அண்மைக்காலமாக மத்திய கல்வி வாரியம் எனப்படும் சிபிஎஸ்இ தேர்வுகளில் வினாத்தாள்கள், வினாவுக்குரிய விடைகள் ஆகியவை வாட்ஸ் அப் சமூக ஊடகங்களின் வாயிலாக வெளியாகி அதிர்ச்சியை நாடுமுழுவதும் ஏற்படுத்தியது.
அதிலும் சிபிஎஸ்இ தலைமைப்பொறுப்பில் உள்ள வருக்கே வாட்ஸ் அப் தகவல் பகிரப்பட்டது. வினாத்தாள் கசிந்ததையடுத்து மறு தேர்வு நடத்தப் படும் என்றும், மறு தேர்வு நடத்தப்படாது என்றும் அடுத்தடுத்த அறிவிப்புகள் முன்னுக்குப்பின் முரணாக வெளியான வண்ணம் உள்ளன.
சிபிஎஸ்இ தேர்வுகளில் குழப்பநிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு கட்டாயம் என்று மத்திய அரசால் கூறப்பட்ட நீட் தேர்வை நடத்திவருவதும் சிபிஎஸ்இ அமைப்புதான்.
முதுநிலை மருத்துவம், பல் மருத்துவக் கல்வியில் மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு அறிவிப்பை திரும்பப் பெற்றது மருத்துவக் கவுன்சில் குழு
28.3.2018 அன்று மருத்துவக் கவுன்சில் குழுவின் இணையதளப் பக்கத்தில் வெளியான முதுநிலை மருத்துவம், பல் மருத்துவக் கல்வியில் மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு அறிவிப்பு தவறானதாக கவனக் குறைவாகவும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவும் இருந்ததாகவும், அதைத் திரும்பப் பெறுவதுடன், மீண்டும் புதிய அறிவிப்பு குழுவின்சார்பில் வெளியிடப்படும் என்றும் மருத்துவக் கவுன்சில் குழு கூறியுள்ளது.
மருத்துவக் கவுன்சில் குழுவால் அதன் இணையத்தில் முதுநிலை மருத்துவம் மற்றும் முதுநிலை பல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் கலந்தாய்வு முடிவு வெளி யிடப்பட்ட 3 மணி நேரத்தில் அந்த அறிவிப்பு செல்லத் தக்கதல்ல என்று குறிப்பிட்டு, விரைவில் புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
முதுநிலை மருத்துவம் மற்றும் முதுநிலை பல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் கலந்தாய்வு முடிவுக் கான கடைசி நாள் என்று 5.4.2018 என்று அதன் இணை யத்தில் கூறப்பட்ட நிலையில், தற்பொழுது நீட்டிக்கப் பட்டுள்ளது.
இன்னும் என்னென்ன குழப்பங்கள், அறிவிப்புகள் வருமோ என்று தெரியவில்லை.
நீட் கவுன்சிலிங் மூலம் தேர்வு செய்யப்படுவதற்கான முதல் கட்ட பதிவு 26.3.2018 அன்று முடிந்தது. தற்பொழுது தொழில்நுட்ப பிரச்சினைகள் மற்றும் மென்பொருள் பிரச்சினைகளால் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும், மாணவர்கள் எந்த கல்லூரியைத் தேர்வு செய்வது, எந்த பாடப்பிரிவை தேர்வு செய்வது என்பதில் உள்ள பிரச்சினைகளை மாணவர்கள் எதிர்கொண்டுள்ளனர். சிபிஎஸ்இ தேர்வில் 10 ஆம் வகுப்பில் கணிதப்பாடம், 12ஆம் வகுப்பில் பொருளாதாரப் பாடம் ஆகியவற்றுக்கு மறு தேர்வு நடத்தப்படுவது குறித்து குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்ற நிலையில், அதேபோன்ற குழப்பநிலை மருத்துவக் கவுன்சில் குழுவின் செயற்பாட்டிலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
நாடு முழுவதும் உள்ள மாணவர்களும், பெற்றோர் களும் மருத்துவக் கவுன்சில் குழுவுக்கு சமூக ஊடகங் களில் தங்களின் கண்டனத்தையும், கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
மனிதவள மேம்பாட்டுத் துறை என்ற ஒன்று இருக்கிறதா? மத்தியக் கல்வி வாரியம்தான் செயல் படுகிறதா? இந்தத் தவறுகளுக்கெல்லாம் யார் பொறுப்பு? குழப்பம்! குழப்பம்!! குழப்பத்துக்கு மேல் குழப்பம் என்பதுதான் இந்த நீட் தேர்வு! மத்தியில் பிஜேபி தலைமையிலான ஆட்சி வந்தாலும் வந்தது - எல்லா வற்றிலும் பெருந் தோல்வி, பின்னடைவு. பிரதமரோ - உள்நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல், எப்பொழுதும் வானூர்தியிலேயே இறக்கைக் கட்டிப் பறந்து கொண்டுள்ளார். நாடாளுமன்றத்திலும் வாய்த் திறக்கமாட்டார். மேடையைப் போட்டுக் கொடுத்தால் 56 அங்குல மார்பைப் புடைத்து சண்டமாருதம் பொழிவார். மாதம் ஒரு முறை மன்கி பாத் என்னும் சடங்கு! என்ன நாடோ, என்ன ஆட்சியோ, என்ன பிரதமரோ!
இன்னும் ஓராண்டு - அதற்குள் இந்துத்துவா வெறியாட்டத்துக்கு மட்டும் குறைச்சல் இருக்காது!
வாக்குச்சீட்டு ஆயுதம் தயாராக இருக்கட்டும்!
No comments:
Post a Comment