Tuesday, May 3, 2016

மான வாழ்வு, உரிமை வாழ்வு, கல்விக் கண் இவற்றை பேச திராவிடர் கழகத்தை விட்டால் வேறு நாதியில்லை

சென்னை அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் பேருரை
சென்னை, மே. 3- மான வாழ்வு, உரிமை வாழ்வு, கல்விக் கண் இவற்றை பேச திராவிடர் கழகத்தை விட்டால் வேறு நாதியில்லை என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

14.4.2016 அன்று வடசென்னை பெரம்பூரில் நடைபெற்ற பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 125 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு:
பெரியார் - அம்பேத்கர்  ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய 125 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இன்று. இவருடைய கொள்கை - அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கைகளே ஆகும். இரண்டு தலைவர்களும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்கிற பெருமைக்குரிய தலைவர்கள்.

நம்முடைய தலைவர் தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக அறிவித்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்கிற போராட்டம் இன்னமும் நிறைவடையவில்லை. தொடர் போராட்டமாகத்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. பல் வேறு காலகட்டங்களை - தடை ஓட்டப் பந்தயங்களையெல்லாம் நாம் தாண்டியிருக்கின்றோம் என்கிற பெருமைமிகுந்த இந்த வேளையில், அதற்கான போராட்ட விளக்கப் பொதுக்கூட்ட மாகவும், தேர்தலுக்கு முன் - இந்தத் தொகுதியில் - தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுடைய தொகுதி என்ற பெருமையான கொளத்தூர் தொகுதியில் உரையாற்றக் கூடிய வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்ற நம்முடைய செயல் வீரர் உயர் நீதிமன்ற வழக்குரைஞர் அருமைத் தோழர் குமாரதேவன் அவர்களே,
எனக்கு முன்பாக உரையாற்றி அமர்ந்துள்ள கழகத்தின் துணைத் தலைவர் மானமிகு கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,

கழகத்தினுடைய பொதுச்செயலாளர் மானமிகு அன்புராஜ் அவர்களே, இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பாக உரையாற் றிய  வடமாவட்டங்களின் அமைப்புச் செயலாளர் ஞானசேகரன் அவர்களே, சென்னை மண்டல செயலாளர் பன்னீர்செல்வம் அவர்களே, தொழிலாளர் அணி செயலாளர் செல்வராஜ் அவர்களே, மற்றும் இங்கே நம் அனைவரையும் ஒருங்கிணைத்து உரையாற்றிக் கொண்டிருக்கக் கூடிய வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் - பழைய தலைவர் கருங்குழி கண்ணன் அவர்களே,
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பாக வரவேற்புரையாற் றிய வடசென்னை மாவட்ட திராவிடர் கழக மகளிரணி செயலா ளர் பொறியாளர் இன்பக்கனி அவர்களே,
இந்த நிகழ்வில் கலந்துகொள்கின்ற மகளிரணி பொறுப்பாளர் களே, இயக்கப் பொறுப்பாளர்களே ஒவ்வொருவருடைய பெய ரையும் சொல்வதற்கு நேரமின்மை காரணத்திற்காக அவர்களு டைய பெயர்களையும் சொன்னதாகக் கருதிக் கொள்ளவேண்டும் என்று சொல்லி என்னுடைய உரையைத் தொடங்குகின்றேன்.

இங்கே எனக்கு முன் உரையாற்றிய அத்துணை தோழர்களும், தோழியர்களும் மிக அருமையான கருத்தை தெளிவாகச் சொன்னார்கள்.

இந்த நிகழ்ச்சியினுடைய நோக்கம் என்ன? என்பதை எடுத்துச் சொல்கின்ற நேரத்தில், ஒன்றைத் தெளிவுபடுத்தினார்கள்.

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் எப்படிப்பட்ட புரட்சியாளர்! நாம் ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பிற்கான செயல் திட்டத்தை இந்த ஆண்டு - அவருடைய 125 ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டியும் நடத்துகிறோம்.

அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுடைய இறுதி விருப்பம் - இறுதிப் போராட்டம் - அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்பது. இங்கே அழகாக கழக துணைத் தலைவர் அவர்கள் சொன்னார்.

கடைசியாக ஜாதி ஒட்டிக் கொண்டிருக்கும் இடம் கோவில் கருவறை

ஏதோ, 10 பேருக்கு வேலை வாங்கிக் கொடுக்கவேண்டும் என்கிற போராட்டம் அல்ல அது. தத்துவ ரீதியாக காலங்காலமாக இருக்கின்ற ஜாதி, தீண்டாமை என்பதினுடைய உயிர்நிலையைப் போக்குவதற்கான - அதற்கு மரண அடி கொடுத்து - இனிமேல் தத்துவ ரீதியாக நடைமுறையில் எங்கு கடைசியாக ஜாதி ஒட்டிக் கொண்டிருக்கிறது என்றால், கோவில் கருவறைக்குள்.

உங்களுக்குத் தெரியும் - தந்தை பெரியார் போராடினார் - இன்றைக்கு எல்லா இடங்களிலும் செல்வதற்கு எல்லோருக்கும் உரிமை உண்டு. ஒரு காலத்தில் பிராமணாள் காபி கிளப் என்று இருந்தது. இன்றைக்கு யாராவது அப்படி சொல்ல முடியுமா? போட முடியுமா? பிராமணர்கள் சாப்பிடும் இடம் என்று தனியே பிரித்து வைத்திருந்தார்கள். சூத்திராள் சாப்பிடும் இடம் என்று. இன்றைய இளைய தலைமுறையினருக்குத் தெரியாது இந்த விவரங்கள் எல்லாம்.

மறுபடியும் வேறு ஒரு ஆட்சி வந்து -வருணாசிரம தருமம் வந்து ஆட்சியில் உட்கார்ந்து - நெற்றியில் சூத்திரன் என்று பச்சைக் குத்திக் கொள்ளுங்கள்; பஞ்சமன் என்று ஒட்டிக் கொள் என்று சொன்னால்தான் அவர்களுக்குப் புரியும். வந்த பிறகுதான் அவர்களால் உணர முடியும். வருவதற்கு முன்பே காக்கக்கூடிய சக்தி பெரியார் தொண்டர்களுக்கு மட்டுமே உண்டு.

அந்த அடிப்படையில்தான் கவலையோடு நாங்கள் பேசுகி றோம். இது ஒரு கேளிக்கை விழா அல்ல. நாங்கள் என்ன பதவிக் குச் செல்லவேண்டும் என்பதற்காக பேசுகிறோமா? அல்லது எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்பதற்காக வந்திருக்கி றோமா? யார் எந்தக் கட்சியில் இருக்கிறார்கள் என்றே மக்களுக்கு இன்னமும் தெரியவில்லை. பேசுகிறவர்களுக்கே என்ன பேசுகி றோம் என்று தெரியவில்லை? இதுபோன்ற குழப்பங்கள் எல்லாம் எங்களுக்கு எப்பொழுதும் கிடையாது. காரணம், நாங்கள் அடுத்த தேர்தலைப்பற்றி கவலைப்படுவதைவிட, அடுத்த தலைமுறை யைப்பற்றி கவலைப்படக்கூடியவர்கள்.

மான வாழ்வு, உரிமை வாழ்வு, கல்விக் கண் இவைகளைப் பற்றிப் பேச திராவிடர் கழகத்தைவிட்டால், பெரியார் இயக்கத்தை விட்டால், வேறு நாதி உண்டா தமிழர்களே! நீங்கள் எந்தக் கட்சி யைச் சேர்ந்தவர்களாகவும் இருங்கள்; யாருக்கு வாக்களிக்கலாம் என்பதை பிறகு முடிவு செய்துகொள்ளுங்கள். அது உங்களுடைய உரிமை. ஆனால், நாங்கள் ஓட்டு கேட்பதற்காக வரவில்லை. மாறாக, இந்த சமுதாயத்தினுடைய மான வாழ்வு, உரிமை வாழ்வு, கல்வி, சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் இவை எல்லாம் காப்பாற்றப்படவேண்டும்.
பெரியார், அம்பேத்கர் பிறந்த நாள் விழாக்கள் நமக்கு கொள்கைபூர்வமான பிரச்சார திருவிழா!

அம்பேத்கர் பிறந்த நாள் விழா என்பது நமக்கு சம்பிரதாயமா? பெரியார் பிறந்த நாள் விழா  என்ன நமக்கு சம்பிரதாயமா? இல்லை. கொள்கைபூர்வமான பிரச்சார திருவிழா.

தாலி அகற்றும் நிகழ்ச்சியை எதற்காக ஏற்பாடு செய்தோம் - பெண்ணடிமைத்தனம் கூடாது என்பது தந்தை பெரியாருடைய கருத்து - அம்பேத்கர் அவர்களுடைய கருத்தாகும். அந்த விழாவிற்குத் தடை விதித்தார்கள். கருத்துச் சுதந்திரத் தடை. அந்த விழா யாரையும் சங்கடப்படுத்துவதற்காக அல்ல. யார் விரும்புகிறார்களோ, அவர்கள் அகற்றிக் கொண்டார்கள். யாரையும் நாங்கள் வலுக்கட்டாயமாக அகற்றச் சொல்வதில்லை.

பெரியார் திடலில் தாலி அகற்றும் விழாவிற்கு ஏற்பாடு செய் திருந்தவுடன், நம் இன எதிரிகள் அதற்குப் பெரிய விளம்பரங் களைக் கொடுத்தார்கள். அகில இந்திய விளம்பரம் அந்த நிகழ்விற்குக் கொடுத்தார்கள். இன்றைக்கு இங்கே அமர்ந்திருக் கிறார்கள் வாழ்விணையர்கள். எனக்கு சிறப்பு செய்யும்பொழுது என்னிடம் சொன்னார்கள், அய்யா, நாங்கள் தாலி அகற்றிக் கொண்ட இணையர் என்று பெருமையோடு, மகிழ்ச்சியோடு சொன்னார்கள்.

