இது என்ன புதுவிசை?
அறிவியலில்,
1. அணுக்கருவிசை (Nucleous Force)
2. ரேடியக் கதிர்ப்பு விசை (Radio activity Force)
3. மின்காந்த விசை (Electro-Magentic Force)
4. ஈர்ப்பு விசை (Gravitation Force)
என்பதாகப் படித்திருக்கிறோம்; அறிந்திருக்கிறோம்.
இது என்ன புதிதாக ஒரு விசை? அதுவும், இரு
பாலியல் உணர்ச்சிகளின் ஈர்ப்பு விசை? இது இயல்பான விசை! உயிரினங்களுக்கு
குறிப்பாக மனித இனத்தின் ஆண்-_பெண் இருபாலர்க்கும் உரிய சிறப்பு விசை!
வக்கிரமான வன்செயல்!
இன்று ஊடகங்களான செய்தித்தாள்கள்,
தொலைக்காட்சிகள் முதலானவற்றில் வரும் விபரீதமான_வெறுக்கத்தக்க, சமூக
நல்லுணர்வாளர்க்கு வருத்தத்தையும் இழிவையும் மானக்கேட்டையும் நாணக்
கேட்டையும் உண்டுபண்ணுகின்றன.
ஆற்றுப்படுத்தல் ஆகலாம்
பள்ளியில் சில ஆசிரியர்கள் தம்மிடம்
பயிலும் பெண்பிள்ளைகளிடம் தகாத வகையில் உறவு கொள்வது; ஆசிரியை, தன்னிடம்
பயிலும் மாணவனை இதே வகையில் பயன்படுத்துவது; எல்லாவற்றிற்கும் மேலாக, பள்ளி
மாணவன், தனக்குப் பாடம் புகட்டும் ஆசிரியையுடன் விரும்பத்தகாத வெறிவேட்கை
வினையில் ஈடுபடுவது போன்ற செயல்கள் நடந்துவருவதைக் கண்டு பதைக்கிறோம்;
துடிக்கிறோம் ஏன்? இப்படி? என்ன காரணம்? இந்த ஆய்வு அலசல் இவற்றிற்கான ஓர்
ஆற்றுப்படுத்தல் (Councel) ஆகவும் இருக்கும்; இருக்கவும் பயன்படலாம்.
இது ஒரு தூண்டுவிசை!
மேலும் ஒரு புதிர்விசையா? இல்லை.
இருபாலியல் உணர்ச்சிகளின் ஈர்ப்பு விசை என்பது, ஊரறிந்த _ உலகறிந்த ஒரு
சொல்லின், அதன் பொருளின் அறிவியல் விளக்கம்தான் அது! அதுதான் பாலியல்
உணர்ச்சி (ஷிமீஜ்) எனப்படும் காதல் எனப்படுவது.
கெட்ட வார்த்தை அல்ல
காதல் என்ற உடனே அது ஏதோ கெட்ட வார்த்தை என்று நம்மில் சிலர் நினைப்பர்; வெறுப்பர்; பேசுவர்.
அப்படி ஒன்றும் அந்தச் சொல் தவறான கெட்ட
வார்த்தை அல்ல! இதுபற்றி அறிவியல் வழிநின்று ஆய்வு செய்து அலசல் செய்வது
எதிர்கால இளைய தலைமுறைக்குப் பயனுடையதாக இருக்கும்; இருக்க வேண்டும் என்று
எதிர்பார்க்கிறோம்; நம்புகிறோம். எனவே, அருள்கூர்ந்து முகம் சுளிக்க
வேண்டாம்.
பொதுவான கண்ணோட்டம்
கொஞ்சம் தேவை;
கொஞ்சம் நம்பிக்கை;
கொஞ்சம் மனநிறைவு;
கொஞ்சம் சரணாகதி.
இவை எல்லாம் கலந்த சேர்க்கைதான் காதல்
என்று அறிஞர் ஃபிஸ்டர் கருதுகிறார். ஆனால், இதுதான் காதல்! என
அறுதியிட்டுச் சொல்ல சமூக இயலாளர்களால் இயலாது. உலகம், ஒருமனதாக
ஒப்புக்கொள்ளும் காதலுக்குப் பொதுவான விளக்கத்தை யாரும் தெளிவாகச்
சொல்லவில்லை.
காதலிக்கத் தேவைப்படும் தகுதிகள்
காதலிப்பதற்கு மூன்று முதன்மையான தகுதிகள்
வேண்டும் என்கிறார் அமெரிக்காவின் முன்னணிக் காதல் உளவியலாளர்களுள்
ஒருவரான லிண்டா ஒல்சன் என்பவர்.
