மாநகராட்சியும், அரசும் செய்யாததை கழகம் செய்தது!
அமைந்தகரையில் கழகத் தோழர்களின் தூயத் தூய்மைப்பணிகள்!
நன்றிப் பெருக்கும்! மக்களின் வாழ்த்தும்!!
அமைந்தகரையில் கழகத் தோழர்களின் தூயத் தூய்மைப்பணிகள்!
நன்றிப் பெருக்கும்! மக்களின் வாழ்த்தும்!!
சென்னை. டிச. 15_ கடந்த 1_ஆம் தேதியிலிருந்து அடுப்பு பற்ற வைக்காத குடும்பங்கள் ஏராளமாக இங்கு இருக்கிறார்கள் என்று அமைந்தகரை கூவம் நதிக்கரையோரம் உள்ள மஞ்சக்கொல்லை தெருவிலி ருக்கும் மக்கள் வேதனையோடு துப்புரவு பணி செய்ய நம் இயக்க தோழர்கள் சென்றிருந்தபோது கூறினர்.
தமிழர் தலைவரின் பிறந்த நாளான டிசம்பர் 2ஆம் தேதி தொடங்கிய இந்த வெள்ள நிவாரணப் பணிகள் மக்களின் தேவை கருதி அடுத்தடுத்த நிலைகளுக்கு சென்று கொண்டேயிருக்கின்றன. முதலில் உடனடித் தேவையான உணவு கொடுக்கப்பட்டது. இதில் பெரியார் திடல், ஆவடி, மதுரவாயல் ஆகிய பகுதி களையும் சேர்த்து ஏறக்குறைய 60,000 மக்களுக்கு உணவு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து 9ஆம் தேதி-யிலிருந்து தாம்பரம் பொழிச்சலூர்,
மல்லிகா நகர், குரோம்பேட்டை, அமைந்தகரை ஆகிய பகுதிகளில் மருத்துவ முகாம் அமைத்து மக்களுக்கு சிகிச்சையளிக்கும் பணிகள் தொடர்ந்து வருகின்றன. அதே நேரத்தில் மழை வெள்ளத்தால் குப்பையும், கூளமும், சாக்கடையோடு கலந்து சாலைகளே சகதி யாக மாறிப்போனதால் மக்கள் சொல்லொண்ணா மன உளச்சல்களுக்கு ஆளாகியுள்ளதால் எதையும் செய்யும் மனத்திண்மை பெற்ற திராவிடக் கழகத் தோழர்களும் தன்னார்வத் தொண்டர்களும் இந்த துப்புரவு பணியிலும் இணைந்து ஈடுபட்டனர்.
கூவம் நதிக்கரை ஓரம்!
முதலில் கூவம் நதிக்கரையோரம் உள்ள அமைந்த கரையில் இப்பணியை தொடங்கலாம் என்று முடிவு செய்து முதல்தளம் முழுவதும் மூழ்கிய பகுதியான மஞ்சக்கொல்லை தெருவில் 13.12.2015 அன்று காலை 7 மணிக்கு 20 பேர் அடங்கிய குழு களமிறங்கியது.
மக்கள் மாநகராட்சி மீதும், அரசு மீதும் கடுமை யான கோபத்தில் இருப்பதை நாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குப் போகும் போதெல் லாம் காண முடிந்தது. மஞ்சக் கொல்லை தெருவில் நசநசத்து கிடந்த குப்பைகள் மிகுந்த துர்நாற்றத்தை பரப்பிக் கொண்டிருந்தன. பல வீடுகளில் சாக்கடை அடைத்துக் கொண்டு இயற்கை உபாதைகளைக்கூட வெளியேற்ற முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
அந்தத் தெருவில் வசிக்கும் பெயிண்டிங் பணி செய்யும் கென்னடி என்பவர், டிசம்பர் 2ஆம் தேதி எந்தவித முன்னறிவிப்பின்றி தண்ணீரை திறந்து விட்டனர், இந்த தெருவில் ஏழடி உயரம் வரை தண் ணீர் வந்து விட்டது; எங்களுடைய வீடுகளை விட்டு வெளியேறி சொந்த பந்தங்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் தங்கினோம். அங்கேயும் தண்ணீர் வந்து விட்டதாலும் அங்கிருந்தும் வெளியேறினோம், பள்ளிக்கூடங்கள் நிறைந்து விட்டதால், தெரியாத வர்கள் வீட்டில் எல்லாம் தங்கினோம். அந்த நேரத் தில் அரசுத்தரப்பில் இருந்து யாரும் வரவில்லை. தொண்டு நிறுவனங்கள், வசதி வாய்ப்பு உள்ளவர்கள் உதவி செய்தனர் என்று தன்னிரக்கத்தோடு கூறிவிட்டு, எங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கு 5000 ரூபாய் போதுமானதல்ல என்று வேதனையை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
இப்படி பலரும் நம்மிடம் புலம்பினார்கள். கென் னடி பாதிரியாராகவும் இருந்து வருகிறார். மக்களின் அனைத்து துயரங்களையும் கேட்டுக் கொண்ட தோழர்கள் முதலில் தேங்கி நிற்கும் சாக்கடை நீர் கூவம் நதியில் கலக்கும் வண்ணம் ஏற்கனவே இருந்து தூர்ந்து போன சிறு கால்வாயை தூர்வாரினர். அதைதொடர்ந்து சாலையோரம் நாற்றமடித்து இருந்த குப்பையை பாலிதீன் பைகளில் சேகரித்து மாநகராட்சி வண்டியை வரவழைத்து அவற்றை எடுத்துச் சென்று உரிய இடத்தில் கொட்டிவிட்டுத் திரும்பினர்.
