Friday, April 27, 2018

கலவரக் காடாகும் உத்தரப்பிரதேசம்

உத்தரப்பிரதேசத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள 12 மாவட்டங்களில் இசுலாமியர்கள் அதிகம் உள்ளனர். இம்மாவட்டங்களில் சிறு பிரச்சினை என்றாலும் சட்டம் - ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்படும். 2013 ஆம் ஆண்டு முசாபர் நகரில் ஏற்பட்ட கலவரம் இம்மாவட்டங்களில் ஏற்பட்டு இருந்தால், ஏராளமான உயிர்ச்சேதம் ஏற்பட்டி ருக்கும் என்று கூறப்பட்டது.
இசுலாமியர்கள் அதிகம் வாழும் பகுதியான காஸ்கன்ஞ் பகுதியில் குடியரசுத் தினத்தன்று கொடி அணிவகுப்பு ஒன்றை நடத்த வி.எச்.பி. ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. போன்றவை மாவட்ட காவல்துறை ஆணையரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தன. அங்கு நடப்பது சாமியார் ஆட்சியல்லவா! ஆகையால் காவல்துறையினர், சில பகுதிகளில் செல்லும்போது அமைதியாக செல்லவேண்டும் என்ற நிபந்தனையோடு அனுமதி அளித்திருந்தனர். ஆனால், இந்த அனுமதியை மாவட்ட ஆட்சியாளர் ஆர்.பி.சிங் ரத்து செய்யவேண்டும் என்று கூறினார்.
ஆனால், குடியரசுத் தினத்தன்று நண்பகலில் தடை உத்தரவு இருந்தும் இந்து அமைப்பினர் சுமார் 300 இரு சக்கர வாகனங்களில் செல்ல ஆரம்பித்தனர். இசுலாமியர்கள் அதிகம் வாழும் சாலை வழியாக சென்ற வர்கள், எப்போதும் போல் தங்கள் நச்சு நடவடிக்கையை அரங்கேற்றினர்.  இசுலாமியர்கள்பற்றி அவதூறாக முழக்க மிட்டுக்கொண்டும், முகமதுநபிகள் மற்றும் இசுலாமிய பிரமுகர்களைப்பற்றி தவறாகக் கூச்சலிட்டுக் கொண்டும் செல்ல, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் 3 கடைகள், 2 தனியார் பேருந்துகள், ஒரு கார் எரிக்கப்பட்டன. இந்தக் கலவரம் தொடர்பாக 112 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். உடனடியாக பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் இணையதள சேவையும் முடக்கப்பட்டது.
உத்தரப்பிரதேசத்தின் வடமேற்குப் பகுதி எல்லை யாகவுள்ள டில்லி மற்றும் இப்பகுதியில் உள்ள 8 மாவட்டங்களில் இசுலாமியர்கள் அதிகம் உள்ளனர். இதில் காஸ்கன்ஞ் மாவட்டமும் அடக்கம். இசுலாமியர்கள் பகுதிகளை எப்போதும் பதட்டமான சூழலில் வைத்திருக்க முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் விரும்பக் கூடியவர் ஆயிற்றே!
இவருடைய அரசியல் வாழ்க்கையே 2002 ஆம் ஆண்டு  கோரக்பூரில் நடந்த கலவரத்தில் இருந்துதான் துவங்குகிறது, கோரக்பூரில் இவர் தூண்டிவிட்ட கலவரம் 2007 ஆம் ஆண்டு மிகப்பெரிய கலவரமாக வெடித்தது. 2007 ஆம் ஆண்டு கோரக்பூர் மதக்கலவரத்தில் முதன்மைக் குற்றவாளியும் இவர்தான்.
இவர் மீதான கோரக்பூர் மதக்கலவர வழக்கை இவரே சமீபத்தில் அரசாணையிட்டு நீக்கியுள்ளார். தனக்குத்தானே நீதிபதியாகி விட்டார். 2013 ஆம் ஆண்டு முசாபர் நகர் கலவரத்திலும் பாஜகவினரின் கைவண்ணம் இருந்தது. இன்று மத்திய அமைச்சராக உள்ள மகேஷ் சர்மா, மாநில அமைச்சராக உள்ள சங்கீத் சோம் அனைவரும் முசாபர் நகர் கலவரத்தின் மூலம் அரசியலில் நுழைந்து இன்று மத்திய- மாநில அமைச்சர்களாக உள்ளனர்.
இந்த அரசு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது முதல் தொடர்ந்து சிறுபான்மையினர் மற்றும் தலித்துக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி விட்டது. 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சகரன் பூரில் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் தோரணம் கட்டி மைக்செட் வைத்ததற்காக அனுமதியின்றி விழா நடத்தினார்கள் என்று கூறி, 70 தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் ராணா பிரதாப் சிங் என்ற ஒரு ராஜபுத்திர மன்னரின் பிறந்த நாள் கொண்டாட ஆகஸ்ட் மாதம் அனுமதியளித்தது சாமியார் தலைமையிலான அரசு. அப்போது பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற பெயரில் தாழ்த்தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று அவர்களின் வீடுகளில் கல்லெறிந்தனர். இதனைத் தொடர்ந்து அங்கும் கலவரம் மூண்டது.  ஆட்சிக்கு வந்த ஓராண்டிற்குள் இட்டா, பரேலி, சகரன்பூர், ஆக்ரா, அலிகார், லலித்பூர் போன்ற மாவட்டங்களில் சிறியதும், பெரியதுமாக 12 மதக்கலவரங்கள் மற்றும் ஜாதிக் கல வரங்கள் தூண்டப்பட்டன.
முக்கியமாக உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உயர்ஜாதி மற்றும் பார்ப்பன ஆட்சி யாளர்கள்  நியமிக்கப்பட்டு விட்டனர். சமீபத்தில் வெளி யான மாவட்ட காவல்துறை ஆணையர்களின் பட்டியலில்  பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சிறுபான்மையினர் யாருமே நியமிக்கப்படவில்லை.
அதிக மக்கள் தொகை, அதிக மாவட்டங்களை கொண்ட ஒரு பெரிய மாநிலத்தில் இந்த நிலைமையை திட்டமிட்டே உருவாக்கியுள்ளார்கள். 2017 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச தேர்தலின் போது பாஜக சார்பில் ஒரு இசுலாமிய வேட்பாளர்கள்கூட நிறுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேச காவல்துறை கடந்த ஆண்டு நடந்த என்கவுன்டர்கள் குறித்து வெளியிட்டுள்ள பட்டியலில் மொத்தம் 921 பேர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஒருவர் கூட உயர்ஜாதி அல்லது பார்ப்பனர்கள் இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. உத்தரப்பிரதேச அரசு எந்த ஒரு அபாயகரமாக சூழலை நோக்கி விரைந்து கொண்டுள்ளது.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...