அவர் கூறும் அந்த மூன்று தகுதிகள்
1. ஓர் ஆணுக்கும், ஒரு பெண்ணுக்கும் அடிப்படையில் பாலின ஈர்ப்பு இருத்தல் வேண்டும்.
2. ஒருவரோடு ஒருவர் ஒத்துப்போகும் தன்மை (Adjustability) இருத்தல் வேண்டும்.
3. இணைந்து வாழ்வதற்கான உறுதி இருத்தல் வேண்டும்.
உணர்ச்சியாளர்களின் கண்ணோட்டம்
காதல் என்பது , இதயத்தில் மலரும் உணர்ச்சி
என்று பெரும்பாலும் உணர்ச்சியாளராகிய பாவலர்கள், இலக்கியவாதிகள் என்று
எளிதாகச் சொல்லிவிடுவர். விழியில் நுழைந்து, இதயம் புகுந்து உயிரில் கலந்து
உறவு. இப்படி ஒரு திரைப் பாவலர் கூறியுள்ளார்.
அறிவியலில் அடிபட்டுப்போகும்
இதயத்தில் மலரும் உணர்ச்சி காதல் என்ற
கருத்து அறிவியலோடு ஒத்தப்போகாது! இக்கருத்து அறிவியலில் எடுபடாது!
உணர்ச்சியின் இருக்கை இதயம் அன்று (The heart is not the seat of emotion)
என்பது அறிவியல்.
இந்த ஈர்ப்புவிசை எங்கே உருவாகிறது?
இந்த இருபாலியல் உணர்ச்சி ஈர்ப்பு விசை
எங்கே உருவாகிறது? இது உருவாவது மூளையில்தான் என்கிறது அறிவியல். நம்
உடலில், குறிப்பாக நரம்பு மண்டலத்தில் (Nervous System) நிகழும் வேதியில்
மாற்றங்களின் விளைவுதான் (The effect of chemical reaction is nervous
system) காதல் எனப்படும் இருபாலியல் உணர்ச்சிகளின் ஈர்ப்புவிசை
என்கின்றனர், அறிவியல் வல்லுநர்கள்.
ஆளாளுக்கு வேறுபடுவது
Phenyelethalamine அல்லது P.E.A. ஆகிய
வேதிப்பொருள்களே (Chemical Substances) காதல் கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றன
என்கிறார்கள் அறிவியல் வல்லுநர்கள்.
இந்த வேதியில் கலவையில் நிகழும் ஏற்ற-_இறக்கங்களைப் பொறுத்துக் காதல் உணர்ச்சியும் ஆளாளுக்கு வேறுபடுகிறது என்கிறார்கள் அவர்கள்.
நனைந்து நனைந்து
காதல் வயப்படும்போது மூளை பினிலெத்தாலமைன்
(PEA) என்றும் வேதியியல் பொருள்களால் நனைக்கப்பட்டு அதனால், மனமகிழ்ச்சி,
மனக்கிளர்ச்சி, இன்ப உணர்ச்சி இவற்றைப் பெறச் செய்கிறது என்கிறார்கள்
காதலியல் அறிவியல் வல்லுநர்கள் வேறுவகையாகவும் அறிவியலாளர்கள் பின்வருமாறு
கூறுகிறார்கள். ஆண்ட்ரஜன், எஸ்ட்ரோஜன், அட்ரினலின் ஆகிய சுரப்பிகளின்
அட்டகாசம்தான் காதல்
முதல் அறிகுறி
அடிப்படையில், பாலினக் கவர்ச்சி (Sexual
Attraction)யே காதலுக்கான முதல் அறிகுறி என்று அறிவியல் கூறுகிறது. அப்படி
என்றால், வெறும் காமம் (Lust)தான் காதலா? அல்ல. காமமும் காதலும்
கலந்ததுதான் காதல் என்கிறார்கள் சமூக இயலாளர்கள் (Socialogists)
இல்லை! இருக்கலாம்!!
பாலின ஈர்ப்பு விசை எள்ளளவும் இல்லாத காமம் கடந்த காதல் உண்டா? இல்லை! என்கிறது அறிவியல். இருக்கலாம்! என்கிறது சமூக இயல்.
காதலா? காமமா?
நெறியானது காதல்; வெறியானது காமம் _ என்ற
கருத்துரு பிற்காலத்தில் உருவாகிவிட்டது. உண்மையில் இரண்டும் ஒன்றுதான்!
