Friday, April 27, 2018

வரவேற்கத்தக்க சட்டம்

ஆடம்பர திருமணத்துக்கு தடை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது, விரைவில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. பெரும் பணக்காரர்கள், அரசியல்வாதிகள் தங்கள் வாரிசுகளுக்கு மிகவும் ஆடம்பரமாக திருமணம் நடத்துகின்றனர். சமீப காலமாக, நடுத்தர வர்க்கத்தினர் கூட ஆடம்பரமாக திருமணம் நடத்தத் தொடங்கியுள்ளனர். ஆடம்பரமான விழா மற்றும் நகைகள், உணவு, உடை அலங்காரம் என கோடிக்கணக்கான ரூபாய் வரை செலவும் செய்கின்றனர். இவ்வாறு நடக்கும் ஆடம்பர திருமணங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், காங்கிரசு எம்.பி. ரஞ்சித் ரஞ்சன், மக்களவையில் தனிநபர் மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "ஆடம்பர திருமணங்களுக்கு தடை விதிக்க வேண்டும். ஒரு திருமண நிகழ்ச்சிக்கு ரூ.5 லட்சத்துக்கு மேல் செலவு செய்தால், அதிலிருந்து 10 சதவீதத்தை ஏழை பெண்களின் திருமண செலவுக்காக அந்தந்த மாநில அரசுகளிடம் அளிக்க வேண்டும். திருமணத்துக்கு செலவு செய்ய வேண்டிய தொகை, விருந்தினர்கள் அழைப்பு போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். திருமண விழாக் களில் அதிகளவில் உணவுப்பொருட்கள் வீணாவதை தடுக்க வேண்டும். 60 நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்ய வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மசோதா அடுத்த மக்களவை கூட்டத் தொடரில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் எனத் தெரிகிறது. இதுகுறித்து ரஞ்சித் ரஞ்சன் கூறுகையில், "தங்கள் செல்வாக்கை காட்டுவதற்காக மிகவும் ஆடம்பரமாகத் திருமணங்களை நடத்துகின்றனர். இதனால், திருமணத்துக்கு அதிகம் செலவு செய்ய வேண்டிய மனநிலைக்கு ஏழைகள் ஆளாகின்றனர்.  இது சமூகத்துக்கு ஏற்புடையது அல்ல. எனவே, ஆடம்பர திருமணங்களுக்கு தடை விதிக்க வேண் டும்" என்றார்.
கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி கருநாடக மாநிலத்தின் பா.ஜ.க. முன்னாள் அமைச்சரும், சுரங்க அதிபருமான காலி ஜனார்தன் ரெட்டி தனது மகளின் திருமணத்தை 500 கோடி ரூபாய் செலவில் வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார். இந்த திருமணத்திற்கான அழைப்பிதழில் தொடங்கி ஆடம்பரத்திற்கு எதிலும் குறை வைக்கவில்லை. இவ்வளவுக்கும் ரூபாய் மதிப்பிழப்பு நடைமுறையில் இருந்த கால கட்டம் அது!
தன்னை விஜயநகர அரசரான கிருஷ்ண தேவராயரின் மறுபதிப்பு என்று  எண்ணிக்கொள்ளும் ரெட்டி தன் மகளின் திருமணத்திற்காக விஜயநகர சாம்ராஜ்யத்தை பெங்களூரு அரண்மனைத் திடலில் உருவாக்கினார்.
மணமகளின் திருமணப் புடவையின் விலை மட்டுமே 17 கோடி ரூபாய் என்றும், அத்துடன் திருமணப் பெண் அணியும் ஆபரணங்களின் விலை ரூ.90 கோடி மதிப்பிலானவை என்றும் கூறப்பட்டது. இந்த ஆடம்பரத்தை அரங்கேற்றிய இந்த ஜனார்தன் ரெட்டி பா.ஜ.க. முன்னாள் அமைச்சராவார். பா.ஜ.க. வின் முக்கிய அமைச்சர்களுள் ஒருவரான நிதின் கட்கரி இந்த பிரமாண்ட திருமணத்தில் கலந்து கொண்டார்.
இதே போல் கடந்த ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் மகள் திருமணமும் அதனைத் தோற்கடிக்கும் வகையில் நடந்துள்ளது. இந்தத் திருமணத்துக்கு மிக முக்கியமான விருந்தாளிகளை அழைத்து வருவதற்கு 50 தனியார் விமானங்கள் அமர்த்தப்பட்டனவாம்!
திருமணம் நடைபெறும் மேடைக்கு விரைந்து வருவதற்காக திருமணப் பந்தலுக்குச் சற்று தொலைவில் இரண்டு ஹெலிகாப்டர்கள் இறங்குதளங்கள் அமைக் கப்பட்டிருந்தன.  இந்தத் திருமணத்தில் சுமார் 10000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்றனர். இதற்கு முன் நிதின் கட்கரி தன் இருமகன்களுக்கும் மிக பிரம்மாண்டமாக இதே நாக்பூரில் திருமணம் செய்து வைத்தார். இதற்காக வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியதுண்டு.
பல்வேறு பாஜக தலைவர்கள் தங்களது வீட்டு விழாக்களுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்வதில் முன்னோடியாக இருந்துள்ளனர்.
இப்பொழுது தாக்கல் செய்யப்பட்டுள்ள திருமண செலவை மட்டுப்படுத்தும் மசோதா வரவேற்கத் தகுந்ததேயாகும்.
மக்களின் சராசரி வரும்படியில் ஒரு பத்து நாள் அல்லது 15 நாள் வரும்படிக்கு மேல் செலவு செய்ய அனுமதிக்கவே கூடாது மற்றும் நாள் சுருக்கமும் ஒரு மாறுதலாகும் என்று ('விடுதலை' 10.6.1970) இன்றைக்கு 48 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தொலை நோக் கோடு தந்தை பெரியார் கூறிய இந்தக் கருத்தை எண்ணிப் பாருங்கள்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...