Tuesday, January 22, 2013

காவி தீவிரவாதம்: சுஷில்குமார் ஷிண்டே மன்னிப்புக் கோர வேண்டிய அவசியம் இல்லை - திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை


காவி தீவிரவாதம் குறித்து உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியதில் தவறு என்ன?
அடுக்கடுக்கான நிகழ்வுகள் உண்டே!
மன்னிப்புக் கோர வேண்டிய அவசியம் இல்லை
காவி தீவிரவாதம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறிய கருத்துக்கு அடுக்கடுக்கான நிகழ்வுகள் உண்டே. அப்படிக் கூறியதற்காக அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று பி.ஜே.பி. கூறுவது பொருட்படுத்தப்பட வேண்டிய ஒன்றல்ல என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:
ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவா அமைப்புகள் இந்து பயங்கரவாதத்தினை முன்னிறுத்தி நடத்துவதாகவும், அதற்காக பயிற்சிகள் அளிப்பதாகவும் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அவர்கள் கூறியிருப்பதை எதிர்த்து பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் வானத்திற்கும் பூமிக்குமாக குதித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்; அதற்கு அவர் மன்னிப்புக் கோர வேண்டும்; இல்லையேல் 24ஆம் தேதி கிளர்ச்சி, கண்டன ஆர்ப்பாட்டம் செய்வோம்; ஷிண்டே பதவி விலக வேண்டும் என்றும் உடனே ஆர்ப்பரித்துள்ளனர்!
அவர் ஏதோ ஆதாரமில்லாமல் பேசியதைப் போல ஊடகங்கள் உயர்ஜாதி, பார்ப்பன, ஹிந்துத்வாவாதிகளின் ஆயுதங்களாக இருப்பதால், இதற்காக ஓங்காரக் கூச்சல் இடுகின்றனர்!
இதோ ஆதாரங்கள் - பதில் கூறட்டும் பார்க்கலாம்!
தங்களை சுத்த சுயம் பிரகாசிகளாகக் காட்டிக் கொள்ளும் இந்த வீராதி வீரர்கள், நமது சில கேள்விகளுக்கு விடை கூறட்டும்!
1. மாலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் எல்லாம் லேபிளை மாற்றிக் கொண்ட ஹிந்துத்துவா வாதிகள் அல்லாமல் வேறு யார்?
இந்திய இராணுவத்தில் ஊடுருவி, அங்குள்ள RDX என்ற சக்தி வாய்ந்த வெடி மருந்து, பொருள்களைக் கடத்தி, பயிற்சி தந்து பிறகு சிக்கிக் கொண்டு, சிறைவாசம் அனுபவிப்பதோடு, காவி அணிந்த சந்நியாசி வேடம் தரித்து தாங்கள் செய்த வன்முறைகளை - இஸ்லாமியர்கள் மீது பழி போட்டவர்கள் இவர்களைத் தவிர வேறு யார்?
2. அண்மையில் வெளியான செய்தியில் இவர்களின் முக்கிய புள்ளியான ஒருவர்தான் (உயர்ஜாதி பார்ப்பனர் அவர்) குஜராத் சம்ஜுத்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ வைத்து கொளுத்தியது (கோத்ரா ரயில் எரிப்பு) அய்தராபாத் குண்டு வெடிப்பு ஆகிய எல்லாவற்றுக்கும் சூத்திரதாரிகளாக இருந்தனர் என்ற செய்தி சென்ற வாரம் வரவேயில்லையா? (டைம்ஸ் ஆஃப் இந்தியா 13.1.2013).
புலன் விசாரணை செய்த ஆய்வு நிறுவனம் இச்செய்தியை வெளியிட்டு ஏடுகளில் வெளி வந்துள்ளதே!
3.பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளின் பட்டியலில் இவர்கள் அமைப்பினர் சம்பந்தப்பட்டுள்ளார்களா - இல்லையா?
உ.பி. முதல்வர் கல்யாண்சிங் என்ன கூறினார்?
4. அந்நாள் உ.பி. முதல் அமைச்சர் கல்யாண் சிங் தந்த ஒரு பேட்டியில், இவர்களை நம்பித்தான் நான் உத்தரவாதம் அளித்தேன்; ஆனால் இவர்கள் இடித்து தரைமட்டமாக்கி என்னை குற்றம் புரிந்தவர்கள் பட்டியலில் இடம் பெற வைத்தனர் என்று மனம் நொந்து கூறவில்லையா? அந்த இடிப்பின் எதிர்வினையாகத் தானே நாட்டில் 3000, 4000 பேர்கள் கொல்லப்பட்டதும், ரத்த ஆறு ஓடியதுமான கோரத் தாண்டவம்! இது நடைபெற்றதற்கு மூல காரணம் யார்? தென்காசியில் சொந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு - இந்து முன்னணியினர் ஒருவரைக் கொன்று, அதை முஸ்லீம்கள்மேல் பழி போட்டு, மதக் கலவரம் ஏற்பட்டு மோதல்களுக்குப்பிறகு, இவர்களே நடத்திய நாடகம் என்ற உண்மை ஒப்புதல் வாக்குமூலம் வரவில்லையா?
