Wednesday, June 21, 2017

தெற்கிலும், கிழக்கிலும் தன்னை வளர்த்துக் கொள்ள முயலும் பா.ஜ. கட்சியின் நோக்கம், ஆட்சியைப் பிடிப்பதல்ல; முக்கிய எதிர்க்கட்சி என்ற காங்கிரசின் இடத்தைப் பிடிப்பதுதான்



- சஞ்சய் குமார் -
(மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங் கிரசை தோற்கடித்து பா.ஜ.க. வெற்றி பெறு வது அவ்வளவு எளிதானதல்ல.  என்றாலும், இடதுசாரி முன்னணியின் செல்வாக்கு குறைந்து வருவதாலும், இம்மாநிலத்தில் குறிப்பிடத்தக்கஅளவில்காங்கிரசின்எந்த வித செயல்பாட்டையும் காண முடியாத தாலும்,முக்கியஎதிர்க்கட்சிஎன்றஇடத்தைப்  பிடித்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக் கையை பா.ஜ.க. கொண்டிருக்கிறது.)
மேற்கு வங்கம், ஒடிசா, திரிபுரா போன்ற கிழக்கு மாநிலங்களிலும், கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா போன்ற தெற்கு மாநிலங்களிலும் தன்னை வளர்த்துக் கொள்ள பா.ஜ.க. மேற்கொண்டுள்ள முயற்சியின் நோக்கம், தேர்தல்களில் வெற்றி பெறுவதை விட காங்கிரஸ் கட்சியை பலவீனமாக்குவதே என்பது தெளிவாகத் தெரிகிறது.

இம்மாநிலங்களில் பா.ஜ.கட்சியின் ஆதரவு அடித் தளம் மிகக் குறைந்த அளவிலேயே  இருக்கிறது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றிருந்தபோதிலும்,  இந்த 6 மாவட்டங்களில் உள்ள 166 மக்களவைத் தொகுதிகளில் 6 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.கட்சியால் வெற்றி பெற முடிந்தது. இம்மாநிலங்களில் நடைபெற உள்ள அடுத்த சட்ட மன்றத் தேர்தல்களில்  வெற்றி பெற இயலாத நிலையில் பா.ஜ.க. உள்ளது. ஒடிசா மாநிலம் ஒன்றில் மட்டுமே நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளத்திற்கு. கடுமையான சவால் விடும் நிலையில் பா.ஜ.க. உள்ளது. என்றாலும், தற்போது காங்கிரசிடம் உள்ள முக்கிய எதிர்க்கட்சி என்ற நிலையைக் கைப் பற்றிக் கொள்ள இயலும் என்று பா.ஜ.க. நம்பிக் கொண் டிருக்கிறது. இம்மாநிலங்களில் பா.ஜ.க. விரிவடை வதற்கு இது உதவி செய்யும் என்று நம்பப் படுகிறது.
ஒடிசா மக்களிடையே பா.ஜ.கட்சிக்கான ஆதரவு பெருகி வருகிறது என்பதில் எந்தவித அய்யமும் இருக்க முடியாது. இம்மாநிலத் தேர்தல்களில் ஒரு சிறு கட்சி என்ற அளவில் பா.ஜ.கட்சியை அலட்சியப் படுத்திவிட முடியாது என்பதை ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் சுட்டிக் காட்டுகின்றன. பிஜூ ஜனதா தளம் இத் தேர்தலில் பெரும் அளவில் வெற்றி பெற்ற போதிலும், மொத்தம் உள்ள 853 மாவட்ட ஊராட்சி மன்ற இடங்களில் 297 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது.