தாலி அகற்றியதால், அவர்கள் ஒன்றும் காணாமல் போகவில் லையே! இதிலிருந்து நீங்கள் புரிந்துகொள்ளவேண்டாமா? எவ் வளவு பெரிய அச்சத்தை நம் மூளைக்குள் புகுத்திவிட்டான் பார்ப் பான். பார்ப்பனிய தத்துவத்தினுடைய ஆபத்து எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை தெளிவாக நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்.

நான் என்ன சாப்பிடவேண்டும் என்பது என்னுடைய உரிமை
!

அதேபோன்று, உண்ணும் உணவு இருக்கிறது பாருங்கள் - உண்ணுவதற்கும், எண்ணுவதற்கும் இந்த நாட்டில் கருத்து சுதந்திரம் உண்டு. நான் என்ன சாப்பிடவேண்டும் என்பதை மத் திய அரசோ, மாநில அரசோ, ஒரு கட்சியோ நிர்ணயம் செய்யக் கூடாது. நான் என் வீட்டில் என்ன சமைக்கவேண்டும் என்று இன்னொருவர் சொல்லக்கூடாது. அது என்னுடைய உரிமை யல்லவா!

அதேபோன்று பெண்கள் - அவர்கள் எப்படி நடக்கவேண்டும் என்பது அவர்களுடைய உரிமை. நீ காதல் செய்யாதே - உனக்கு காதல் வரக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கு உரிமை இருக்கிறது? சட்டப்படி, பக்குவம் உள்ளவர்களா என்பதைத்தான் பார்க்கவேண்டும்.

தமிழ்நாட்டில் இன்னமும் ஜாதி வெறித்தனம் இருப்பதினால், ஆணவக் கொலை - கவுரவக் கொலை நடைபெறுகிறதே! நேற்று உயர்நீதிமன்றத்தில் காவல் துறை மூன்று மாதத்திற்குள் என்னென்ன செய்யவேண்டும் என்று தீர்ப்பளித்திருக்கிறதே! உயர்நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம்.

அவரே தானே போட்டுவிட்டாரா அவற்றை. இந்தக் கருத்துக்கு ஏற்பட்டிருக்கின்ற மரியாதை - நியாயங்கள். ஆகவே, நியாயம் வெல்லத்தான் செய்யும் - எவ்வளவு தடுப்பணைகள் வைத்தாலும் - எவ்வளவு குறுக்கீடு இருந்தாலும் சரி!

அம்பேத்கர் அவர்களைப்பற்றி இங்கே சொன்னார்கள் - அம்பேத்கரைப்பற்றி எழுதும்போது - உயர்ஜாதிக்காரர்கள்தான் ஊடகங்களிலும் இருக்கிறார்கள். அதிகாரிகளாக இருக்கின்ற நம்மாட்கள் கொஞ்சம் பயந்து போய்தான் இருக்கிறார்கள். உணர்வாளர்கள் அல்லது ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு இப்பொழுதுதான் தலையெடுக்கக் கூடிய வாய்ப்பு.

சமூகநீதி, இட ஒதுக்கீடு இல்லையானால், நம்மாட்கள் எல்லாம் பதவிகளுக்கு வந்திருக்க முடியுமா?

எங்களுடைய ஊர்வலத்தில் சொல்வோமே, ‘‘அய்.ஜி. எல்லாம் அவாளு - கான்ஸ்டபிள் எல்லாம் நம்மாளு’’ என்று சொன்னோமே!

இன்றைக்கு அய்.ஜி. எல்லாம் நம்மாட்களாக வந்திருக் கிறார்களே! அப்படி வந்தாலும் இன்னமும் அந்தத் துணிச்சல் வரவில்லையே! வர முடியாது! காரணம் என்னவென்றால், அமைப்பு இன்னும் மாறவில்லை. அந்தத் துணிச்சலை அவர் களுக்குக் கொடுப்பதற்கான நிகழ்வுதான் - இந்த நிகழ்வு.

அம்பேத்கர் - பெரியார் விழா என்றால் வித்தியாசம் வெவ் வேறு வித்தியாசம் இல்லை.  தாலி அகற்றும் நிகழ்வு - யாரையும் சங்கடப்படுத்துவதற்காக அல்ல. மாட்டுக்கறி விருந்து என்றால், யாரையும் சங்கடப்படுத்துவதற்காக அல்ல. அவரவர்களுடைய உரிமையை நிலைநாட்டுவதற்காகத்தான். அதனால் என்ன கெட்டுப் போய்விட்டது? அதனால் என்ன மாறிப் போய்விட்டது சமுதாயத்தில்? நன்றாக நீங்கள் எண்ணிப் பாருங்கள்.
நம் ஏட்டைத் தவிர,

வேறு எந்த ஏடும் சொல்லாது!


இன்றைய ‘விடுதலை’யில் அறிக்கை எழுதியிருக்கிறேன். இந்தக் கருத்தை, இவ்வளவு தாராளமாக நம் ஏட்டைத் தவிர, வேறு எந்த ஏடும் சொல்லாது. நாங்கள்தான் இந்தக் கருத்தை சொல்லிக் கொண்டு வருகிறோம். அந்தக் கருத்து வெற்றி பெற்றுக் கொண்டு வருகிறது. எவ்வளவு பேர் சொன்னார்கள் என்பது அல்ல. அந்த அடிப்படை என்ன என்று சொன்னால் நண்பர்களே, நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாள் விழாவை - அய்.நா. சபையில் இந்த ஆண்டு கொண்டாடு கிறார்கள். இதற்கு என்ன அர்த்தம்? உலக தலைவர் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் என்று அர்த்தம். நம்மூரில் இன்னும் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், தாழ்த்தப்பட்ட வர்களின் தலைவர் என்று சொல்கிறார்கள். குறுகிய ஒரு சிமிழுக்குள் அடைக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய கொடுமை!

சிவப்பு ஒருபோதும் காவி ஆகாது;
கருப்பு ஒருபோதும் காவி ஆகாது

என் கைகளில் இருப்பது இன்றைக்குக் காலையில் வந்திருக்கின்ற ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகை.
ஆர்.எஸ்.எஸ். தலைவரிடம் ஒரு கேள்வி கேட்கிறார்கள், அதுபற்றி சொல்கிறேன்.

அவர்கள் எப்படி அம்பேத்கரை உள்ளே விழுங்கவேண்டும் என்று பார்க்கிறார்கள்; பெரியாரை விழுங்க முடியாது. அம்பேத்கரை எப்படியாவது கபளீகரம் செய்து, புத்த மார்க்கத்தை எப்படி இந்த நாட்டை விட்டு ஒழித்தார்களோ, அதேபோன்று, அம்பேத்கரையும் முழுக்க காவிச் சாயம் பூசலாம் என்று பார்க்கிறார்கள். சிவப்பு ஒருபோதும் காவி ஆகாது; கருப்பு ஒருபோதும் காவி ஆகாது.

ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை சொல்கிறார்கள், dalit icon


பெரியாருக்கு யுனெஸ்கோ விருது!
தயவு செய்து நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். இப்பொழுது அம்பேத்கருடைய பெருமை உலகளாவிய நிலையில். பெரியாருக்கு யுனெஸ்கோ விருது அளித்தார்கள். 1970 ஆம் ஆண்டிலேயே பெரியாரை அடையாளம் கண்டு, மத்திய அரசு - மாநில அரசு ஆகியவை எல்லாம்

Periyar the Prophet of the new Age
The socrates of South East Asia
Father of the social reform movement
and arch enemy of ignorance;
Superstitons; meaningless customs and base manners

புதிய உலகின் தொலைநோக்காளர்
தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரட்டீஸ்
தந்தை பெரியார் சமூக சீர்திருத்தத்தின் தந்தை

அறியாமை, மூட நம்பிக்கை, பொருளற்ற பழக்கவழக்கங்கள், இழிவான வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி
என்றெல்லாம் அவர்கள் வாசகங்களைக் கொடுத்துப் பாராட்டினார்கள்.

அதேபோல, அம்பேத்கர் அவர்களுக்கு சிறப்பு செய்வதில் கூட இவர்கள் எல்லாம் முன்னாலே இருந்தார்களே, செய்தார் களா?

இந்த நாட்டிற்காக பிரிட்டிஷ்காரனிடம் மன்னிப்புக் கேட்ட வர்களின் படமெல்லாம் நாடாளுமன்றத்தில்  வைக்கப்பட்டது. சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில்தான், அம்பேத்கர் அவர்களுடைய படமே - 42 ஆண்டுகாலம் கழித்து நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது.

பெரியார் பெயரை வைத்திருக்கிறார்கள் என்பதுதான் அவர்களுக்கு சங்கடம்


இன்றைக்கு உலக அளவில் அம்பேத்கர் அவர்களுடைய கருத்து, இந்தியாவில் மாணவர்கள் மத்தியில் பரவியிருக்கிறது. காஷ்மீர்முதல் கன்னியாகுமரி வரையில் பெரியார் - அம்பேத்கர் வாசகர் வட்டம் பல்கலைக் கழகங்களில் அமைந்திருக்கிறது. இதனை கண்டுதான் நடுங்குகிறார்கள் இப்பொழுது. அவனுக்கு அம்பேத்கர் பெயரை வைத்தால், அவர்கள் எப்படியாவது சமாளித்து விடுவார்கள். பெரியார் பெயரை வைத்திருக்கிறார்கள் என்பதுதான் அவர்களுக்கு சங்கடம்.

