Friday, April 27, 2018

இராணுவத் தளபதியின் ஆபத்தான பேச்சு

வடகிழக்கு மாநிலங்களின் இராணுவ பயிற்சிக் கூட்டம் அசாம் மாநிலத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய இந்திய இராணுவத் தளபதி பிபின் ராவத்,  ‘‘அசாமில் பாஜக.வைவிட அனைத்து இந்திய அய்க்கிய ஜனநாயக முன்னணி (ஏஅய்யுடிஎப்) வேகமாக வளர்ந்து வருகிறது. ஒற்றுமையுடன் இருந்தால் மகிழ்ச்சியுடன் வாழலாம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதோடு ஒற்றுமையாக இருக்கும் மக்கள் மத்தியில் பிரச்சினைகள் ஏற்படுத்த முயற்சி செய்வோரை அடை யாளம் காணவேண்டும்''  என்றார்.  அவர் அனைத்து இந்திய அய்க்கிய ஜனநாயக முன்னணியை பாராட்டும் வகையில் இதனைக் கூறவில்லை. அவரது இந்தக் கருத்து மிகவும் மோசமான ஒரு கருத்தாகும்.  அதாவது அவர் கூறிய அசாம் கட்சி இசுலாமியர்களின் கட்சியாக அசாமில் பார்க்கப்படுகிறது. அந்தக் கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் இசுலாமியர்கள். அந்தக் கட்சியை உருவாக்கிய பத்ருதீன் அஜ்மல் அசாமில் மிகவும் முக்கிய இசுலாமிய மதகுருவாகத் திகழ்பவர்.
இருப்பினும் அந்த அரசியல் கட்சியை இந்திய அரசமைப்புச்சட்டத்தின் அனைத்து விதிகளையும் உள்வாங்கி அரசமைப்புச்சட்டம் கூறும் வகையில் உருவாக்கியுள்ளார். அக்கட்சிக்கு இசுலாமியர்கள் மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்தக் கட்சி 2009 ஆம் ஆண்டில் முதல் முதலாகத் தேர்தலில் களம் கண்டு தொடர் வெற்றிகளைப் பெற்று வருகிறது. 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்« தர்தலில் மூன்று நாடாளு மன்ற உறுப்பினர்களை அசாமின் பிரதிநிதிகளாக அனுப்பியுள்ளது. காங்கிரசுடன் ஏற்கெனவே இருந்த கூட்டணியை முறித்த காரணத்தால் 2016 இல் நடந்த அசாம் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை பாஜக விடம் பறிகொடுத்தது. இருப்பினும் இதற்கான இதன் வாக்கு வங்கியில் மாநிலத்தில் மூன்றாம் இடத்தில் உள்ளது. 18 சட்டமன்ற உறுப்பினர்களையும், அசாம் சட்டப்பேரவைக்கு அனுப்பியுள்ளது.  இத்தகையதொரு ஜனநாயக அமைப்பைப் பார்த்து இராணுவத் தளபதி இசுலாமிய அமைப்பு ஒன்று இவ்வளவு வேகமாக வளருவது ஆபத்து என்ற குரலில் பேசியுள்ளது எவ்வளவு பெரிய ஆபத்து!
இராவத்தின் இந்தக் கருத்தை  ஏஅய்யுடிஎப் தலைவர் மவுலானா பத்ருதீன் அஜ்மல் கண்டித்துள்ளார். அவர் கூறும்போது, ‘‘இராணுவத் தளபதி ‘‘அரசியல் குறித்துப் பேசுவது அதிர்ச்சியளிக்கிறது. முக்கிய அரசியல் கட்சி களின் செயல்பாடு சரியில்லாத காரணத்தால் தான் எங்கள் கட்சி வளர்ச்சி அடைந்து வருகிறது. இதில் இராணுவத் தளபதிக்கு என்ன கவலை என்று தெரியவில்லை. பெரிய கட்சிகளின் தவறான நிர்வாகம் காரணமாக ஏஅய்யுடிஎப் மற்றும் மாநில கட்சிகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. அரசியலமைப்புக்கு எதிராக ஒரு தளபதி அரசியலையும், மதத்தையும் சம்பந்தப்படுத்திப் பேசலாமா?'' என்ற வினாவை எழுப்பியுள்ளார்.
அகில இந்திய மஜ்லிஸ் இ இத்தேஹதுல் முசுலீ மின் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறுகையில், அரசியல் கட்சியின் வளர்ச்சி குறித்து பேசுவது இராணுவத் தளபதியின் பணியல்ல. ஜனநாயகமும், அரசியலமைப்பும் பலதரப்பட்ட அரசியல் கட்சிகள் வளர்வதற்கு அனுமதி வழங்கியுள்ளன. இராணுவம் எப்போதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியின் தலைமையின்கீழ் தான் பணியாற்றவேண்டும்'' என்று கூறியுள்ளார்.
இராணுவத் தளபதியின் இந்தப் பச்சை மதவாதப் பேச்சிற்கு இதுவரை எந்த அமைப்புகளும் உரிய வகையில் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஆனால், பிப்ரவரி 12 ஆம் தேதி, ஜம்மு-காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் இசுலமியர்கள். இது குறித்து அய்.எம்.அய்.எம். கட்சி அய்தராபாத் எம்.பி அசாதுதீன் ஒவைசி  செய்தியாளர்களிடம் பேசும் பொழுது, ‘‘இந்தியாவில் உள்ள இசுலாமியர்களின் நாட்டுப்பற்றைபற்றிக் கேள்வி எழுப்புபவர்கள், சமீபத்திய சஞ்சுவன் இராணுவ முகாம் தாக்குதலில் உயிரிழந்த இசுலாமிய இராணுவ வீரர்கள் பற்றி பேசாமல் அமைதியாக இருப்பது ஏன்'' என்று கேள்வி எழுப்பினார்.
இவர் இவ்வாறு கூறிய சிலமணி நேரத்தில், இந்திய இராணுவத்தின் வடக்கு பிராந்திய தலைமை அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் தேவராஜ் அன்பு, ‘‘இராணுவத்தில் நாங்கள் எந்தவிதமான மத பேதமும் பார்ப்பது கிடையாது. அவ்வாறு பேசுபவர்கள் இராணுவத்தின் செயல்பாடுகளை முழுமையாக அறியாதவர்கள். ஜம்மு - காஷ்மீரில் இளைஞர்கள் தொடர்ந்து தீவிரவாத இயக்கங்களில் சேர்ந்து வருவது கவனம் செலுத்த வேண்டிய ஒரு விஷய மாகும். தற்சமயம் இளைஞர்களிடையே பிரிவினைவாத மனப்பான்மையைத் தூண்டுவதில் சமூக வலைத்தளங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன'' என்று தெரிவித்தார்.
ஓர் இராணுவத் தளபதியே அரசியல், மதவாதம் பேசுவது இராணுவத்துக்குள் பிளவை ஏற்படுத்தக் கூடியதாகும்.


இவர்மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் - நாடாளுமன்றத்திலும் பிரச்சினையை எழுப்பவேண்டும்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...