Monday, January 6, 2014

தமிழருவி மணியனின் தவறான தர்க்கங்கள்!

- மஞ்சை வசந்தன்

மதவாதக் கட்சியான பா.ஜ.விற்கு மகுடம் சூட்டி மகிழ தமிழருவி மணியன் தவியாத் தவிக்கிறார். பரிதவிக்கும் இலங்கைத் தமிழரின் வாழ்விற்கு பா.ஜ.க., விடிவு காணும் என்பது அவரது ஒற்றை நம்பிக்கை! யாரை நம்புவது என்ற தீர்க்கம்கூட இல்லாத இவர், கற்பனைகளின் உந்துதலில் கூட்டணி அமைத்து, மதவெறிக் கும்பலுக்குத் துணை நிற்கின்றார். தமிழில் பேச வல்லவர் என்ற தகுதிமட்டும், அரசியல் தீர்க்கத்திற்கும், தீர்விற்கும் போதாது என்ற பால பாடம்கூட இவர் அறியாதது பரிதாபந்தான்!

காங்கிரஸும் வேண்டாம், தி.மு.க., அ.தி.மு.க.வும் வேண்டாம் இது மணியனின் மார்க்கம். திராவிடக் கட்சிகள் வேண்டாம் என்ற பா.ம.க.வினின்று இவர் மாறுபடுகிறார். இந்த முரண்பாட்டிற்குள் பா.ம.க.வை நுழைக்க முட்டித் தள்ளுகிறார்.

தி.மு.க. அணி வலுப்பெற்று விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்து, கரு உருவாகும்போதே கலைத்து விட்டுக் கொண்டிருக்கும் தினமணி அய்யர், தற்போது அணி அரும்பும் என்று செய்தி வந்ததுமே துடித்துப் போய், தமிழருவி மணியனின் தலைவாசலைத் தட்டியுள்ளார்.

முதலில் நாம் கேட்கும் சில கேள்விகள்:

1. ஊழல் இல்லாத தூய கட்சி எது?

2.இலங்கைப் பிரச்சினையில் உறுதி யான நிலைப்பாடுள்ள கட்சி எது?

3. 2016இல் ஆட்சி அமைப்போம் என்று சொல்லாத கட்சி எது?

இதற்கு நாணயத்தோடு தமிழருவி மணியன் பதில் சொல்ல வேண்டும். இதில் தி.மு.க.வை மட்டும் குற்றவாளி என்று பழி சுமத்துவது அயோக்கி யத்தனமல்லவா?

ஆக, ஊழல், இலங்கைப் பிரச்சினை என்பதெல்லாம் மக்களைத் திசை திருப்ப செய்யப்படும் வஞ்சகத் திட் டங்கள். இலங்கைப் பிரச்சினையில் அதிகம் இழந்த கட்சி, பாதிக்கப்பட்ட கட்சியென்றால் அது தி.மு.க. மட்டுமே. ஆனால், மற்ற எல்லாமும் ஆதாயம் அடைந்த கட்சிகள்.

இலங்கைப் பிரச்சினையில் சரியான நிலைப்பாட்டில் இருந்த கட்சி எதுவும் இல்லை. ம.தி.மு.க.வைச் சொல்லலாமே என்றால், விடுதலைப்புலிகளை, அதன் தலைவரை அறவே வெறுத்து, இராச பக்சேவிற்கு வக்காலத்து வாங்கிய அ.தி. மு.க.வுடன் கைகோர்த்தவர் வைக்கோ.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிப்பு தி.மு.க. ஆட்சியில் நடந்திருந் தால், பழ. நெடுமாறனும் வைக்கோவும் எப்படி எகிறியிருப்பார்கள்? இது என்ன இரட்டை அளவுகோல்?

முள்ளிவாய்க்காலில் முனைப்புடன் நடந்த போரின்போது, பிரணாப்முகர்ஜி கலைஞரை ஏமாற்றியது உண்மை; கலைஞர் நம்பி ஏமாறியதும் உண்மை.

தான் ஆடாவிட்டாலும் தசையாடும் என்ற உள்ளுணர்வு உடையவர் கலைஞர். அரசியல் பண்ண வேண்டிய கட்டாயத்தில் சில நிலைப்பாடுகள் இருந்திருக்குமே தவிர, இனத் துரோகம் செய்யும் உள்ளம் உடையவர் அல்ல அவர்.

அவரைத் தவிர இனத்திற்காக இலங்கைத் தமிழருக்காக ஆட்சியை இழந்தவர்கள் யார்?

பிரணாப் முகர்ஜி பேச்சில், உறுதியில் ஏமாறாமல் கலைஞர் எச்சரிக்கையாய் இருந்து, காங்கிரஸ் ஆதரவை விலக்கி வெளியில் வந்திருந்தால், இந்தியா - காங்கிரஸ் ஆட்சி - இலங்கை நட்பை விட்டு, விடுதலைப்புலிகளுக்கு உதவியி ருக்குமா? ஏன், பா.ஜ.க.வே. ஆட்சியில் இருந்தாலும் அதைச் செய்திருக்குமா?
தமிழருவிமணியனை கேட்கிறோம், பா.ஜ.க. தனியீழத்தை அங்கீகரித்து, விடுதலைப்புலிகளை ஆதரிக்கத் தயார் என்று அறிவிக்கத் தயாரா? தமிழருவி இந்த உத்தரவாதம் அளிக்கத் தயாரா/

தி.மு.க. அன்றைக்கு காங்கிரஸ் ஆதரவை விட்டு வந்திருந்தால், பதுங்கிப் பதுங்கி இலங்கை அரசுக்கு உதவிய இந்திய அரசு, வெளிப்படையாக உதவி யிருக்கும். தட்டிக் கேட்கக் கூட நாதி யிருந்திருக்காது. போர் இன்னும் தீவிர மாய் இருந்திருக்கும், இழப்பும் கூடியி ருக்கும்?  ஒரு மாநில ஆட்சி, கட்சி என்ன செய்துவிட முடியும்? காங்கிரஸில் இருக்கின்ற தமிழனே காட்டிக் கொடுக்கும்போது, இலங்கைச் சிக்கலில் என்ன தீர்வுகாண முடியும்?

