Tuesday, October 20, 2015

திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா


திராவிடர் இன வரலாற்றில் மாபெரும் மாறுதலை - மறுமலர்ச்சியை ஏற்படுத்திட்ட திராவிடர் இயக்க நூற்றாண்டு விழா வரும் நவம்பர் 20இல் தொடங்கப்படுகிறது.
உலகத்திலேயே சொந்த நாட்டு மக்களைப் பார்த்து நீ படிக்கக் கூடாது! என்று சாஸ்திர ரீதியாக அடக்கி வைத்த ஒரு கூட்டம் உண்டு என்றால் அது ஆரியப் பார்ப்பனர்கள் தான். இதனைக் கடவுள் கட்டளையாக்கி, மதத்தின் விலங்காக இந்நாட்டுக்குரிய திராவிடர் மக்களின், பார்ப்பனர் அல்லாத பெருங்குடி மக்களின் மூளையில்   மாட்டி விட்டனர்.
இந்த நாட்டு மன்னர்களும் வீராதி வீர ராஜ மார்த்தாண்ட,  மன்னர்களும், மன்னாதி மன்னர்களும்கூட அதற்குக் கட்டுப் பட்டு கல்விக் கூடங்களைப் பார்ப்பனர்களுக்கு மட்டுமே திறந் தார்கள். அதற்காக மான்யங்களைக் கொட்டிக் கொடுத்தார்கள்.
எடுத்துக்காட்டாக 11ஆம் நூற்றாண்டில் சோழ அரசர்கள் தெ. ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த எண்ணாயிரம் என்ற ஊரில் ஒரு பெரிய கல்விச் சாலையைத் திறந்தார்கள். 140 மாணவர்கள் அங்கு பயின்றனர், 14 ஆசிரியர்கள் அமர்த்தப் பட்டனர். நாடோறும் அதற்காக நெல் அளந்து கொடுக்கப் பட்டது. உபகாரச் சம்பளமும் அளிக்கப்பட்டது.45 வேலி நிலம் அந்தக் கல்விச் சாலைக்காக மன்னர்களும் அளித்தனர். இவ்வளவு ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்தனவே - அங்கு என்ன சொல்லிக் கொடுக்கப்பட்டது? தமிழ் இலக்கியங்களா சொல்லிக் கொடுக்கப்பட்டன? ஆங்கே பயிற்றுவிக்கப்பட்ட தெல்லாம் வேதங்களும், சமஸ்கிருத இலக்கணமும், மீமாம்ச வேதாந்த தத்துவங்களும் தான் சொல்லிக் கொடுக்கப்பட்டன. புதுச்சேரிக்கு அருகில் உள்ள திருபுவனத்தில் சோழ வேந்தர்கள் ஒரு கல்விக் கழகம் கண்டனர். 260 மாணவர்களும், 12 ஆசிரியர்களும் இருந்தனர். அங்கும் என்ன சொல்லிக் கொடுக்கப்பட்டது? இதிகாசங்களும், மனுதர்ம சாஸ்திரமும் தான் கற்பிக்கப்பட்டன.
சமஸ்கிருதத்தில் உள்ள இவை கற்பிக்கப்பட்டன என்றால் அங்கே மாணவர்களாகப் பயின்றவர்கள் யாராக இருப்பார்கள் என்பதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது. நூற்றுக்கு நூறு பார்ப்பன மாணவர்களுக்குத்தான் நம் மன்னாதி மன்னர்கள் கொட்டியழுதனர். வேதங்களைத்தான் சூத்திரர்கள் படிக்கக் கூடாதே - காதாலும் கேட்கக் கூடாதே - படித்தால் நாக்கை அறுக்க வேண்டுமே, கேட்டால் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டுமே, படித்திருந்தால்தான் நெஞ்சைப் பிளக்க வேண்டுமே இந்தக் கேடு கெட்ட பார்ப்பனத்தனத்துக்கு நமது மன்னர்கள் துணை போனது வெட்கக்கேடு அல்லவா! போரில் வீரனாக இருந்த மன்னர்கள் எல்லாம் அகவாழ்வில், பண்பாட்டுத் தளத்தில் பார்ப்பனீய நுகத்தடியில் கட்டப்பட்ட காயடிக்கப்பட்ட காளை மாடுகளாகத்தானே இருந்தனர்!
இந்தச் சூழலில் தானே ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் அக்கிர(ம)காரத்தில் முற்றிலுமாக நடமாடிக் கொண்டிருந்த அந்தக் கல்வியைப் பார்ப்பனர் அல்லாத மக்களின் பகுதிக்கும் கொண்டு வந்து கொடுத்தனர் (பார்ப்பனர் கண்களில் ஆங்கிலேயர்கள் மிலேச்சர்களாகத் தெரிந்ததற்கு இதுவேதான் முதன்மையான காரணம்!)
சென்னை போன்ற நகரங்களில் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் படிக்க வேண்டுமானால் அவர்களுக்குத் தங்கிப் படிக்க விடுதிகள் கிடையாது. பெரும்பாலும் பார்ப்பனர்களே நடத்திய உணவு விடுதிகள்தான் எங்கும், எங்கும்.
பார்ப்பனர்கள் நடத்தும் உணவு விடுதிகளில் பார்ப்பனர் அல்லாதார் அமர்ந்து உண்ண முடியாது - வேண்டுமானால் எடுப்புச் சாப்பாடு வாங்கிக் கொள்ளலாம்.
