தான் செய்துவரும் வேலையை மறைத்து, வேறு பணி செய்வதாகக் கூறி அவரது மகள்களைப் படிக்க வைத்துள்ளார் அன்பான தந்தை ஒருவர்.
முகநூலில் இந்த உண்மையை செய்தியாளர் ஒருவர் பதிவிட்ட வேகத்தில், உலகம் முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அதனைப் பார்த்து, தங்களது கருத்துகளை வெளியிட்டனர். மேலும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த உருக்கமான செய்தியை மற்றவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அந்தத் தந்தை கழிப்பிடங்களைச் சுத்தம் செய்யும் தொழில் செய்து வருகிறார். ஆனால், தனது மகள்களிடம் தொழிலாளியாக ஒரு நிறுவனத்தில் பணி புரிவதாகக் கூறி, பொதுக் கழிப்பிடங்களையும் சுத்தம் செய்து, அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு, மகள்களைப் படிக்க வைத்து வருகிறார்.
இதற்கு அவர் கூறும் காரணம்தான் நம்மை நெகிழ வைக்கிறது. ‘‘இந்தச் சமூகத்தில் அவர்கள் (தன்னுடைய குழந்தைகள்) சக மனிதர்கள் மத்தியில் மரியாதையுடன் நடத்தப்படவேண்டும். அவர்களை என்னைப் போல் கீழ்த்தரமாக ஒருபோதும் யாரும் நினைத்துவிடக் கூடாது. பொதுமக்கள் எப்போதும் என்னை அவ மானப்படுத்துவார்கள்’’ என்று அந்தத் தந்தை உருக்கமாகக் கூறியுள்ளார்.
ஒருநாள் அவரது வேலையின் ரகசியம் வெளியே தெரிய வந்தது. அன்றைய தினம் அவரது மகள்களுக்கு கல்லூரிக் கல்வி கட்டணம் செலுத்த கடைசி நாள். ஆனால், அந்தத் தந்தையிடம் போதிய பணம் இல் லாததால், மன வருத்தத்தில் இருந்தார். என்ன செய்வ தென்று தெரியாத சூழலில், அன்று அவருக்கு சுத்தம் செய்யும் வேலையும் கிடைக்காதது பேரிடியாக இருந்தது.
ஆனால், அவருடன் பணிபுரியும் சக தொழி லாளர்கள், இதையறிந்து அன்று அவர்கள் சம்பாதித்த பணத்தைக் கொண்டு வந்து அந்தத் தந்தையிடம் கொடுத்தனர். அவர் முதலில் வேண்டாம் என மறுத் துள்ளார். அப்போது அந்தத் தொழிலாளர்கள், ‘‘தேவைப்பட்டால் நாம் பட்டினியாக இருக்கலாம். ஆனால், நம்முடைய பிள்ளைகள் கல்லூரிக்குச் செல்லவேண்டும்‘’ என கூறியதை தந்தை நினைவு கூர்ந்தார்.
கல்லூரியில் படித்துவரும் அவர்கள் தந்தையின் உண்மை நிலையை அறிந்து, தற்போது மாலை நேரங்களில் வேலைக்குச் செல்கின்றனர். தங்களுக் காக உழைத்தது போதும் என அந்தத் தந்தையை அவர்கள் வேலைக்குச் செல்லவேண்டாம் எனக் கூறிவிட்டனர்.
இந்தச் செய்தியைப் படிக்கும்பொழுது ‘சுதந்திர’ இந்தியா எந்த நிலையில் இருக்கிறது என்ற வினாவை நம் முன் எழுப்பத்தான் செய்யும்.
குடிமக்களுக்கு அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றாத ஒரு நாடு எப்படி ‘சுதந்திர’ நாடாக முடியும்?
நாடு சுதந்திரம் அடைந்தால் பாலாறும், தேனாறும் ஓடுவது ஒரு பக்கம் இருக்கட்டும்!
கழிவறையைச் சுத்தப்படுத்தி, அதன்மூலம் வரும் வருவாயைக் கொண்டு தான் ஒரு குடும்பத் தலைவன், தன் பிள்ளைகளைப் படிக்க வைக்கவேண்டும் என்ற நிலை மெச்சத் தகுந்ததுதானா? இதற்காக ஒவ்வொரு வரும் வெட்கப்பட வேண்டாமா?
இதற்குள் ஜாதியில்லையா? இந்து மதத்தின் ஈனத்தனமான தாக்கம் இதற்குள் குடிகொண்டு இருக்கவில்லையா?
இந்து மதம் - ஒரு மதமல்ல - ஒரு வாழ்வியல் முறை என்று ஒப்பனை முலாம் பூசும் பிரகஸ்பதிகள் இந்த நிலைக்கு என்ன சொல்லப் போகிறார்கள்?
உள்ளே புழுபுழுத்த பிளவுகளை வைத்துக் கொண்டு மேலாக ‘இந்துத்துவா’ முலாம் பூசும் போக்கிரித்தனத்தைத் தோலுரிக்க வேண்டாமா?
அதேநேரத்தில், கழிவறையைச் சுத்தம் செய்தாவது தன் பிள்ளைகளைப் படிக்க வைக்கவேண்டும் என்று கருதிய - உழைத்த அந்தப் பெருமகனின் விசாலக் குணத்தை உச்சிமோந்து பாராட்டவே வேண்டும்.
கழிவறை சுத்தம் செய்து அதன்மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு தங்களைப் படிக்க வைத்தார் தம் தந்தை என்ற நன்றி உணர்வை மறக்காமல், வேலைக்குச் சென்று, சம்பாதித்து தன் தந்தையை பழையபடி கழிவறையைச் சுத்தம் செய்யும் வேலைக்குச் செல்லவேண்டாம் என்று கூறிய அந்தப் பிள்ளைகளும் பாராட்டுக்குரியவர்களே! வீட்டுக்கு அன்னை இல்லம் என்று பெயர் சூட்டி, அன்னையை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் படித்தவர்கள் நிறைந்த நாடல்லவா இது!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- மலப்புராவைப் பாரீர்!
- வரி விலக்கு எதற்கு?
- தென்மாநிலங்களின் உளவியல் கோட்பாடு!
- பொருளாதார வீழ்ச்சி!
- ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் உயிரோடு விளையாடுகிறதா?
No comments:
Post a Comment