ஆனால் காங்கிரஸ் கட்சியோ 60 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.  இம்மாநிலத்தில் பிஜூ ஜனதா தளத்துக்கு, உள்ளாட்சித் தேர்தல் அளவிலாவது,  முக்கிய மாற்றுக் கட்சி என்ற இடத்தை காங்கிரசிடமிருந்து பா.ஜ.க. ஏற்கெனவே கைப்பற்றி விட்டது என்பதையே இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. பட்நாயக் மீதும், அவரது அரசின் மீதும் எழுந்துள்ள லஞ்சஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக, பொது மக்களிடையே ஆளுங்கட்சிக்கு எதிரான மக்களின் அதிக அளவிலான கோபம் மற்றும்  வெறுப்பு உணர்வுகளை 2019 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தல்களில் பிஜூ ஜனதா தளக் கட்சி எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.
பா.ஜ.கட்சி தனது அடித்தளத்தை விரிவுபடுத்திக் கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கும் மற்றொரு மாநிலம் மேற்கு வங்கமாகும். 2021 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள அடுத்த சட்டமன்றத் தேர்தல்களில் திரிணாமூல் காங்கிரசைத் தோற்கடித்து வெற்றி பெறு வது பா.ஜ.கட்சிக்கு அவ்வளவு எளிதாக இருக்காது. இடதுசாரி முன்னணியின் செல்வாக்கு ஏற்கெனவே குறைந்து வரும் நிலையிலும், இம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மீண்டும் புத்துயிர் பெறுவதற்கான அடையாளங்கள் எவையும் காணப்படாத நிலையிலும், முக்கிய எதிர்க்கட்சி என்ற இடத்தைக் கைப்பற்ற முடியும் என்று பா.ஜ.க. நம்பிக் கொண்டிருக்கிறது.

2014 மக்களவைத் தேர்தலில் இடதுசாரி முன்னணிக்கு 30 சதவிகித வாக்குகள் மட்டுமே கிடைத்தன; 2016 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட  அவர்களுக்கு 26 சதவிகித வாக்குகள் மட்டுமே கிடைத்தன; காங்கிரஸ் கட்சிக்கோ 2014 மக்களவை தேர்தலில் 10 சதகிவித வாக்குகளும், 2016 சட்டமன்றத் தேர்தலில் 12 சதவிகித வாக்குகளும்  மட்டுமே கிடைத்தன. 2014 மக்களவை தேர்தலில் 17 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருந்த பா.ஜ.கட்சிக்கு 2016 சட்டமன்றத் தேர்தலில் 11 சதகிவித வாக்குகள் மட்டுமே கிடைத்தன. ஆனால், பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்களிடைய உள்ள கவர்ச்சியைப் பயன்படுத்தி, கட்சியை வளர்த்துக் கொள்ளலாம் என்று பா.ஜ.க. நம்பிக்கொண்டிருக்கிறது.
இடதுசாரிகளின் ஆட்சியில் இருக்கும் மற்றுமொரு மாநிலமான திரிபுராவில் கட்சியை விரிவுபடுத்த பா.ஜ.க. முயன்று கொண்டிருப்பதில் வியப்பேதும் இருக்க முடியாது. கடந்த 24 ஆண்டுகளாக இடது சாரிக் கூட்டணி இம்மாநிலத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி முக்கிய எதிர்க்கட்சியாக இருந்து வருகிறது.

இடது சாரிக் கூட்ட ணியைத் தோற்கடித்துவிட்டு, அங்கு ஆட்சி அமைப்பது பற்றி பா.ஜ.க.வால் கனவு கூட காணமுடியாது. ஆனால், மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சி என்ற இடத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியை அகற்றி விட்டு அந்த இடத்தையாவது கைப்பற்றுவது என்ற நோக்கத்தையே பா.ஜ.க. கொண்டுள்ளது.
கேரளா, தமிழ்நாடு இரண்டு மாநிலங்களிலும் இரண்டிரண்டு முக்கிய கட்சிகள் போட்டியிட்டன. மற்ற சிறு கட்சிகள் அப் பெரிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து கொண்டன. தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளின் தலைமையிலான கூட்டணிகள் அமைந்தன.