அம்பேத்கர் அவர்கள் அரசியலுக்குச் சென்றதினால், அவர் பெயரை சொல்லி மிகச் சாமர்த்தியமாக, அவருடைய மற்ற கொள்கைகளை மறைத்து- அரசியல் சட்டத்தை எழுதியவர் என்கிறார்கள். நவீன மனுதர்மம் என்கிறார்கள். மனுதர்மத்தையே அழிப்பதற்காகப் பிறந்து எரித்தவர் அம்பேத்கர் அவர்கள். அவரை முரண்பட்டு சொல்கிறார்கள். இது எவ்வளவு பெரிய கொடுமை!

இன்றைக்கு அவர்கள் என்ன சொல்கிறார்கள், நாங்கள்தான் உண்மையான அம்பேத்கர் பக்தர்கள் என்று சொல்கிறார்கள். இன்றைய விடுதலையில்கூட அந்தச் செய்தியைப் போட்டிருக் கிறோம்.

பி.ஜே.பி.,காரருக்கு அம்பேத்கர்மேல் எவ்வளவு காதல் தெரியுமா அவர்களுடைய வாரப் பத்திரிகையில் ஒரு அட்டைப் படம் போட்டிருக்கிறார்கள். மோடி சொல்கிறார், நான் அம்பேத்கர் பக்தன் என்று சொல்கிறார். அங்கேதான் ஆபத்தே இருக்கிறது.

நாங்கள் எல்லாம் பெரியாருக்குத் தொண்டர்கள். பெரியாருக் குப் பக்தர்கள் அல்ல - பஜனை பாடிக் கொண்டிருப்பதற்கு. பக் தர்கள் பஜனை செய்வார்கள்; தொண்டர்கள் செயல்படுவார்கள். நாங்கள் கொள்கையாளர்கள்.

மோடி சொல்கிறார், I am a  Bakth    என்கிறார். அவர்களுடைய விஜயபாரதத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா? அம்பேத்கரிஸ்ட் என்றால், அது ஆர்.எஸ்.எஸே!

நம் நண்பர்கள் சில பேர்களுக்குக் குழப்பம். தாகமாக இருந்ததால் மோர்தான் என்று நினைத்து பினாயிலைக் குடித்து விட்டார். இன்னமும் இருக்கிறார் அந்த நண்பர். அதுபோன்று இன்றைக்கு நிறைய பேர் பினாயிலைக் கொடுத்து, மோர்தான் சாப்பிடுங்கள் என்று சொல்கிறார்கள்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா
நாளிதழில் வந்த செய்தி!


இதை மற்றவர்கள் நம்ப மறுக்கிறார்கள். இன்றைக்கு டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு செய்தி வந்திருக்கிறது. அதில் ஆர்.எஸ்.எஸினுடைய வடநாட்டுத் தலைவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறார்கள்,

அம்பேத்கரை எல்லோரும் பாராட்டலாம். நாம் மட்டும்தான் பாராட்டவேண்டும் என்பதல்ல. அவர்கள் பாராட்டக்கூடாது என்று அவர்களைத் தடுப்பது எங்களது வேலையல்ல. ஆனால், உண்மையாகவே அம்பேத்கரைப் பாராட்டவேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்? அம்பேத்கர் அவர்கள் எதனை உயிர்க் கொள்கையாகக் கருதினாரோ, அதனை செய்தால் நீங்கள் அம் பேத்கரை உண்மையாகவே பாராட்டுகிறீர்கள் என்று அர்த்தம்.

all-India prachar pramukh Manmohan Vaidya spoke to Akhilesh Kumar Singh about Sangh’s views on the Dalit icon.
Was he not a strong anti-Brahminical social structure lobbyist?
Brahminism is a politically motivated publicity jargon fabricated by forces with vested interests.
If it means caste-based discrimination and inhuman practices like untouchability, then the RSS also stands against it. Babasaheb was never anti-Brahmin. His mentor was a Brahmin. He was against all forms of casteism and caste-based discrimination. There are many social reformers who were from Brahmin community who fought against such social evils.

இதன் தமிழாக்கம் வருமாறு:
உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் குறித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பின்  செய்திதொடர்பாளர் பேசும் போது, அவர் ஒரு தலித் தலைவராகத் தெரிகிறார்; அகிலேஷின் நடவடிக்கைகள் பார்ப்பனியத்திற்கு எதிரானது அல்ல என்று கூறினார்.

பார்ப்பனியம் அரசியல் அல்லது எந்த ஒரு தளத்திலும் தன்னுடைய கொள்கைகளை மாற்றிக்கொள்ளாத ஒன்றாகும்.

அதாவது ஜாதிய அரசியல், மனிதத்தன்மையற்ற செயல்பாடுகள் மற்றும் தீண்டாமைகளை அது ஒருபோதும் விட்டுவிடப் போவதில்லை.  இதற்கு எதிராக நிற்பவர்களை ஆர்.எஸ்.எஸ். என்றுமே தனது எதிரியாகத்தான் பார்க்கும்.

பாபா சாகேப் அம்பேத்கர் பார்ப்பனருக்கு எதிரி அல்ல என்று கூறும் அதே நேரத்தில், அவரை பார்ப்பனர் என்று கூட கூறத்தயங்காது அது. ஆனால் அம்பேத்கர் ஜாதியத்திற்கு எதிராக நின்றவர்; ஜாதியத்தை அழித்து ஒழிக்கவேண்டும் என்று தன்னுடைய வாழ்நாளையே போராட்டக் களமாக்கியவர். அவர் பார்ப்பனியம் என்ற தீய சக்திக்கு ஆதரவாக என்றுமே தனது கருத்தைக் கூறியதில்லை.

பார்ப்பனீயத்தினுடைய தன்மை என்ன என்பதுபற்றி நாங்கள் சொல்லவேண்டாம். பொதுமக்கள் நீங்கள் இருக்கிறீர்கள். என்னுடைய கைகளில் இருப்பது தந்தை பெரியார் அவர்கள் பயன்படுத்திய, படித்து பாதுகாத்து வைத்து நமக்குக் கொடுத்த புத்தகம். அம்பேத்கர் அவர்கள் 1945 ஆம் ஆண்டு What Congress and Gandhi Ji have done to the untouchables  காங்கிரசும், காந்தியும் தீண்டப்படாத மக்களுக்கு செய்தது என்ன? என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.
தாழ்த்தப்பட்ட மக்களை மட்டும் தனியே பிரிக்கவில்லை அவர். ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட அத்துணை பேர் குறித்தும் ஒரு வார்த்தை சொன்னார் - அடிமை ஜாதிகள் -   (Servile Classes) சரியான வார்த்தை அது. இன்றைக்கு உரிமை மறுக்கப்பட்ட அத்துணை பேரும் ஓரணியில் இருக்கிறார்கள் என்று கொண்டு வந்தார். அதைதான் தந்தை பெரியாரும் சொன்னார் - The Non Brahmin Movement என்று வந்ததும் அதுதான். அதில் எல்லோரும் இருப்பார்கள். தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மற்றவர்கள் இருப்பார்கள். தனித்த ஜாதிகளுக்கு இடமில்லை. அதுதான் பின்னாளில், திராவிடர் கழகம் - திராவிடர் இனம் என்று ஆக்கினார்கள்.

திராவிடர் கழகம் எல்லா வகையிலும் ஆய்வு செய்திருக்கின்ற ஒரு இயக்கமாகும்

அண்ணல் அம்பேத்கர் சொன்னார், திராவிடர் இனம் என்பது தென்னாட்டில் மட்டுமல்ல - வடநாட்டில் காலங்காலமாக இருந்த பூர்வீகக் குடிகள். இன்னமும் நாகர்கள் என்றால், திராவிடர்கள் என்றார் அம்பேத்கர். தமிழ்மொழிதான் திராவிடர்களுடைய மொழி என்று எழுதியிருக்கிறார். பல பேர் அம்பேத்கரைப்பற்றி பேசுவார்கள் - அவரைப்பற்றி படிப்பதில்லை. திராவிடர் கழகம் எல்லா வகையிலும் ஆய்வு செய்திருக்கின்ற ஒரு இயக்கமாகும்.

அந்த வகையில், இந்தப் புத்தகத்தில் இருக்கக்கூடிய ஒரு செய்தியை உங்களுக்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக் கிறோம்.
பார்ப்பனியம் என்றால் என்ன? என்பதுபற்றி பல பேருக்குக் குழப்பம் இருக்கும்.

ஆனால், அம்பேத்கர் அவர்கள் எவ்வளவு அழகாக தெளிவாக சொல்கிறார் பாருங்கள்.

கடைசிவரையில் அந்தக் கருத்தை அவர் மாற்றிக் கொள்ளாத தினால்தான், இந்துத்துவம், இந்து மதம் என்கிற ஜாதியை, சனாதனத்தை, பார்ப்பனியத்தைத் தூக்கிப் பிடிக்கின்ற இந்த அமைப்பு இருக்கிறதே  - முழுக்க முழுக்க ஜாதியை-  தீண்டா மையை காப்பாற்றுகின்ற அமைப்பு என்பதினாலே - தத்துவ ரீதியாக அதனை அவர் தாக்கினார். தனி மனித தாக்குதலே அம்பேத்கரிடமும் கிடையாது; பெரியாரிடமும் கிடையாது.

ஒரு மனிதனுக்கு உள்ள உரிமை - இன்னொரு மனிதனுக்கு மறுக்கப்படக்கூடாது
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று போராடுகிறோமே - அந்த வேலைக்கு நாங்கள் போகவேண்டும் என்பதற்காகவா? கோடி ரூபாய் கொடுத்தாலும் நாங்கள் போக மாட்டோம்.

