Thursday, October 22, 2015

நவராத்திரியும் - ஒழுக்கக்கேடும்!


 
நவராத்திரி என்ற பண்டிகை இந்து மதத்தின் சார்பில் ஒன்பது நாள்கள் கொண்டாடப்படுகின்றது. மூன்று நாள் சக்திக்கு - அதாவது பார்வதி தேவிக்கு. மூன்று நாள்கள் லட்சுமி தேவிக்கு. மூன்று நாள்கள் சரசுவதி தேவிக்கு என்று கோட்டா ஒதுக்கப்பட்டு பூஜை கொண்டாடப்படுகிறது.
பார்வதிதேவி - சக்தி; லட்சுமி தேவி - செல்வம்; சரசுவதி தேவி - கல்விக்கு என்று இந்து மதத்தில் இலாகா பிரித்தும் வைத்துள்ளனர்.
இந்தக் கடவுள் உருவங்கள் எல்லாம் ரவிவர்மா, கொண்டைய ராஜூ போன்ற ஓவியர்களால் தீட்டிக் கொடுக்கப்பட்டவை என்பது ஊரறிந்த இரகசியம். இந்தப் படங்களுக்குத்தான் இந்தத் தடபுடல் தெருப் புழுதிக் கூத்துகள்.
வைதிகர்கள் சொல்லுவதுபடியே வைத்துக் கொண் டாலும் நாட்டு மக்களின் சக்தி - செல்வம் - கல்வி எந்தத் தரத்தில் நிலையில் இருக்கிறது என்பதற்கு அறிவு நாணயமான முறையில் பதில் சொல்ல முடியுமா?
சிவனின் மனைவி பார்வதி என்றும், விஷ்ணுவின் மனைவி இலட்சுமி என்றும், பிரம்மாவின் மனைவி சரசுவதி என்றும், உருவமே இல்லாத கடவுளுக்குக் குடும்பங்களை ஏற்பாடு செய்து வைத்துள்ளனர்.
இப்படியெல்லாம் உருவங்களை உருவாக்கி வைத் தால்தான் - அவற்றை வைத்துப் பிழைப்பு நடத்த முடியும் - கோவில் கட்ட முடியும் - கும்பாபிஷேகமும் செய்ய முடியும் - புரோகிதப் பார்ப்பனச் சுரண்டலும் ஓகோ என்றும் நடக்க முடியும்!
இந்தக் கடவுள்களைத்தான் கற்பித்தார்களே - அதையாவது ஒழுக்கமாக அறிவுப்பூர்வமாகக் கற்பித் தார்களா என்றால், அதுதான் இல்லை. பார்ப்பனியத்தால் படைக்கப்பட்ட இந்தக் கடவுள்கள் - அவர்களைப் போலவே ஒழுக்கமின்றி ஆபாசமாகவே கற்பிதம் செய்யப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டாக சரசுவதிக்குத் தகப்பனார் யார் என்றால், பிரம்மாதான் - அந்த சரசுவதிக்குப் புருஷன் யார் என்றால் அதுவும் பிரம்மாதான். அதாவது மகளையே மனைவியாகக் கொண்ட யோக்கியரான பிரம்மாதான் படைப்புக் கடவுளாம்.
இவனுடைய முகத்திலிருந்துதான் பிராமணன் பிறந்தானாம். இவன் தோளிலிருந்துதான் சத்திரியன் பிறந்தானாம் - இடுப்பிலிருந்து வைசியன் பிறந்தானாம்; பாதங்களிலிருந்து சூத்திரன் பிறந்தானாம்.
ஆண் கடவுளின் இந்த உறுப்புகளிலிருந்து பிள்ளை பிறக்க முடியுமா? என்பதைக் கடுகளவு புத்தியுள்ளவர்கள் கூடக் கேள்வி கேட்பார்கள். ஆனால், பார்ப்பனர்களோ, பக்தர்களோ இதுபோன்ற புத்திசாலித்தனமான கேள்வியைக் கேட்கமாட்டார்கள்.
பக்தி என்றாலே நம்பு - கேள்வி கேட்காதே என்பதுதானே! பக்தி வந்தால் புத்தி போகும்; புத்தி வந்தால் பக்தி போகும் என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னது சாதாரணமானதா?
இந்த நவராத்திரி பண்டிகை ஒன்பது நாட்கள் நடக்கின்றது அல்லவா - இந்த ஒன்பது நாள்களிலும் எத்தகைய ஒழுக்கக்கேடுகள் நடக்கின்றன - ஆண் - பெண் உறவுகள் எந்தக் கெதிக்கு ஆளாகின்றன என்று விடுதலை சொன்னால், அதற்கு வேறு பொருள் கொடுப்பார்கள். ஆனால், படம் பிடித்துக் காட்டியது தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏடாயிற்றே!
இதோ அந்த ஏடு வெளியிட்டுள்ளதைக் கவனமாகப் படியுங்கள்.
மும்பையைக் கதிகலங்க வைக்கும் இந்தக் கொண்டாட்டங்கள் மாலையில் தொடங்கி நள்ளிரவில் களைகட்டும். இரவில் 50 லட்சம் பேர் பங்கேற்று ஆட்டம், பாட்டத்தில் ஈடுபடுவார்கள். இதில் 90 சதவிகிதம் பேர் இருபால் இளைஞர்கள்தாம். இளம்பெண்களைப் பெரும்பாலும் இரவு நேரங்களில் வெளியில் அனுமதிப் பதில்லை. ஆனால், நவராத்திரி கொண்டாடப்படும் இந்த ஒன்பது நாள்களும் இதற்கு விதிவிலக்கு.
இந்தக் கொண்டாட்டங்களின்போது முன்பின் தெரியாத இருபால் இளைஞர்கள் அடிக்கும் கூத்துக்கு அளவேயில்லை. அது எல்லையைத் தாண்டி உடலுறவு வரை சென்று விடுகிறது.
தவிர, இதுதான் சந்தர்ப்பம் என்று மும்பையில் விபச்சாரத் தொழிலில் ஈடுபடும் பெண்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்தத் தசரா பண்டிகைக்குப் பின் திருமணமாகாத பெண்கள் கர்ப்பம் அடைவது அதிகரிக்கிறது! எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.
மும்பை மகப்பேறு இயல் அமைப்பு நடத்திய ஆய்வில் இத்தகைய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி யுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இந்த சதவிகிதம் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.
பெண்களே மருந்துக் கடைகளுக்குச் சென்று கர்ப்பத்தைத் தடுக்கும் காண்டம்  வாங்கு கின்றனர். இந்தக் காலகட்டத்தில் காண்டம் விற்பனை 50 சதவிகிதம் அளவுக்கு அதிகரிக்கிறதாம்.
தி டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற ஆங்கில நாளேடும், தமிழில் தினகரனும் இந்தச் செய்திகளை வெளியிட்டுள்ளன. இப்பொழுது சொல்லுங்கள் - இந்தப் பண்டிகைகளும், பக்தியும் ஆரோக்கியமானவைதானா?
மக்களுக்கு நன்மை பயக்கக் கூடியவைதானா?

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...