Monday, October 26, 2015

உள்நோக்கம் கற்பிக்கும் பாசிச ஓநாய்கள்!


அகாடமி விருதினை எழுத்தாளர்கள் திருப்பிக் கொடுத்ததுபற்றிய சர்ச்சைகள் நாட்டில் வெடித்துக் கிளம்பியுள்ளன. தொலைக்காட்சிகளில் விவாதப் போர்கள் அமர்க்களப்படுகின்றன.
40க்கும் மேற்பட்டவர்கள் விருதினைத் திருப்பிக் கொடுத்துள்ளனர். இதற்கான காரணங்கள் வெளிப்படை   - மத்தியில் பிஜேபி ஆட்சிக்கு வந்தபிறகு மதவாத சக்திகள் மிகவும் ஆட்டம் போட ஆரம்பித்து விட்டன.
மும்பையில் நரேந்திர தபோல்கர் என்ற சமூக சீர்திருத்தவாதி, மூத்த பொதுவுடைமைக் கட்சிக்காரரும், சீர்திருத்தவாதியுமான கோவிந்த பன்ஸாரே, அதே போல கருநாடக மாநிலத்தில் சமூக சீர்திருத்த  எழுத்தாளர் கல்புர்கி ஆகியோர் படுகொலை செய்யப் பட்டுள்ளனர் - இந்தக் கொலைகளின் பின்னணியில் இருப்பவர்கள் இந்து மதவாத வெறி சக்திகள்! பொதுவாக இந்தக் கூட்டம் பல்வேறு வகைகளில் பெயர்களைச் சூட்டிக் கொண்டு திரிபவர்கள் நெருக்கிக் கேட்டால் பிஜேபியினர் எங்களுக்குச் சம்பந்தமே இல்லை என்பார்கள்;
ஆர்.எஸ்.எஸ்.காரர்களைக் கேட்டால் எங்களுக்குச் சம்பந்தமே இல்லை என்பார்கள்; ஆனால் அடிப்படையில் இவர்கள் எல்லாம் யார் என்றால் பச்சைப் பாசிச இந்துத்துவ வாதிகள் என்பதை மறுக்க முடியாது.
சீர்திருத்தவாதிகளையும், எழுத்தாளர்களையும் படுகொலை செய்யும் போக்கு மத்தியில் பிஜேபி அதி காரத்துக்கு வந்த பிறகு திமிர் பிடித்துக் கிளம்பியுள்ளது.
கலாச்சாரக் காவலர்களாக மாறி, சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு திரிகிறார்கள். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு பாடகர் இங்கே வந்தால் அதனைத் தடுத்து நிறுத்துகிறார்கள். நூல் வெளியீட்டு விழாவில் புகுந்து கருப்புமையை முகத்தில் வீசுகிறார்கள்; மாட்டுக் கறிக்கு வக்காலத்து வாங்கிப் பேசினால் சட்டமன்றத்திலேயே தாக்குகிறார்கள்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தைச் சேர்ந்தவர் களுக்கும், இந்தியக் கிரிக்கெட் வாரியத்திற்கும் பேச்சு வார்த்தை நடைபெற்றால் பலாத்காரமாக கதவை உடைத்துக் கொண்டு போய்த் தாக்குகிறார்கள். இப்படி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் அராஜகம்  தலைகொழுத்து நிற்கும் போது, மனித உரிமைகளுக்குப் பங்கம் வினையும்போது எழுத்தா ளர்கள் - சாகித்ய அகாடமி விருது பெற்றவர்கள், தங்களுக்குத் தோன்றிய வகையில் தங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் சாகித்ய அகாடமி விருதினைத் திருப்பிக் கொடுத்துள்ளனர்.
ஒரு நாகரிகமான அரசு நடக்குமேயானால் இதற்கான காரணத்தை ஆரோக்கியமாக அணுகி இருக்கும்; அநாகரிகமான அரசாக இருந்தால், இதற்கு உள்நோக்கம் கற்பிக்கும் - அதனைத்தான் ஆடசியில் உள்ளவர்களும், ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட வலதுசாரி களும் இப்பொழுது செய்து கொண்டிருக்கிர்கள்.
சாகித்ய அகாடமி விருதுகளைத் திருப்பி அனுப்பு பவர்கள் எல்லாம் யார் தெரியுமா? இடதுசாரிகள் - பிஜேபிக்கு எதிரானவர்கள் - மோடி ஆட்சிக்கு வரக்கூடாது என்று பிரச்சாரம் செய்தவர்கள் என்று குற்றஞ்சாட்டுவது - பிரச்சினையைத் திசை திருப்பு வதாகும்.
நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தியபோது விருதினை ஏன் திருப்பிக் கொடுக்கவில்லை? ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, ஏன் இது மாதிரி நடந்து கொள்ளவில்லை? என்று கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர். இதன் மூலம் இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? குஜராத் கலவரத்தைப் போல இப்பொழுது நடந்திருப்பது மோசமானது என்பதை இவர்கள் தங்களை அறியாமலேயே ஒப்புக கொண்டு விட்டார்களா இல்லையா?
நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள் பற்றிய கருத் தோட்டத்தின் அளவு ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபாடு ஏற்படத்தான் செய்யும், வெறுப்பை  வெளிப்படுத்தும் முறையிலும்கூட அளவிலும்கூட மாறுபாடு இருக்கத்தான் செய்யும்.
ஏன் எல்லோரும் ஒரே மாதிரியாக சிந்திக்கவில்லை முடிவெடுக்கவில்லை என்று கேட்க முடியுமா?
இதில் என்ன  கொடுமை என்றால், மத்தியில் ஆட்சிப் பொறுப்பில்  உள்ள அமைச்சரே கூறுகிறார். விருதைத் திருப்பி அனுப்பினால் எங்களுக்கென்ன? வேண்டுமானால் எழுதுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று ஹிட்லர் பாணியில் பேசுகிறார் என்றால் - நாட்டில் நடப்பது பாசிச ஆட்சி என்றுதான் பொருள்.
பொருளாதாரத் துறையில் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்னிடமிருந்து பாரத ரத்னா விருதைத் திருப்பப் பெறுவோம் என்று சொன்ன கூட்டம்தான் இந்த இந்துத்துவா கூட்டம்.
அமர்த்திய சென்னும், தெரசாவும் நோபல் பரிசு பெற்றது- கிருத்துவச் சதி என்று சொன்னவர் சாதாரண பேர் வழி அல்ல - விசுவ ஹிந்து பரிஷத்தின் தலைவர் அசோக்சிங்கால்தான்.
வரலாற்றுத் துறையைக் காவிமயமாக்கிய ஆட்சி-  அன்றைய வாஜ்பேயி ஆட்சி; அதே பணிதான் மோடியின்  ஆட்சியிலும் நடந்து கொண்டுள்ளது.
இந்த யோக்கியதையில் உள்ளவர்கள். நாட்டில் நடைபெறும் பாசிச மதவாத நடவடிக்கைகளை எதிர்த்து சாகித்ய அகாடமி விருதுகளைப் பெறுவோர் எல்லாம் இடதுசாரிகள் என்று முத்திரை குத்திப் பிரச்சினையைத் திசை திருப்புகிறார்கள் - நாட்டு மக்கள் இவர்களின் முகமூடியைக் கிழித்து அடையாளம் காண்பார்களாக!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...