ஆம்பள சாமியையும் குளிப்பாட்டுகிறார்கள்; பொம்பள சாமியையும் குளிப்பாட்டுகிறார்கள். அசிங்கமாக இருக்கிறது. ஆனால், எந்தக் கடவுளுக்கும் கோபம் வரவில்லை? இருந்தால் தானே கோபம் வரும். அந்த வேலைக்கு நாங்கள் என்ன மனு போட்டுச் செல்வோமா? நன்றாக நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அதற்கென்று நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஒரு மனிதனுக்கு உள்ள உரிமை - இன்னொரு மனிதனுக்கு மறுக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் போராடு கிறோம்.

மற்ற மதத்தைப்பற்றி பேசமாட்டேன் என்கிறார்கள் என்று எங்களைப்பற்றி புரியாத சிலர் சொல்வார்கள்.

இஸ்லாமிய மதத்தில் சாதாரண இஸ்மாயில் பாய், முல்லாவாக வேண்டும் என்றால், ஏழு ஆண்டுகள் படித்துவிட்டு வந்தால், முல்லாவாகலாம். பிறகு மவுல்வி ஆகிறார். சாதாரண இஸ்மாயில் பாய், மவுல்வி இஸ்மாயில் ஆகிறார்.

கிறித்துவ மதத்தில், சாதாரண அந்தோணி, ஏழு ஆண்டுகள் படித்துவிட்டு, அவர் பாதிரியார் ஆகிறார். பிறகு பாதர் அந்தோணி ஆகிறாரே!
உங்களுடைய அர்த்தமுள்ள இந்து மதத்தில் இப்படி ஆக முடியுமா? அங்கேதானே பேதம் இருக்கிறது. அதனை ஒழிப்பதற் காகத்தானே பெரியாரும், திராவிடர் கழகமும் போராடிக் கொண் டிருக்கிறோம்.

கோவிலில் சிலை செதுக்கியவன் எங்களுடைய ஆள்; கோவில் கோபுரம் கட்டியவன் எங்களுடைய ஆள்; கோவிலுக்கு மானியம் கொடுத்தவன் எங்களுடைய ஆள்; நீ அடிக்கிற மணியை செய்தது எங்களுடைய ஆள். இவ்வளவு செய்த பிறகும், நம்மாள் உள்ளே செல்ல முடியவில்லை.

வெளியில் தொங்கிக் கொண்டிருக்கும் பெரிய மணியை அடிப்பதற்காக கயிற்றை நம் கைகளில் கொடுத்துவிட்டான். நம்மாள் வேர்க்க விறுவிறுக்க அடித்துக் கொண்டிருக்கிறான். அந்தப் பயல், சிறிய மணியை கைகளில் பிடித்தபடி, செட்டியார் வாள் நகருங்கோ, முதலியார்வாள் நகருங்கோ, நாயக்கர்வாள் நகருங்கோ என்று சொல்லியபடியே  உள்ளே போய்விட்டான்.
நம்மாள் துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு சாமி என்கிறான். இதனை நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டாமா?

அதாவது படிக்கட்டு ஜாதிமுறை. எனக்குமேல்  அவன்; அவனுக்கு மேல் இன்னொருவன்; எனக்கு கீழே இன்னொருவன் என்று இருந்தால், எல்லோரும் சேர்ந்து போராட முடியாது. அதுதான் அதிலிருக்கும் தந்திரமே! அவர்களுக்குள்ளாகவே சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள்.

இப்பொழுது ஜாதியைப் பிரித்தவுடன், நாலாம் ஜாதிக்காரனும், அய்ந்தாம் ஜாதிக்காரனும் சண்டை போடுகிறார்கள்? சிலர் சொல்வார்கள், எந்த அய்யரும் சண்டை போடுவதில்லையே என்று. எப்படி அவர்கள் சண்டை போடுவார்கள். அவன்தான் மேலே இருக்கிறானே! அவனுக்கு சண்டை போடுவதற்கு வாய்ப்பே கிடையாதே!
ஏணிப்படி ஜாதி முறையை கற்பனை செய்து பாருங்கள். மேலே இருக்கிறவனுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது. அவன் கொஞ்சம் ஆட்டினால், நாலாவது படிக்கட்டில் இருப்பவன், அய்ந்தாவது படிக்கட்டில் இருக்கிறவன்மேல் விழுகிறான்; ஏண்டா என்மேல் விழுகிறாய் என்று இவனும், அவனும் அடித் துக் கொள்வார்கள். அவன் மேலே இருந்துகொண்டு, என்னங்க அங்கே சண்டை நடக்கிறதே என்று. இதுதானே ஜாதிக்கலவரம்.

இன்றைக்கு அமைதிப் பூங்காவாக தமிழகம் இருப்பதற்கு என்ன காரணம்? இந்த இயக்கம் இல்லாவிட்டால், பெரியார் பிறந்திருக்காவிட்டால் இதுபோன்ற நிலை இருக்குமா?
நேற்றுகூட பிகார் மாநிலத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே உள்ளவர்கள் எங்களுக்கு ஒரு பெரியார் இல்லையே என்று சொல்கிறார்கள். அங்கே வேலை செய்தது போதும் - இனிமேல் அடிக்கடி இங்கே வாருங்கள் என்று சொல்கிறார்கள்.

நம்முடைய கம்யூனிஸ்ட் ராஜா அந்த நிகழ்ச்சிக்கு வந் திருந்தார். உங்களுக்கு முதல்வர் வீடே கொடுத்திருக்கிறார்; அடிக்கடி இங்கே வாருங்கள் என்றார்.
What congress and Gandhi Ji
have done to the Untouchables
The cardinal principles of this philosophy of the Brahmins were six
(1) graded inequality, between the different classes;
(2) complete disarmament of the Shudras And the Untouchables;
(3) complete prohibition of  the education of the Shudras and the Untouchables;
(4)  ban on the Shudras and the  Untouchables occupying places of power and authority;
(5) ban on the Shudras and the Untouchables acquiring property
(6) complete subjugation and suppression of women

இதன் தமிழாக்கம்:
1. பல்வேறு இனக்குழுக்களிடையே பகைமையை மூட்டுவது.
2. சூத்திரர்களையும் தாழ்த்தப்பட்டவர்களையும் வலுப் பெறாமல் பார்த்துக்கொள்வது.
3. கல்வி என்பது சூத்திரர்களுக்கு எள்ளளவும் கிடைக்கக் கூடாது என்று.
4. சூத்திரர்களின் சொத்துக்களை அபகரிப்பது.
5. சூத்திரர்கள் எந்த ஒரு பொருளையும் சொந்தமாக வைத்திருக்கக் கூடாது.
6. பெண்களின் உரிமைகளை நசுக்குதல்
மேற்கண்ட 6 கொள்கைகளும் பார்ப்பனியத்தின் உயிர் மூச்சாகும்.
தாழ்த்தப்பட்ட தோழர்களில்கூட மட்டத்திலே உயர்ந்தவர்கள் என்கிறார்கள். அதற்கும் கீழே இன்னொரு ஜாதி; பிரித்து பிரித்து நாம் எல்லாம் ஒன்று சேரக்கூடாது என்று வைத்திருக்கிறார்கள். அத்துணை பேரையும் ஒன்று சேர வைத்த பெருமை தந்தை பெரியாரையே சாரும்.
உலகத்திலேயே படிப்பை கொடுக்கக்கூடாது என்கிற ஒரே மதம் இந்து மதம் என்கிற சனாதன மதமாகும்.
இந்த இயக்கம் இல்லாவிட்டால், எல்லோரும் படித்திருக்க முடியுமா?

சரசுவதி பூஜை கொண்டாடியதினாலா இன்றைக்கு எல்லோரும் படித்திருக்கிறார்கள்? இல்லவே, இல்லை, பெரியார் என்ற ஒரு மாபெரும் சக்தியால்தான். திராவிடர் இயக்கங்கள் இல்லாவிட்டால், இன்றைக்கு இவ்வளவு கல்விக் கூடங்கள் வந்திருக்குமா? என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள். காமராசர் ஆட்சி தொடங்கி கல்வி புரட்சி நடந்ததன் காரணத் தினாலேதான்.

சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக் காதே - அறிவை கொடுக்காதே என்று சொன்னது மனுதர்மம். அந்த மனுதர்மத்தை மாநாடு போட்டு எரித்தவர் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்கள்.

மறுபடியும் மனுதர்மம் ஆட்சிக்கு வந்திருக்கிறது.  அதுதான் காவி கட்சி. மனுதர்மம்தானே ஆர்.எஸ்.எஸ். இன்றைக்கு சந்தர்ப் பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் பாம்பு கொஞ்சம்  தலைதூக்குகிறது - அடி வாங்கியதும் உள்ளே தலையை இழுத்துக் கொள்கிறது. மறுபடியும் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறது. அந்த ஆபத்து, ஆபத்துதானே!
எங்களைப் போன்ற கருப்புச் சட்டைக்காரன் - காவலுக்குக் கெட்டிக்காரர்கள். அதனால் அந்தப் பணியை செய்துகொண்டி ருக்கிறோம்.
அதிகார இடங்களில் சூத்திரர்களோ, தாழ்த்தப்பட்டவர்களோ வரக்கூடாது.

பார்ப்பனியத்தினுடைய விளைவு நம் நாட்டில் எவ்வளவு மோசமாக மக்களை மனிதத் தன்மையற்று நடத்தியது என்று சொல்கின்ற நேரத்தில், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் சொல்லிய அந்த ஆதாரத்தை நான் எடுத்துச் சொல் கிறேன். சொல்வதற்கே கூச்சமாக இருக்கிறது.

He was a sacred person. There was a time when no person of the servile class could take his food without drinking the water in which the toes of the Brahmins were washed. Sir P. C. Ray once described how in his childhood, rows of children belonging to the servile classes used to stand for hours together in the morning on the roadside in Calcutta with cups of water in their hands waiting for a Brahmin to pass, ready to wash his feet and take the sacred liquid to their parents who would not take their food without having a sip of it first. He was entitled to first fruits.
In Malabar, where the Sambandham form of marriage prevails, the servile classes, such as the Nairs, regard it an honour to have their females kept as mistresses by the Brahmins.


