- தந்தை பெரியார்
தலைவர் அவர்களே! அமைச்சர் பெருமக்கள் அவர்களே! தாய்மார்களே! பெரியோர்களே! இதுவரை அநேகப் பேரறிஞர்கள், அமைச்சர் பெருமான் அவர்கள், இன்னும் அநேகப் பெரியோர்கள் எல்லாம் நான் வெட்கப்படும்படியாக என்னைப் பெருமையாகப் பேசினார்கள்.
எனக்கு உடல் நலம் சரியாக இல்லை. அடுத்த ஆண்டு பிறந்தநாள் விழாவிற்கு நான் உயிரோடு இருப்பேனோ என்னவோ எனக்குத் தெரியாது. உயிரோடு இருந்தாலும் எனது பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு அநேகமாக இருக்காது என்றே கருதுகிறேன்.
எனது பொது வாழ்வில் நான் எவ் வளவோ பாராட்டு களுக்கு எல்லாம் ஆளாகி இருக்கிறேன்; எல்லாராலும் மரியாதைக்குரியவனாக மதிக்கப்பட்டும் இருக்கிறேன். என்றாலும், என் வாழ்நாளில் முடிவு காலம் மனக்குறைவு உள்ள காலமாக முடியப்போகிறதே என்று மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
நாம் எவ்வளவோ பாடுபட்டும் இன் றைக்கும் சூத்திரர்களாக - அதாவது பார்ப்பானுக்கு வைப்பாட்டி மக்களாக வாழவேண்டி இருக்கிறது. நம்மைச் சூத்திரன் என்று எவனோ சாலையில் போகிறவன் சொல்லுகிறான் என்று நான் சொல்லவில்லை.
சாஸ்திரத்தில் மட்டும்தான் நாம் சூத்திரர்களாக இருக்கிறோம் என்பது மட்டுமல்ல, இன்றைய இந்தியாவின் அரசியல் சட்டப்படியும் நாம் சூத்திரர் களாகத்தான் இருக்கிறோம்.
சாஸ்திரத்தில் மட்டும்தான் நாம் சூத்திரர்களாக இருக்கிறோம் என்பது மட்டுமல்ல, இன்றைய இந்தியாவின் அரசியல் சட்டப்படியும் நாம் சூத்திரர் களாகத்தான் இருக்கிறோம்.
நான் இருக்கிறேன்; என்னைச் சேர்ந்த தோழர்கள் ஏராளமாக இருக்கிறார்கள்; நமக்கு எல்லாம் மத நம்பிக்கை இல்லை; கடவுள் நம்பிக்கை இல்லை; அசல் பகுத்தறிவு வாதிகள். என்றாலும், சட்டப்படி நாமும் சூத்திரர்கள்தான். முஸ்லிம், கிறிஸ்தவன் அல்லாத அத்துணைப் பேரும், நாஸ்திகன் உள்பட சட்டப்படி இங்கு சூத்திரர்கள் தான்.
பார்ப்பான் இங்கு அடிவைத்த காலந்தொட்டு இந்த இந்திய ஆட்சி இருக்கிறவரை நம் நிலை இதே நிலைதான். இந்து என்ற சொல் இருக்கிற வரைக்கும், இந்த ஆட்சி நிலைக்கிற வரைக்கும் நாம் சூத்திரர்கள்தான். நான் பிறக்காததற்கு முன்பும் நீங்கள் எல்லாம் சூத்திரர்கள்தான்; நான் தோன்றி இவ்வளவு பாடுபட்டும் இன்றைக்கும் நீங்கள் சூத்திரர்கள்தான்; அப்படி இருக்கும்போது நான் பாடுபட் டேன், நான் பாடுபட்டேன் என்று நீங்கள் பாராட்டினால் என்ன பிரயோசனம்?
