்று கேட்கின்றோம்.
இவ்வளவு கொடுமையைச் செய்த காங்கிரசும் தேசியமும் மக்கள் ஒற்றுமைக்காவது சமத்துவத்திற்காவது ஏதாவது ஒரு சிறு நன்மையாவது செய்து இருக்கின்றதா? அல்லது சமத்துவத்தைப் பற்றிய கொள்கை ஏதாவது காங்கிரசில் இருக்கின்றதா?
ஒத்துழையாமையின் போது காங்கிரசில் நுழைக்கப் பட்ட 1. சமத்துவம் 2. தீண்டாமையொழித்தல் 3. மதுவிலக்கல் 4. கதர் 5. ஒற்றுமை ஆகிய மக்களுக்கு வேண்டிய திட் டங்களில் ஏதாவது ஒன்று இன்றைய காங்கிரசிலோ தேசியத்திலோ இருக்கின்றதா? என்று கேட்கின்றோம்.
அன்றியும் சென்ற வருஷ காங்கிரசில் கொண்டு வரப்பட்ட சமத்துவத் தீர்மானத்தை அகில இந்திய காங்கிரஸ் ஏற்றுக்கொண்டதா என்றும், தீண்டாமையை ஒழிக்கக் கொண்டு வந்த தீர்மானத்தைப் பம்பாய் மாகாண காங்கிரஸ் ஏற்றுக்கொண்டதா என்றும், எல் லோருக்கும் சம உரிமை கொடுக்க வேண்டுமென்று கொண்டு வந்த தீர்மானத்தை சென்னை மாகாண காங்கிரஸ் அனுமதித்ததா? என்றும், கதரைத் தவிர வேறு ஒன்றும் கட்டக் கூடாதென்ற தீர்மானத்தை காங்கிரஸ் வைத்திருக்கிறதா? என்றும், முஸ்லீம்களுக்கு அவர்களுக்குள்ள உரிமையைக் கொடுக்க வேண்டும் என்பதைக் காங்கிரஸ் ஒப்புக் கொள்ளுகிறதாவென்றும் கேட்கின்றோம்.
இந்நிலையில் காங்கிரசும் தேசியமும் மக்களுக்கு என்ன நன்மை செய்து விட்டது, அல்லது செய்யக் கூடும் என்று கேட்கின்றோம். இவைகள் ஒன்றும் இல்லாமல் உத்தியோகங்களை உண்டாக்குவதும், அதற்காக அதிக சம்பளங்களை ஏற்படுத்துவதும், அதற்காக வரியை அதிகப்படுத்துவதும், வரியை ஏழைமக்கள் தலையில் விதிப்பதும், அவ்வுத்தியோகத்தை ஒரு வகுப்பாரே அடைய வேண்டுமென்று ஆசைப்பட்டு கூலிகளை விட்டு கூப்பாடு போடுவதும், அக்கூலிக்காரர்களுக்குள் ஒருவராக திரு. வரதராஜுலு தன்னையும் பதிவு செய்துகொண்டு வாழ்வதும் அல்லாமல் தேசியத்திற்கு வேறு ஏதாவது அர்த்தமோ பலனோ திரு. வரதராஜுலு சொல்லக் கூடுமா என்று அறை கூவி அழைக்கின்றோம்.
நிற்க, சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகள் என்ன என்பது பற்றியும் அதனால் யார் பிழைக்கிறார்கள் என்பதையும் சற்று யோசித்துப் பார்ப் போம்.
மக்களுக்குப் பிராணனைவிட மானம் பெரிதென்பது அதன் முதலாவது கொள்கையாகும்.
எல்லோரும் பிறவியில் சமம் என்பது இரண்டாவது கொள்கையாகும்.
பெண்களுக்குச் சம உரிமை இருக்க வேண்டுமென்பது மூன்றாவது கொள்கையாகும்.
ஜாதி - மத பேதங்கள் தொலையுமட்டும் நாட்டின் ஒற்றுமையையும் எல்லோருடைய நன்மையையும் உத்தேசித்து ஒவ்வொரு ஜாதி மதத்திற்கும் அரசியலில் சரியான பிரதிநிதித்துவம் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது நான்காவது கொள்கையாகும்.
கண்மூடி வழக்கங்களும் மூட நம்பிக்கையும் தொலைய வேண்டு மென்பது அய்ந்தாவது கொள்கையாகும்.
வேதம், சாஸ்திரம், புராணம், பழக்கம் என்னும் கார ணங்களால் மனிதனின் பகுத்தறிவை கட்டுப்படுத்தக்கூடிய பார்ப்பனியம் ஒழிந்து சுயேச்சையும் அறிவும் வளர வேண்டும் என்பது ஆறாவது கொள்கையாகும்.
இது போன்ற இன்னும் அநேக கொள்கைகளைச் சுயமரியாதை இயக்கம் இன்றைய தினம் தாங்கிக் கொண்டு மூலை முடுக்குகளிலெல்லாம் வேலை செய்து வருகிறது.
அதில் வேலை செய்பவர்கள் ஒவ்வொருவரும் இது வரை தன் தன் சொந்தக் காசை செலவு செய்துதொண்டாற்றி வருகின்றார்கள்.
திரு. வரதராஜுலுவும் அவர் கூட்டமும் தேசிய விளம் பரத்தால் பிழைப்பது போல் சுயமரியாதை விளம்பரத்தால் யாராவது பிழைக்கின்றார்களா? யாருக் காவது இதனால் ஒரு அம்மன் காசு லாபமுண்டா?
எனவே இம் மாதிரி மக்களுக்கு உண்மையான விடுத லையளித்து அறிவைப் பரவச் செய்யத்தக்க சுயமரியாதை இயக்கம் தொலைய வேண்டுமா? அல்லது கூலிகளுக்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் மாத்திரம் அனுகூலமாயிருந்து நாட்டையும் பாழாக்கும் தேசியம் தொலைய வேண்டுமா? என்பதைப் பற்றி யோசித்து முடிவாக எது தொலைய வேண்டும் என்பதை உணருமாறு பொது மக்களை வேண்டிக்கொள்ளுகிறோம். திரு.வரதராஜுலுகளோ அவரது கூட்டாளிகளோ மாத்திரமல்லாமல் வேறு யார் இதற்குத் தக்க பதிலுரைத்தாலும் வந்தனத்தோடு ஏற்று சமாதானம் சொல்ல தயாராயிருக்கின்றோம்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...