கேரளத்தில் மலப்புரம் மாவட்டத்தில் இஸ்லாமிய மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த மாவட்டத்திலிருந்து லட்சக்கணக்கானோர் வளைகுடா நாடுகளுக்குச் சென்று பணிபுரிகின்றனர். கேரள மாநிலத்தின் ‘கால் பந்து தலைநகரம்‘ என்றும் மலப்புரத்தைச் சொல்வார்கள். மலப்புரம் மாவட்டத்தில் எங்கு நோக்கினாலும் மசூதிகள் காணப்படும். மலப்புரம் அருகே உள்ள புன்னதாலா என்கிற கிராமத்தில் மசூதிகளுக்கு மத்தியில் சிறிய இந்து கோயில் ஒன்று இருந்தது. 100 ஆண்டுகள் பழைமையான அந்த நரசிம்மர் கோவில் உள்ளது.
புன்னதாலா கிராமத்தில் வசிக்கும் இந்து மக் களுக்கு, இந்தக் கோயில்தான் ஒரே வழிபாட்டுத்தலம். கோயிலோ இடிந்து தகர்ந்து போய் கிடந்தது. அதைச் சீரமைத்துக் கட்டவேண்டும் என்பது புன்னதாலா வாழ் இந்து மக்களின் ஆசை. அவர்களிடத்திலோ, நிதி இல்லை. நிதி திரட்ட முயன்றும் முடியாமல் போனதால், கோயில் சீரமைப்புப் பணி பல ஆண்டு களாகத் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இந்து மக்களின் ஆசையையும், இயலாமையையும் அறிந்த புன்னதாலா கிராம இஸ்லாமிய மக்கள், உதவிக்கு ஓடி வந்தனர்.
‘உங்கள் கோயிலை நாங்கள் கட்டித்தருகிறோம்‘ எனக் கூறி நிதி வசூலிக்கத் தொடங்கினர். சுமார் 20 லட்சம் ரூபாய் திரண்டது. புன்னதாலா கிராம இஸ்லாமிய மக்கள், இந்து கோயிலைச் சீரமைக்க நிதியை அள்ளி வழங்கினர்.
திரண்ட நிதியை கோயில் கமிட்டியிடம் அளித்து, நரசிம்மர் கோவிலைக் கட்டுமாறு கூறிய இஸ்லாமி யர்கள் கோயிலின் சீரமைப்புப் பணிகளிலும் உடல் உழைப்பை நல்கினர். நெகிழ்ந்துபோன புன்னதாலா இந்து மக்கள், நன்றிக்கடனாக இஸ்லாமிய மக்களுக்கு கைம்மாறு செய்ய முடிவு செய்திருந்தனர்.
இந்தச் சமயத்தில்தான் ரம்ஜான் நோன்பும் வந்தது. புன்னதாலா வாழ் இந்து மக்கள், இஸ்லாமிய மக்களுக்கு கோயில் வளாகத்தில் இஃப்தார் விருந்து வழங்க முடிவு செய்து, அழைப்பு விடுத்தனர். அத்தனை இஸ்லாமிய மக்களின் வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று, கோயில் கமிட்டி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. நரசிம்மமூர்த்தி ஆலய வளாகத்தில் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு விருந்து வழங்கப்பட்டது. இதில், 400 இஸ்லாமிய மக்களும், உள்ளூர் கிராம மக்களும் மகிழ்வுடன் பங்கேற்றனர்.
கோயில் செயலாளர் மோகனன் கூறுகையில், ‘‘எங்கள் கிராமத்தில் இந்து-இஸ்லாமிய மக்கள் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகிறோம். நல்லது கெட்டது எதுவென்றாலும் இஸ்லாமிய மக்களுடன் கலந்து பேசி முடிவுசெய்வோம். இந்தக் கோயிலைக் கட்ட, சுமார் 20 லட்சம் ரூபாய் இஸ்லாமிய மக்கள் தந்தனர். யாரும், எந்த மதத்தையும் பின்பற்றலாம். அது அவர்களின் உரிமை. எல்லாவற்றையும் தாண்டி ‘மனிதம்‘ என்ற ஒற்றை வரியில் நாங்கள் இணைந்து நிற்கிறோம்‘’ என்றார்.
இதில் கோயில் பிரச்சினை - கடவுள் பிரச்சினை - மதப் பிரச்சினை - நம்பிக்கைப் பிரச்சினை என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்தக் காலகட்டத்தில் கேரளா ஒரு புதிய வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறது என்பதில் அய்யமில்லை.
இந்தியத் துணைக் கண்டத்தில் இந்துக்கள் 79.8% முசுலீம்கள் 14.2% கிறித்தவர்கள் 12.3% சீக்கியர் 1.7% பவுத்தர் 0.7% சமணர் 0.4% இதரர் 0.7% மதமற்றோர் 0.2%
பல இனம், பல மதம், பல மொழி, பல கலாச்சாரம் உள்ள இந்தியத் துணைக் கண்டத்தில் வேற்றுமை யிலும் ஒற்றுமை என்று ஒருபக்கத்தில் ஓதிக்கொண்டே, ‘என் மதம், என் மொழி, என் கலாச்சாரம் - அதுவே இந்தியக் கலாச்சாரம்‘ என்று கூறி மக்கள் மத்தியில் கலகம் விளைவித்து அமைதிச் சூழலை அமளிக் காடாக்கும் இந்துத்துவாவாதிகள், காவிகள் கேரள மாநிலம் மலப்புரா மாவட்டத்தில் முஸ்லிம் தோழர்கள் நடந்து காட்டிய முன்மாதிரியைத் தெரிந்துகொண்ட பிறகாவது, புத்தி கொள்முதல் பெறுவார்களா என்பது தான் முக்கிய அறிவு விருந்தான கேள்வியாகும். மகிழ்ச்சியாகவும், சகோதரத்துவத்துடனும் வாழ்வது தான் வாழ்க்கையின் பெருமிதம் - அதனைத் தொலைக்க - தொலைத்துக்கட்ட வரிந்து கட்டலாமா?
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- வரி விலக்கு எதற்கு?
- தென்மாநிலங்களின் உளவியல் கோட்பாடு!
- பொருளாதார வீழ்ச்சி!
- ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் உயிரோடு விளையாடுகிறதா?
- ‘சாமர்த்தியம்' இனி எடுபடாது!
No comments:
Post a Comment