இதன் தமிழாக்கம்:

பிரபல வேதியல் அறிஞர் சர். பி.சி ராய் பார்ப்பனியக் கொடு மைகள் பற்றி தனது வாழ்க்கை வரலாற்றில் கூறியிருப்பதாவது,  சிறுவயதில் நான் பார்ப்பனியத்தால் கடுமையாக பாதிக்கப்பட் டேன். நாங்கள் வரிசையாக தண்ணீர் குடிக்க ஆசிரியர்களால் நிறுத்தப்படுவோம். யாராவது ஒரு பார்ப்பனர் வந்து அவன் காலைக் கழுவிய பிறகு அந்த தண்ணீர் அனைவருக்கும் குடிக்க வழங்கப்படும். மேலும் எனது பெற்றோர்கள் யாராவது ஒரு பார்ப் பனர் வந்து எச்சில் படுத்திய பிறகு தான் அவர்களும் உண்பார்கள் எனக்கு தருவார்கள் என்றும், கடையில் ஆசையுடன் ஒரு பழம் வாங்கினால் அதை யாராவது ஒரு பார்ப்பனர் சிறிது கடித்து சுவைத்தபிறகே என்னை சாப்பிட அனுமதிப்பார்கள் என்று கூறியுள்ளார்.  இதைவிடக் கொடுமை என்னவென்றால் கேரளா வில் (மலபார் பகுதி) நாயர் குடும்பத்தினர் புதிதாக திருமணமான தனது மனைவியிடம் ஒரு நம்பூதிரி பார்ப்பனர் உடலுறவு கொண்ட பிறகு தான் தாலிகட்டிய ஆண்மகன் தனது மனைவி யுடன் கூடவேண்டும் என்ற ஒரு நிலை இருந்தது.

இவையெல்லாம் இன்றைக்கு இல்லை என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், மதம், சனாதன தர்மம் இவைகளில் கை வைக்கக்கூடாது என்கிறார்களே, அது மீண்டும் அப்படிப்பட்ட ஒரு இந்துத்துவ ஆட்சி வந்தால், பழைய சனாதனம், வைதீக முறைகள் திருப்பப்பட்டால், இவை நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம் என்பதை அருள்கூர்ந்து நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

எங்களுக்கு சமுதாயத்தைப்பற்றியும், அடுத்த தலைமுறை யைப் பற்றியும் கவலை இருப்பதால், ஆகவேதான், இதனை நாங்கள் சொல்கிறோம்.
ஆகவே, நண்பர்களே, மீண்டும் அது திரும்பி வந்துவிடக் கூடாது. அதனை இன்னமும் பாதுகாத்துக் கொண்டிருக்கின்ற இடம், கோவில் கருவறைகள். அனைத்து ஜாதியினரும் அய்.ஏ. எஸ்., அய்.பி.,எஸ்., அதிகாரிகளாகி விட்டார்கள். அனைத்து ஜாதியினரும் அய்க்கோர்ட் ஜட்ஜாகி விட்டார்கள்; உச்சநீதிமன்ற நீதிபதிகளாகி விட்டார்கள். கலைஞர் ஆட்சியினால்தான் - தி.மு.க. ஆட்சியினால்தான். அந்த ஆட்சி இல்லையானால், இந் நிலை ஏற்பட்டிருக்குமா? வடநாட்டில் பல மாநிலங்களில் சூத்திரர் களோ, பஞ்சமர்களோ உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இல்லையே!

உங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக நாங்கள் போராடுகிறோம்

இன்னமும் உச்சநீதிமன்றத்தில் உள்ள 31 நீதிபதிகளில் மூன்று, நான்கு பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில்  தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர்கூட இல்லையே! இதனை கேட்பதற்கு நாதியில்லை, எங்களைத் தவிர. எல்லோரும் வாக்கு வாங்கிக்கொண்டு சட்டப்பேரவைக்குச் செல்லவேண்டும் என்று நினைக்கிறார்கள். இதனை சொல்கின்ற இயக்கம் எங்களுடைய இயக்கம். உங்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக நாங்கள் போராடுகிறோம். உங்களுடைய பிள்ளைகளின் படிப்பு களுக்காகப் போராடுகின்ற இயக்கம். உங்களுடைய பிள்ளை களின் வேலை வாய்ப்புக்காக - சமூகநீதிக்காகப் போராடுகின்ற இயக்கம் எங்களுடைய இயக்கம். எங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது, அது கண்டிப்பாக வெற்றி பெறும்.
கோவில்களுக்குள் பெண்கள் உள்ளே போகக்கூடாது என்று வைத்திருந்தார்கள்; இன்றைக்கு மகாராஷ்டிராவில், பெண்கள் களத்தில் இறங்கி போராடி, வெற்றி பெற்று உள்ளே சென்றார்கள். அடுத்து கேரளாவில், உச்சநீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்தக் கருத்து எங்கேயெல்லாம் பரவியிருக்கிறது பாருங்கள். நீதிபதி கேட்கிறார்,
உச்சநீதிமன்ற நீதிபதி தொடுத்த வினாக்கள்!

அரசியல் சட்டப்படி, ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபாடு காட்டக்கூடாது; எல்லா உரிமைகளும் பொதுவானது; ஆண்கள் பக்தர்களாக இருந்து கோவிலுக்குள் செல்லலாம் என்றால், ஏன் பெண்கள் செல்லக்கூடாது. எவரெஸ்ட் சிகரத்தில் பெண்கள் ஏறக்கூடாது என்று சொல்வீர்களா? தடுப்பீர்களா? என்று கேட்கிறார்.

பெரியாரின் கொள்கைகள் பரவும்; அவருடைய கருத்துகள் பரவும். நாங்கள் யாரும் சென்று பிரச்சாரம் செய்யவேண்டாம். அறிவியலை யாராவது பிரச்சாரம் செய்தார்களா? செல்போன் கண்டுபிடித்தார்களே, எல்லோரும் வாங்கிக் கொள்ளுங்கள், வாங்கிக் கொள்ளுங்களே என்று விற்றார்களா? இல்லையே, ஒருவர் வாங்கியதும், குப்பன், சுப்பன், முத்தன், வேலைக்காரி, கீரைக்காரி எல்லோரும் செல்போன் வைத்திருக்கிறார்களே!

இதை நான் தவறு என்று சொல்லவில்லை - வளர்ச்சி - அதனால் நமக்கு மகிழ்ச்சி. அறிவியல் தானாகப் பரவும். அது போல், பெரியார் கருத்தும், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் கருத்தும் அறிவியல். அதனை யாராலும் தடுக்க முடியாது. அந்த எண்ணத்தை நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். அந்த அடிப்படையில்தான், நாங்கள் தீர்மானம் போட்டோம்.
சட்டப்பேரவையில் கொடுத்த உறுதிமொழியை நடைமுறைப்படுத்த வேண்டாமா?

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் வழக்கில் உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்திருக்கிறது. ஆகமப் பயிற்சி பெற்றவர்களை நியமனம் செய்யுங்கள் என்று.
இன்றைய ஆட்சிக்கு நாணயம் இருந்தால், சட்டப்பேரவையில் கொடுத்த உறுதிமொழியை நடைமுறைப்படுத்த வேண்டாமா? இந்த லட்சணத்தில், தேர்தல் பரப்புரையில் என்ன சொல்கிறார்கள்? நாங்கள் சொன்னதையும் செய்வோம்; சொல்லாததையும் செய்வோம். சொல்லாதது என்ன? மதுவிலக்கு வேண்டும் என்று சொல்லி, பாட்டு பாடியவரை சிறைக்கு அனுப்பியதுதான். இது தான் அவர்கள் சொல்லாததை செய்தது.

தி.மு.க. அணி வெற்றி பெற்றால்தான்
சமூகநீதி நிலைநாட்டப்படும்!

ஆகவே, நண்பர்களே, நீங்கள் நன்றாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். எங்களுக்கு என்ன அக்கறை - ஏன் தி.மு.க.வை ஆதரிக்கவேண்டும்; தி.மு.க. அணி வெற்றி பெறவேண்டும் என்று சொல்கிறோம். அரசியலுக்காக அல்ல நண்பர்களே! அந்த அணி வெற்றி பெற்றால்தான், உண்மையிலேயே சமூகநீதி நிலை நாட்டப்படும்.
அன்றைக்கு அவர்கள் ஆட்சிக்கு வந்துதானே வாய்ப்புகளை உருவாக்கினார்கள். ஜாதி மறுப்பு திருமணத்திற்கு முதல்முறையாக அங்கீகாரம் கொடுத்ததே அண்ணா அவர்களுடைய ஆட்சி. ஆனால், இன்றைய ஆட்சி அண்ணாவின் பெயரை சொல்லிக் கொண்டு எப்படி நடக்கிறது? அதனை நீங்கள் நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும். நான் சொல்லவில்லை, பொதுவான ஏடுகளேகூட, எப்படி எழுதுகின்றன என்பதை நீங்கள் நினைத் துப் பார்க்கவேண்டும்.

18 ஆம் தேதி அன்று நடைபெறக்கூடிய போராட்டத்திற்கு அவசியம் நீங்கள் வரவேண்டும்; எல்லோரும் கலந்துகொள்ள வேண்டும். இப்பொழுது சமுதாயத்தில் சிறைச்சாலைக்குப் போவது என்பது வாடிக்கையாகிவிட்டதே!

சிறை என்பது ஒரு பெரிய சங்கடம் என்று சொல்ல முடியாது. சிறைச்சாலையில்தான், இந்த சுதந்திர நாட்டில், 69 ஆண்டுகளுக் குப் பிறகு, உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடத்திற்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.