மாநகராட்சி செய்யாததை...
மாநகராட்சி செய்யாத பணியை, காசாவது கொடுக் கிறோம் செய்யுங்கள் என்று மக்கள் சொல்லியும், மாநகராட்சி செய்யாத பணியை தேர்தலின் போது மட்டும் வந்ததாக மக்களால் சொல்லப்படும் 102ஆம் வார்டின் அதிமுக கவுன்சிலர் ஜீவா கவனம் செலுத் தாத அந்தப்பணியை பெரியார் திடலில் இருந்தும், வேறுவேறு பகுதிகளில் இருந்தும் வந்திறங்கும் தன்னார்வ தொண்டர்கள் பொறுப்போடு அம்மக் களுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டே பணியைச் செய்ததால், கென்னடி போன்ற சிலர் வரிந்து கட்டிக் கொண்டு நம்மோடு களத்தில் இறங்கி வேலை செய்தனர். குப்பை பைகள் வேகவேகமாக இடம் பெயர்ந்தன. இப்பணிகளை ஆச்சரியத்தோடு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் ஆளாளுக்கு வீடுகளில் தேனீர் தயாரித்தும் பிஸ்கட்டுகளை எடுத்து வந்தும் குடியுங்கள்! குடியுங்கள்! என்று அன்போடு வேண்டுகோள் வைத்தனர்.
12ஆம் தேதியிலிருந்து அப்பகுதி மக்களுக்கு அரசு தரப்பிலிருந்து போர்வை கொடுத்து வருகிறார்கள். பெண்கள் நமது தோழர்களோடு சரளமாக பேசத் தொடங்கிய பிறகு, மாநகராட்சி தங்களை எப்படி யெல்லாம் கேட்பாரற்று விட்டுவிட்டது என்பதைச் சொல்லி தங்கள் மனதிலிருக்கும் பாரத்தை இறக்கி வைத்தனர். இவர் இதையெல்லாம் சொல்லியபோது சொல்ல வேண்டாம் என்று அச்சத்துடன் பேசியவர் களைத் சிலர் தடுத்தனர். அவர்களோ துணிச்சலுடன் என்ன இப்போ என்று தடுத்தவர்களை மடக்கிவிட்டு தொடர்ந்து தம்முடைய வேதனைகளை நம்மிடம் கூறினர்.
குப்பையையெல்லாம் இடம் மாற்றிய பிறகு அந்த இடங்களில் பிளீச்சிங் பவுடர் தூவிவிடப்பட்டது. மக்கள் மிகுந்த நன்றிப்பெருக்கோடு நம் தோழர்களை வழியனுப்பி வைத்தனர்.
அதன் பிறகு மஞ்சக் கொல்லையை விட மிகமிக மோசமாக இருந்த கதிரவன் காலனிக்குச் சென்றனர். நம் தோழர்களின் குழு, அங்கு சாலையே சாக்கடை கலந்த சகதியாக கணுக்கால் அளவு படர்ந்து இருந்தது. பார்ப்பதற்கு அருவருப்பாக இருந்தது. நம் தோழர்கள் கொஞ்சமும் சளைக்கவில்லை. அதற்குரிய உபகரணங் களை கைகளிலும் கால்களிலும் அணிந்திருந்த தோழர்கள் களத்தில் உற்சாகமாக இறங்கினர்.
