Friday, April 27, 2018

அண்ணா நினைவு நாளில் சிந்திப்போம்!

அறிஞர் அண்ணாவின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள் இந்நாள். 60 வயது நிறைவடையும்முன்பே தன் இறுதிப் பயணத்தை அண்ணா அவர்கள் மேற்கொண்டாலும், அவர் விட்டுச் சென்ற சிந்தனைகள், வலியுறுத்திய கோட்பாடுகள் என்றைக்கும் நம் நாட்டுக்குத் தேவைப்படுபவையே!
தந்தை பெரியார் அவர்களை விட்டுப் பிரிந்து அவர் சென்றி ருந்தாலும், ஓர் அரசியல் கட்சிக்குத் தலைமை ஏற்றிருந்தாலும், தந்தை பெரியார் அவர்களிடத்தில் தாம் ஏற்றுக்கொண்ட சமுதாய அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து அவர் பிறழ்ந்தார் இல்லை.
‘‘நான் கண்ட கொண்ட ஒரே தலைவர் பெரியார்தான்!’’ என்று அண்ணா சொன்னது - வெறும் சொல்லழகு தோரணம் அல்ல - அவரின் உள்ளத்தில் பூத்த வாடாமலர்ச் சிந்தனையாகும்.
18 ஆண்டுகள் பிரிந்த நிலையிலும், ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் நிலையில், தான் கண்ட ஒரே தலைவரான தந்தை பெரியாரைத் தேடிச் சென்று வாழ்த்துக்களைப் பெற்ற அந்த நிலைதான் அண்ணாவின் கம்பீரமான தனித்துவம் மிகுந்த ஒரு தலைசிறந்த தலைவருக்கான தனி அணிகலனாகிய குணநலனாகும்.
குறுகிய காலம்தான் ஆட்சிப் பீடத்தில் அவர் அமர்ந்தார் எனினும், அவரின் தனித்தன்மையான சாதனைகளாக வரலாற்று மகுடத்தில் ஒளிரும் மூன்று முத்துகள் விலை மதிக்கப்பட முடியாதவை - காலாகாலத்திற்கும் ஒளிவீசும் சுடர்மணிகளாகும்.
1. சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டல்
2. சுயமரியாதைத் திருமணத்துக்கு சட்ட வடிவம் கொடுத்தது
3. தமிழ்நாட்டில் தமிழும், ஆங்கிலமும் என்ற இரண்டே மொழிகள்தான்! இந்திக்கு இடமில்லை என்ற வரையறை.
‘‘எந்த ஆட்சி வந்தாலும் இந்த மூன்றிலும் கைவைக்க யாராலும் முடியாது. அந்த நிலை நீடிக்கும்வரை அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்’’ என்று அண்ணா அறிவித்தது அசாதாரணமான அறிவுமொழியாகும்.
இன்னொரு முக்கிய அறிவிப்பு - அதுவும் சட்டப்பேரவையில் அந்த அறிவிப்பு! சட்டமன்றத்திற்கே செல்லாத தந்தை பெரியார் அவர்களுக்கு ‘இந்த அமைச்சரவையே காணிக்கை!’ என்று அறிவித்தாரே - தன் குருநாதருக்கு இதைவிட சிறந்த நன்றிக் காணிக்கையை எந்தச் சீடராலும் வழங்க முடியாதே!
ஆனால், அந்த அண்ணாவை ஏற்றுக்கொண்டவர்கள், அண்ணா பிறந்த நாளில் அவர்தம் சிலைக்கு மாலை அணிவிப்பவர்கள் - நினைவு நாளில் அண்ணா சதுக்கத்தில் மலர்வளையம் வைப்பவர்கள் - ஒவ்வொருவரும் தன்னை சுயவிமர்சனப்படுத்திக் கொள்வது அவசியமாகும்.
முதலில் சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டியது - தந்தை பெரியாரிடம் அண்ணா ஏற்றுப் பிரச்சாரம் செய்த சமுதாயக் கொள்கைகள் - பகுத்தறிவுச் சிந்தனைகள்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் பல இடங்களிலும், பல நேரங்களிலும் இவற்றை நினைவூட்டிக் கொண்டே இருந்தார். மானமிகு கலைஞர்மீது இன்றைக்கும்கூட கணைகளை எதிரிகளும், துரோகிகளும் ஏவுவதற்கு முதற்காரணமே இதுதான்.