காந்தியாரைக் கொன்றவன் யார்?
5. தேசப்பிதா காந்தியாரை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு பயிற்சிக்கூடம் ஆர்.எஸ்.எஸ். என்பதும், அவர் சம்பவத்திற்குமுன் விலகியிருந்தார் என்பது புறத்தோற்றம் அல்லவா! அதனை மறுத்த நிலையில், அவரது தம்பி கோபால் கோட்சே - பூனாவில் தனது அண்ணன் நாதுராம் விநாயக் கோட்சே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இருந்தவர் என்பதை ஏன் இவர்கள் மறைக்கிறார்கள் என்று பிரண்ட் லைன் ஆங்கில ஏட்டிற்குப் பேட்டி அளித்த போது சொல்லவில்லையா?
6. ஆர்.எஸ்.எஸ். அமைப்பைப் போல இந்தியாவில் மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு வேறு உண்டா?
7. டெல்லியில் பச்சைத் தமிழர், அ.இ.காங்கிரஸ் தலைவர் காமராஜரை பட்டப் பகலில் அவர் வீட்டிற்குத் தீ வைத்து உயிருடன் கொளுத்த முயன்றவர்கள் ஹிந்துத்துவா தீவிரவாதிகளும், நிர்வாண சாமியார்களும், ஆன (பசுவதைத் தடுப்புப் போராட்டம் என்ற பெயரில்) இந்துத்துவா தீவிரவாதிகள் அல்லாமல் வேறு யார்?
8. டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த அன்றைய முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களை நேரில் சந்தித்து, விவாதித்துக் கொண்டு இருக்கையில் கையை முறுக்கி வன்முறையில், ஈடுபட்டு பிறகு விரட்டப்பட்டவர் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அல்லவா?
ஆதாரம் இல்லாமலா பேசுகிறார்- உள்துறை அமைச்சர் ஷிண்டே?
உண்மையை ஊடகங்களின் ஓங்காரச் கூச்சல் மூலமாக, மறைத்துவிட முடியாது.
திரு. ஷிண்டே அவர்கள் உள்துறை அமைச்சர்; ஆதாரங்கள் இல்லாமலா அவர் பேசுவார்? நடைபெற்ற நிகழ்வுகள் எதைக் காட்டுகின்றன? ஹிந்துத்துவா பேசுவோர்தானே! வழக்கு நீதிமன்றத்தில் மாலேகான் குண்டுவெடிப்பு சம்பந்தமாக நடக்கும் நிலையில் இதுபற்றி உள்துறை அமைச்சர் பேசலாமா? என்ற அருள் உபதேசம் செய்கிறது ஆர்.எஸ்.எஸ்.காரரை - உணர்வாளரை ஆசிரியராகக் கொண்டுள்ள தினமணி நாளேடு?
என்னே திடீர் ஞானோதயம்! ஏன் இதே வாதம் 2ஜி வழக்கு உச்சநீதிமன்றத்திலும், டில்லி தனி நீதிமன்றத்திலும் நடைபெற்று வருகிற நிலையில் இவர்கள் எவ்வளவு எழுதினார்கள் - பேசினார்கள் - விமர்சித்தார்கள்? பேசு நா இரண்டுடையாய் போற்றி போற்றி என்ற அண்ணாவின் ஆரிய மாயை வரிகள்தான் இவர்களைப்பற்றி நம் நினைக்கு வருகிறது.
தாழ்த்தப்பட்டவர் என்பதாலா?
மாண்புமிகு ஷிண்டே அவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவர் உள்துறை அமைச்சராக இருப்பது என்பது பார்ப்பன உயர் ஜாதி வர்க்கத்திற்கு  உறுத்தலாகத் தானே இருக்கும்; அதற்காகத்தான் இந்தப் பதவி விலகல் கூச்சல் போலும்!
ஷிண்டேவின் கருத்துகண்டு இப்படிக் கூறுவது எதைக் காட்டுகிறது? நடுநிலையாளர்கள் ஆழ்ந்து சிந்திக்கட்டும்!


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
22.1.2013


இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

No comments:

குடிமக்கள் பதிவேடு மக்கள் தொகை பதிவேட்டுக்கு எதிராக டில்லி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திரா, தெலுங்கா...