மோடி ஆட்சிக்கு வந்தது முதல் 30 முறைக்குமேல் ‘‘மன் கி பாத்’’ என்ற ‘‘மனதின் குரல்’’ என்ற வானொலி நிகழ்ச்சியில் பேசியுள்ளார். 20 நிமிடங்கள் நீடிக்கும் இந்த நிகழ்ச்சிக்கு விளம்பரச் செலவு மட்டும் ரூ.1100 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
டில்லி அரசு விளம்பரத்திற்காக ரூ.130 கோடி மக்களின் பணத்தை செலவு செய்து வீணடித்துள்ளது. இந்தப் பணத்தை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி டில்லி அரசுக்குத் திரும்பத் தரவேண்டும் என்று டில்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த டில்லி உயர்நீதி மன்றம் ஆம் ஆத்மி கட்சியிடம் விளக்கம் கேட்டிருந்தது.
இந்நிலையில் அரியானாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மோடி தொடர்ந்து பேசும் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சிக்காக எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்டிருந்தார்.
இதற்குப் பதிலளித்த பிரச்சார் பாரதி அமைப்பு மோடியின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி விளம்பரத்திற்கு மட்டுமே 2016 ஆம் ஆண்டுவரை 1100 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தது.
நாட்டில் நிலவும் மிகவும் முக்கியமான சுகாதாரப் பிரச்சினையான போலியோ ஒழிப்பு, காசநோய் ஒழிப்பு, தொழு நோய் ஒழிப்பு போன்றவற்றிற்கான விளம்பரங்கள், ஊட்டச்சத்துத் தேவையான உணவு குறித்த விளம்பரங்கள் 2014-ஆம் ஆண்டுவரை அரசு தொலைக்காட்சி, அனைத்து மாநில மொழி வானொலி மற்றும் சில தனியார் தொலைக் காட்சிகளில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. இந்த விளம்பரத்திற்கான தொகையை உலக சுகாதார அமைப்பு தருகிறது. இந்தத் தொகை மத்திய அரசு நிதிநிலை அறிக் கையில் ஒதுக்கப்படுவதில்லை என்பதும் இங்கே குறிப் பிடத்தக்கது. ஆனால், மிகவும் முக்கியமான இந்த விளம் பரங்கள் அனைத்தும் தற்போது நிறுத்தப்பட்டு விட்டன.
இது குறித்து பல முறை உலக சுகாதார அமைப்பு அறிவுறித்தியும் மத்திய பி.ஜே.பி. அரசு எந்த ஒரு பதிலையும் அளிக்கவில்லை. மத்திய நிதிநிலை அறிக்கையில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்விற்கான பிரச்சாரத்திற்கான தொகை முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டது.
இந்தியாவில் 2015 ஆம் ஆண்டிற்குப் பிறகு காசநோயாளி களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குறித்து 2016 ஆம் ஆண்டு காசநோய் விழிப்புணர்வு நாளன்று இந்திய மருத்துவர் அமைப்பு வருத்தம் தெரிவித்திருந்தது குறிப்பிடத் தக்கதாகும்.
மக்களின் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற வாழ்வாதார விழிப்புணர்வுக்கான நிதியை நெட்டித் தள்ளிவிட்டு, அந்த தொகை அப்படியே மோடியின் சொந்த விளம்பர வாணவேடிக்கைக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது.
‘மன் கி பாத்’ நிகழ்ச்சி எந்த ஒரு வகையில் நாட்டின் முக்கிய திட்ட அறிக்கையோ, அல்லது எதிர்கால இந்தி யாவிற்கான புதிய கல்வி, அறிவியல், தொழில் நுட்பம் போன்றவற்றிற்கான புதிய ஆலோசனைகளோ கூறுவ தில்லை, அதேபோல் நாட்டில் நடக்கும் பிரச்சினைகளுக்கான ஒரு விவாத மேடையாகவும் இல்லை. இந்த நிகழ்ச்சியில் பலமுறை மிகவும் பிற்போக்குத்தனமான கருத்துகளையே கூறியுள்ளார். அரசு பிரச்சார அமைப்பு ஒன்றில் நாட்டின் மிகவும் முக்கிய பதவியில் இருக்கும் ஒருவர் பிற்போக்குத் தனமான, மூடத்தன கருத்துகளைக் கூறுவது என்பது அரசமைப்புச் சட்டமான 51 ஏ(எச்) பிரிவிற்கு முற்றிலும் எதிரானது, முரண்பட்டதாகும், அரசமைப்புச் சட்டத்தின் படி ஆட்சி அமைப்பேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு அதை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். பிரதமர் இந்த விதிமீறல்களை கோடிக்கணக்கில் விளம்பரப்படுத்தி மகிழ்கிறார்.
பொதுவாக ஒரு வானொலி நிகழ்ச்சி என்பது மிகவும் சொற்ப செலவில் முடியக்கூடியது, மிகவும் சொற்ப செலவில் முடியும் இந்த நிகழ்ச்சிக்காக ரூ.1100 கோடி மக்கள் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.
மத்திய செய்தி தொடர்புத்துறை அமைச்சகத்தின் ஓர் அறிக்கை, மோடி அரசில் நாள் ஒன்றுக்கு 1.4 கோடி ரூபாய் விளம்பரத்திற்கு செலவு செய்யப்படுகிறது என்று கூறுகிறது.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சுகாதாரம், கல்வி, தொழில்நுட்பம் மற்றும் விவசாயத்திற்காக விளம்பரங்கள் தேவைதான்; அது இன்றைய செலவாகப் பார்த்தாலும் நாளை நாட்டிற்குப் பயன்படக்கூடியதே! ஆனால், எந்த ஒரு மக்கள் நலத்திட்டங்களுக்கும் செலவு செய்யாமல், அதற்கு நிதி ஒதுக்காமல் தன்னுடைய ஆட்சி குறித்த, தனது சொந்த பணி குறித்த விளம்பரத்திற்கு மட்டுமே ஒரு நாளைக்கு 1.4 கோடி ரூபாய் செலவு என்பது நியாயமானதுதானா? இதிலிருந்து மோடி, அமித்ஷா கைகோர்த்து நடத்தும் ஆட்சி நிர்வாகம் இரண்டு தனிப்பட்ட நபர்களின் விருப்பு வெறுப் பிற்கு ஏற்றவாறு செயல்படுகிறது, அரசமைப்புச்சட்டத்தை மதிப்பதோ அல்லது மக்கள் நலனைக் காப்பதிலோ எந்த ஒரு அக்கறையையும் காட்டவில்லை என்பது புலனாகிறது.
விவசாயிகள் ஒரு பக்கத்தில் தற்கொலை செய்துகொள் கிறார்கள். விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று விவசாயிகள் போராடினால், அவர்கள் பிரச்சினையைக் காது கொடுத்துக் கேட்கக்கூடத் தயாராக இல்லாத மத்திய பி.ஜே.பி. அரசு சொந்த விளம்பர ‘வியாதிக்காக’ கோடிக் கணக்கில் செலவு செய்வது கண்டிக்கத்தக்கது.
விளம்பரத்துக்காக இப்படி ஆளும் அரசு செய்யும் வீண் செலவை எதிர்க்கட்சிகள் விளம்பரப்படுத்துவது அவசிய மாகும்.
No comments:
Post a Comment