தொல்காப்பியம் தொடங்கி, சங்க இலக்கியம், திருக்குறள் தொடர்பான நூல்கள்
இரண்டும் ஒன்றுதான் என்கின்றன.
சின்னஞ்சிறு கிளையில் மாபெரும் கனி
தொங்குவது போல சின்னஞ்சிறிய என் உயிரிலே மாபெரும் காமம் (காதல்) தொங்கிக்
கிடக்கிறது என்னும் பொருளில், சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி ஆங்கு
உயிர்தவச் சிறிது: காமமோ பெரிதே எனக் குறுந்தொகைப்பாடல் கூறுகிறது.
மலரைவிட மிக மிக மென்மையானது காமம் என்கிறார் திருவள்ளுவர்; தம் திருக்குறளில் பின்வருமாறு கூறியுள்ளார்.
மலரினும் மெல்லிது காமம் (குறள் 1289)
எளியது எது? அரியது எது?
ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறோம். ஓர்
ஆண்டில் முப்பது பேரைக் காதலிப்பது எளிது; முப்பது ஆண்டுக்காலமாக ஒருவரையே
காதலிப்பதுதான் அரியவற்றுள் எல்லாம் அரிது.
காதலில் முப்பால் உணர்வு
காதல் வயப்பட்டவர்களின் மூளையை
நுண்ணொளிப்படம் (Scan) செய்து ஆய்வு செய்த ஹெலன் ஃபிஷர் என்னும் உளவியல்
வல்லுநர் மூவகை உணர்வுகளைக் கண்டறிந்ததாகக் கூறுகிறார். அவை:
1. காமம்
2. விந்தையான மிகையான கற்பனைக் காதல் உணர்ச்சி (Romantic Love)
3. நீண்டகாலப் பிணைப்பினை முன்னிறுத்தும் காதல்.
காதல் ஏற்பட பெரியார் கூறும் காரணங்கள்
உளவியலார், அறிவியலார் (Pure Scientists)
கூறுவதை இதுவரை பார்த்த நாம் இதுபற்றி சமுதாய அறிவியலாளர் (Social
Scientist) தந்தை பெரியார் காதல் ஏற்படக் காரணங்களாகப் பின்வருமாறு
கூறுகிறார்:
எப்படிப்பட்ட காதலும், ஒரு சுயலட்சியத்தை,
தனது இஷ்டத்தை, திருப்தியை கோரித்தான் ஏற்படுகிறதே ஒழிய வேறில்லை
என்பதும், காதலர்கள் என்பவர்களின் மனோபாவத்தைக் கவனித்தால் விளங்காமல்
போகாது. அதாவது, அழகைக் கொண்டோ, பருவத்தைக் கொண்டோ, அறிவைக் கொண்டோ,
ஆஸ்தியைக் கொண்டோ, கல்வியைக் கொண்டோ, போக போக்கியத்துக்குப் பயன்படுவதைக்
கொண்டோ, அல்லது, மற்றும் ஏதோ ஒரு திருப்தியை அல்லது தனக்குத் தேவையான ஒரு
காரியத்தையோ குணத்தையோ கொண்டோ தான் யாரும் எந்தப் பெண்ணிடமும், ஆணிடமும்
காதல் கொள்ள முடியும்! அப்படிப்பட்ட, காரியங்களுக்கெல்லாம் ஒருவன் காதல்
கொள்ளும்போது இவன் அறிந்தது உண்மையாக இருக்கலாம்; அல்லது, அங்கு இருப்பதாக
அவன் நினைத்துக் காதல் கொண்டிருந்தாலும் இருக்கலாம். அல்லது வேஷ
மாத்திரத்தில் காட்டப்பட்ட ஒன்றினால் இருந்தாலும் இருக்கலாம் - பெரியார்:
குடிஅரசு _தலையங்கம் _ 18.1.1931
பார்த்தீர்களா? தந்தை பெரியார் அவர்கள்
காதல் பிறப்பது எவற்றின் அடிப்படையில் என்பதை -மிகத் தெளிவாக
கூறியிருக்கும் பாங்கினை நாம் வியக்காமல் இருக்க முடியாது!
வெற்றியா? தோல்வியா?
காதலின் தொடர்ச்சி மணவாழ்க்கை என்ற
கோட்பாட்டை வலியுறுத்திய மரபில் (Tradition) வந்தது நமது சமுதாயம்.
