Friday, April 27, 2018

நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் ஏன்?

சமூகநீதிக்கு விதை ஊன்றப்பட்ட மண் தமிழ் நிலம். தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற நீதிக்கட்சிக் காலந்தொட்டு இதற்கான குரல் இந்தியாவிலேயே தமிழ்நாட்டிலிருந்துதான் கிளம்பியது.
டாக்டர் சி.நடேசனார் என்ற பெருமகன் அதற்கான ஆரம்பத்தைக் கொடுத்தார். அவருடன் பி.தியாகராயர் என்ற திருமகன், டாக்டர் டி.எம்.நாயர் என்ற போர் வீரன் ஆகிய மூன்று  முத்துகளும் முன்னேராகத் திகழ்ந்தனர்.
அதே காலகட்டத்தில் தமிழ்நாடு காங்கிரசு கட்சிக்குள், மாநிலச் செயலாளராக, மாநிலத் தலைவராக இருந்த தந்தை பெரியார் சமூகநீதிக்கான கலகக்காரராக காங்கிரசுக்குள்ளேயே திகழ்ந்தார்.
இந்த ஒட்டுமொத்த உணர்வின் வீரிய விளைச்சலாக முதன் முதலாக சென்னை மாநிலத்தில், நீதிக்கட்சி ஆதரவு பெற்ற அமைச் சரவையில் பெருமகனார் எஸ்.முத்தையா முதலியார் அவர்களின் அருமையான முயற்சியால் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற பெயரில் முதல் சமூகநீதிச் சட்டம் இயற்றப்பட்டது. G.o.Ms No.1880 Education Dated 15.9.1928 ñŸÁ‹ 27.2.1929).
தந்தை பெரியார் கொண்ட மகிழ்ச்சிக்கோர் அளவில்லை. உங்கள் வீட்டில் ஒரு ஆண் குழந்தை பிறந்தால், முத்தையா என்றும், பெண் குழந்தை பிறந்தால், முத்தம்மாள் என்றும் பெயர் சூட்டுமாறு கேட்டுக்கொண்டார்.
இன்றைக்கு சமூகநீதி என்ற சொல் இந்தியத் துணைக் கண்டத்தின் பரப்பெல்லாம் உயிர்க்காற்றாக வீசிக் கொண்டு இருக்கிறது என்றால், அதற்கான மூல ஊற்று தமிழ் நிலமும், திராவிட இயக்கமுமே!
1928 ஆம் ஆண்டுமுதல் 1950 ஆம் ஆண்டுவரை தமிழ் மண்ணில் பரிணாம வளர்ச்சி பெற்று வந்த இந்த இட ஒதுக்கீடு சுதந்திர இந்தியாவில் காவு கொடுக்கப்பட்டது. உயர் ஜாதிப் பார்ப்பனர்களால் தமிழ்நாட்டின் இந்த இட ஒதுக்கீடு இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று பொய் வழக்குத் தொடுக்கப்பட்டு, சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் வெற்றியும் பெற்றனர்.
தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடே எரிமலையாக வெடித்துக் கிளம்பியதன் விளைவு, இந்திய அரசமைப்புச் சட்டம் முதன்முதலாகத் திருத்தப்பட்டது என்பதுதான் வரலாறு.
இடை இடையே இதற்கு இடையூறுகள் வந்தாலும், அவற்றை யெல்லாம் முறியடித்து இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடங்களைச் சட்ட ரீதியாகப் பெற்றது என்பது சாதனைச் சிகரத்தில் முக்கியமானதாகும்!
1918 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் நம் நாட்டின் கல்வி நிலை என்ன?
கலை அறிவியல் (Arts & Science BA) பார்ப்பனர்கள் 10,269
பார்ப்பனர் அல்லாதார் 3213
மற்றவர்கள் 1748
கலை அறிவியலில் முதுநிலைப் பட்டதாரிகள் (எம்.ஏ.) பார்ப்ப னர்கள் 389; பார்ப்பனர் அல்லாதார் 65; மற்றவர்கள் 55.
ஆசிரியர் தொழில் பார்ப்பனர்கள் 1094; பார்ப்பனர் அல்லாதார் 163. மற்றவர்கள் 241.
சட்டம் படித்தவர்கள் பார்ப்பனர்கள் 48; பார்ப்பனர் அல்லாதார் 4; மற்றவர்கள் 2.