அ.தி.மு.க. ஆட்சியில் மிகவும்  மலிவானது என்னவென்றால், கூலிப்படைதான்!

வெளியில் இருந்தால், எந்த நேரத்தில் வந்து செயினை அறுத்துக் கொண்டு செல்வார்கள் என்று தெரியாது; கூலிப்படை வந்து என்ன செய்வார்கள் என்று தெரியாது. 5000 ரூபாய்க்கு கூலிப்படை கிடைக்கிறது. இந்த ஆட்சியில் மிகவும்  மலிவானது என்னவென்றால், கூலிப்படைதான்.

ஜாதி வெறி எடுத்தவன், என் ஜாதி, உன் ஜாதி என்கிறானே, ஜாதிக்கு அடையாளம் என்ன? தேநீர்க் கடைகளில் வைத்திருக் கிறார்களே, இரட்டைக் குவளை முறை. ஆனால், சாராயக் கடையில்  அந்த நிலை இருக்கிறதா? ஒரு கிளாஸ் உள்ளே போனதும், பிரதர் என்கிறான்; சமத்துவம் தானே வந்துவிடுகிறதே!

சுடுகாட்டில் கூட சமத்துவம் இல்லையே! நம்முடைய உழைத்த சகோதரன் உயிரிழந்துவிட்டான்; அவனுடைய உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்வதற்குக்கூட பாதையை விட மாட்டேன் என்கிறார்களே! அதற்கு முன் ஒரு பாடலைப் பாடுவார்கள் - ‘‘சமரசம் உலாவும் இடமே!’’ என்று சுடுகாட்டைச் சொல்வார்கள். ஆனால், அங்கே சமரசம் இல்லை. ஆனால், டாஸ்மாக் கடையில்தான் சமரசம் உலாவுகிறது!

இதுபோன்று நம் மக்களை நாசம் செய்து, மிகக் கேவலமாக வைத்திருக்கின்ற நிலையை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டாமா? இதில் அண்ணா பெயரில் கட்சியின் பெயர் வேறு. இதுதான் மிகப்பெரிய சங்கடம்.

ஆனந்தவிகடன் இதழில் வெளிவந்த செய்தி!

இதோ என் கைகளில் இருப்பது ‘ஆனந்தவிகடன்’ பத்திரிகை. இது யார் பத்திரிகை என்று உங்களுக்குத் தெரியும்.

ஜெயலலிதாவிற்கு தனது கட்சியில், 227 நல்லவர்கள், வல்ல வர்களைக்கூட தேர்வு செய்யத் தெரியாதா என்ன?

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், சிறீரங்கம் அரங்க நாதர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில் ஆகிய திருத்தலங்களில் பூஜித்தும், கர்ப்பக்கிரகத்தில் வைத்து ஆசீர்வாதம் வாங்கியும் எடுத்துவரப்பட்ட வேட்பாளர் பட்டியல், மூன்று நாள்களில் ஏழு முறை மாற்றப்பட்டுவிட்டது. இன்னும் 10 நாள்களில் 100 முறைகூட மாற்றப்படலாம்.

திங்கள்கிழமையா, செவ்வாய்க்கிழமையா, புதன் ஓரையா, ஏகாதசியா, வடக்கே சூலமா, தெற்கே சூலமா என்றெல்லாம் பார்த்துப் பார்த்து வெளியிட்ட வேட்பாளர் பட்டியலிலேயே இத்தனை திருத்தங்கள் என்றால், என்ன விசாரணையும் ஆராய்ச்சியும் நடத்தி, இவர்களை வேட்பாளர்களாகத் தேர்வு செய்தார் ஜெயலலிதா?

(இங்கே ஒரு தகவலை சொல்கிறேன். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒரு நிகழ்வு நடந்தது. நான் படிக்கின்ற காலத்தில் பதிவாளராக ஒருவர் இருந்தார். சச்சிதானந்தம் பிள்ளை மிகுந்த சைவ பக்தி உள்ளவர். தமிழறிஞர் - நேர்மையா னவர். பல்கலைக் கழகத்தில் இடங்கள் எல்லாம் முடிந்துவிட்டது என்று சொன்னார்கள். சச்சிதானந்தம் அவர்களிடம் ஒருவர் சென்று சீட் வேண்டும் என்று கேட்டார்; உன்னுடைய பெயர் என்ன என்று கேட்டார்; இவர் சிவனடியார் என்று சொன்னதும், சச்சிதானந்தம் அவர்கள், சிவனடியாரா? இவனுக்கு மட்டும் இடம் கொடுங்கள் என்று சொன்னார். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், அவர் முழுக்க முழுக்க திராவிடர் கழகத்தில் இருக்கின்றவர். அவருடைய தாத்தா வைத்த பெயர் என்பதால், அது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது அவருக்கு)

பெருமாள் பெயர், முருகன் பெயர் இருப்பவர்களாகப் பார்த்து டிக் அடித்தார் என்றால், அடுத்த தேர்தலில் நிச்சயமாக இவர்களுக்கு சீட் கிடைக்காது. இப்படித்தான் கடந்த தேர்தலிலும் ஆட்கள் தேர்வு நடந்தது. அய்ந்து ஆண்டுகள் கழித்து, இவர்களில் எவரும் தேற மாட்டார்கள் எனத் தெரிந்து, இந்த முறை அவர்களுக்கு ஜெயலலிதா வாய்ப்பு தரவில்லை.
இந்த நாட்டு மக்களுக்கு நல்லது செய்வார்கள் என அழைத்து வரப்பட்டு ஜெயலலிதாவால் எம்.எல்.ஏ ஆக்கப்பட்ட 100 பேரை மீண்டும் வீட்டுக்கே அனுப்பிவிட்டார் ஜெயலலிதா. இதில் 10 பேர் அமைச்சர்களாகவும் இருந்து சுகம் அனுபவித்தவர்கள்.

கடந்த அய்ந்து ஆண்டுகால தமிழ்நாட்டின் நிர்வாகம்-அரசு ஜெயலலிதாவாலேயே சகித்துக் கொள்ளமுடியாத எத்தகைய தகுதியற்ற மனிதர்கள் வசம் இருந்துள்ளது என்பதற்கு முக்கிய மான உதாரணம் இது.

அம்மா தாயே! எங்கோ ஒரு குக்கிராமத்தில் எதற்கும் உதவா தவனாக, அன்றாடச் சாப்பாட்டுக்கே  வழி இல்லாதவனாகச் சுற் றிக்கொண்டிருந்த என்னை, எம்.எல்.ஏ. ஆக்கி, அமைச்சராகவும் ஆக்கி, தங்கள் தலைமையில் செயல்பட வாய்ப்பும் கொடுத்த நீங்கள்தான் எனக்கு மீனாட்சி, காமாட்சி, அங்காள பரமேஸ்வரி, அகிலாண்ட ஈஸ்வரி என, இந்த மனிதர்கள் பேசும்போது ஜெயலலிதாவைப் பாசத்தால் பாராட்டுகிறார்கள் என்றுதான் நினைத்தோம். இல்லை, அவர்கள் உண்மைகளைச் சொல்லியிருக்கிறார்கள்; எதற்கும் லாயக்கு அற்றவர்களாகவே பல எம்.எல்.ஏ.-க்கள், பல அமைச்சர்கள் இருந்துள்ளனர். அம்மா விடம் பொய் சொல்லக் கூடாது என்பதற்காக, அன்றைக்கே உண்மையைப் பேசியிருக்கிறார்கள்!

இரண்டாம் முறை வாய்ப்பு தரப்படாத அளவுக்கு மோசமாக 100 எம்.எல்.ஏ-க்கள் நடந்து கொண்டார்கள் என்றால், கடந்த அய்ந்து ஆண்டு காலத்தில் என்ன வகையான ஆட்சி நடந் திருக்கும்? வெறும் ஒப்புக்கு உட்கார்ந்துகொண்டு, மந்திரிகளின் மாதாந்திர கமிஷன்களில் வண்டியை ஓட்டியிருக்கிறார்கள் இந்த எம்.எல்.ஏ-க்கள் என்றுதானே முடிவுக்கு வரவேண்டும்? குறிப் பிட்ட தொகுதியில் சொந்த செல்வாக்கு இவர்களுக்கு இருந்தி ருந்தால், ஜெயலலிதா சீட் தர மறுத்திருக்க முடியுமா?

மாறாக, இவர்களுக்கு எல்லாம் மறுபடியும் வாய்ப்பு கொடுத்தால் கட்சி தோற்றுப்போகும் என உளவுத்துறை கொடுத்த அறிக்கை காரணமாகத்தான் இவர்கள் காலி செய்யப்பட்டு உள்ளார்கள். `இவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தால் ஓட்டு கேட்டு ஊருக்குள் போக முடியாது என்றும் உளவுத் துறை அறிக்கை கொடுத்தது. ஏனென்றால், இவர்களில் பல பேர் கடந்த முறை ஓட்டு கேட்டுப் போனதற்குப் பிறகு ஊருக்குள் போகாத வர்கள். ஏன் போகவில்லை? அம்மா போகச் சொல்லவில்லை; அதனால் போகவில்லை.
தனது பிறந்தநாளைக் கொண்டாடச் சொன்ன ஜெயலலிதா, தன் மீதான வழக்கில் இருந்து விடுபடுவதற்காக கோயிலுக்குப் போகச் சொன்ன ஜெயலலிதா, தனக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையில் இருந்து வெளியில் வருவதற்காக யாகங்கள் நடத்தச் சொன்ன ஜெயலலிதா, தனது உடல்நலனுக்காக பல்வேறு பூஜைகள் நடத்தச் சொன்ன ஜெயலலிதா  தொகுதிக்குள் போ, மக்களைச் சந்தி, அவர்களுக்கான தேவை என்ன என்பதை எனக்கு எழுது எனக் கட்டளையிடவில்லை. அதனால் இவர்களும் தொகுதிக்குள் போகவில்லை.