உங்களைக் கேட்கிறேன், நூற்றுக்கு 97 பேராக இருக்கிற ஒரு கூட்டம் மூன்று பேர்களின் வைப்பாட்டி மக்களாகத்தான் வாழவேண்டுமா? நமக்கு மந்திரி பதவி கிடைத்தால் போதுமா? நாம் கோடீஸ்வரர் களாகிவிட்டால் போதுமா? இது எல்லாம் இருந்தாலும் நாம் சூத்திரர்கள் தானே! எவ்வளவுக் கேவலமான நிலை - இதற்கு ஒரு பரிகாரம் தேட வேண்டாமா? இந்த ஆட்சியை ஒப்புக்கொண்டுவிட்டு நமது இழிவைப் போக்கிக் கொள்ள முடியுமா? தீவிரமாகச் சிந்தியுங்கள் தோழர்களே!
நமது முதல்வர் அவர்கள்கூட என்னை வந்து சந்தித்தார். நிலைமைகளை எல்லாம் விளக்கமாகச் சொன்னார். எப்படியும் ஆட்சியை ஒழிப்பது என்று மத்திய ஆட்சி முடிவு கொண்டு விட்டது. இந்த நிலையில் நாமே விட்டு விட்டு வந்துவிடலாமா? என்ன சொல்கிறீர்கள்? என்று கேட்டார்.
நான் சொன்னேன்: தேவை இல்லை; நீங்களாக விலக வேண்டாம்; அவர்களே விலக்கினால் விலக்கட்டும்; அப்போதாவது நம் மக்களுக்கு உணர்ச்சி வரும்; அதை நாம் சாதகமாக்கிக் கொள்ளலாம் என்று சொன்னேன். அப்படியே தி.மு.க.வை கவிழ்த்து விடுவதாகவே வைத்துக் கொள்வோம்; அவர்கள் வேறு எங்கு செல்வார்கள்? நேராக என்னிடம் வரவேண்டியவர்கள் தானே!
நம்முடைய இயக்கத்தின் முயற்சியினால் பார்ப்பனர்களைச் சகல துறைகளிலும் தலை எடுக்காமல் அழுத்திவிட்டோம்; உத்தியோகம், கல்வி, பார்ப்பனக் கலப்பே இல்லாத மந்திரி சபை இத்தனையும் நமக்குக் கிடைத்து விட்டது. ஆனால் கிடைக்க வேண்டிய மானம், மரியாதை கிடைக்கவில்லையே! உலகம் உள்ளவரை நாம் தேவடியாள் மக்களாக வாழ்ந்து தீர வேண்டியது தானா?
கடைசி முயற்சியாக எதையாவது நாம் செய்து தீர வேண்டும். நாம் சாவதாக இருந்தாலும் அந்த இன இழிவை ஏற்றுக் கொள்ளாத உணர்வோடு போராடிச் சாக வேண்டும்.
அடுத்த மாதம் சென்னையில் இன இழிவு ஒழிப்பு மாநாடு ஏற்பாடாகி இருக்கிறது. இது பதவி பிடிக்கும் மாநாடு அல்ல; நமது சூத்திர இழிவைப் போக்கிக் கொள்ளும் மாநாடு!
இந்த இந்திய ஆட்சி இருக்கிறவரை நாம் சூத்திரர்கள் தான் - இதை மனதில் நன்றாக வைத்துக் கொள்ளுங்கள். இவனைத் தவிர வேறு எவன் ஆண்டாலும் நம்மைச் சூத்திரன் என்று சொல்லமாட்டான். நீக்ரோக்கள் ஆண்டாலும் நம்மைத் தேவடியாள் மக்கள் என்று சொல்லத் துணிய மாட்டார்கள்.