இன்றைக்கு கூட்டணி அமைக்க முயலும் தமிழருவி மணியன், தனி ஈழத்தை பா.ஜ.க. அமைக்கும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவிக்க செய்வாரா? அது இயலாது என்றால், அருவியாய் பேசிக் கொண்டு வேலையைப் பார்க்க வேண்டும்!

இனி விஜயகாந்த் விவகாரத்திற்கு வருவோம்:

தி.மு.க. --_ தே.மு.தி.க. கூட்டணிக்கு வாய்ப்பு என்றவுடன் வைத்தியநாத அய்யருக்குத் தூக்கம் வரவில்லை. உடனே தமிழருவிமணியனின் கதவைத் தட்டியுள்ளார். அவர் தர்க்க ரீதியில் விஜயகாந்தை குழப்பியுள்ளார்.

என்ன அவரது தர்க்கம்?

1. 2016-இல் மு.க. ஸ்டாலின் முதல்வர் என்பதை விஜயகாந்தால் ஏற்க முடியுமா? என்கிறார்.

2016இல் அன்புமணி முதல்வர் என்று சொல்லும் பா.ம.க.வுடன் மட்டும் விஜயகாந்த் இணைய முடியுமா? ஏற்க முடியுமா?

உண்மையென்னவென்றால், தி.மு.க. வுடன் கூட்டு சேர்வது தே.மு.தி.க.விற்கு வலு, இலாபம் பா.ம.க.வுடன் கூட்டு சேர்வது தற்கொலைக்குச் சமம். ஆதாயம் பா.ம.க.விற்குதான்! அ.தி.மு.க .வுடன் கூட்டு சேர்ந்து நேர்ந்த இழப்பை விட பெரும் இழப்பு இதில் வரும் இதை விஜயகாந்த் சிந்திக்க மாட்டாரா?

2. தி.மு.க. ஊழல் மூட்டையை தே.மு. தி.க. சுமக்குமா? மணியன் கேட்கிறார்.

பா.ஜ.க. ஊழல் செய்யாத கட்சியா? பங்காரு லட்சுமணன்கள் பட்டவர்த்தன மாய் வாங்கியதெல்லாம் மணியனுக்கு மறந்து போய் விட்டதா?

3. திராவிடக் கட்சிகள் கூட்டணி இல்லையென்றால், பா.ம.க., திராவிடக் கட்சியான மதிமுகவுடன் எப்படி கூட் டணி வைக்க முடியும். அது திராவிடக் கட்சியில்லையென்று வைக்கோ சொல்வாரா?

தே.மு.தி.க. திராவிடக் கட்சி தானே! அ.இ.அ.தி.மு.க.வை திராவிடக் கட்சி என்று ஏற்கும்போது, தே.மு.தி.க.விற்கு தர முத்திரைத் தரலாமே! அப்படியிருக்க இரு திராவிடக் கட்சிகளுடன் பா.ம.க. எப்படி கூட்டுச் சேரும்?
தலித்திற்கு எதிரான கட்சி பா.ஜ.க. என்பதை, தலித் கட்சியை சேர்ப்பதன் மூலம் துடைக்கப் போகிறாராம். ஒரு கட்சியை ஒட்ட வைத்தால் தலித்து களின் மோசக் கட்சி, பாசக் கட்சியாகி விடுமா? இந்த இரசவாத வித்தையை மணியன் எங்கு கற்றார்? என்ன செய்ய! சேர்க்கை அப்படி!!

விஜயகாந்த் அவர்களுக்கும், வைக்கப்பட வேண்டிய வேண்டுகோள் இதுதான். என்றைக்கு இருந்தாலும் தமிழர் உணர்வுள்ள தி.மு.க.வுடன் சேர்வதுதான் எதிர்காலத் தமிழர் நலனுக்கு நல்லது. கலைஞரை, ஸ்டா லினை தட்டிக் கேட்க இவர்களுக்கு உரிமையுண்டு. இந்த உரிமை வேறு எங்கு கிடைக்கும்?
உரிமையுள்ள இடமா? உருமாறி கபடம் ஆடும் கூடாரமா? விஜயகாந்தும், வைக்கோவும் சிந்திக்க வேண்டும்!

திராவிடத் தீண்டாமையை பா.ம.க.வும் கைவிட்டு, தாழ்த்தப்பட்ட வர்களும் வன்னியர்களும் மீண்டும் ஒன்றுபட்டு, தமிழர் என்ற உணர் வோடு, தமிழர் அணியை அமைத்து தமிழர் நலன் காக்க வேண்டும்; தமிழர் உரிமைகளை, அடையாளங்களை, சிறப்புகளை மீட்க வேண்டும்!

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:


No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...