ஜெயங்கொண்டத்தில் தோழர்களே, ஜெயபேரிகை கொட்டப் போகிறோம்.
மே 2 ஆம் தேதி ஜெயங்கொண்டத்தில் தமிழர் தலைவர் முழக்கமிடுகிறார்.
வட்டார மாநாடாக அது நடைபெறப் போகிறது.
மண்டல செயலாளர் தோழர் சி.காமராஜ், சுற்று வட்டார மாவட்டக் கழகத் தோழர்களின் அரும் ஒத்துழைப்பால் மாநாட்டின் ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெறுகின்றன.
எங்கு பார்த்தாலும் சுவர் எழுத்துகள் - அவை செந்துறைவரை நீண்டு விட்டது. இந்தப் பக்கம் கடலூர் மாவட்டம் வரை நீள்கிறது. பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் எங்கு பார்த்தாலும் மாநாட்டு நடவடிக்கைகளுக்குக் கட்டியம் கூறுகின்றன.
கடந்த ஓராண்டில் மட்டும் அலை அலையான மண்டல மாநாடுகள், வட்டார மாநாடுகள் - புரட்சிப் பெண்கள் மாநாடு - அடுத்து ராஜபாளையத்தில் மாநில இளைஞரணி மாநாடு! (மே 4)
இயக்க வரலாற்றில் வேறு எந்த காலகட்டத்திலும் இல்லாத அளவிற்கு மாநாடுகளின் அணிவகுப்புகள்.
ஒவ்வொரு மாநாட்டிலும் முத்து முத்தான தீர்மானங்கள் - உரை முழக்கங்கள் - கருத்தரங்குகள் - பட்டிமன்றங்கள் என்று கருத்துப் பிரச்சாரம் கனமழையாகப் பெய்து கொண்டிருக்கிறது.
ஜெயங்கொண்டம் மாநாட்டில் தமிழர் தலைவருடன் செயலவைத் தலைவர் மானமிகு சு.அறிவுக்கரசு, பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாநிலங் களவை முன்னாள் உறுப்பினர் சிவசுப்பிரமணியம், குன்னம் சட்டப்பேரவை உறுப்பினர் சிவசங்கரன் முதலியோர் கொட்டு முழக்கமிடுகின்றனர்.
நமது இயக்க வரலாற்றில் இந்தப் பகுதிகளுக்கென்று தனித்த சிறப்புகள் உண்டு. புகழ்பெற்ற கருஞ்சட்டைத் தோழர்கள் எல்லாம் சாதனைகள் பல புரிந்து, களங்கள் பல கண்டு வெஞ்சிறைகள் பல ஏற்று என்றென்றும் பேசப் படும் பெரியார் பெருந்தொண்டர்களாக - சுயமரியாதைச் சுடரொளிகளாக மறைந்தும் மறையாமல் நமது நெஞ்சங் களில் பசுமைத் தோட்டமாக நிறைந்து இருக்கிறார்கள்.
அந்தத் தலைமுறையோடு இயக்கம் முடிந்துவிட வில்லை. இப்பொழுதெல்லாம் அந்த வட்டாரங்களில் இளைஞர்களின் அணிவரிசை!
இயக்கப் பொறுப்பாளர்கள் எல்லாம் இளைஞர்கள்.
இனமுரசு இயக்கம் இதுதான்!
சமூகநீதி இயக்கம் இதுதான்!
பகுத்தறிவு இயக்கம் இதுதான்!
பெண்ணடிமை ஒழிப்பு இயக்கம் இதுதான்!
ஜாதி ஒழிப்பு இயக்கம் இதுதான்!
சகோதரத்துவம் பேணும்,
சமத்துவ இயக்கம் இதுதான்!
நோய் வந்த பின் வைத்தியம் பார்க்கும் இயக்கமல்ல;
வருமுன் காக்கும் தொலைநோக்கு இயக்கம் இதுதான்!
அறிவை மட்டுமல்ல,
ஒழுக்கத்தை உயிரினும் மேலாக
ஓம்பும் கொள்கை
இதனிடம்தான் உள்ளது.
இது ஓர் உலக இயக்கம்;
மதமற்ற அமைதி உலகினைப் படைத்திடும் இயக்கம் இதுதான்!
இவற்றை உணர்வதால், இளைஞர்கள் இங்கே அணிவகுத்து வருகிறார்கள் - நேரில் காண வாருங்கள் தோழர்களே!
மதவாதம் தலைதூக்காமல் மானுடத்தை வழிநடத்துவோம்!
ஜாதீயம் தலை தூக்காமல் சமத்துவம் படைப்போம்!
ஜெயங்கொண்டத்தில் கொடுக்கும் குரல் ஜெகம் எங்கும் கேட்கட்டும்!
ஜெயபேரிகை கொட்டுவோம் வாருங்கள் தோழர்களே, வாருங்கள்!
மே 2 ஆம் தேதி மாலை உங்களுக்கான இடம் ஜெயங்கொண்டம்; ஜெயங்கொண்டம்;
கேட்கட்டும் ஜெயபேரிகை!
- மின்சாரம்
No comments:
Post a Comment