கேரளாவில் இடதுசாரி முன்னேற்றக் கூட்டணி, அய்க்கிய முற்போக்குக் கூட்டணி என்ற இரு கூட்டணிகள் அமைந்தன. கேரளாவில் இன்னமும் ஒரு ஆதிக்கம் மிகுந்த கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டிலோ அது ஓர் உதிரிக் கட்சியாகவே இருக்கிறது. 2014 மக்களவைத் தேர்தலில் 4 சதவிகித வாக்குகளும், 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்  6 சதவிகித வாக்குகளும் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்தன. 2014 மக்களவை தேர்தலில் ஒரு கூட்டணியை உருவாக்குவதில் பா.ஜ.க. வெற்றி பெற்றது; ஆனால், அது எதிர்பார்த்தது போன்ற எந்த வெற்றியையும் அதனால் பெற முடியவில்லை. இக்கூட்டணியும், 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் முறிந்து போனது. 2014 மக்களவைத் தேர்தலில் 6 சதவிகித வாக்குகளையும், 2016 சட்டமன்றத் தேர்தலில் 3 சதவிகித வாக்குகளையும் பா.ஜ.க. பெற்றது. ஆனால் தனது களத்தை விரிவுபடுத்திக் கொண்டு, காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டிலும் பின்னுக்குத் தள்ளி விடலாம் என்று பா.ஜ.க. நம்பிக் கொண்டிருந்தது.

தற்போது அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்ள முடியும் என்று பா.ஜ.க. இன்னமும் கூட நம்பிக் கொண்டிருக்கிறது. 2016 கேரள சட்டமன்றத் தேர்தலில், இடதுசாரி முன்னேற்றக் கூட்டணி மற்றும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி இரண்டையும் விட மிகமிகக் குறைந்த அளவில் 11 சதவிகித வாக்குகளை மட்டுமே பா.ஜ.க. பெற்றது என்றபோதிலும்,  ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்று இம்மாநில சட்டமன்றத்தில் தனது கணக்கை பா.ஜ.க. முதன் முதலாகத் துவக்கி உள்ளது.

மேலும், 2009 மக்களவைத் தேர்தலில் கேரளாவில் தான் பெற்றிருந்த 6 சதவிகித வாக்குகளை 2014 மக்களவைத் தேர்தலில் 11 சதவிகிதமாக பா.ஜ.க. உயர்த்திக் கொண்டது. கேரளா வில் காங்கிரஸ் கட்சியின் இடத்தைப் பிடிப்பது என்பது பா.ஜ.கட்சிக்கு அவ்வளவு எளிதானதல்ல என்றாலும், நகர்ப்புற வாக்காளரிடையே தனது செல்வாக்கை உயர்த்திக் கொள்ள பா.ஜ.க. முயன்று வருகிறது.
தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் கூட்டணி அமைத்து தனது செல்வாக்கை வளர்த்துக் கொள்ள பா.ஜ.க. முயல்வதைப் போல,  ஆந்திரப் பிரதேசத்திலும், தெலுங்கானாவிலும் தனது செல்வாக்கை பிராந்தியக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் உயர்த்திக் கொள்ள பா.ஜ.க. முயன்று வருகிறது. 2014 மக்களவைத் தேர்தலில், ஆந்திர பிரதேச மாநிலத்தில், சந்திரபாபு நாயுடுவின் தலைமையிலான தெலுகு தேசக் கட்சியுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க. போட்டியிட்டது. ஆனால், அத் தேர்தலில் பா.ஜ.க. பெரும் அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி பெற்ற 2.9 சதவிகித வாக்குகளை விட பா.ஜ.க. அதிக சதவிகித வாக்குகளைப் பெற்றது அக்கட்சிக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது.

இந்த இரு மாநிலங்களிலும், காங்கிரசினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பிக்கொண்டு, முக்கிய எதிர்க் கட்சியாக வருவதற்கு பா.ஜ.க. கடுமையாக முயன்று கொண்டிருக்கிறது. இவ்விரு மாநிலங்களில் தனது கட்சியை பா.ஜ.க. விரிவுபடுத்துவதற்காக மேற் கொண்டுள்ள முயற்சிகளின் முக்கிய நோக்கம், இம்மாநிலங்களில் ஆட்சியைப் பிடிப்பதல்ல; காங் கிரஸ் கட்சியின் செல்வாக்கைக் குறைப்பதுதான்.
நன்றி: ‘தி டெக்கான் கிரானிகிள்’, 09.06.207
தமிழில்: த.க.பாலகிருட்டிணன்.

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...