ஜெயலலிதா கிரேட் டிக்டேட்டர்தானே! ‘சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் எல்லோரும் தொகுதிக்குள் போய் மக்களைச் சந்திக்க வேண்டும் எனக் கட்டளையிட்டிருந்தால் ஒருத்தராவது பார்க்காமல் இருந்திருப்பாரா இருந்திருக்க முடியுமா? அம்மாவே சொல்லாவிட்டாலும் இவர்கள் தொகுதிக்குள் போனால் அம்மா திட்டப்போகிறாரா? இல்லை. பொறுப்பை உணர்த்தாத தலை மையின் கீழ் அக்கறையற்ற மனிதர்களின் அய்ந்து ஆண்டுகள் உதவாக்கரையாகக் கழிந்துவிட்டன என்பதற்கு உதாரணம்தான், 100 எம்.எல்.ஏ.க்களுக்கும் 10 அமைச்சர்களுக்கும் தரப்பட்ட கல்தா!

அந்த 150 எம்.எல்.ஏ-க்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் களாவது தகுதி படைத்தவர்களாக, துறைச் செயல் பாடுகளில் தேர்ச்சிபெற்ற, கெட்டிக்காரர்களாக இருந்தார்களா என்றால் அதுவும் இல்லை.

2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையிலான அய்ந்து ஆண்டு காலத்தில் 23 முறை அமைச்சரவையில் மாற்றம் நடந்துள்ளது. ஓர் ஆட்சிக்கு ஒரு முறை பதவியேற்பு விழா நடத்தலாம். அதிகபட்சம் மூன்று முறைகூட நடக்கலாம். 15 தடவைக்கு மேல் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நிகழ்ச்சிகள் நடந்தன. ஆட்டுக்குத் தாடி எதற்கு ஆளுநர் பதவி எதற்கு? என அண்ணா கேட்டார்.

அண்ணாவுக்குத் தெரியாத ஆளுநரின் அவசியத்தை அம்மா உணர்த்துகிறார். இத்தனை தடவை பதவியேற்பு விழாக்கள் நடத்துவதற்கே, சொந்த வேலைகள் இல்லாத ஒருவர் வேண்டாமா?
ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்தியலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், செல்லூர் ராஜு, என்.சுப்பிரமணியம் ஆகியோர்தான் தாங்களும் மாறாமல் தங்கள் துறையும் மாறாமல் இருந்தவர்கள். கோகுல இந்திரா, எஸ்.பி.சண்முகநாதன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, என்.ஆர்.சிவபதி, எஸ்.பி.வேலுமணி, எம்.எஸ்.எம்.ஆனந்தன், ஆர்.பி. உதயகுமார், பி.வி.ரமணா ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டு, வெளியில் அனுப்பப்பட்டார்கள். தாங்கள் திருந்தியதாக எப்படி நிரூபித்தார்கள் எனத் தெரியவில்லை. மீண்டும் அமைச்சர் ஆக்கப்பட்டார்கள். அதன் பிறகாவது நீடித்தார்களா என்றால்..? அக்ரி கிருஷ்ண மூர்த்தியும் என்.ஆர்.சிவபதியும் ரமணாவும் மீண்டும் தூக்கி வீசப்பட்டனர்.

150 பேரில் சுத்தமான, திறமையான, செயல்படக் கூடிய 30 பேரைக்கூட ஜெயலலிதாவால் தேர்வுசெய்ய முடியவில்லையா?

பள்ளிக் கல்வித் துறை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், பள்ளிக் கல்வித் துறை முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பள்ளிக் கல்வித் துறை முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி, பள்ளிக் கல்வித் துறை முன்னாள் அமைச்சர் பழனியப்பன், பள்ளிக் கல்வித் துறை முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி  அய்ந்து ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் அய்ந்து முன்னோர்கள். பள்ளிக் கல்வித் துறை எப்படி முன்னேறியிருக்க முடியும்? பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் சி.எம். ஜெயலலிதாவா அல்லது சபீதா அய்.ஏ.எஸ்-ஸா? பேசாமல் அவரையே அமைச்சர் ஆக்கியிருக்கலாமே!

பெண் பிரச்சினைகளில் மாட்டியே சிக்கல் ஆனவர்கள் பட்டியல் நீண்டது. திருச்சி பரஞ்சோதி, செங்கோட்டையன், எம்.எஸ்.எம். ஆனந்தன், பி.வி.ரமணா, ஜெயபால் என இவர் களின் கதைகள் ஒவ்வொன்றும் பயங்கரம். போயஸ் கார்டனில் ஃபேக்ஸ் மெஷின் ரிப்பேர் ஆனதற்குக் காரணமே இவர்கள் மீதான புகார்கள்தான். பெரிய பதவி, திடீர் அதிகாரம், புதுப் பணம் மூன்றும் சேர்ந்து பலரையும் ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடவைத்தன. இந்த அய்ந்து பேர் சிக்கிக்கொண்டார்கள்; பலர் சிக்கவில்லை. செந்தில்பாலாஜி பற்றி தனிப் புத்தகம்தான் போட வேண்டும். ஒரு பாராவுக்குள் அடக்கிவிடக்கூடிய பேரா அது?

இதில் புரியாத புதிர் என்னவென்றால்

அமைச்சர் பதவிக்கு லாயக்கு இல்லை எனத் தூக்கி வீசப் பட்டவர்களுக்கு மீண்டும் எம்.எல்.ஏ.வாகப் போட்டியிட ஜெய லலிதா வாய்ப்பு தந்திருப்பதுதான்.
அதிகாரம் பொருந்திய மனிதராக இருந்து, அமைச்சரவையில் வருவாய்த் துறை தரப்பட்டு, அதில் இருந்து டம்மியான அய்.டி. துறைக்குப் போய், மீண்டும் வருவாய்த் துறை பெற்று பதவியும் பறிக்கப்பட்ட பரிதாப செங்கோட்டையன் மீண்டும் வேட்பாளர். ம.தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க-வுக்கு வந்து, அ.தி.மு.க-வில் இருந்து கார்டனுக்குள்ளேயே போய், சின்ன வயதிலேயே செல்வாக்கான அமைச்சர் ஆகி ஜெயலலிதாவின் பதவி போனால் அடுத்து இவர்தான் என்றெல்லாம் மகுடம் சூட்டப் பட்ட செந்தில்பாலாஜி, திடீரென பதவிப் பறிப்புக்கு ஆளாகி, கரூரில் சிறை வைக்கப்பட்டார். அவருக்கும் மீண்டும் வாய்ப்பு. இப்படித்தான் சி.வி.சண்முகத்துக்கும் மீண்டும் வாய்ப்பு. எதற்காக நீக்கப்பட்டார்கள்? எதற்காக சேர்க்கப்பட்டுள்ளார்கள்? அய்யோ பாவம்! அக்ரி கிருஷ்ணமூர்த்தி மட்டும் என்ன பெரிய பாவம் செய்து விட்டார். அவரையும் இந்தப் பட்டியலில் சேர்த்திருந்தால் பட்டியலுக்கு ஒரு புண்ணியம் கிடைத்திருக்குமே! யார் ஆள் கிறார்கள் என்பது முக்கியம் அல்ல; எத்தகைய ஆள் ஆள்கிறார் என்பதே முக்கியம். தொகுதிக்கே வராத எம்.எல்.ஏ.க்கள், துறையில் எந்தச் சாதனையுமே செய்யாத அமைச்சர்கள், இதை அய்ந்து ஆண்டுகளாகக் கண்டுகொள்ளாத முதலமைச்சர்  இதுதான் அய்ந்து ஆண்டுகால ஆட்சி. இதற்குத்தானா மக்கள் வாக்களித்தார்கள்? தகுதியற்ற மனிதர்களுக்கு, தங்களது பணிகளைச் செய்யத் தவறிய மனிதர்களுக்கு, மீண்டும் வாய்ப்பு அளிக்க மறுத்ததன் மூலமாக, கட்சி ஜெயிக்கும் என ஜெயலலிதா நினைக்கிறார். ஆனால், ஆட்சி செய்த அய்ந்து ஆண்டுகளும் தோற்றுவிட்டனவே. அதற்குக் காரணம் அவர்தானே!

இந்த முறை வாய்ப்பு மறுக்கப்பட்ட 10 அமைச்சர்களில் பி.மோகன், எஸ்.சுந்தர்ராஜ், என்.சுப்பிரமணியன், முக்கூர் என்.சுப்பிரமணியன், எஸ்.அப்துல் ரஹீம் ஆகிய அய்வரும் பெரிய புகார்கள் எதிலும் சிக்காதவர்கள். (புகார்களே இல்லாத வர்கள் எனச் சொல்ல வரவில்லை!) ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு மறுத்த ஜெயலலிதா, தொடர் சர்ச்சை மனிதர்களாகவே வலம்வந்த நத்தம் விசுவநாதன், செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, தோப்பு வெங்கடாசலம், எஸ்.காமராஜ் ஆகியோருக்கு மீண்டும் அங்கீகாரம் தந்திருக்கிறார் என்றால், அவரது அளவு கோல் என்னவென்று புரியவில்லை.

