Friday, April 27, 2018

177.25 டி.எம்.சி. நீராவது கிடைக்குமா?

இந்தியாவில் பதினான்கு மகாநதிகள் உள்ளன. மேலும் 44 நடுத்தர ஆறுகளுள் ஒன்பது  ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையே ஓடு கின்றன. மாநிலங்களுக்கு இடையே ஓடுகிற ஆற்று நீரைப் பங்கீடு செய்வதில் வரும் சிக்கல்களைத் தீர்க்க இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இதற்கெனப் பிரிவு 262 சேர்க்கப்பட்டுள்ளது. நதிநீர்ப் பங்கீடு பற்றிய சிக்கல் எழுந்தால் அதை நாடாளுமன்றம் தலையிட்டுத் தீர்த்துவைக்க வேண்டும் என அந்தப் பிரிவு கூறுகிறது.
அரசமைப்புச் சட்டப் பிரிவு 262 -இன்படி மாநிலங் களுக்கு இடையிலான நதிநீர்ப் பிரச்சினைகள் சட்டம் 1956-இல் இயற்றப்பட்டது. காவிரிப் பிரச்சினை போலவே மேலும் பல நீர்ச் சிக்கல்களுக்கும் நடுவர் மன் றங்கள் அமைக்கப்பட்டன. கருநாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் கிருஷ்ணா ஆற்றுநீரைப் பங்கிட்டுக்கொள்வதில் எதிர்கொண்ட சிக்கலைத் தீர்க்க
1969-இல் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. மேலும், கோதாவரி, நர்மதா முதலிய ஆறுகளின் நீரைப் பங்கிடு வதிலும் சிக்கல் எழுந்து அவற்றுக்காகவும் நடுவர் மன்றங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் எதுவும் நிரந்தரமாகத் தீர்க்கப் படவில்லை. பல ஆண்டுகள் சென்ற பிறகு  மத்திய அரசு (பிரதமர் வி.பி. சிங்) காவிரி நீர்ப்பங்கீட்டிற்காக 1990-இல் 'காவிரி நடுவர் மன்றம்' அமைத்தது.
1991இல் தமிழ்நாட்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டுமென்று ஒரு இடைக்கால ஆணையை நடுவர் மன்றம் வழங்கியது. அதனால் தமிழருக்கெதிராக கருநாட கத்தில் பெரும் கலவரம் வெடித்தது. காவிரி ஆற்று நீர்ச் சிக்கலில்  காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது (5.2.2007). ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங் களைக் கொண்ட, அய்ந்து தொகுதிகளைக் கொண்ட அத் தீர்ப்பில், தமிழகத்திற்கு 419 பில்லியன் அடிகள் அளவு காவிரி நீரும், கர்நாடகத்திற்கு 270 பில்லியன் அடிகள் நீரும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீதிபதி என்.பி. சிங் தலைமையிலான நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பில் காவிரியின் மொத்த நீர் 726 டி.எம்.சி. என கணக்கிடப்பட்டு அது தமிழ்நாடு, கருநாடகம், கேரளா மற்றும் பாண்டிச்சேரி (புதுச்சேரி) ஆகிய மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு 419 டி.எம்.சி. வழங்கப்பட்டிருந்தாலும், கருநாடக மாநிலம் தமிழகத்திற்கு ஆண்டிற்கு, வெறும் 192 டி.எம்.சி. தண்ணீரை வழங்கியது.  மேலும், கேரள மாநிலத்திற்கு 30 டி.எம்.சி. அளவு மற்றும் பாண்டிச்சேரிக்கு 7 டி.எம்.சி. அளவு தண்ணீர் வழங்கப் பட்டது. தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள நீரில் 7 டி.எம்.சியைப் புதுவைக்குத் தர வேண்டும். இந்தத் தீர்ப்பின் மூலம் 1892 மற்றும் 1924-ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் இனிச் செயலற்றுப்போகும்.
