அருமைக் கழகத் தோழர்களுக்கும், பகுத்தறி வாளர்களுக்கும், இன உணர்வாளர்களுக்கும் திராவிடர் தமிழபிமானிகளுக்கும், இருபால் சமதர்ம, சமத்துவ விரும்பிகளுக்கும் ஒரு கனிவான வேண்டுகோள்!
50 ஆண்டுக்கான பரிசு!
விடுதலையில் 50 ஆண்டு காலம் ஆசிரியராக நான் பணியாற்றியதைப் பதிவு செய்யும் வகையிலும், விடுதலை நாளேட்டின் பரவல் அனைத்துத் தரப்பிலும் அவசியம் என்ற கொள்கை நோக்கில் கழகத் தோழர்கள் பம்பரமாகச் சுழன்று 50 ஆயிரம் விடுதலை சந்தாக்களைத் தேனீக் கள் போல பறந்து பறந்து சேர்த்து 2011 டிசம்பர் 24 அன்று தந்தை பெரியார் நினைவுநாளில் சென்னையில் அளித்து, எம் பணிக்கு பெரும் ஊக்கத்தைக் கொடுத்தீர்கள்.
இளைய தோளில் பெரிய மலை
எனது 29ஆவது வயது என்னும் இளந் தோளில் மலை போன்ற பெரும் பொறுப்பை சுமத்தி, எனக்குச் சவாலான பணியில் என்னை இறக்கி விட்டார் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள்.
சவாலை ஏற்றேனா?
அந்தச் சவாலை ஏற்று, விடுதலையை எட்டுப் பக்கங்களாக்கி சென்னையோடு திருச்சியில் இன்னொரு பதிப்பையும் ஏற்படுத்தி, பல வண்ண இதழாக உலகத் தமிழர்கள் மத்தியில் தவழ்ந்து கொண்டு இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
தமிழக ஏடுகளிலேயே இணையதளத்திலும் வெளிவந்த முதல் ஏடு விடுதலை என்ற பெருமை யும் சேர்த்தோம்.
ஒரு பகுத்தறிவு நாளேடு 77 ஆண்டுகள் எதிர் நீச்சல்போட்டு, மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் கூறியதுபோல, தமிழன் இல்லம் என்பதற்கு அடை யாளமாக விடுதலை வேகமாகப் பரவிக் கொண்டு இருக்கிறது!
பழுத்த வாசகர்கள்
காலையில் எழுந்ததும் விடுதலையைப் படிக்காமல் இருக்க முடியாது என்னும் மன அழுத்தத்தில் உள்ள முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் எண் ணற்றோர். அவர்கள்தான் நமது வேர்கள்!
50,60 வருடங்களாகத் தொடர்ந்து விடுதலையைப் படித்து வரும் பழுத்த வாசகர்கள் விடுதலைக்கு உண்டு.
புதிய வாசகர்கள்!
கடந்த ஆண்டு முதல் புதிய வாசகர்கள் ஆயிரக் கணக்கில் விடுதலைக்குக் கிடைத்தனர்.
விடுதலையைக் கொண்டு சேர்ப்பதுதான் உங்கள் கடமை. அப்படி கொண்டு சேர்த்து விட்டால் விடுதலை தன் பணியை விவேகமாகச் செய்து முடித்து, அந்த வீட்டின் செல்லப் பிள்ளையாக இடம் பிடித்து விடும் என்று நாம் சொல்வதுண்டு.
விடுதலையைக் கொண்டு சேர்ப்பதுதான் உங்கள் கடமை. அப்படி கொண்டு சேர்த்து விட்டால் விடுதலை தன் பணியை விவேகமாகச் செய்து முடித்து, அந்த வீட்டின் செல்லப் பிள்ளையாக இடம் பிடித்து விடும் என்று நாம் சொல்வதுண்டு.
பாராட்டுகிறார்கள்! பாராட்டுகிறார்கள்!!
நேரில் பார்க்கும் பொழுதும் சரி, கடிதங்கள் வாயிலாகவும் சரி விடுதலையின் நேர்த்தியைப் பாராட்டிக் கொண்டே இருக்கின்றனர். அது மட்டும் போதுமா நண்பர்களே?
வெறும் கட்சி ஏடு என்ற நிலையையும் தாண்டி (பகுத்தறிவு - சுயமரியாதைக் கருத்துக்களுக்குத் தான் முன்னுரிமை என்பது அடிப்படை) பொது செய் திகள், அறிவியல், மருத்துவம், மகளிர், பகுத்தறிவு, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, வரலாற்றுச் சுவடுகள், வாழ்வியல் சிந்தனைகள் என்று பல்துறைக் கொள்கலனாக விடுதலை பூத்துக் குலுங்குவதை வரவேற்கிறார்கள்.
வாரந்தோறும் வெளிவரும் ஞாயிறுமலர் பெரும் பாலும் பாதுகாத்து வைக்கப்படுகின்றன வாசகர் களால்.
