பி.ஜே.பி.யில் மூத்தத் தலைவரும், கடந்த மக்களவைத் தேர்தலின்போது (2009) பிஜேபியின் பிரதமருக்கான வேட்பாளருமான லால்கிஷண் அத்வானி, மத்திய பிரதேசம் குவாலியரில் நடைபெற்ற கட்சித் தொண்டர்கள் கூட்டத்தில் (1.6.2013) பேசிய பேச்சால் பிஜேபி கூடாரம் அதிர்ந்து போயிருக்கிறது.
தாம்தான் பிஜேபிக்கான அதிகாரப் பூர்வமான பிரதமர் வேட்பாளர் என்று எச்சில் ஒழுகிக் கொண்டிருந்த நரேந்திரமோடியின் தலையில் நறுக்குக் குட்டு ஒன்றை வைத்தார் மூத்தத் தலைவர் அத்வானி!
மத்தியப் பிரதேச முதல் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகானைப் பாராட்டு மழையால் குளிர வைத்தார்.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பேயி போல அடக்கமானவர் என்று அடையாளப்படுத்தினார்.
குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடியையும் அக்கூட்டத்தில் அவர் பாராட்டியிருந்த போதிலும் ம.பி. முதல்வர் சவுகானுக்கு அதிகார மமதை கிடையாது என்று குறிப்பிட்டார். குஜராத்தைவிட மத்திய பிரதேசத்தில் சாதனைகள் அதிகம் என்று விளாசினார். இதன் மூலம் மோடியை அத்வானி மறைமுகமாகத் தாக்கிப் பேசியதாக அரசியல் வட்டாரங்களில் கருதப்பட்டது என்று தினமணியே கூறுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
மோடி பிரதமருக்கான வேட்பாளர் என்பதில் அத்வானிக்கு மாறுபட்ட கருத்து உண்டு. ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து அது கிட்டியவுடன் சடார் என்று போட்டு உடைத்து விட்டார்.
அதற்கு அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட மாநிலம் மத்திய பிரதேசம்; காரணம் அங்குதான் பிஜேபியின் முதல் அமைச்சராக சவுகான் இருக்கிறார்.
குஜராத் மோடி ஆட்சியில் குபீரென்று முன்னேறி விட்டது என்று ஒரு பிரச்சாரத்தை முடுக்கி விட்ட நிலையில், ம.பி.யில் சவுகான் சிறப்பாக ஆட்சி செய்கிறார் என்று அத்வானி ஒரு போடு போட்டதன் மூலம் மோடியும், அவரைத் தோளில் தூக்கி வைத்துள்ள கூட்டத்தாரும் ஒரு கணம் ஒருவரை ஒருவர் முறைத்துப் பார்த்துக் கொண்டனர்.
அத்வானி, சுஷ்மா சுவராஜ் போட்டி வேட்பாளர்கள் என்ற ஒரு கருத்து நிலவும் சூழ்நிலையில், மூன்றாவதாக சவுகானை அத்வானி களத்தில் இறக்க முயற்சிப்பதன் சூட்சுமத்தைப் புரியாமல் பிஜேபி வட்டாரம் திகைக்கிறது.
ஒருக்கால் தனக்கு வாய்ப்புக் கிடைக்கா விட்டாலும் சவுகானுக்குக் கிடைக்க வேண்டும் என்று அத்வானி நினைக்கிறார் போலும்!
பி.ஜே.பி. ஆட்சியில் உள்ள இரு மாநில முதல் அமைச் சர்களை மோத விடுவதுதான் சுவையான காட்சியாகும்.
கருநாடக மாநிலத் தேர்தலில் காயடிக்கப்பட்ட பிஜேபி விழி பிதுங்கிக் கொண்டிருக்கும் கால கட்டத் தில், உள்நாட்டுப் புயல் உக்கிரமாக வீசத் தொடங்கி விட்டது. அடுத்தடுத்த காட்சிகள் வேடிக்கை, விநோதம் நிறைந்ததாக இருக்கக் கூடும்.
மோடி பிரதமருக்கான வேட்பாளர் என்றால் ஒட்டு மொத்தமான சிறுபான்மை மக்களின் வாக்குகள் பிஜேபிக்கு எதிராக சிந்தாமல் சிதறாமல் செல்லும்.
பார்ப்பன ஆதிக்கம் கொண்ட பா.ஜ.க.வை எதிர்த்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகள் கைகோக்க அதிக வாய்ப்புண்டு.
சமூக நீதியாளர்கள், மதச் சார்பற்ற கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் பிஜேபிக்கு எதிராகத் திரளவும் அதிக வாய்ப்புண்டு. தலைப்பாகையை மாற்றி னாலும் தலைவலி தீரப் போவதில்லை என்பதுதான் உண்மை.
கடைசி செய்தி (Tail Piece) : என்னைவிட மோடிதான் சிறந்த முதல் அமைச்சர் என்று ம.பி. முதல் அமைச்சர் சவுகான் கூறியுள்ளார். இதுவும் ஒரு மோடி மஸ்தான் வேலையாகத்தான் இருக்கும். இதுபோன்ற வேலைகளைச் செய்வதில் மோடி பலே கில்லாடி ஆயிற்றே!
- கருஞ்சட்டை
No comments:
Post a Comment