மக்களும் எதற்கெடுத்தாலும் அரசை எதிர்பார்த்து பார்த்து சுய முயற்சியற்றுப் போயிருந்தனர். வெள்ளம் ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து பலரும் இன்னமும் மீளாமலேயே இருந்தனர். நகராட்சி வராதா? அரசு வராதா? வேறு யாராவது வரமாட்டார்களா? என்று ஏக்கக்தோடு எதிர்பார்த்து காத்திருக்கத்தான் முடிந்ததே தவிர யார் வந்தாலும் வராவிட்டாலும் முடிந்தவரையில் நாம் இருக்கும் இடத்தை நாம் தூய்மை செய்து கொள்வோம் என்று சிந்திக்கவும் திராணியற்றுப்போயிருந்தனர். அந்த தன்னம்பிக்கை இழப்பை யாராவது தூண்டி விட்டால் அவர்கள் வீறுகொண்டு எழுந்து விடுவார்கள் என்பதை மஞ்சக்கொல்லை தெருவைப் போல பலமடங்கு மக்களின் தன்னிரக்கம் விடைபெற்று தன்னம்பிக்கை கொழுந்துவிட்டு எரிந்து, ச்சே! எங்கிருந்தோ வந்து செய்யறாங்க! நாம் சும்மா இருப்பதா? என்று ஆண்கள், பெண்கள் என்று தோழர்களுடன் களத்தில் இறங்கி விட்டனர்.
சகதியும் சாக்கடையும்
கால்வாயில் தேங்கியிருந்த சகதியும், சாக்கடையும் அள்ளி சின்னச்சின்ன வாளிகளில் ஊற்றப்பட்டு, அமைந்தகரை கழகத்தோழர் தளபதி பாண்டியனால் ஏற்பாடு செய்யப்பட்ட தள்ளு வண்டிகளில் கொட்டி வெகு தூரம் சென்று நம் தோழர்களும் கொட்டி விட்டு வந்தனர். தோழர்களும், தன்னார்வத் தொண் டர்களுக்கும் பழக்கம் இல்லாத பணியாதலால் சிலருக்கு கைகளில், கால்களில் காயம்பட்டு இரத்தம் வந்தது. அவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக் கப்பட்டது. மக்களின் முகங்களில் தெரிந்த நம்பிக்கை கீற்று தோழர்களின் உற்சாகத்தை பலமடங்காக்கின. இந்த மக்கள் தொண்டில் நமக்கு கிடைத்த உற்சா கத்தால் பல மணி நேரத்தில் செய்து முடிக்க வேண்டிய பணியை சில மணி நேரத்திலேயே முடிக்க வைத்து விட்டது. இது பெரும்பாலும் இஸ்லாமியர்கள் குடியி ருக்கும் பகுதி.
பணிநிமித்தமாக லக்னோ சென்று திரும்பியிருந்த புருசோத்தமராஜ், நம்மோடு களத்தில் இறங்கி பணிபுரிந்து கொண்டே, மாநகராட்சியின் மீதும், அரசின் மீதும் தனக்குள்ள காட்டத்தை, ஓட்டு போட்டவன் நடுத்தெருவில்? ஓட்டு வங்கியவன் நான் கடுக்கு மாளிகையில் என்று சொல்லி தமது கோபத்தை காட்டிக்கொண்டார். இவர் மருத்து விற்பனை பிரதிநிதியாக பணிபுரிபவர். நம்மோடு பணியாற்றிய ஆட்டோ ஓட்டுகிற சலீம் பாஷா நன்றிப் பெருக்கு டன், ஒரு வாரமே இப்படியேதான் இருந்தது. வேற யாரும் வரலே. நீங்கதான் வந்தீங்க என்று கண்ணீ ருடன் வாழ்த்தினார்.
இதற்கிடையில் அங்கு வந்த கார்ப்பரேசன் மேஸ் திரியை மக்கள் கேள்விக் கனைகளால் துளைக்க அவர் களோ, உங்களுக்கு எவ்வளவு செஞ்சாலும் போதாது என்று கோபத்தோடு கூறிவிட்டு போய்விட்டார், அப்படி என்ன செய்து விட்டீர்கள் என்றனர் மக்கள்.
கதிரவன் காலனியில் சாக்கடை அள்ளும் பணி நடந்து கொண்டிருக்க, தோழர்கள் சிலர் ஒவ்வொரு வருக்கும் முன்னால் உள்ள குப்பைகளை பாலிதின் பைகளில் சேகரித்து தெருவோரங்களில் வைத்தனர். மக்களும் வீட்டினுள் உள்ள குப்பைகளையும் சேகரித்து வந்து அதில் போட்டனர்.
