Friday, April 27, 2018

பி.ஜே.பி.யின் தேர்தல் முழக்கம் - பாசிசத்தின் பாய்ச்சலே!

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கருநாடகா போன்ற மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியில் உள்ள பாஜக தேர்தலில் பலத்த தோல்வியைச் சந்திக்கும் என்று கருத்துக் கணிப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் மதரீதியாக மக்களைப் பிரித்து வாக்கு களைப் பெற பாஜகவிற்கு ஆதரவாக இந்து அமைப்புகள் களமிறங்கியுள்ளன. மத்தியப் பிரதேசத்தில் மாவட்டம் தோறும் சிறு நகரங்களில்கூட ஆர்.எஸ்.எஸ். பேரணிகள், பயிற்சி வகுப்பு என்ற பெயரில் மத ரீதியாக வன்முறைக் கருத்துகள் மக்களிடையே போதிக்கப்படுகின்றன. இப்பொதுக் கூட்டங்களில் பேச்சாளராக சர்ச்சைக்குரிய பேச்சுகளைப் பேசியே பழக்கப்பட்ட பாஜக தலை வர்களை அழைத்து வருகின்றனர். அவர்களின் பேச்சால் மத வன்முறை உருவாகும், அதை வைத்து வாக்குகளைப் பிரிக்கலாம் என்ற ஆபத்தான உத்தியை கடைபிடிக்கிறார்கள்!
மத்தியப் பிரதேசம் நிமேச் என்ற பகுதியில் ஆர்.எஸ்.எஸ். பேரணி மற்றும் பொதுக்கூட்டம் அய்தராபாத் கோஸ்மகல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜா சிங் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:
‘‘தினமும் ஆர்.எஸ்.எஸ். பேரணி - கருத்தரங்கம் நடைபெறுகிறது, உங்களுக்குத் தேவையான அனைத்தும் அங்கே கிடைக்கும், இந்து என்று கூறிக்கொள்பவர்கள் இங்கே (ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில்) இருப்பார்கள், இங்கு வராதவர்கள்  இந்துவாக இருக்க முடியாது’’ என்றார்.
மேலும் அவர் பேசுகையில், ‘‘ஆர்.எஸ்.எஸ். அமைப்பு  நல்ல தலைவர்களை உருவாக்கும் பயிற்சிப் பட்டறை; இங்கிருந்துதான்  மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் சாமியார் ஆதித்யநாத் போன்ற சிறந்த தலைவர்கள் உருவானார்கள். ஆகையால் நீங்கள் அனைவரும் அருகில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் உங்கள் பெயரை பதிவு செய்து உறுப்பினராக வேண்டும்.’’
‘‘ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேராதவர்கள் உண் மையான இந்துவாக இருக்க முடியாது. அவர்களால் நாட்டுக்கு எந்த சேவையும் செய்ய முடியாது. இந்த நாட்டில் இருக்கும் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ‘பாரத் மாதா கி ஜெய்’ ‘வந்தே மாதரம்‘ என்று கூற வேண்டும்; அப்படி கூற விருப்பம் இல்லாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம். எதிரி நாட்டை ஊக்குவிப்பது மற்றும் தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் யாரையும் உலகில் எந்த நாடும் ஏற்றுக் கொள்ளாது. தீவிரவாதத்திற்கு எதிரான குரல் நமது நாட்டில் தான் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்றும் அப்சல் குரு போன்ற தீவிரவாதிகளுக்கு ஆதரவாக குரல்களை எழுப்புகின்றனர்.’’
‘‘இந்துக்கள் தங்களின் மதம் மேம்பட லவ் ஜிகாத் போன்ற சாத்தான்களுக்கு எதிராகப் போராட வேண்டும். இந்து சமுதாயத்திற்கு நல்லது செய்ய நினைப்பவர்கள் முதலில் லவ் ஜிகாத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதே போன்று கிறித்துவ அமைப்புகளால் மலைவாழ் மக்களிடையே செய்யப்படும் மதமாற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும்‘’ என்றும் ராஜாசிங் கூறியுள்ளார். பொதுமேடையில் ராஜாசிங் பேசிய இந்த பேச்சுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
இவர் ரோகித் வெமுலா மரணம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், முற்போக்கு மாணவர் அமைப்பினரின் போராட்டங்கள் குறித்து பல்வேறு விவாதத்திற்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். தற்போது ஒட்டுமொத்த இந்து சமூகத்தையே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொண்டர்கள் என்று கூறியுள்ளார்.
ஏதோ ஒரு பி.ஜே.பி. சட்டப்பேரவை உறுப்பினர் இப்படியெல்லாம் பேசியிருக்கிறார் என்று எவரும் அலட்சியப்படுத்தவேண்டாம். இது பி.ஜே.பி. - சங் பரிவார்க் குழுமத்தின் ஒன்று திரண்ட பாசிசத்தின் பாய்ச்சல் குரல்!
வேண்டுமானால் வெவ்வேறான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடும் - ஆனால், ஒட்டுமொத்தமான காவிகளின் ஒன்றுபட்ட பாசிசக் கருத்தே இதுதான்.
எச்சரிக்கை! எச்சரிக்கை!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...