Friday, July 18, 2014

பிரதமரும்-கட்சித் தலைவரும்!

 

பி.ஜே.பி.யின் அகில இந்தியத் தலைவராக அமித்ஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜாடிக்கு ஏற்ற மூடி என்பதுபோல மோடிக்கேற்ற ஜோடியாக இவர் அமர்த்தப்பட்டுள்ளார்.

உண்மையைச் சொல்லப்போனால், எல்லா வகைகளிலும் எல்லாமுமாக நரேந்திர மோடிக்கு இருக்கக் கூடியவர் தான் இந்த அமித்ஷா.

அசல் ஆர்.எஸ்.எஸ். நாளேடான தினமணி ஏடே கூட நேற்று (16.7.2014) தீட்டிய தலையங்கத்தில் அமித்ஷாவை பி.ஜே.பி.யின் தலைவராக அமைத்துக் கொண்டது மோடிக்கு மரியாதை சேர்க்காது என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டதே!

தினமணி எழுதுகிறது:

அமித்ஷாவின் அரசியல் திறமைகள்பற்றி யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அதேநேரத்தில் கட்சித் தலைவராக, அதிலும் குறிப்பாக, மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கட்சியின் தலைவராக அமித்ஷாவைப் பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரைத்து நியமித்திருப்பது  - தார்மீக ரீதியில் சரியானதுதானா என்ற கேள்விக்கு மன சாட்சியுடைய யாரும் ஆம் என்று பதிலளித்து விடவும் முடியாது! என்கிறது தினமணி

பி.ஜே.பி. ஆட்சிக்கு வரவேண்டும் என்று மூச்சு முட்ட எழுதி வந்த - செய்திகளை அந்தக் கோணத்தில் சித்தரித்த தினமணியே, அமித்ஷாவை பி.ஜே.பி.யின் தலைவராகக் கொண்டு வந்தது மனச்சாட்சியற்ற செயல் என்று காலை வாரிவிட்டதே!

குஜராத் மாநிலத்தில் காவல்துறை டி..அய்.ஜி.யாக இருந்த வன்சாரா, வெளியிட்ட அறிக்கை மிக முக்கியமானது.

போலி என்கவுன்டர்களுக்கு குஜராத் முதலமைச்சர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பொறுப்பு. அவர்கள் வழிகாட்டியபடிதான் போலி என்கவுன்டர்கள் நடந்தன.

நாங்கள் குற்றவாளிகள் என்றால், எங்களுக்கு ஆணையிட்ட, வழிநடத்திய முதலமைச்சர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் குற்றவாளிகள்தான் என்று சொன்னாரே!

இந்தியாவிலேயே மோடி ஆண்ட குஜராத்தில்தான், காவல்துறை அதிகாரிகள் 32 பேர் அதிக எண்ணிக்கை யில் கைது செய்யப்பட்டனர். மோடி அரசாட்சி எத்தகையது என்பதற்கு இந்தச் சான்று ஒன்று போதாதா?

என்கவுன்டரில் அமித்ஷாவின் பங்குபற்றி தினமணி தனது தலையங்கத்திலும் சுட்டிக்காட்டியுள்ளது.

சொராபுதீன் போலி துப்பாக்கிச் சூடு (என்கவுன்டர்) வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் முக்கியமான குற்றவாளியும், சூத்திரதாரியும், அப்போது குஜராத் மாநில உள்துறை இணை அமைச்சராக இருந்தவருமான அமித்ஷா 2010 இல் அந்த வழக்கின் பின்னணியில், பதவி விலகியவர், கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக் கப்பட்டவர். அந்த வழக்குகள் இன்னும் முடியவில்லை என்று தினமணி தலையங்கத்திலேயே அழுத்தமாகச் சுட்டிக்காட்டியுள்ளதே, என்ன பதில்?  இதுதான் பி.ஜே.பி.யின் தார்மீகப் பண்பாட்டின் தலைசிறந்த அரசியல் ஒழுக்கமா?

உத்தரப்பிரதேசத்திலும், மோடியின் பிரதிநிதியாக இருந்து தேர்தலில் மொத்தம் 80 இடங்களில் 73 இடங் களில் பி.ஜே.பி. வெற்றி பெறுவதற்குக் காரணமாக இருந்தவர் அமித்ஷா என்று மகுடம் சூட்டுகிறார்கள்; இருக்கட்டும், அந்த வெற்றியை ஈட்டுவதற்காக அவர் மேற்கொண்ட வழிமுறை என்ன? மதக் கலவரத்தைத் தூண்டியதுதானே? படுகொலைகள் எத்தனை? இலட் சக்கணக்கான சிறுபான்மையினர் முகாம்களில் தஞ்ச மடைய நேர்ந்த அவல நிலைக்கு இவர்தானே பொறுப்பு?

மதக்கலவரத்தை நடத்தி இந்து வாக்கு வங்கி, முஸ்லிம் வாக்கு வங்கி என்று கூறு போட்டு, வாக்குகளை அள்ளியதுதானே அவர் மேற்கொண்ட யுக்தி.

தேர்தல் நேரத்தில் அவர் என்ன பேசினார்? மக்களை எப்படித் தூண்டினார்?

உத்தரப்பிரதேச மக்களுக்கு இந்த மக்களவைத் தேர்தல் ஒரு கவுரவப் பிரச்சினை. முசாபர் நகர் கல வரத்தில் இழைக்கப்பட்ட அநீதிக்குப் பழிவாங்கு வதற்காக இந்தத் தேர்தலைப் பயன்படுத்த வேண்டும். கலவரத்தின்போது இழைக்கப்பட்ட அநீதிக்கு இந்தத் தேர்தல் மூலம் பாடம் புகட்டவேண்டும்.

உணவு, தூக்கம் இல்லாமல்கூட மனிதன் உயிர் வாழலாம். பசி, தாகம் ஏற்பட்டாலும் அதைப் பொறுத்துக் கொண்டு உயிர் வாழலாம். ஆனால், அவமதிக்கப் பட்டால், அதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது; இங்கு நாம் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுகிறோம். நமக்கு நீதி கிடைக்கவில்லை. முன்பெல்லாம் அம்புகளையும், வாளையும் வைத்து, பழிவாங்கும் வழக்கம் இருந்தது. ஆனால், இப்பொழுது அதற்கான அவசியம் இல்லை. ஓட்டுப் பதிவு இயந்தி ரத்தில், பட்டனை அழுத்தினாலே பழிவாங்க முடியும் என்று பேசியவர் தான் பி.ஜே.பி.யின் இன்றைய அகில இந்தியத் தலைவர்.

குஜராத்தில் மதக் கலவரத்தை ஊக்குவித்தவர் பிரதமர், உத்தரப்பிரதேசத்தில் அதையே செய்தவர் அகில இந்திய பா.ஜ.க. தலைவர்.

நாடு எங்கே போகிறது? எதிர்காலம் அமைதியைக் கேள்விக் குறியாக்கும் காலமாக மாறிவிடுமோ என்கிற அச்சம், வெகுமக்கள் மத்தியில் நிலை கொண்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சி செய்த தவறுகளுக்கு, வெகுமக்களா தண்டனையை அனுபவிக்கவேண்டும்?

விழிப்புணர்வு தேவை! தேவை!!

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...