இந்த எம்.எல்.ஏ-க்கள், இந்த அமைச்சர்கள் மீதான அனைத் துப் புகார்களையும் விசாரிப்பதுபோல நடித்து, கார்டனுக்கு மறைத்து சர்ச்சை நபர்களைக் காப்பாற்றி, பல்வேறு மாவட்டங் களில் அ.தி.மு.க. ஸ்தம்பிக்க காரணமான ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் மீண்டும் அதே இடத்தைத் தக்க வைத்துள்ளார்கள். கடந்த இரண்டு மாத காலமாக விசாரணை வளையத்தில் இருந்து, ஓமகுண்டங்களின் முன்னால் பரிசோதனை செய்யப் பட்ட இவர்கள், என்ன பரிகாரம் செய்து மீண்டார்கள் என்பது அவரவ ருக்கே தெரியும். இந்த அய்வர் அணியில் கொஞ்சம் தப்பியவர் எனச் சொல்லப்பட்ட பழனியப்பனுக்கு, இந்த முறை வாய்ப்பே  இல்லை. ‘அமாவாசை நேரத்தில்தான் பிரச்சினை வருமோ!’ என அமைச்சர்கள் இதுவரை அலறினார்கள்.

அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை எல்லா நாட்களும் அப்படித்தான் இருந்தன இருக்கின்றன. கூட்டிக் கழித்துப் பார்த்தால் அய்ந்து ஆண்டுகளுமே அப்படித்தானே?
இதனை எதற்காகச் சொல்கிறோம் என்றால், அண்ணா பெயரில் உள்ள ஒரு ஆட்சி - அண்ணா பெயரில் சென்னை கோட்டூர்புரத்தில்  அமைந்துள்ள ஆசியாவிலேயே பெரிய நூலகம் - தி.மு.க. ஆட்சியில் கலைஞர் திறந்து வைத்தார் என்கிற ஒரே ஒரு காரணத்திற்காக - அந்த நூலகத்தைகூட சரிவர பராமரிக்கப்படவில்லை. ஜனநாயகத்தில் ஆட்சிகள் மாறி மாறி வரும். அரசாங்கம் என்பது ஒரு தொடர்ச்சியல்லவா! நடுநிலை யோடு சிந்தித்துப்  பாருங்கள் நண்பர்களே!

இதில் சிலர் உளறுகிறார்கள் - திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று. இப்பொழுது போராட்டமே - ஆளுங்கட்சியாக இருக்கும் அ.தி.மு.க.வுக்கும் - தி.மு.க.வுக்கும்தான். வேறு யாருக்கும் போட்டி கிடையாது. மற்றவர்கள் எல்லோரும் ஒரு அங்கீகாரம் வேண் டுமே என்பதற்காக தேர்தலில் நிற்கிறார்கள். அவர்களைப்பற்றி பேசி நேரத்தை வீணடிக்கவேண்டிய அவசியமில்லை.
கடந்த அய்ந்தாண்டு காலத்தில் எவ்வளவு பெரிய சங்கடங் கள். நுழைவுத் தேர்வைக் கண்டித்து மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்தியது திராவிடர் கழகம்.
வருங்கால சந்ததியினுடைய வாழ்வு இங்கே இருக்கிறது. எனவே, நாங்கள் போராட்டக் களத்தில் நின்று கொண்டிருந்தாலும், இதனையும் முக்கியமாக கவனிக்கவேண்டும். ஏனென்றால், கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்துகொள்ளக் கூடாது. யாருக்கோ வந்த விருந்து என்று நாம் அலட்சியமாக இருந்துவிட முடியாது. ஆகவே, எங்களுக்கு அரசியல் பார்வை கிடையாது நிச்சயமாக!

தி.மு.க. ஊழல் செய்திருக்கிறது, அப்படி, இப்படி என்று சொல் கிறார்கள். அவர்களிடம் ஒரே ஒரு கேள்வி கேட்கிறோம். ஒரு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் 28 லட்ச ரூபாய்தான் செலவு செய்யவேண்டும் என்று விதி இருக்கிறது. அதன்படிதான் கணக்குக் கொடுக்கப் போகிறார்கள். 27 லட்சத்து 999 ரூபாய்தான் செலவு செய்தோம் என்று கணக்குக் கொடுக்கப் போகிறார்கள்.
28 லட்சம் ரூபாய்க்குள்தான் அந்த வேட்பாளர் செலவு செய்தார் என்று சொல்ல முடியுமா? ஊழலைப்பற்றி பேசும் யோக்கியர்கள் யாராவது பதில் சொல்லட்டும். பொய்க் கணக்குக் கொடுத்துவிட்டு, ஊழலில் பெரிய கோடு என்ன? சிறிய கோடு என்ன?

இப்பொழுதுள்ள அமைப்பு முறைகளை மாற்றவேண்டும்

நாங்கள் யாரும் ஊழலை ஆதரிக்கவில்லை. நாங்கள் யாரும் லஞ்சத்தை நியாயப்படுத்தவில்லை. இந்த அமைப்பு முறைகளை மாற்றவேண்டும் என்றுதான் சொல்கிறோம்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சொல்கிறார், 60 கோடி ரூபாய்க்குமேல் பணப் புழக்கம் இருக்கும் என்கிறார். யாரைச் சொல்கிறார்? யாரைக் கண்டுபிடிப்பது?

வெளிநாட்டுக் கருப்புப் பணத்தை கொண்டு வந்து, ஒவ்வொருடைய கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார் மோடி. அப்படி செய்தார்களா?
வெளிநாட்டு கருப்புப் பணம் இருக்கட்டும்; உள்நாட்டில்  நடைபெறும் தேர்தலில் செலவழிக்கப்படும் பணம் முக்கால்வாசி கருப்புப் பணம் அல்லவா! பிறகு என்ன ஒரு யோக்கியதை - இன்னொரு யோக்கியதைப் பார்த்து சொல்வது. ‘‘ஈயத்தைப் பார்த்து இளிச்சதாம் பித்தளை’’ என்று ஒரு பழமொழி சொல் வார்கள். அதுபோன்று இருக்கக்கூடிய சூழ்நிலை இருக்கலாமா?
ஆகவே, எல்லாவற்றையும் நீங்கள் சிந்தித்து முடிவு செய்யுங்கள்! 18 ஆம் தேதி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்கிற போராட்டம் இருக்கிறதே - அது ஜாதி ஒழிப்புப் போராட்டம் - தீண்டாமை ஒழிப்புப் போராட்டம். அப்போராட் டத்தில் பலரும் கலந்துகொள்ளவேண்டும். அது திராவிடர் கழகம் நடத்துகின்ற போராட்டமாக இருக்கலாம்; ஆனால், திராவிடர் கழகத்துக்காரர்கள் மட்டும்தான் கலந்துகொள்ளவேண்டும் என்று நினைக்காதீர்கள். இப்பொழுதே, கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள் ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் அப் போராட்டத்தில் கலந்துகொள்ள தயாராக இருக்கிறார்கள். நீங்களும் வரவேண்டும். நான் ஏற்கெனவே சொல்லியதுபோல, மூன்று வேளை நிச்சயமாக சாப்பாடு உண்டு.

பொதுவாழ்க்கையில் இருக்கும் எங்களைப் போன்றவர்கள் நேரத்திற்கு சாப்பிட்டது சிறைச்சாலையில்தான். ஆகவே, தாராள மாக சிறைச்சாலைக்குச் செல்லலாம். சமுதாயத்தில் யார் சிறைக் குப் போகாதவர்கள்? சிறையில் இருக்கும் அதிகாரிகள்கூட சில நேரங்களில் சிறைக்குப் போகிறார்கள். ஒரு சுழற்சி போன்று ஆகிவிட்டது. அதனால், பயப்படுவதற்கோ, சங்கடப்படுவதற்கோ ஒன்றுமில்லை. தாராளமாக எல்லோரும் அணிவகுத்து வர வேண்டும்.

18 ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தில் கட்டுப்பாடாக நடந்துகொள்ளவேண்டும். நம்முடைய போராட்டம் என்றால், பொதுச் சொத்துக்கு நாசம் விளைவிக்கமாட்டோம். போராட்டத் தின் போது கைது செய்வார்கள்; அமைதியாக நாம் செல்வோம். யாருக்கும் ஒரு சிறு சங்கடத்தைகூட - காவல்துறையினர் உள்பட - எங்களால் எந்த சங்கடமும் இருக்காது.

உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுப்பதற்குத்தான் மறியல் போராட்டம்!

எனவே, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது - அதனை நடைமுறைப்படுத்துங்கள் என்கிற அழுத்தத்தைக் கொடுப்பதற் காகத்தான் போராட்டம். ஆகவே, அந்தப் போராட்ட விளக்கத்தை செய்தால், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் சொன்ன ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு சீக்கிரம் வந்து விடும்.

கடந்த ஆண்டு செயல்முறைத் திட்டம் என்று - பெண்ண டிமைச் சின்னமான தாலி அகற்றும் நிகழ்வு - மாட்டுக்கறி உண் ணும் விழாவினை நடத்தினோம். இந்தாண்டு ஜாதி, தீண்டாமை ஒழிப்பில், அம்பேத்கர் கருத்தையும் எடுத்துச் சொன்னார்கள். ஆகவே, அதனையும் செயல்படுத்துவதற்கு, 14 ஆம் தேதியை யொட்டி, 18 ஆம் தேதி போராட்டம் நடைபெறும்.

பழங்குடித் தோழர்களின் ஆதரவு!

எனவே, பெரியார் - அம்பேத்கர் கருத்து அதிலும் நிறை வேற்றப்படும். இளைஞர்கள் ஏராளம் வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். நம்முடைய பழங்குடித் தோழர்கள் இங்கு வந்து ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். அவர்களையும் நான் பாராட்டுகிறேன், அவர்களை வரவேற்கிறேன். அவர்களும் அந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும், நம்முடைய இன இழிவைப் போக்கவேண்டும் என்று கேட்டு, கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு மகிழ்ச்சி கலந்த பாராட்டுகளைத் தெரிவித்து என்னுடைய உரையை முடித்துக் கொள்கிறேன்.

நன்றி, வணக்கம்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
அடுத்து >>
---------------------------------------------------------------------------------------------------------------

மே 01-15

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...