பிளீச்சிங் பவுடர் தூவிய பிறகு அங்குள்ள மக்களுக்கு தனியாக தேவையான அளவிற்கு பிளீச்சிங் பவுடர் கொடுத்து விட்டு அவர்களின் ரொம்ப நன்றிங்க! ரொம்ப நன்றிங்க! என்று நமக்கு அளித்த நெஞ்சம் நிறைந்த நன்றிகளை பெற்றுக் கொண்டு திரும்புகிற வழியில் இருந்த குப்பைகளையெல்லாம் பைகளில் சேகரித்துத் கொண்டே வந்ததை பார்த்த மக்கள் பலரும் பாராட்டினர். குறிப்பாக பள்ளிக்களுக்கே போகாத ரீட்டா என்ற பெண் தோழர்களின் பணியைப் பாராட்டி ஆங்கிலத்தில் பேசி நம்மை அசத்தினார். எப்படி வர்றாங்க பாரு! நம்ம வீட்டு பசங்கக் கூட இந்த மாதிரி செய்ய மாட்டாங்க என்றெல்லாம் கூறி தோழர்களின் பணியை வியந்து போற்றினர்.
பெரியார் பற்றி குமணன் சொன்னவை
முன்னதாக தூய்மை செய்த மஞ்சக்கொல்லைத் தெருவில் நமது பணிகளை பாராட்டி பேசிய குமணன் என்பவர் 5 ஆண்டுகளில் இங்கு கவுன்சிலர் ஒரே ஒரு முறைதான் வந்தார் என்ற வழக்கமான பல்லவியைப் பாடிவிட்டு, பெரியாரைப் பற்றியும், அவர்தம் புத்தகங்களைப் பற்றியும், முரளீஸ்கபே போராட்டம் பற்றியும், பார்ப்பனர், பார்ப்பனரல் லாதாரின் போராட்டங்கள் பற்றியும் பேசி நம்மை அசத்தினர்.
இந்தப் துப்புரவுப் பணியில் பெரியார் திடல் சுரேஷ், உடுமலை வடிவேல், தீபிகா, இசையின்பன், பசும்பொன், கலைமதி, சீர்த்தி (மறைந்த இறையன், திருமகள் செய்து கொண்டிருந்த கழகப் பணிகளின் தொடர்ச்சியானது போல இசை அண்ணன் குடும்பத் தினரும் இந்த துப்புரவுப் பணியில் தங்களை ஈடுபடுத் திக்கொண்டனர்) ரோஸ், பழனிகுமார் ரேவந்த்குமார், தமீம், சரண்யா, தாமு, சிவா, பிரசாந்த், சல்மா, பிரேம்ஷா, விஜய், மோகன் ஆகியோர் அடங்கிய குழுவை பிரின்சு என்னாரெஸ் பெரியார் ஒருங்கி ணைத்தும் அமைந்தகரை பகுதியைச் சேர்ந்தவர். தளபதி பாண்டியன் வழிகாட்டியும் சிறப்பித்தனர்.
மேற்பட்ட 20 பேரடங்கிய குழுவோடு ஒன்றி ணைந்து மஞ்சள் கொல்லை பாதிரியார் கென்னடி, மதன், மோகன், தண்டபாணி ஆகியோரும் கதிரவன் காலனியைச் சேர்ந்த சலீம்பாஷா, தேன்மொழி, மசூதா, தேவி, குமார், வினோத், சசி, ஹசீனா, பர் ஹானா, இலியாஸ், போன்றோரும் பணி செய்தனர். மேற்கண்ட பணிகளுக்கு தளபதி பாண்டியனின் இல்லத்தினர் மிகவும் உறுதுணையாக இருந்தனர்.
பணிகள் தொடரும்
மக்கள் மனதில் தன்னம்பிக்கையை விதைக்கும் இந்தத் தூய்மை பணி மற்ற நிவாரணப் பணிகளோடு மக்களுக்கு தேவை இருக்கிற வரையிலும் தொடரும்.
இந்த துப்புரவுப் பணியில் நாம் ஈடுபட்டிருந்ததை முகநூலில் பார்த்த தோழர்கள் பலர் நம்மிடம் எங்களை ஏன் கூட்டிக்கொண்டு போகவில்லை என் றும், அடுத்தமுறை நாங்களும் இந்தப்பணிக்கு வருவோம் என்று உரிமையோடு கூறியது நம் கழகத்தின் மனித நேயப் பணிக்கு கட்டியம் கூறியது போல இருந்தது.
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
- கடலூர் மாவட்டத்தில் 3ஆம் கட்டமாக மருத்துவ முகாம்! இந்திரா நகரில் பெரியார் மருத்துவ குழுமம் நடத்தியது! 600க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்!
- தென் சென்னை மாவட்ட கழகத் துணைத் தலைவரின் மனித நேய உதவி
- கடலூரில் மக்களுக்கு ஒசூர் நகர கழகம் சார்பில் வெள்ள நிவாரணம்
- புதுச்சேரியில் பகுத்தறிவாளர் கழகக் கருத்தரங்கம்
- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் நீரிழிவு நோய் குறித்த சிறப்புக் கருத்தரங்கம்
No comments:
Post a Comment