மேலும் மேலும் மெருகேற்றப்பட்டு காலத்தின் பசியைப் போக்கும் வகையில் விடுதலை வெளிவர இருக்கிறது. இன்னும் எத்தனை மாற்றத்திற்கான திட்டங்கள் உள்ளன - நம் கையில்.
விநியோகத்தில் புதிய அணுகுமுறை!
விநியோகத் திசையில் இப்பொழுதுள்ள இடர்ப்பாடுகள் நீக்கப்பட்டு, அன்றாடம் சுடச்சுட கையில் கிடைப்பதற்கான விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வேன்கள் மூலம் பல மாவட்டங்களுக்கும், விரைந்து கொண்டு சென்று விநியோகிக்கப்பட உள்ளன. பல லட்சம் கூடுதல் செலவாகும் என்ற போதிலும்கூட.
இந்த நிலையில் கழகத் தோழர்களே, தமிழினச் சான்றோர்களே!
இந்த நிலையில் கழகத் தோழர்களே, தமிழினச் சான்றோர்களே!
2013-இல் தமிழனின் ஒவ்வொரு வீட்டிலும் விடுதலை என்னும் எங்கள் இலக்குக்கு உங்கள் ஆதரவுக்கரங்களை நீட்டுவீர்!
புதிய வரவுகளைப் புதுப்பிப்பீர்!
கடந்த முறை விடுதலை சந்தாதாரராக ஆனவர் களை நேரில் அணுகி சந்தாவைப் புதுப்பிக்கும் வகையில் கழகத் தோழர்களே, விமான வேகத்தில் பணிகளை முடுக்கி விடுவீர்!
எந்த வகையிலும் ஒரு சந்தாகூட வேண்டுமே தவிர ஒரு சந்தா குறைந்தது என்ற இறக்கம் கூடவே கூடாது.
விடுதலையை விட்டால் நாதி ஏது?
மக்களிடத்தில் பகுத்தறிவை எடுத்துச் சொல்ல, சமூக நீதிக் கொடியைப் பறக்கச் செய்ய, மகளிர் உரிமைச் சங்கெடுத்து ஊத, பொது ஒழுக்கத்தைப் போதிக்க, உலகத் தமிழர்கள் மத்தியில் ஈழத் தமிழர்ப் பிரச்சினையை எடுத்துக் கூற, தமிழ்நாட்டை வஞ்சிக்க வீசப்படும் வலைகளை அறுத்தெறிய, ஜாதீய, மதவாதச் சழக்குகளை சல்லி வேர் ஆணி வேர் வரை சென்று நிர்மூலப்படுத்த விடுதலையை விட்டால் நாதியுண்டா? சிந்திப்பீர்!
விடுதலை ஏன்? ஏன்?
விடுதலையின் வளர்ச்சி விடுதலை ஏட்டுக்காக அல்ல. வருமானத்துக்காகவும் அல்ல - இது ஒரு கொள்கை ஏடு! மக்களின் பொது உரிமைக்கான பொது உடைமை ஏடு! தனியாருடையதல்ல. தமிழர்களின் விடுதலைக் காகவும், தமிழர்களின் தன்மானத்துக்காகவும் எனபதை மறந்து விடாதீர்கள்!
விடுதலைக்கு விளம்பரங்களைக் கொடுத்தால் தீட்டு என்று நினைக்கிற புதுவகைத் தீண்டாமை - அரசின் கண்ணோட்டத்தில்.
பொங்கல் பரிசாகத் தாரீர்!
தமிழ்ப் புத்தாண்டாம் பொங்கலுக்குள் இன்று தொடங்கி பழைய சந்தாதாரர்களை புதுப்பிக்கச் செய்தல், புதிய சந்தாதாரர்களைச் சேர்த்தல் என்னும் பணிக்கு முன்னுரிமை கொடுத்து, தமிழ்ப் புத்தாண்டுப் பொங்கல் பரிசாக, வாழ்த்தாகத் தாரீர்! தாரீர்!! என்று தந்தை பெரியார் என்மீது நம்பிக்கை வைத்ததுபோல உங்கள்மீது நம்பிக்கை வைத்து இந்த வேண்டுகோளை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்; விண்ணப்பிக்கின்றேன்!
என் ஆயுளின் இரகசியம்!
ஏற்கெனவே நான் சொன்னதுபோல என் ஆயுள் நீட்சியின் இரகசியம் இதில் இருக்கிறது என்பது நீங்கள் அறிந்ததுதானே! எனக்கு மேலும் வேலை தாருங்கள்!!
வணக்கம்! வணக்கம்! நன்றி! நன்றி!!
வணக்கம்! வணக்கம்! நன்றி! நன்றி!!
கி.வீரமணி
அன்புத் தொண்டன்
ஆசிரியர் விடுதலை
அன்புத் தொண்டன்
ஆசிரியர் விடுதலை
சென்னை 18.12.2012
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:
No comments:
Post a Comment