அனுமன் சலிஸா என்பது ஆஞ்சநேயரைப் பற்றிய 40 சுலோகங்கள் கொண்ட தோத்திரமாம். நினைத்த காரியம் நடக்கவேண்டுமென்றால் இதை தினசரி ஜெபிக்கவேண்டும் என்று அடிக்கடி ஆன்மிக பத்திரிகைகள் சில கட்டுக்கதைகளை எழுதி 'இது போன்று உங்களுக்கும் நடக்க மந்திரத்தை ஜெபியுங்கள்' என்று கூறுவதுண்டு. இந்த அனுமன் சலிஸா குறித்து மத்தியப் பிரதேச தலைவர்களில் ஒருவரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான ரமேஷ் சக்சேனா கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் பெருமழையுடன் கூடிய சூறாவளிக் காற்று அடுத்த 24 மணி நேரங்களில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மய்யம் அறிவித்தது. இதற்காக மத்தியப்பிரதேச விவசாயத்துறை அமைச்சர் பால்கிருஷ்ணா படிதாருக்கு ரமேஷ் சக்சேனா ஒரு யோசனை தெரிவித்துள்ளார்.
"வானிலை மய்யம் இன்னும் 4 அல்லது 5 நாட்களுக்குள் கடும் இயற்கை சீற்றம் ஏற்படும் என்று கூறி உள்ளது. கடும் சூறாவளியும், மழையும் வரும் எனத் தெரிய வந்துள்ளது. இதற்கு ஒரு நல்ல யோசனை உள்ளது. விவசாயிகள் தங்கள் கிராமங்களில் ஒன்று கூடி தொடர்ந்து அனுமன் சலிஸாவை ஜெபித்து வர வேண்டும். அதன் மூலம் அவர்கள் பயிர்கள் இயற்கை சீற்றத்தில் இருந்து காக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விவசாய அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "ரமேஷ் சக்சேனா கூறியதில் தவறு ஏதும் இல்லை. அனுமன் சலிஸாவை ஜெபிப்பது மூலம் விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும். மேலும் அவர்களுடைய தன்னம்பிக்கை பலப்படும்" எனக் கூறி உள்ளார். இதே போல் பாஜகவின் முக்கியதலைவர்களுள் ஒருவரான வினய் கட்டியா என்பவர் "இந்துக்கள் அனைவரும் சேர்ந்து ராமநாமம் கூறினால் பாகிஸ்தான் படைகள் வெகுண்டு ஓடிவிடும்" என்று கூறியிருந்தார்.
முன்னாள் குஜராத் முதல்வரும், தற்போதைய மத்தியப்பிரதேச ஆளுநருமான ஆனந்திபென் படேல் 2015-ஆம் ஆண்டு குஜராத்தில் மழை குறைவாகப் பெய்யும் என்று வானிலை அறிக்கை கூறிய உடன், "கிராமங்களில் யாகம் நடத்துங்கள்; வருண பகவான் மகிழ்ந்து மழையைத் தந்துவிடுவார்" என்று கூறியிருந்தார். இதற்கு அப்போதைய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெலுங்கானாவில் நடந்த கல்லூரி விழாவில்பேசும் போது "குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் கூறியதில் தவறு ஏதுமில்லை, முழு நம்பிக்கை வைத்து எதைச் செய்தாலும் அது பலனளிக்கும்" என்று கூறியிருந்தார். இதை பல கல்வியாளர்களும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.
பாரதீய ஜனதா ஆட்சி என்பதைவிட பஜனைக் கும்பலின் கையில் சிக்கிச் சீரழியும் ஆட்சி என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம்.
இப்படி மந்திரங்களால் எதையும் சாதித்து விடலாம் என்றால் அரசு எதற்கு? துறைகள் எதற்கு? அதிகாரிகள் எதற்கு? நிறுவனங்கள்தான் எதற்கு?
ஓடி ஓடி ஒவ்வொரு மாநிலத்திலும் பிரதமர் மோடி பிரச்சாரம் ஏன் செய்ய வேண்டும்? மங்கிபாத் வழியாக மந்திரங்களை அவிழ்த்து விட வேண்டியதுதானே.
மந்திரத்தால் மழை வரும், மந்திரத்தால் மழை தடுக்கப்பட முடியும் என்ற நிலை இருந்தால் தண்ணீரின்றிப் பயிர்களும், விவசாயிகளும் சாவது ஏன்? வெள்ளத்தால் பயிர்கள் மூழ்கவும், நட்டப்பட்ட விவசாயி தற்கொலை செய்வதும் ஏன் நீடிக்கிறது? வருணாசிரமும், வருண ஜெபமும்தான் ஓர் ஆட்சியின் இரண்டு கால்களா? இதைத் தட்டிக் கேட்க பிஜேபியில் ஒரே ஒரு பகுத்தறிவுவாதி கூடக் கிடையாதா? வெட்கக் கேடு!
No comments:
Post a Comment