திருமணத்திற்குப் பிறகு தோற்ற காதலும் உண்டு; அதேபோல, திருமணத்தில்
முடியாமல் வெற்றிபெற்றதும் உண்டு.
கடைசி வரை காதலா?
காதலித்து மணம் புரிந்தவர்களின் வாழ்க்கை
நீடித்து இருக்காது _ என்ற பொதுக்கருத்து பரவியிருக்கிறது. காதலித்துக்
கடைசிவரை வாழ்ந்துகாட்டியவர்களும் உண்டு. இடையிலேயே வீழ்ந்துபட்டவர்களும்
உண்டு. முழுமை பெற்ற காதல் என்றால் முதுமை வரை கூடவரும் என்கிற கவிஞர்
கண்ணதாசனின் பாடலடிகளை இங்கு நினைவூட்டுவது மிகப் பொருத்தமாக இருக்கும்.
தெரிந்தும் தெரியாமலும்
வாழ்க்கை என்றால், ஒரே ஒரு மகிழ்ச்சிதான்
உண்டு; அது, காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் _என்பது ஜார்ஜ் சரண்டின்
அவர்களின் காதல் கோட்பாடு. இந்த ஒரே ஒரு மகிழ்ச்சியை எவர் துறக்க
முன்வருவார்? அதனால்தான் பெரும்பாலானவர்கள், காதலிக்கிறார்கள் _ தெரிந்தும்
தெரியாமலும்; புரிந்தும் புரியாமலும், அறிந்தும் அறியாமலும்.
மனிதக் காதல்தான்!
கூட்டிக் கழித்துப் பார்த்தால் காதலில்
தெய்வீகக் காதல் என்பது ஒன்றில்லை. அமரகாதல் என்பது கிடையாது. அதையும்
தாண்டி, புனிதமான காதலும் இல்லை! எல்லாம் மனிதக் காதல்தான்!
இறுக்கமான பாலியல் ஈர்ப்பு விசை
இறுக்கமான, ஜாதியக் கட்டமைப்பைக் கொண்ட
நம் சமூகத்தில் காதலினால் ஏற்படும் சிக்கல் நிறைய உள என்றாலும், இதே
காதல்தான் தொடர்ந்து பல தடைகளையும், தளைகளையும் தகர்த்தெறிந்து வென்றும்,
தோற்றும் முன்மாதிரிகளை ஏற்படுத்தி வந்திருக்கிறது.
இறைந்து கிடக்கும் காதல்
வென்ற காதல்;
தோற்ற காதல்;
வெல்வதுபோலத் தோன்றி தோற்ற காதல்;
தோற்றதுபோலக் காட்டி வென்ற காதல்;
தோற்காமலும் வெற்றி பெறாமலும் நடுவிலேயே கரைந்து போன காதல்;
இவ்வண்ணம், எண்ணிலாக் காதல் உருவெளித்தோற்றங்கள் சமூகத்தின்முன் இறைந்து கிடக்கின்றன.
பரபரப்பு பல சமயங்களில்
காதலைச் சித்தரிப்பதில், பலவாறான காட்சிக்
கொடைகளும் உண்டு. பாடல்கள், காட்சிகள், உரையாடல்கள், உரசல்கள் மூலமாகவும்
திரையுலகம் ஏற்படுத்திய பரபரப்புகளைவிட திரை நட்சத்திரங் ((Stars)களின்
காதல், பல சமயங்களில் பெரும் பரபரப்பைக் கிளப்பிவருகிறது.
தொலைக்காட்சித் தொடர்களும் இதற்கு
விதிவிலக்கன்று. பிரபலங்களாக இருப்பதாலேயே நட்சத்திரங்கள் காதலிப்பதும்,
காதல் கிசுகிசுப்பதும், மணந்து கொள்வதும் மணவிலக்குப் பெறுவதும்
செய்திகளாகி விடுகின்றன.
கடைசி உண்மை காதல்பற்றி
வரலாறு போலவோ, அறிவியல் போலவோ, காதல்
எனும் கவர்ச்சி விசையை யாருக்கும், எவரும் கற்றுக்கொடுத்துப் புரிய வைப்பது
இயலக் கூடியது அன்று. எல்லாம் பட்டறிவு பயிற்றுவிக்கும் பாடம்! காதலை ஓர்
உணர்ச்சியாக மட்டுமே பார்ப்பதே கடைசி உண்மையாகப்படுகிறது.
இதுவே, இருபாலியல் உணர்ச்சிகளின் ஈர்ப்பு விசையின் கோட்பாடு!
- பேரா.ந.வெற்றியழகன்