இந்து என்ற பெயருள்ள மதமே இருக்கக் கூடாது; அந்தப் பெயரே இருக்கக்கூடாது. இந்து என்ற மதம் இருப்பதால் தானே நாம் இந்துகள். இந்துக்களாக நாம் இருப்பதால்தானே நாம் சூத்திரர்கள். அதற்கு உத்திரவாதம் இந்த ஆட்சி கொடுக்க வேண்டும். இல்லை என்றால் இந்தியா என்ற அமைப்பில் இருந்து நாம் வெட்டிக்கொண்டுவிட வேண்டியது தான் நமது இன இழிவு ஒழிப்புக்குப் பரிகாரம் அதுதான்.
பிரிவினை என்றால் ஏழாண்டுச் தண்டனை என்கிறான். எனக்கும், அண்ணா வுக்கும் பயந்து கொண்டுதான் இந்தச் சட்டத்தைக்கொண்டு வந்து இருக்கிறான்.
சட்டத்திற்குப் பயந்துகொண்டு நாம் தேவடியாள் மக்களாக இருக்க வேண்டுமா? நமக்கு மானம் பெரிதா? உயிர் பெரிதா? என்பதை முடிவெடுத்துக் கொள்ளவேண்டும். சட்டப்படி வைப்பாட்டி மக்களாக வாழ் வதைவிட, சட்டத்தை மீறி உயிரை இழப்பதாக இருந்தாலும், அதற்கு நாம் தயாராக இருக்கவேண்டும்.
இந்த மாநாடு ஒரு முக்கியமான மாநாடு. இரண்டில் ஒன்று பார்க்கிற மாநாடு. அதனால் தான் சொன்னேன், அடுத்த ஆண்டு பிறந்த நாளில் ஜெயிலில் இருப்பேனோ என்னவோ என்று சாதாரணமாகச் சாவதைவிட ஜெயிலில் செத்தால் நான் ``மோட்சம்‘’ அடைவேன்.
மோட்சம் என்றால் இன்பம் அடைவேன் என்ற கருத்தில் கூறுகின்றேன்.
சமுதாய இழிவு ஒழியவேண்டும் என்ற உணர்வின் அடையாளம் ஒவ்வொருவரிடமும் இருக்கவேண்டும். அந்த உணர்வும், கொள்கையும் நம்மிடமே மட்டும்தான் உள்ளது. வேறு எந்தக் கட்சிக்காரனுக்கு இந்தக் கொள்கை இருக்கிறது?
காமராசர் பதவி கிடைக்கவில்லை என்றதும், நேராகப் பார்ப்பான் வீட்டுக்குத் தேடிச்சென்று விட்டாரே!
கம்யூனிஸ்டுக்குத்தான் கொள்கை உண்டா? உலகத்திலேயே கொள்கை இல்லாத கட்சி ஒன்று உண்டு என்றால் அது இந்த நாட்டுக் கம்யூனிஸ்டு கட்சிதான். தமிழரசுக் கழகத்துக்குக் கொள்கை - எவனாவது வாய்ப்பு உள்ளவனிடம் ஓட்டிக் கொண்டு இருப்பதுதான்.
கொள்கை இருக்கிறது என்றால் அது நம்மிடம் தான் இருக்கிறது. மற்றவனுக்கு எல்லாப்பதவியும் சொகுசும்தான் முக்கியம்.
கொள்கை இருக்கிறது என்றால் அது நம்மிடம் தான் இருக்கிறது. மற்றவனுக்கு எல்லாப்பதவியும் சொகுசும்தான் முக்கியம்.
ஆகவே தோழர்களே! சென்னை மாநாட்டிலே ஒவ்வொரு வரும் கலந்து கொள்வதென முடிவு எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மாநாட்டைப் பற்றி எங்குப் பார்த்தாலும் பிரச்சாரம் செய்யுங்கள் நம்முடைய சக்தியை எதிரிகள் தெரிந்து கொள்கிற அளவுக்கு மாநாட்டில் கூட்டம் இருக்கவேண்டும்.
