Wednesday, July 19, 2017

பெரியாரைப் புரிந்து கொள்ள இதோ இரண்டு வெளிச்சங்கள்!

தந்தை பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவன் பற்றி இப்போது ஏராளமான நூல்கள் 
வெளிவருகின்றன.

பல நூல்கள் பெரிதும் வணிக நோக்கத்தோடு வந்தாலும்கூட, சில அரிய நூல்கள் அய்யாவின் அறிவார்ந்த சுயமரியாதை, விஞ்ஞானத்தின் விளக்க ஏடுகளாக விவரங்களும், விவேகமும் உள்ளடக்கமான நூல்களாக வெளிவந்துள்ளன!


தந்தை பெரியார் என்ற ஒப்பாரும் மிக்காருமான சுயசிந்தனையாளர் பற்றி வெளிவரும் நூல்களை மூன்று வகைகளாகப் பகுக்கலாம்!


1. தந்தை பெரியாரைத் தெரிந்து கொள்ளுதல் - நூற்கள் வகையறா,


2. தந்தை பெரியாரை அறிந்து கொள்ளும் நூல்கள் பட்டியல்!


3. தந்தை பெரியார் பற்றிப் புரிந்து கொள்ளும் அரிய நூற்கள்!

மூன்றாவது (பட்டியலின்படி) - புரிந்து கொண்டு, மகிழ வேண்டிய வாய்ப்புள்ள நூல்கள் இரண்டு அண்மையில் வெளிவந்துள்ளன.

ஒன்று நீடாமங்கலம் தோழர் 'நீலன்' அவர்களால் தொகுக்கப்பட்ட "பெரியாரைத் தெரியுமா?" என்ற நூல்.


மற்றொன்று அண்மையில் 16.7.2017 அன்று திருவாரூரில் நடைபெற்ற திருவாரூர் மண்டலக் கழகக் கலந்துரையாடலின்போது, தோழர் ஞான.வள்ளுவன் அவர்களால் மேடையில் என்னிடம் தரப்பட்ட நூல்.


முன்னே குறிப்பிட்ட தோழர் 'நீலன்' அவர்களது நூலை, தோழர் கவிஞர் கலி.பூங்குன்றன்
மூலமாக அதன் தொகுப்பாசிரியர் நீடாமங்கலம் தோழர் நீலன் அவர்கள் எனக்கு அளித்த சில நாள்களில் (2 வாரங்கள் முன்பு) படித்தேன். சுவைத்தேன். ஆம். அது ஒரு தேன்கூடு - தெவிட்டாத கருத்துக் கொம்புத் தேன்!


முகவுரையில் தொகுப்பாசிரியர் நீலன் கூறுகிறார் கேளுங்கள்.

"இந்நூல் தந்தை பெரியாருடைய வாழ்க்கை வரலாற்று நூல் அல்ல. அவர் வாழ்க்கையில் நடைபெற்ற, கடைப்பிடித்த கொள்கைகளின், சித்தாந்தங்களின் வெளிப்பாடுதான் இந்நூல்! பெரியார் அவர்களின் சமுதாயம், அரசியல், பொருளாதாரம், கலை இலக்கியம், விஞ்ஞானம் போன்ற தலைப்புகளில் எடுத்துச் சொல்லிய உயர் கருத்துக்களின் தொகுப்பே இந்நூல். இதில் நம்முடைய சொந்தக் கருத்து எதுவும் இல்லை".

500 பக்கங்கள் - 300 ரூபாய். இன்றைய காலகட்டத்தில் இதை அதிக விலை என்று கூறிட முடியாது. பெரியார் பற்றி புரிந்து கொள்ள பெரிதும் உதவும் அரிய கருவூலம் இந்நூல்.
அதுபோலவே அரசு ஊழியத்திலிருந்து ஓய்வு பெற்ற தோழர் ஞான.வள்ளுவன், வைத்தீசுவரன் கோயில் என்ற ஊரைச் சேர்ந்த கழக வீரர்! ஆசிரியர் ஞானசம்பந்தம் அவர்களின் கொள்கை விழுது (மகன்). தந்தையாரும், தந்தை பெரியாரும் இவரைச் செதுக்கியுள்ளனர் சிறப்பாக என்பது அவர் தனித்துவத்தினைக் காட்டுகின்றது.

தந்தை பெரியார் பெயரில், பெரியார் 95 என்ற தலைப்பில் 95 தலைப்புகளில் எழுதியுள்ள இந்நூல் தந்தை பெரியார் பற்றி மட்டுமல்ல (அவரது இளமைக்காலம், வாழ்வு பற்றி மட்டுமல்ல) - அவரது இயக்கம், பங்கேற்ற போராட்டங்கள், பல்வேறு தோழர்கள் - தொண்டர்கள் - அன்னை மணியம்மையாரின் தொண்டறம், அவரது அரிய முடிவான தீர்க்கங்கள், அவர் சந்தித்த துரோகங்கள் உள்பட, நயத்தக்க நாகரிகத்துடன் உண்மைகளை களபலியாக்காமல், படிக்க ஏதோ ஒரு புதினம் போல எழுதியுள்ளார் அவர்.

நமது இயக்க நூல்கள் - வரலாறு - போராட்டங்கள் இவைகளின் ஒரு பிழிவு (ஞிவீரீமீst) என்ற பாணியில் இந்நூல் சுவைபட அமைகிறது.

மாலை 7.30 மணிக்குத் தந்தார் திருவாரூரில், அறைக்குச் சென்று ரயிலுக்கு வருமுன்னரும், வந்த பின்னர் தொடர் வண்டியில் இரவு தூக்கத்திற்கு முன்பும் படித்தேன், சுவைத்தேன்!
இவ்விரு நூல்களும் குறிப்பாக இளைய சமுதாயத்தினர் அய்யாவைப் புரிந்து கொள்ள பெரிய வழிகாட்டி (நிuவீபீமீ) நூற்கள் போல அமைந்துள்ளன! இந்நூல் 454 பக்கங்கள் - 300 ரூபாய் விலை.
நவில் தொறும் நூல் நயம் பொங்கி வழிகின்றன!

வாங்கிப் படியுங்கள்; இதில் உள்ள பல அரிய கருத்துக் கருவூலங்களை,  Whatsapp, Twitter, Facebook  போன்றவற்றில் சிறிது சிறிதாக எடுத்துப் போட்டுப் பரப்பவும் செய்யுங்கள்.

அவரவர்கள் தொண்டறப் பணியாகட்டும்!

நூல்: பெரியாரைத் தெரியுமா?, தொகுப்பாசிரியர்: உ.நீலன், அருள் பதிப்பகம், 6, வினாயகம் பேட்டை தெரு, சைதாப்பேட்டை, சென்னை - 15. தொலைபேசி: 044-24355052

நூல்: பெரியார் 95, ஆசிரியர்: ஞான.வள்ளுவன், இனியன் பதிப்பகம், தந்தை பெரியார் இல்லம், 55/24, வடக்குத் தேர் தெரு, வைத்தீசுவரன் கோயில் - 609 117. சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம். கைப்பேசி: 94439 85889.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...