அத்தகையதோர் கால கட்டத்தில் டாக்டர் சி. நடேசனார் என்ற ஒரு பெரு மகனார் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காக 1916 ஜூன் மாதத்தில் சென்னை - திருவல்லிக்கேணி அக்பர் சாகிப் தெருவில் திராவிட சங்க விடுதி  (Dravidian Association Hostel)  ஒன்றைத் தொடங்கி பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு வாராது வந்த மாமணியாக, வான் மழையாகப் பால் வார்த்தார் என்பதை மிகுந்த நன்றியுணர்வுடன் நினைவு கூர்வோம்.
பார்ப்பனர் அல்லாத தலைவர்களான, டாக்டர் சி. நடேசனார், வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் என்ற மும்மூர்த்திகளால் உண்டாக்கப்பட்டது தான் இந்தத் திராவிடர் இயக்கம் - தென்னிந்திய நல உரிமைச் சங்கம்(The South Indian Liberal Federation)
1916 நவம்பர் 20 அன்று பார்ப்பனர் அல்லாத தலைவர்கள் பலதுறைகளைச் சேர்ந்த பெருமக்கள் ஒன்று கூடி பார்ப்பனர் அல்லாதாருக்கென்று ஓர் அரசியல் கட்சியைத் தொடங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது.
அந்த நவம்பர் 20 - திராவிடப் பெருங்குடி மக்களால் ஓரு நொடியும் மறவாது நெஞ்சில் நிலைக்க வைத்து நன்றி மலரால் தூவப்பட வேண்டிய வரலாற்றுப் பொன்னாள்! வரலாற்றில் பொன்னாள்!!
1916 டிசம்பர் 20ஆம் நாளும் - அதற்கு நிகரான மிகப் பெரிய  மாற்றத்திற்கு அடிகோலிட்ட அருமருந்தெனப் போற்றப் பட வேண்டிய புகழ் மணம் வீசும் பொன்னாள்!
ஆம், அந்நாளில் தான் வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயர் அவர்களால் புகழ் பெற்ற பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கை(Non Brahmin Manifesto)
பிரகடனப் படுத்தப்பட்ட பீடு பொங்கும் உன்னதப் பெருநாள்!
சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே! என்ற ஆரியப் பார்ப்பன மனுதர்மவாதிகளின் ஏற்பாட்டுக்கு - கட்டமைப்புக்கு மரண அடி கொடுக்கப்பட்ட கொள்கைப் பிரகடனம் பிறப்பிக்கப்பட்ட - பெட்டகத்தில் வைத்து என்றென்றும் பாதுகாக்கப்பட வேண்டிய அறிக்கை பிறந்த நாள்.
மூன்று முக்கிய குறிக்கோள்கள் முன் வைக்கப்பட்டன.
1) தென்னிந்தியாவில் உள்ள பார்ப்பனர் அல்லாத அனைத்து வகுப்பாரின் கல்வி, சமுதாய, பொருளாதார, அரசியல், தார்மீக ஆக்கப் பூர்வ மேம்பாட்டிற்குப் பாடுபடுவது.
2) பார்ப்பனர் அல்லாதார் நலன்களைப் பாதுகாத்தல், மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன், பொதுப் பிரச் சினைகளை விவாதித்து, தென்னிந்திய மக்களின் கருத்து களையும், நலன்களை யும் உள்ளது உள்ளபடி அவ்வப்போது அரசுக்கு எடுத்துரைப்பது.
3) பொதுப் பிரச்சினைக்குரிய ஆரோக்கியமான, ஜனநாயகக் கருத்துகளைப் பொதுக் கூட்டங்கள் மூலமும் பிரசுரங்களை விநியோகிப்பதன் மூலமும் இதர வழிகளாலும் பரப்பி, அதன் மூலம் பொது மக்கள் கருத்தை உருவாக்குவதும் வகைப்படுத்துவதுமாகும்.
இவ்வளவு உயர்ந்த கோட்பாடுகளை அடித்தலமாகக் கொண்டு எழுப்பப்பட்ட ஒப்புவமை இல்லாத ஒப்பரும் இயக்கம் பிறந்த அந்த நவம்பர் 20ஆம் நாள் நூற்றாண்டின் தொடக்கம் - 2015 நவம்பர் 20 ஆகும். சென்னையில் தலைமையகத்தில் பெரியார் திடலில் 4 நாட்கள் (17 முதல் 20 முடிய) இதற்கான விழா அரிய தலைப்புகளுடன் சிறப்பு அம்சங்களுடன் கொண்டாடப்பட இருக்கிறது. திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் (14.10.2015) இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தங்கள் கால்களை மண்ணில்பலமாக ஊன்றி கம்பீரமாகத் தலைதூக்கி பீடு நடைபோடும் பார்ப்பனர் அல்லாத திராவிடப் பெருங்குடியைச் சேர்ந்த பெரு மக்களே! நல்லாதரவு தாரீர் நான்கு நாட்கள் விழாக்களிலும் நன்றி உணர்ச்சியோடு பங்கு கொள்வீர் என்று அந்தத் திராவிட இயக்கம் வழி வந்த திராவிடர் கழகம் அழைக்கிறது!! வாரீர்! வாரீர்!!
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...