பாதிக்கப்பட்டதாகக் கருதுகிற மாநிலங்கள் 90 நாட்களில் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்று நடுவர் மன்றம் அனுமதித்திருப்பதையொட்டி, கருநாடகமும், தமிழ்நாடும் மறு ஆய்வு மனு செய்யப்போவதாக அறிவித்தன. அந்த மனுக்களின் மீது ஒரு ஆண்டுக்குள் நடுவர் மன்றம் தனது முடிவைத் தெரிவிக்க வேண்டும். தமிழ்நாடு இத்தீர்ப்பை ஏற்றுக்கொண்ட போதும், கருநாடகம் இத்தீர்ப்பில் மகிழ்ச்சி யடையவில்லை, அதனால் மேல்முறையீடு செய்தது.
2007இல் தீர்ப்பு வழங்கப்பட்டாலும் இத்தீர்ப்பு மத்திய அரசின் அரசாணையில் இடம் பெறவில்லை. உச்சநீதி மன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து மத்திய அரசு காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை அரசாணையில் வெளியிட்டது.
இறுதியாக காவிரி நீர் பயன்படுத்தும் உரிமை பற்றிய கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கருநாடக அரசுகள் செய்த மேல்முறையீட்டை விசாரித்த நீதிமன்றம் நேற்று (16.2.2018) ஒரு தீர்ப்பை வழங்கியது.
அதில்
* காவிரி நதி நீரை யாரும் உரிமை கொண்டாட முடியாது. எந்த மாநிலத்திற்கும் அந்த உரிமையில்லை.
* காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீர் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (2007ஆம் ஆண்டு கருநாடகா தமிழகத்துக்கு 192 டி.எம்.சி நீர் தர வேண்டும் என்று  நடுவர் மன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது).
* தற்போது கருநாடகாவுக்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி. அளவு தண்ணீர் எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1. 1934-ஆம் ஆண்டிலிருந்து 1970 ஆம் ஆண்டுவரை தமிழகத்திற்கு வந்த காவிரி நீரின் அளவு 372.8 டிஎம்சி.
2. அதன் பிறகு1984-ஆம் ஆண்டில் மேட்டுர் அணை யின் பொன்விழா வரை வந்த நீரின் அளவு 363.4 டிஎம்சி.
3.            1990 - நீதிமன்ற இடைக்கால தீர்ப்பு வந்த பிறகு 205 டி.எம்.சி. ஆக குறைக்கப்பட்டது.
4.           2007-ஆம் ஆண்டிற்குப் பிறகு 192 டி.எம்.சி. ஆக குறைந்தது.
5.            இறுதியாக 2018-ஆம் ஆண்டில் 177.25 டிஎம்சி என நின்று விட்டது.
இனி 15 ஆண்டுகளுக்கு மேல் முறையீடே கூடாது
2007-ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த  மாநிலங்கள் கோரும் நீர் அளவு கருநாடகா 465 (41%), தமிழ் நாடு 566 (50%), கேரளா 100 (9% புதுவை  9.3 (1%).
தற்போதைய  அறிவிப்பின்படி ஜூலை முதல் செப் டம்பர் வரையிலான கால கட்டத்தில் தண்ணீர் திறக்கப் படுவது அவசியமாகும். கருநாடகத்தில் அதிக மழை பெய் யும் கால கட்டத்தில் உபரி நீரை  திறப்பதை ஏற்க முடியாது.
கடந்த காலங்களைப் பார்க்கும்போது இந்தியா ஒரே நாடு தானா? சட்டங்களும், தீர்ப்புகளும் மதிக்கப்படுகின்றனவா? இந்தக் கேள்விகளுக்கு வாய்க்கிழிய தேசியம் பேசும் தீரர்கள் பதில் சொல்லட்டும்! "பிரிவினையைக் கை விடு கிறோம், அதே நேரத்தில் பிரிவினைக்கான காரணங்கள்   அப்படியே இருக்கத்தான் செய்கின்றன" என்ற அண்ணாவின் கருத்து தவறாகி விடவில்லையே!
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள் நேற்றைய அறிக்கையில் கூறியது போல இந்த 177.25 டி.எம்.சி. தண்ணீராவது கிடைக்குமா? அதைத் தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் பெற்றுத் தருமா? எங்கே பார்ப்போம்!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...