இந்த இந்திய ஆட்சியை ஒழிப்பது என்பது ஒன்றும் முடியாத காரியமல்ல. எல்லா மாநிலங்களிலும் இந்த அம்மையாருக்கு எதிர்ப்புக் கிளம்பி விட்டது. இந்த அம் மையார் எதிலும் பார்ப்பன உணர்ச்சியோடு நடந்து கொள்கிறார். நீதிபதிகளை எல்லாம் பார்ப்பனராகவே போடுகிறார்.
இதைப் பார்த்தெல்லாம் நமக்கு உணர்ச்சி ஏற்பட வேண்டும். நமது இளை ஞர்கள் எல்லாம் துணியவேண்டும்.
வடநாட்டுக்காரன் எங்கெல்லாம் கடை வைத்து இருக் கிறானோ, அங்கெல்லாம் சென்று மறியல் செய்யவேண்டும். அவன் ஆதிக்கம் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் சென்று நமது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.
வீட்டில் உள்ள பசங்களை எல்லாம் விரட்டுங்கள்! பெண்கள் எல்லாம் பெரும் பகுதி முன் வாருங்கள்! நமது இன இழிவை ஒழித்துக் கொள்வதைவிட நமக்கு வேறு மானப் பிரச்சினை கிடையாது.
தி.மு.க.வுக்கும், இந்தக் கிளர்ச்சிக்கும் சம்பந்தம் கிடையாது. எப்பொழுது சம்பந்தம் என்றால் அவர்களாகப் பார்த்து இந்த ஆட்சியை ஒழிக்கிற அன்றைக்குத் தான் சம்பந்தம்.
நாடு பிரியவேண்டும் என்ற உணர்ச்சி தமிழகத்தில்தான் தொடக்கம் என்று சொல் லலாமே தவிர, ஒரே வருடத்தில் இந்தியா முழுவதும் நெருப்புப் பிடித்துவிடும்.
மாநாடு வெற்றிகரமாக முடியவேண்டும். மாநாடு முடிந்த பிறகு ஒரு லட்ச ரூபாய் திரட்டி கிளர்ச்சிக்குத் தயாராக வேண்டும். மாண்புமிகு அன்பில் (தர்மலிங்கம்) அவர்கள் பத்தாயிரம் ரூபாய் திரட்டித் தரவேண்டும்.
பெண்கள் ஆயிரக்கணக்கில் சிறைக்குப் போகவேண்டும். சிறையே தாங்கக்கூடாது.
நம்முடைய முயற்சியில் கட்டாயம் வெற்றி பெறுவோம். மான - அவமானப் போராட்டத்தில் தோல்வி கண்டால் தான் என்ன குறைவு? தோல்வி காண வழியே இல்லை. வெற்றி காணும் வரை நமது போராட்டத்தைத் தொடர வேண்டும்.
நீங்கள் வந்து அந்த மாநாட்டில் காட்டுகிற உற்சாகம்தான் நமது வெற்றிக்கு அடிகோலாக இருக்கவேண்டும்.
மறுபடியும் சொல்கிறேன், வடநாட்டுக்காரன் கடைகளுக்கு எல்லாம் சென்று உனக்கு இங்கு என்ன வேலை? என்று மறியல் செய்யவேண்டும். இன்னும் உங்களுக்குத் தெரிகிற வழிமுறை களை எல்லாம் வந்து தாராளமாகக் கூறுங்கள். கொடுக்கிற பலியில் முதல் பலி நானாகவே இருக்கட்டும். முன்னேற்றக் கழகத்துக் காரர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருக்கக் கேட்டுக் கொள்கிறேன்.
இது நமது இனத்தின் மானத்தை மீட்கும் கடைசி முயற்சி! கடைசி முயற்சி!! கடைசி முயற்சி!!! வணக்கம்.
4.11.1973 அன்று திருச்சியில் தந்தை பெரியார் ஆற்றிய உரை
(`விடுதலை, 5.11.1973)
No comments:
Post a Comment