பொறியியல் (சிவில்) பார்ப்பனர்கள் 121; பார்ப்பனர் அல்லாதார் 15; மற்றவர்கள் 23.
அதே சென்னைப் பல்கலைக் கழகத்தில், 89 சதவிகிதம் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் படிப்பதாக துணைவேந்தர் முனைவர் திருவாசகம் சொன்னாரே! (26.11.2010).
1952-1953 ஆம் ஆண்டில் மருத்துவக் கல்வியில் மொத்தம் 318 இடங்களில் பார்ப்பனர்கள் 104; பார்ப்பனர் அல்லாதார் 56;
மற்றவர்கள் 158.
2016-2017 இல் நிலைமை என்ன?
மருத்துவக் கல்லூரியில் சேருவதற்காக விண்ணப்பித்தோர்களுள் பிற்படுத்தப்பட்டோர் 10,538, தாழ்த்தப்பட்டோர் 5,720, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 5,314, இசுலாமியர் 1419, முன்னேறியோர் 1228, அருந்ததியர் 928, மலைவாழ் மக்கள் 232.
2016-2017 மருத்துவக் கல்லூரி பொதுப் போட்டியில் (Open Competition)
மொத்த இடங்கள் 884 இல் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்த இடங்கள் 599, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்குக் கிடைத்த இடங்கள் 159, தாழ்த்தப்பட்டோருக்குக் கிடைத்த இடங்கள் 23, மலைவாழ் மக்களுக்கு ஓரிடம், அருந்ததியருக்கு 2 இடம்; முசுலிம்களுக்கு 32 இடம், முன்னேறியோர் பெற்ற இடங்கள் 68.
திறந்த போட்டி என்றால், எல்லா ஜாதியினரும் பங்கேற்கும் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள். இதில் முன்னேறிய ஜாதியினரைப் புறங்கண்டு தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினரும் இடங்களை அள்ளிக் குவித்தனரே!
இதே ஆண்டில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றவர்கள் 8 பேர்; அதில் 7 பேர் பிற்படுத்தப்பட்டோர் ஒருவர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் ஆவார்.
இவை எல்லாம் நுழைவுத் தேர்வு என்ற ஒன்று இல்லாமல் +2 மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் என்பதை மறக்கக் கூடாது - நெஞ்சில் பதித்துக் கொள்ளவேண்டிய மிகவும் குறிப்பான முதன்மையான சமூகநீதிக் கோட்பாட்டால் விளைந்த பெரும் பேறு இது.
இதுதான் உயர்ஜாதிப் பார்ப்பனர்களின் கண்களை உறுத்தியது.
இதனை ஒழிப்பது எப்படி? நேரடியாக எப்பொழுதுமே வராதே ஆரியம், சூழ்ச்சிதானே அதன் தோள் பலம் - அதன் கண்டுபிடிப்புதான் ‘நீட்’ என்னும் அகில இந்திய நுழைவுத் தேர்வு.
இந்தியா முழுமையும் பல்வேறு கல்வித் திட்டங்கள் என்ற நிலை இருக்கும்பொழுது, சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்தின் அடிப்படையில் நுழைவுத் தேர்வை நடத்தினால், அதன் பலன் யாருக்குப் போய்ச் சேரும்? யார் வயிற்றில் அறுத்துக் கட்டப்படும் என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?.
அதுதான் கடந்தாண்டு (நீட் தேர்வு கொண்டு வந்ததால்) நடந்தது. ஆரியம் தன் சூழ்ச்சியில் வெற்றி பெற்றது. இதுனை நீடிக்க விடலாமா?
1.6 சதவிகிதம் படிக்கும் சி.பி.எஸ்.இ. மாணவர்கள் பலன் அடை வதற்காக 98.4 சதவிகித மாணவர்கள் பாதிக்கப்படவேண்டுமா? இதுதான் ஜனநாயகமா? மூன்று சதவிகித மக்களுக்காக  97 சதவிகித மக்கள் பழிவாங்கப்பட வேண்டுமா? இது பச்சையான ஆரியர் - திராவிடர் போராட்டம் அல்லவா? நீட்டை எதிர்த்துப் போராட்டம் ஏன் என்பதற்கு இதுதான் முக்கிய காரணம்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...