இராமன் எந்த இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தான் என்று அவர் கேட்டது - அய்யா - அண்ணா ஆகியோரிடத்தில் சிந்தனை வழி தாம் வரித்துக்கொண்டதே!
‘நான் ஏன் இந்து அல்ல?’ என்பதற்கு அண்ணா அவர் கள் ஆரிய மாயை நூலில் அள்ளி அள்ளிக் கொடுத்த கார ணங்களும், வரலாற்று ஆவணங்களும் எவராலும் இதுவரை மறுக்கப்பட்டதுண்டா?
அண்ணா பெயரால் ஆட்சி நடத்தும் அண்ணா தி.மு.க.வினர், அதன் அமைச்சர்கள் அண்ணா அளவுகோலில் அரை சதவிகிதம் தேறுவார்களா?
‘இந்து மதம் என்றால் கிள்ளுக் கீரையா? அதனை வீரமணி விமர்சிக்கலாமா?’ என்று ஓர் அமைச்சர் ஆவேசப்படுகிறார் என் றால், அவர்களை எந்த இடத்தில் கொண்டு போய் நிறுத்துவது?
கட்சியின் பெயரிலும், கொடியின் உருவத்திலும் அண்ணா இருந்தால் போதுமா? இன்னும் சொல்லப்போனால், இவற்றை சுவீகரித்துக் கொண்டு, அண்ணா கொள்கைகளை உதாசினப்படுத்துவதைவிட, அண்ணாவுக்கு இழைக்கப்படும் அவமரியாதை வேறு எதுவாகத்தான் இருக்க முடியும்?
சமூகநீதிக்காக தந்தை பெரியாரோடு இணைந்து அண்ணா தூக்கிப் பிடித்த கொடி எங்கே? சமூகநீதிக்காகத்தானே தந்தை பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். அதிலிருந்து கிளைத்ததுதானே திராவிடர் கழகம் - தி.மு.க. - அ.தி.மு.க. எல்லாம்!
அந்த சமூகநீதிக்கான ஆணிவேரில் மத்தியில் உள்ள ஓர் ஆட்சி வெந்நீரை ஊற்றுகிறது - ‘நீட்’ என்று கூறி நீட்டாக ஒடுக்கப்பட்ட மக்களின் மருத்துவக் கல்வி வாய்ப்பை வெட்டிப் புதைக்கிறது. நீட்டுக்கு விலக்குக் கோரி இரு திருத்த மசோதாக்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டும், அதற்கான ஒப்புதலை மத்திய அரசிடமிருந்து பெறத் துப்பு இல்லை, இவர் களுக்கு ஆட்சி ஒரு கேடா?
சமூகநீதிக்காக ஆயிரம் பிரதமர் நாற்காலிகளை இழக்கத் தயார் என்ற பிரதமர் வி.பி.சிங் பிரகடனத்தை நினைத்துப் பார்க்கவேண்டும்.
குடியரசுத் தலைவர் தேர்தலிலும், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலிலும் இதனை நிபந்தனையாக வைத்திருந்தால், இந்நேரம் ‘நீட்’ புதைகுழிக்குப் போயிருக்குமே!
மத்திய பி.ஜே.பி. ஆட்சிக்கு அடிபணியும் அடிமை ஆட்சியாக ஆன பிறகு, அண்ணா பெயரை உச்சரிக்க கிஞ்சிற்றும் தகுதி உண்டா?
‘ஆட்டுக்குத் தாடி எதற்கு? நாட்டுக்குக் கவர்னர் எதற்கு? என்று கேட்டார் அறிஞர் அண்ணா. ஆனால், தமிழ்நாடு ஆளுநரோ மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணா தி.மு.க. அரசு பேன் குத்திக் கொண்டு கிடக்கிறதே - ஆளுநர் அவ்வாறு ஆய்வு செய்ய அவருக்கு அதிகாரம் உண்டு என்று ஆலவட்டம் சுழற்றுகிறதே!
அண்ணா நினைவு நாளில் இந்த சிந்தனைகள் தலைதூக்க வேண்டாமா? கட்சிகளை எல்லாம் கடந்து மக்கள் சிந்திப்பார்களாக!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...