Friday, April 29, 2016

மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு: தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு கடும் பாதிப்பு

கோப்பு படம்

 மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டால் தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

தமிழகத்தில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் எம்பிபிஎஸ் படிப்பில் மொத்தம் 2,655 இடங்கள் இருக்கின்றன. இதில் 15 சதவீத இடங்கள் அதாவது, 398 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குச் சென்றுவிடும். (அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்கள் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன). எஞ்சிய 2,257 இடங்கள், மாநில ஒதுக்கீட்டுக்கு கிடைக்கும். இந்த இடங்கள் பிளஸ் 2 கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படும்.

தமிழகத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வரை மருத்துவ படிப்புக்கான இடங்கள் நுழைவுத்தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வந்தன. நுழைவுத்தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கருதிய தமிழக அரசு கடந்த 2007-ம் ஆண்டு நுழைவுத்தேர்வை ரத்து செய்தது. அதுமுதல் பிளஸ் 2 கட் ஆப் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தமிழகத்தில் சென்னையில் மட்டும் ஒரேயொரு அரசு பல்மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு பிடிஎஸ் படிப்புக்கு மொத்தம் 100 இடங்கள் இருக்கின்றன. இதில் 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுப் போய்விடும். எஞ்சிய 85 இடங்களை தமிழக அரசு நிரப்புகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் சேர ஆண்டுதோறும் ஏறத்தாழ 35 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பிக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது மருத்துவ படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே இந்த ஆண்டு மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் மே 9-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பம் வழங்கப்படும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அகில இந்திய அளவிலான நுழைவுத்தேர்வு என்பது சிபிஎஸ்இ பாடத்திட்ட தரத்தில் இருக்கும். இதனால், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் தேசிய அளவிலான பொது நுழைவுத்தேர்வில் வெற்றி பெறுவது மிகவும் கடினம். ஒரு விஷயத்தை பயன்பாடு சார்ந்த அடிப்படையில் படித்துவந்த சிபிஎஸ்இ மாணவர்களுடன் தேர்வுக்கு நேரடி வினா-விடை அடிப்படையில் படித்துவந்த மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் போட்டிபோடுவது என்பது இயலாத காரியம்.

இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித் துறையின் முன்னாள் துணை இயக்குநரான சிவா தமிழ்மணி கூறும்போது, “இந்தியாவில் பள்ளி மாணவர்கள் வெவ்வேறு பாடத்திட்டத்தில் படிக்கிறார்கள். எனவே, கல்வியின் தரம் நிச்சயம் ஒரே மாதிரியாக இருக்காது. இந்த சூழலில் மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தினால் அதை எப்படி ஏற்க முடியும்?. இந்த நுழைவுத்தேர்வால் சிபிஎஸ்இ மாணவர்களும், நகர்ப்புற மாணவர்களும்தான் பயன்பெறுவார்களே தவிர மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்” என்றார்.

தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரான கே.பி.ஓ. சுரேஷ் கூறும்போது, “மருத்துவப் படிப்புக்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டால் சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிக்கின்ற மாணவர்களுக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம். மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு வாய்ப்புகள் கண்டிப்பாக குறையும்” என்றார்.


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வெழுதிவிட்டு எம்பிபிஎஸ் சேரும் ஆசையில் இருக்கும் மாணவி மு.வெ.கவின்மொழி கூறும்போது, “சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கும், மாநிலப் பாடத்திட்டத்துக்கும் அதிக வேறுபாடுகள் உண்டு. தேசிய அளவிலான பொது நுழைவுத்தேர்வு என்றால் நிச்சயம் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படிதான் அமைந்திருக்கும். அகில இந்திய மருத்துவக் கல்வி நிறுவனத்தின் (எய்ம்ஸ்) நுழைவுத்தேர்வுக்கான மாதிரி விடைகளுக்கு விடையளிக்க முயன்றேன். மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த என்னால் 10 கேள்விகளில் வெறும் 2 கேள்விக்கு மட்டுமே சரியாக விடையளிக்க முடிந்தது. தற்போது திடீரென நுழைவுத்தேர்வு என்று அறிவித்தால் என்னைப் போன்ற மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவ, மாணவிகளால் எப்படி தயாராக முடியும்?. 

தனியார் பள்ளிகளில் அகில இந்திய நுழைவுத்தேர்வுக்காக 11-ம் வகுப்பிலிருந்தே பயிற்சி அளிக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அதுபோன்ற மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு எளிதாக இருக்கும் பிளஸ் 2 தேர்வில் அதிக கட் ஆப் மதிப்பெண் பெற்று எம்பிபிஎஸ் சேர்ந்துவிடலாம் என்ற கனவில் நிறைய மாணவ, மாணவிகள் உள்ளனர்.

 இந்நிலையில், மருத்துவப் படிப்புக்கு தேசிய அளவில் பொது நுழைவுத்தேர்வு என்ற அறிவிப்பு என்னைப் போன்ற கிராமப்புற மாணவ, மாணவிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்” என்றார். 

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...